கட்டுரைகள்

தமிழகத்திற்கு என்று தனியான கல்விக் கொள்கையை உருவாக்க முடியுமா ?

பேரா.கதிரவன்

தமிழ்நாட்டிற்கு என புதிய கல்விக் கொள்கை வகுக்க கல்வியாளர்கள், எழுத்தாளர்கள்  மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளடக்கிய குழுவை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இக்குழுவின் நோக்கம் தமிழ்நாட்டின் வரலாற்றை வருகின்ற காலத்திற்கு ஏற்ப மாநிலத்திற்கு என்று தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்குவதாகும். இதன்படி, அனைத்து மாணவர்களும் தொடக்க கல்வியிலிருந்து உயர்கல்வி வரை செல்வதை  உறுதிப்படுத்துவதற்கான கொள்கையினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டதாகும்.

இதன்மூலம் தமிழக புவியியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, வரலாறு போன்றவற்றை கணக்கில் கொண்டு புதிய கல்வித் திட்டங்களை உருவாக்க முடியும். பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியைப் பொருத்தவரை மாநில அரசு  அனைத்து மாவட்டங்களிலும்  அரசு பள்ளிகளை நடத்தி வருகிறது. ஒன்றிய அரசு பள்ளிக்கல்வியில் பெரிதாக எந்தவித பங்கெடுப்பும் செய்வதில்லை. குறிப்பாக, சில சிறப்பு பள்ளிகளை இயக்குவதைத் தவிர, ஆனால், ஒன்றிய அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கான தகுதி நிர்ணயம் செய்வது மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான தகுதிகளை நிர்ணயம் செய்வது, ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்வது மற்றும் பாடத்திட்டங்களை வகுப்பது போன்றவை  பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் வருகின்றது.

மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்தை வழங்குவது மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நடத்தை விதிகளை மாநில அரசு தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, கல்லூரி ஆசிரியர்கள் மாநில அரசின் அரசு ஊழியர்களாகவும் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வராமல் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களாகவும் இருந்து வருகின்றனர். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள இந்த கல்வி  கொள்கைக்கான குழு எந்தவிதமான திட்டங்களை உருவாக்க போகின்றது  என்பதைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை நம்மிடம் இல்லை.ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் பொறுப்புகளை மாநில அரசு எடுத்துக் கொள்ளப் போகிறதா என்று தெரியவில்லை.

தமிழகத்திற்கு என்று தனியான கல்விக் கொள்கையை உருவாக்க முடியுமா என்பது கேள்விக்குறியான ஒன்று, ஏனென்றால் இன்றுவரை கல்வி மாநில பட்டியலில் இல்லை. அது முழுவதுமாக ஒன்றிய அரசின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. ஆக நாம் எந்தவிதமான மாற்றங்களை கொண்டு வந்தாலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் உயர்கல்வியில் கடுகளவு மாற்றத்தை கூட நம்மால் கொண்டு வர முடியாது.

கடந்த மாதம் பல்கலைக்கழக மானியக்  குழுவினால் 2015க்கு பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மூலமாக வழங்கப்பட்ட தொலைதூர கல்வி மூலம் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெறாமல் வழங்கிய   பட்டப்படிப்புகள் செல்லாது என்று அறிவித்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு மாநில பல்கலைக்கழகமாக அறிவித்த பிறகு, தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டப்படிப்புகள் செல்லாது என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது விந்தையிலும் விந்தையாகும். உயர் நீதிமன்றத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ சென்றாலும் இதற்கு தீர்வு என்பது கிடையாது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பே இறுதி செய்யப்படும் என்பதே உண்மையாகும், ஆகையால் நாளை நாம் எந்த வித மாற்றங்களை அறிவித்தாலும் அந்த மாற்றங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் பெற்ற பிறகே நம்மால் செயல்படுத்த முடியும் என்ற நிலையில் நாம் எடுக்கின்ற முயற்சிகள் வீணாகிவிடும்.

கடந்த மாதம் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின்படி, வரப்போகின்ற கல்வியாண்டில் இளங்கலை பட்டப்படிப்பில் எப்பொழுது வேண்டுமானாலும் கல்லூரியில் சேரலாம் அல்லது கல்லூரியை விட்டு வெளியேறலாம். இளங்கலை வகுப்பு மூன்று வருட பட்டபடிப்பு அல்லது நான்கு வருட ஹானர்ஸ் படிப்பும் வழங்கப்படும் என்பதும், எம் பில் பட்டப்படிப்பு நிரந்தரமாக கைவிடப்படும் என்பதும், முனைவர் பட்டப் படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பு தேவையில்லை என்பதையும் அறிவித்துள்ளது. இப்பொழுது அறிவிக்கப்பட்ட தமிழக கல்விக்குழு இத்திட்டங்களை உள்வாங்கிக்கொண்டு இதை அமல்படுத்த போகின்றதா? நடைமுறைப்படுத்த போகின்றதா? அல்லது இதற்கு மாற்றாக வேறு திட்டங்களை வகுக்க போகின்றதா? அல்லது இதை முழுவதுமாக எதிர்க்க போகின்றதா? என்பது கல்வியாளர்களுக்கே வெளிச்சம். தமிழகத்திற்கு என்று தனியான உயர்கல்வி மானிய குழுவை உருவாக்கி, பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலையை உருவாக்கினால், இக்குழுவை உருவாக்கியதன் பயன் மாணவர்களுக்கு சென்றடையும்.

அரசியலமைப்பு சட்டத்தில் அட்டவணை 7ல் மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொது பட்டியல் ஆக 3 பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 7ன் கீழ் மத்திய அரசு, மாநில அரசின் அதிகார எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் படி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அரசுத்துறைகளின் அதிகார முடிவுகளை மாநில அரசோ அல்லது மாநில அரசின் கீழ் இருக்கும் துறைகளின் அதிகார முடிவுகளை ஒன்றிய அரசோ மாற்றவோ, திருத்தவோ அல்லது நீக்கவோ அதிகாரம் அளிக்கப்படவில்லை.

இந்த பட்டியலில் ஏதேனும் திருத்தமோ அல்லது நீக்கமோ கொண்டு வருவதாக இருந்தால் (சரத்து 368ன் படி)  அது முதல் படியாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் ஆதரவு பெறவேண்டும் மற்றும் அவையில் கலந்துகொண்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதி என ஆதரவு பெறவேண்டும். இதோடு மட்டுமன்றி,  நாடாளுமன்றம் சட்டம்  ஏற்புடையதாகும் வகையில்  இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த மாநிலங்களின் 50 சதவிகித மாநிலங்களில் அச்சட்டம் அந்த மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஆதரவை பெற்று நிறைவேற்றி இருக்க வேண்டும். இதன்படி நாடாளுமன்றத்திலும் மற்றும் மாநில சட்ட மன்றங்களிலும் ஆதரவைப் பெற்றிருந்தால் மட்டுமே இச்சட்டம் அதாவது மத்திய பட்டியல் மாநில பட்டியல் மற்றும் பொது பட்டியல் ஆகியவை அட்டவணை 7 – ல் திருத்தம் மேற்கொள்ள முடியும். இதன்படி சட்டம் இயற்றாமல், அட்டவணை-7ல்  எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்றால் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஒருமித்த கருத்தில் கொண்டு சட்டத்திற்கு ஆதரவு பெற்றால் மட்டுமே அட்டவணை 7 ல் உள்ள கல்வியை நாம் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர இயலும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு அல்லது ஒன்றிய பட்டியலில் மாற்றம் செய்வதால் மாநிலத்தின் இறையாண்மையில் ஒன்றிய அரசோ அல்லது ஒன்றிய அரசின் இறையாண்மையின் மாநில அரசோ தலையிடுகிறது என்று நாம் கருதும் இதில் எந்தவித உண்மையும் இல்லை.

1950- ல் கல்வி என்பதானது மாநிலப் பட்டியலில் இருந்தது.  1976இல் அரசியல் சட்டம் 42 ஆவது திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரை பொது பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, கல்வி, விளையாட்டு, வனம் மற்றும் வன விலங்குகள், பறவைகள் பாதுகாப்பும் பொதுப் பட்டியலுக்கு மாறி பல்வேறு சட்டங்கள் நெருக்கடி நிலைக் காலத்தில் கொண்டு வரப்பட்டு, மாநில அரசுகளின் அதிகாரம் மத்திய அரசின் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

1976க்கு முன்பு கல்வி மீதான அனைத்து முடிவுகளும் எடுக்க ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிமை இருந்தது, உதாரணமாக, பாடத் திட்டம் வகுப்பது, பாடத் தொகுப்பு வகுப்பது மற்றும் மாணவர் சேர்க்கை பற்றி முடிவெடுக்க மாநிலங்களுக்கு உரிமை இருந்தது. மேலும் உயர்கல்வியை ஒருங்கிணைப்பது மற்றும் உயர் கல்வியில் தரத்தை பராமரிப்பது மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்தது.  பொதுப்பட்டியலில் இருக்கும் துறைகளின் முடிவுகளை மாநில அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதற்கான சாத்தியகூறுகள் இருந்தது. ஆயினும் மாநில அரசோ அல்லது ஒன்றிய அரசின் முடிவுகளில் ஏதாவது வேறுபாடு இருந்தால் ஒன்றிய அரசின் முடிவே இறுதியானது என்பதற்கான கூடுதல் அதிகாரம் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பட்டியலில்  ஒன்றிய அரசும், மாநில அரசும் சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. ஆனால், மாநில அரசு இயற்றும் சட்டத்திற்கு முரணாக மைய  அரசின் சட்டம் முரணாக அல்லது வேறுபட்டதாக இருக்குமேயானால் அல்லது மைய அரசு மாநில அரசால் இயற்றப்படும் சட்டத்திற்கு அங்கீகாரம் கொடுக்கவில்லையென்றால் மைய அரசால்  இயற்றப்பட்ட சட்டமே அமல்படுத்தப்படும்.  ஆக அதிகார மாற்றத்திற்கு இரு அரசுகளுமே பொறுப்பு என்பதே அரசியல் சாசனம். மாநில அரசின் அதிகார பறிப்பிற்கு  மாநில அரசுகளும் பொறுப்பு என்பதை கவனிக்க வேண்டும்.நிலைமை இவ்வாறு இருக்க,  1976ல்  மாநில பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி என்ற பொருளானது இன்றுவரை மாநில அரசுகள்  தமிழ்நாடு உட்பட,  கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

அரசியல் சட்டப்படி திருத்தம் மேற்கொள்ளாமல்  கல்வி சம்பந்த உரிமையில் ஒன்றிய அரசு மாநில அரசின் இறையாண்மையில் தலையிடுகிறது என்பது அரசியல் சாசன முரணாகும்.  சட்டம் என்பது சட்டமே.
பொதுப்பட்டியில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர சட்டத்திருத்தம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை.
உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து கலாச்சார மாண்பை காக்கும் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்.

தொடர்புக்கு: 8667338638

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button