இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு

இடதுசாரி, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையே தற்போதைய தேவை! – டி.ராஜா

2022 அக்டோபர் 14 முதல் 18 வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய  மாநாட்டுக்கான வரவேற்பு குழுவை அமைத்திட ஏப்ரல் 26 அன்று விஜயவாடாவில் உள்ள தாசரி பவனில் குழுமியிருந்த கட்சியின் ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பொதுச் செயலாளர் டி.ராஜா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு கட்சியின் ஆந்திர மாநிலக் குழு செயலாளர் தோழர் கே.ராமகிருஷ்ணா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் டி.ராஜா பேசியதாவது:

வகுப்புவாத பாசிஸ்டுகளின் பிடியில் இருந்து தேசத்தைப் பாதுகாத்திட இடதுசாரி, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தற்போதைய தேவையாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் ஈந்த நமது கம்யூனிஸ்ட் முன்னோடிகள் கொண்டிருந்த அதே உணர்வு போதத்துடன் நமது போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

எந்தச் சூழலிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது, இன்று தேசத்தின் அரசு விவகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி வருகிறது. சாதிய மற்றும் வகுப்புவாத அடிப்படையில் தேச மக்களை குவிமையப்படுத்துவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜனநாயகத்தைச் சிறுமைப்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு மதிப்பளிக்காமல், அதனைத் துச்சமென தூக்கியெறிய முயலுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம், மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பவர்கள் மீதும், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையோர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னெப்போதுமில்லாத நெருக்கடிகளுக்கு இடையே நமது நாடு பயணித்து வருகிற இக்கட்டான சூழலில், விஜயவாடாவில் நடைபெற உள்ள 24வது அகில இந்திய மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இத்தகு முக்கியத்துவமும், வரலாற்றுப் பெருமையும் கொண்டிருக்கும் காரணத்தால் கட்சியின் அகில இந்திய மாநாட்டை மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக வென்று முடிக்க கட்சித் தோழர்கள் அயராது உழைத்திட வேண்டும்.

விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் 10வது அகில இந்திய மாநாடு மாபெரும் வெற்றியடைந்தது நினைவுகூரத்தக்கது ஆகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கோட்டையான விஜயவாடாவில் மீண்டும் ஒருமுறை கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் இருந்து தோன்றிய மூத்த தலைவர்களான சி.ராஜேஸ்வரராவ், தாசரி நாகபூஷணராவ், கிரிபிரசாத் மற்றும் குஜ்ஜூல்லா எல்லமந்த ரெட்டி ஆகியோர் கட்சிக்காக அரும்பணியாற்றினர்.

இவ்வாறு டி.ராஜா பேசினார்.

கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் இராமகிருஷ்ணா பேசியது பின்வருமாறு: இந்தியா முழுவதும் பரவியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கேந்திரமான பகுதியாகத் திகழும் விஜயவாடாவில் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. 1975ஆம் ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற 10வது அகில இந்திய மாநாட்டில் ஒரு மாணவ தன்னார்வலராக நான் பங்கேற்றேன்.

ஏஐடியுசி பொதுச்செயலாளரும், கட்சியின் தேசியக் குழு செயலாளருமான அமர்ஜித் கவுர் பேசியது பின்வருமாறு: கட்சியின் 10வது அகில இந்திய மாநாட்டில் நானும் ஒரு மாணவ தன்னார்வலராகப் பங்கேற்றேன். ஜனநாயகத்தை உடைத்தெறியவும்,  அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைத்திடவும் பாஜக முயலுகிறது. பாஜகவின் இதுபோன்ற முயற்சிகள் குறித்து கட்சித் தோழர்கள் எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். வகுப்புவாத சக்திகளிடம் இருந்து நாட்டை நாம் பாதுகாத்திட வேண்டும்.

தேசியக் குழுவின் மற்றொரு செயலாளரும், சர்வதேச துறையின் பொறுப்பாளருமான பல்லப் சென் குப்தா பேசுகையில், சீனா, வியட்நாம், ரஷ்யா, கியூபா உள்ளிட்ட பல நாடுகளின் சகோதரப் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறினார்.

இக்கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜா கூறியதாவது:

நடைபெற உள்ள அகில இந்திய மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடாக அமைய உள்ளது. வகுப்புவாத கலவரங்களை உருவாக்கும் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்., அரசியலமைப்புச் சட்டத்தின் பாற்பட்ட அமைப்புகளைச் சீரழித்து வருகின்றன. மோடி அரசாங்கம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து வருகிறது. சிறுபான்மைச்  சமூகத்தவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும்,  இந்திய சமுதாயத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்புக்கும் பேராபத்தாகும். இந்த மக்கள் விரோத அரசாங்கத்தை 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தோற்கடித்திட பாஜக அல்லாத கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சி அதன் உட்கட்சி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

கட்சி அமைப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கட்சியின் அகில இந்திய மாநாடு விரிவாக விவாதிக்கும். வகுப்புவாத விஷத்தை மக்களிடையே பரப்பி, நாட்டு மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்திட ஆர்.எஸ்.எஸ். மிகக் கடுமையாக முயலுகிறது.

அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாசிஸ்ட் கட்சியான பா.ஜ.க. சீர்குலைத்து தூக்கியெறிந்து வருகிறது.   உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புல்டோசர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அணிக்கு ஆதாயம் அளிக்கப் போவதாக அவர்கள் கருதுகிறார்கள். அனைவருக்குமான முன்னேற்றம் என்று மோடி தொடர்ந்து பேசினாலும், அவரது அரசாங்கத்தின் கொள்கைகள், பணவீக்கம், ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை அதிகரிக்கவே செய்கின்றன.
மோடி தலைமையிலான மக்கள் விரோத பாஜக அரசாங்கத்தை முறியடிக்க சிபிஐ, சிபிஎம் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதர இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும்.

இவ்வாறு டி.ராஜா கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button