இந்தியாகட்டுரைகள்

அரிசி ஏற்றுமதித் தடை- விளைவுகளும் காரணங்களும்

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை-
விளைவுகளும் காரணங்களும்

– அருண் நெடுஞ்செழியன்

கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் அரிசி (பாசுமதி அரிசி நீங்கலாக) ஏற்றுமதிக்கு இந்திய ஒன்றிய அரசு தடை விதித்தது. அரிசியின் சில்லறை விற்பனை விலை கடந்த ஓராண்டில் மட்டும் 11.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேற்கொண்டு அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்து வதன் பொருட்டு அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக அரசு கூறியது.

அரசின் இந்த திடீர் தடையால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அரிசி கிடைப்பதில் தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அரிசி வாங்குவதற்காக கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கிற படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.சில கடைகளில்,நீண்ட வரிசைகளையும் கூட்டத்தையும் சமாளிப்பதன் பொருட்டு ஒரு குடும்பத்திற்கு ஒரு அரிசிப்பை மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டுடன் அரிசி விற்பனை நடக்கிறது.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் சுமார் 15 விழுக்காடு அளவிற்கு விலைவாசி உயர்கிற அபாயம உள்ளதாகவும்,உடனடியாக இந்த தடையை இந்திய அரசு நீக்கவேண்டுமென சர்வதேச நாணய நிதியகத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான பியர் – ஒலிவியா குஹாஷன் கூறியுள்ளார். உலக வங்கியோ,இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் சர்வதேச சந்தையில் அரிசியின் விலை சுமார் 52 விழுக்காடு அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கிறது.முன்னதாக ரஷ்யா-உக்ரைன் போரால்,கோதுமை விலை உயர்வு நெருக்கடி ஏற்பட்டது போல அரிசி விலை உயர்வும் ஏற்படப்போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அரிசி ஏற்றுமதியில் முதலிடம்

சர்வதேச அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காடாகும். 2022-&23 ஆண்டில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்து தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தியா, தனது ஏற்றுமதியின் பெரும்பங்கு சீனாவிற்கும்,அமெரிக்காவிற்கும் மேற்கொள்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் 22.2 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்தது. இது உலக அரசி சந்தையில் தாய்லாந்து,வியட்நாம்,பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் மொத்த அரசி ஏற்றுமதிக்கு ஈடாகும்.

பருவம் தப்பிய மழை பொழிவும், அரிசி உற்பத்தி சரிவும் அரிசி ஏற்றுமதி தடைக்கான காரணம் என ஒன்றிய அரசின் விளக்கத்தில் பகுதி உண்மை மட்டுமே உள்ளது. அதாவது அரிசி சந்தையின் பங்களிப்பு (Supply) தேவை (Demand) சுற்றோட்டத்தில், தேவைப்பகுதியை மட்டுமே விளக்குகிற அரசு, பங்களிப்பு பற்றி வாய் திறக்கவில்லை. நாட்டின் அரிசி தேவையை பூர்த்தி செய்கிற நேரடி உற்பத்தியாளர்களாக விவசாயிகளே உள்ளனர்.

நெல் சாகுபாடியின் உற்பத்தியை தீர்மானிப்பதில் இயற்கையின் தட்வெட்ப நிலை முக்கிய பங்காற்றுகிறது. சமநிலையான பருவகாலமும், அதீத மழை அல்லது மழை பற்றாக்குறை கொண்ட சமநிலையற்ற பருவகாலமும் விளைச்சலை நேரடியாக பாதிக்கிறது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பொழிகிற ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்கிற சாகுபடியை காரீப் காலம் என்றழைப்பார்கள்.காரீப் என்றால் அரபியில் இலையுதிர்காலம் என்று பொருள். இந்த காரீப்பருவத்தில், பஞ்சாப்,கங்கைச் சமவெளி,கோதாவரி படுகை மற்றும் தமிழநாட்டில் காவிரிப் படுகை ஆகிய பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டில் சுமார் எட்டு விழுக்காடு அளவிற்கு நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதாக பயிர்-பருநிலை கண்காணிப்புக் குழு தெரிவிக்கிறது.

பருவமழை பற்றாக்குறை

மேலும் இந்தாண்டு பருவமழையை பொறுத்தவரை நாம் மேலே குறிப்பிட்ட நெல் சாகுபடி மண்டலங்களில் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில், 294 மாவடங்களில் மழை பற்றாக்குறையாக பொழிந்துள்ளது. அதாவது இயல்பைவிட சுமார் 41 விழுக்காடு மழை பற்றாக்குறையாக பொழிந்துள்ளது. இந்தியாவில் பரவலாக நெல் சாகுபடி செய்கிற மாவட்டங்களில் நிலவிய மழைப் பற்றாக்குறை நிலைமையும்,கடந்த ஆண்டை விட குறைவான பரப்பளவில் நடைபெற்ற நெல் சாகுபடியும், நெல் உற்பத்தியை நேரடியாக பாதித்தது. இந்நிலைமை வரும் மாதத்தில் தொடர வாய்ப்புள்ளதால் 180 நாட்களாக பதிலாக 120 நாட்களில் அறுவடை செய்கிற குறுகிய நெல் ரகங்களை பயிரிட வேண்டுமென இந்திய வானிலை ஆய்வு மையம் விவசாயிகளிடம் அறிவுறுத்துகிறது.

அதிக மழையால் பாதிப்பு

பொதுவாக இந்தியாவில் ஜூன் 8 இல் பருவமழைக் காலம் தொடங்கும். ஆனால் நடப்பாண்டில் எட்டு நாள் தாமதாகவே தொடங்கி, இருபது நாள் முன்னதாகவே நின்று விட்டது. அதேநேரத்தில் வடக்கிலும், வடமேற்கிலும் குறைவான காலத்தில் அதிகமாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஹரியானாவில் பெய்த கனமழையால் யமுனையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; ஹிமாச்சல பிரதேசத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது; போலவே.சண்டிகரில் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக மழை பொழிந்துள்ளது. உத்திரப் பிரதேசத்தில் பெய்து வருகிற தொடர் மழையின் காரணமாக வரலாறு காணாத வகையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டின் பருமழை காலத்தில், வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் நிகழ்ந்த அதீத மழை பொழிவும்,தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் மழை பற்றாக்குறையும் விவசாயிகளின் விளைச்சலை நேரடியாக தாக்கின.

பருவநிலையில் ஏற்பட்டுவருகிற இந்த மாற்றங்களுக்கு காலநிலை மாற்ற நெருக்கடியே முக்கிய காரணமென பருவநிலை ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதீத மழை பொழிவு என்பது காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பருவமழை பொழிகிற பண்பில் மாற்றம் ஏற்பட்டு, ஒரு சில மாதங்களில் பொழிய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் திடுமென பொழிவதைக் குறிக்கிறது. அதீத மழை ஒரு பக்கம் என்றால், அதீத வெயில் தாக்கமும் மற்றொருபுறம் நம்மை தாக்குகிறது. இந்த மாற்றங்களுக்கு எல் நினோ காரணமாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தியாவில் தற்போது பருவமழைக் காலத்தில் சில வாரங்கள் தடை பட்டு பிறகு மீண்டும் கிழக்கு மாநிலங்களில் மழை தொடங்கும் என்கிறார்கள்.

காலநிலை மாற்றத்தால் பாதிப்பு

தொகுத்துப் பார்ப்பின், காலநிலை மாற்ற சிக்கலின் விளைவானது, நெல் உற்பத்தி அளவை நேரடியாக பாதித்துள்ளதை புரிந்துகொள்ளலாம். நெல் சாகுபடி பரப்பளவுக் குறைவும், பருவமழைத் தாக்கத்தால் உற்பத்தி சரிவும் நாட்டில் நெல் விலையை அதிகரிக்க வைத்தன. மேற்கொண்டு இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்துகிற நடவடிக்கையாக அரிசி ஏற்றுமதியை ஒன்றிய அரசு தடுக்கிறது. ஏற்றுமதி தடையால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இயற்கையின் சுழற்சியில் ஒன்றுக்கொன்று எப்போதும் தொடர்புடையது. இந்த சங்கிலித் தொடர் விளைவுகள் குறித்து இப்போதுதான் ஒவ்வொன்றாக ஆட்சியாளர்களுக்கு புரியவருகிறது.

அறிக்கைப் போர்

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு,கபினியில் மழை பொழிந்தால்தான் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூரில் நீர் திறக்க முடியும். நடப்பாண்டில் சரியாக மேட்டூரில் நீர் திறந்துவிடப்பட்டாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைவால், மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைந்தது. இந்த காலகட்டத்தில் காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு மறுத்ததால், தமிழ்நாட்டிற்கும் கர்நாடக அரசிற்கும் அறிக்கைப் போர் நடந்தது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி நீரைக் கொடுத்தாகவேண்டும் என்றது தமிழக அரசு. கர்நாடக அரசோ நீர் குறைவாக உள்ளதாக கூறியது. தற்போது ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அரசியல் பதட்டமும் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

பருவமழையில் ஏற்படுகிற சிற்சில மாற்றங்கள் கூட மாநிலங்களுக்கு இடையே பதட்டத்தையும், மோதலையும், அரசியல் சமநிலையில் பாதிப்பையும் ஏற்படுத்துகிற ஆற்றல் கொண்டது. வேளாண் உற்பத்தி சரிவிற்கு இட்டுச் சென்று உணவுப் பாதுகாப்பையும் வீழ்ச்சியடையச் செய்கிற ஆற்றல் கொண்டது. காலநிலை மாற்றம் என்ற சிக்கலானது இனியும் சாதராணமாக கடந்து போகிற விஷயமாக இருக்கப்போவதில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button