இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்து செய்தி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு விஜயவாடாவில் அக்டோபர் 14 முதல் 18 வரை நடைபெற்று வருகிறது. 16 நாடுகளில் இருந்து 17 கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர். இம்மாநாட்டில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வழங்கப்பட்ட வாழ்த்துரையின் உள்ளடக்கம் பின்வருமாறு:

அன்பார்ந்த மாநாட்டு தலைமை குழு, பிரதிநிதி தோழர்களே,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது தேசிய மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு சார்பாக புரட்சிகர வாழ்த்துகளைச் சகோதரத்துவ உணர்வுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடுகள், இலங்கை கம்யூனிஸ்டுகளாகிய எங்களுக்கு, என்றென்றும் அறிவின் ஊற்றாகவும், உத்வேகம் மற்றும் பலத்தை வழங்குவதாகவும் இருந்து வருகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடையே நிலவி வரும் சகோதரத்துவம், நமது இரு கட்சிகளும் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே வலுவுடன் இருந்து வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கங்களின் நிறுவன தலைவர்கள், தங்களின் மாணவ பருவ காலத்தில் இருந்தே நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

பொருளாதார வீழ்ச்சி, நிச்சயமற்றதன்மை மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பாதித்து வரும் உலகளாவிய பிரச்சனைகள், சவால்கள் சூழ்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது தேசிய மாநாடு நடைபெறுகிறது.

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதில் இருந்து, நாம் இருதுருவ(Bi-Polar) உலக அமைப்பிலும், பின்னர் ஒற்றைத் துருவ உலக அமைப்பிலும் வாழ்ந்து வருகிறோம். 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, நாம் பல-துருவ உலக அமைப்பு எனும் சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். நல்ல அம்சம் என்னவென்றால், 500 ஆண்டுகால காலனியாதிக்கத்திற்குப் பின், உலகப் பொருளாதாரத்தின் முன்னணி படையாக ஆசிய பொருளாதாரம் உள்ளது. ஆசியாவில் வளர்ச்சியின் இயந்திரமாகச் சீனப் பொருளாதாரம் இருந்து வருகிறது. மோசமான அம்சம் என்னவென்றால், பொருளாதார சக்திகளின் சமன்பாடு மற்றும் சர்வதேச பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள உலகளாவிய மாற்றங்களால் நலிவுற்று வருகிற ஏகாதிபத்தியம், தெற்குலக பகுதியின் வளரும் நாடுகளின் மீது அதன் இறுதிக்கட்ட தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

QUAD மற்றும் AUKUS உள்ளிட்ட அதன் அரசியல்-இராணுவ கூட்டமைப்புகள் மூலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை அமைதி மண்டலமாக மாற்றிட இந்தியாவின் பல்வேறு அரசாங்கங்களின் ஆதரவுடன் இலங்கை முயன்று வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த முயற்சியை நடைமுறைப்படுத்த, ஐ.நா சபையில் இலங்கை தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. எனினும், அந்தத் தீர்மானம் 1971 ஆம் ஆண்டில் இருந்து ஏட்டிலேயே இருந்து வருகிறது. அது தொடர்பாக அறிவிக்கப்பட்ட சர்வதேச மாநாடு, அமெரிக்காவின் இடையூறுகள் காரணமாக நடைபெறாமல் முடங்கியுள்ளது. அமெரிக்கா அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விடாமல் ஏன் முடக்கியது என்பதை அதன் இந்தோ-பசிபிக் புவிசார்-அரசியல் உத்தி தெளிவுபடுத்துகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டுள்ள கொள்கை சான்ற நிலைப்பாட்டை நாங்கள் நன்கறிவோம். அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் புவிசார்-அரசியல் உத்தி மீதான பிரச்சனைகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டுள்ள சீரான, உறுதிப்பாடுமிக்க கொள்கைநிலைக்காக இலங்கை மக்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு என்றென்றும் நன்றி பாராட்டுகிறார்கள்.

24 வது தேசிய மாநாட்டிற்கான அரசியல் அறிக்கையில் உங்களின் நிலைப்பாட்டை மேலும் தெளிவுபடுத்தி இருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தெற்காசிய மக்களிடையேயான ஒற்றுமை மேலும் வலுப்பட வேண்டியது கட்டாயத் தேவை என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தெற்காசிய பிராந்தியத்தைத் தவிர ஆசிய கண்டத்தின் பிற பிராந்தியங்கள் அனைத்தும் முன்பைக் காட்டிலும் இணக்கமாகவும், நெருக்கமாகவும் உள்ளன. தெற்காசிய பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள இந்த வெற்றிடத்தை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் அரசியல்-பொருளாதார-இராணுவ உத்தியை மேலும் முன்னெடுப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள முற்போக்கு சக்திகளின் ஒற்றுமை மிகவும் தீர்மானகரமானதாகவும், உடனடி மற்றும் கட்டாயத் தேவையாகவும் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தியை எதிர்த்து முறியடித்திட இந்தப் பிராந்தியத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் மேலும் திறம்பட பங்காற்ற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமை – உடனடி தேவை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இலங்கையின் உள்நாட்டு அரசியல் சூழலைப் பொறுத்தவரையில், தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலையின் மோசமான நிலைமை குறித்து இம்மாநாட்டிற்குத் தெரிவித்துக் கொள்கிறோம். நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையின் ஒட்டுமொத்த விளைவு தான் இந்தப் பொருளாதார நெருக்கடி ஆகும். டாலர் மற்றும் ரூபாய் ஆகிய இரண்டின் தட்டுப்பாட்டை (Double Deficit) ஒரே சமயத்தில் இந்த நெருக்கடி உருவாக்கியது. பொருளாதார நெருக்கடியானது அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்து, சமூக மற்றும் பண்பாட்டு நெருக்கடியை உருவாக்கியது.

இலங்கை விடுதலையடைந்த காலத்தில் இருந்து, ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் இரு பெரும் அரசியல் கட்சிகளிலும் இந்த அரசியல் நெருக்கடி பல பிளவுகளைத் தோற்றுவித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலுக்கு இரையாகும் பலவீனமான நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இடதுசாரி ஒற்றுமை மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியைக் கட்டமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது.

சிறப்புமிக்க இம்மாநாட்டில் பங்கேற்க எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்தமைக்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் நீடூழி வாழ்க!

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் நீடூழி வாழ்க!

நன்றி!

இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button