அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்க்கும் போர்களும் பொருளாதாரப் பேரழிவும்
டி. ராஜா, பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அமெரிக்க அதிபராகத் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் பதினான்கு மாதங்களில், டொனால்ட் ட்ரம்ப் உலகின் பல மண்டலங்களில், தனது இராணுவ நடவடிக்கைகளை வெகுவேகமாக விரிவாக்கம் செய்துள்ளார். இந்த குறுகிய காலத்திற்குள், சோமாலியா, ஈராக், ஏமன், சிரியா, நைஜீரியா, வெனிசுலா மற்றும் ஈரான் உள்ளிட்ட குறைந்தது ஏழு நாடுகளில் அமெரிக்கா தாக்குதல்கள் அல்லது ஆயுதமேந்திய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்கள், இலக்கு வைக்கப்பட்ட குண்டு வீச்சு, போர் கப்பல்களை கடலை சுற்றி நிறுத்துதல், நட்பு நாடுகளுடன் இணைந்த கூட்டு நடவடிக்கைகள் ஆகியவை அமெரிக்க அதிகாரத்தின் வழக்கமான கருவிகளாக மாறிவிட்டன. புவிப் பரப்பில் விரிவடையும் இந்தத் தலையீடுகள் கவலை அளிக்கின்றன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையக் கருவியாக இராணுவ பலம் மீண்டும் நிலைநாட்டப்பட்டு வருகிறது, இது ஏற்கனவே கொந்தளிப்பான பிராந்தியங்களை நிலை குலைக்கிறது; மோதலுக்குள் தள்ளுகிறது.
இராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்லாது, ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதி வரிகளை மூர்க்கத்தனமாக ஆயுதமாக்குவதன் மூலம் கடுமையான பொருளாதார நிர்பந்தத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியா, கனடா, மெக்சிகோ, சீனா, பிரேசில், கொலம்பியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் மீது வாஷிங்டன் அபராத வரிகளை விதிக்கிறது; அதன் மூலம் மிரட்டவும் செய்கிறது. இருதரப்பு விவாதங்களுக்கு அப்பால், பெரும்பாலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குப் பொதுவான வரிகள் மற்றும் ‘பிரிக்ஸ்’ போன்ற ஒட்டுமொத்த கூட்டமைப்புகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் போன்ற விரிவான திட்டங்களை ட்ரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ளது.
பொருளாதார அழுத்தமும் இராணுவ மிரட்டலும் ஒன்றிணைந்து புவிசார் அரசியல் கட்டுப்பாட்டுக் கருவிகளாகச் செயல்படுகின்றன.
இந்த முன்னேற்றங்கள் ஒரு குறிப்பிட்ட நிர்வாகத்தின் விருப்பத்தால் மட்டுமே உருவானவை அல்ல. அவை முதலாளித்துவத்தின் ஆழமான கட்டமைப்பு நெருக்கடியைக் காட்டுகின்றன. அமெரிக்காவிலும், உலகம் தழுவிய அளவிலும் முதலாளித்துவத்தின் உற்பத்தித்திறன் வளர்ச்சி குறைந்துள்ளது. ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன. மூலதனத்தின் வருவாய் குறைந்து வருகிறது. அமைப்பின் உள் முரண்பாடுகள் கூர்மையாகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில், நெருக்கடியை வெளிநோக்கித் தள்ளும் உந்துதல் தீவிரமடைகிறது.
உள்நாட்டில் நிலவும் பொருளாதாரத் தேக்கத்தின் சுமை, வெளிநாடுகளின் மீது தந்திரமான முறையில் தள்ளப்படுகிறது. போர்கள், தடைகள், கட்டாய வர்த்தக ஏற்பாடுகள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் ஆகியவை இந்த அமைப்பு தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் வழிமுறைகளாக மாறுகின்றன.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, விளாடிமிர் லெனின் ஏகாதிபத்தியம் குறித்த தனது உன்னதமான படைப்பில் இந்த நிகழ்வை ஆய்வு செய்தார். முதலாளித்துவம் அதன் மிக உயர்ந்த நிலையை எட்டும்போது, அதிக லாபத்தைத் தேடித் தனது எல்லைகளுக்கு அப்பால் மூலதனத்தை ஏற்றுமதி செய்யத் தொடங்குகிறது என அவர் நிறுவினார். இந்த வெளிநோக்கிய விரிவாக்கத்தால், ஏகாதிபத்தியப் போட்டி, பலவீனமான நாடுகளின் மீது ஆதிக்கம், தொடர்ச்சியான இராணுவ மோதல்கள் உருவாகின்றன. லெனினின் அந்த ஆய்வு இன்றைய சூழலிலும் முற்றிலும் பொருந்திப் போகிறது
முன்னேறிய முதலாளித்துவப் பொருளாதாரங்களுக்குள் உற்பத்தி முதலீட்டு வாய்ப்புகள் சுருங்கும்போது, ஏகாதிபத்திய நாடுகள், மற்ற நாடுகளின் வளங்கள், சந்தைகள் உள்ளிட்டவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன் மூலம் தனது சிக்கல்களை தீர்க்க முயல்கின்றன.
இருப்பினும், தற்போதைய சூழலில், இந்த செயல்முறை இன்னும் ஆபத்தான வடிவத்தை எடுத்துள்ளது. ஏகாதிபத்திய ஆணவம், இப்போது வெறும் மூலதனத்தை ஏற்றுமதி செய்வதோடு நிற்கவில்லை; போரையே ஏற்றுமதி செய்கிறது. இராணுவ மோதல் ஒரு லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. பிரம்மாண்டமான இராணுவத் தொழில் வளாகங்கள் நிரந்தரப் போரினால் செழிக்கின்றன. ஆயுதங்கள் முடிவற்ற சுழற்சிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன, வேறு வழியே இன்றி போரிடும் நாடுகளால் அவை வாங்கப்படுகின்றன, கொள்ளை லாபம் ஈட்டப்படுகின்றது.
ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், நட்பு நாடுகளைப் பாதுகாத்தல் அல்லது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல் போன்ற மொழிகளில் போர்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆயினும் இந்த சொல்லாட்சிக்கு பின்னால் ஒரு பெரிய லாப இயந்திரம் உள்ளது. மோதல்களைத் தூண்டும் அதே சக்திகள், அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் தளவாட ஆதரவைச் சார்ந்திருக்கும் அரசுகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் ஆயுதங்களை வழங்குகின்றன.
அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இன்றைய கூட்டணி இந்த மூர்க்கத்தனமான முதலாளித்துவ முறைமைக் கட்டமைப்பின் மிகத் தெளிவான முகத்தைப் பிரதிபலிக்கிறது. மேற்கு ஆசியா முழுவதும், தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் மற்றும் சர்வதேச நெறிமுறைகளை வெளிப்படையாகப் புறக்கணித்தல் ஆகியவை இப்பிரதேசத்தை முடிவற்ற வன்முறைச் சுழற்சிக்குள் தள்ளியுள்ளன. பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை என்ற பெயரில் முழுச் சமூகங்களும் பேரழிவிற்கு உள்ளாக்கப்படுகின்றன.
மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் குண்டுகள் விழும்போது, பள்ளி குழந்தைகள் பலியாகும்போது, மில்லியன் கணக்கான பொதுமக்கள் இடம்பெயரும்போது, விடுதலை, மனிதாபிமானத் தலையீடு போன்ற சொல்லாடல்கள் உள்ளீடற்று வெற்றாக ஒலிக்கின்றன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான ஐக்கிய நாடுகள் சபை கட்டமைப்பு கிட்டத்தட்ட சரிந்துவிட்டதையும் இந்தத் தருணம் வெளிப்படுத்துகிறது. ஐ.நா.வில் பல முரண்பாடுகள் இருந்தபோதிலும், நாடுகள் விவாதிக்கவும் மற்றும் இராஜதந்திரம் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்கவும் முயற்சிக்கும் ஒரு உலகளாவிய மன்றமாக ஒரு காலத்தில் செயல்பட்டது. இன்று அது தொடர்பற்றதாகிவிட்டது. சக்திவாய்ந்த நாடுகள் தாங்கள் விரும்பும் போதெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்க்கின்றன. போர் மற்றும் அமைதி பற்றிய முடிவுகள் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டு பலப்பிரயோகத்தின் மூலம் திணிக்கப்படுகின்றன. சக்திவாய்ந்த நாடுகள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி செயல்படுவதால் சர்வதேச சட்டத்தின் அதிகாரம் படிப்படியாக செல்லரித்துப் போகிறது.
மேற்கத்தியத் தலைமையின் அண்மைக்கால அறிக்கைகள் இந்தச் சரிவை வியக்கத்தக்க தெளிவுடன் விளக்குகின்றன. அமெரிக்கா-ஈரான் மோதலை சர்வதேச சட்டத்தின் கண்ணோட்டத்தில் மதிப்பிடுவது முக்கியமற்றதாக இருக்கும் என்று ஜெர்மனி அதிபர் சமீபத்தில் குறிப்பிட்டார்.
மேற்கத்திய நாடுகள் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் தாங்கள் முன்மொழிந்த சட்ட நெறிமுறைகளையும் கொள்கைகளையும் இப்போது எவ்வளவு தூரத்துக்கு அவமதிக்கின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது. ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு உதவும்போது சர்வதேச சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது, அது வசதியற்றதாக மாறும்போது நிராகரிக்கப்படுகிறது.
எனவே, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான உலக ஒழுங்குமுறை நம் கண் முன்னே சிதைந்து வருகிறது. உலகம் படிப்படியாக பல்முனைத் தன்மையை நோக்கி நகர்வதை அமெரிக்கா எதிர்கொள்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் தங்கள் இருப்பை நிலைநாட்டுகின்றன. பிராந்திய சக்திகள் அதிக தன்னாட்சியைத் தேடுகின்றன. உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் நிதி கட்டமைப்புகள் மீதான மேற்கத்திய ஆதிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் சவால்கள் எழும்புகின்றன. இந்த மாற்றமே அமெரிக்க அதிகாரத்தின் தற்போதைய வெஞ்சினத்தைத் தூண்டியுள்ளது.
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தனது ஆதிக்கம் அரிக்கப்படுவதை எதிர்கொள்ளும் அமெரிக்கா, மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும் ஒருமுனை உலக ஒழுங்குமுறையைப் பாதுகாக்கவும் தீவிரமாக முயற்சி செய்கிறது. இராணுவத் தலையீடுகள், பொருளாதாரத் தடைகள், வரிப் போர்கள் மற்றும் கட்டாய இராஜதந்திரம் ஆகியவை இந்த மேலாதிக்கப் போராட்டத்தின் கருவிகளாக மாறியுள்ளன. இதன் நோக்கம் நிலைத்தன்மை அல்ல, மாறாகக் கட்டுப்பாடு. இதன் நோக்கம் ஒத்துழைப்பு அல்ல, ஆதிக்கம்.
இந்த போக்கு பனிப்போர் காலத்தின் இயக்கவியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பனிப்போரின் போது, உலகம் அமெரிக்கா – சோவியத் யூனியன் தலைமையிலான முகாம்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தப் போட்டி பதற்றங்களையும் பதிலி (Proxy) போர்களையும் உருவாக்கியது. ஆனாலும் போட்டியிடும் அதிகார மையங்களின் இருப்பு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதிகார சமநிலை மோதல்கள் தீவிரமடைவதற்கு வரம்புகளை உருவாக்கியதால், பெரிய நாடுகளுக்கு இடையேயான நேரடிப் போர்கள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டன.
நிகழ்காலத்தில் அந்த கட்டுப்பாடுகள் பெரிதும் பலவீனமடைந்துள்ளன. ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தி பெருகிய முறையில், எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படுகிறது. முகாம்களுக்கு இடையிலான போட்டிக்கு பதிலாக, ஒரு நாடு பல பிராந்தியங்களில் தனது இராணுவ வலிமையை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவதை உலகம் காண்கிறது. பலவீனமான நாடுகளின் மீது போர் திணிக்கப்படுகிறது, இது அந்த நாட்டு மக்களுக்குப் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அமெரிக்கச் சமூகத்தின் உள் முரண்பாடுகள் இந்த அமைப்பின் தார்மீகத் தோல்வியை மேலும் அம்பலப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் போர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளைப் பராமரிக்க அமெரிக்கா பல லட்சக்கணக்கான டாலர்களைச் செலவிடுகிறது. அதே நேரத்தில் அது தனது சொந்த குடிமக்களுக்கு முழுமையான சுகாதாரப் பாதுகாப்பை வழங்க மறுக்கிறது.
வெளிநாடுகளின் மீது போர் தொடுத்து, அங்குள்ள உயிர்களையும் செல்வங்களையும் அழிப்பதற்காக, சொந்த நாட்டின் வளங்கள் அனைத்தும் திருப்பிவிடப்படும்போது, அதே நாட்டின் பல லட்சக்கணக்கான மக்கள் மருத்துவக் கடன், வீடற்ற நிலை, சமூகப் பாதுகாப்புகள் இல்லாமல் போராடுகிறார்கள்.
இந்த அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள சீரழிவு அதன் அரசியல் உயரடுக்கின் நடத்தையிலும் வெளிப்படுகிறது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஊழல்கள் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சக்திவாய்ந்த நபர்களின் ஈடுபாடு பற்றிய வெளிப்பாடுகள் வெறும் தனிப்பட்ட சர்ச்சைகள் அல்ல. அவை பொறுப்புக்கூறலிலிருந்து விலகியிருக்கும் ஓர் அரசியல் வர்க்கத்தின் ஆழமான தார்மீகச் சிதைவை அம்பலப்படுத்துகின்றன.
ஒரு குறுகிய உயரடுக்கின் கைகளில் மிகப்பெரிய செல்வத்தையும் அதிகாரத்தையும் குவிக்கும் ஒரு அமைப்பு, தவிர்க்க முடியாமல் நிர்வாகத்தின் நெறிமுறைப் பொறுப்புகளிலிருந்து விலகிய ஒரு தலைமையையே உருவாக்குகிறது.
இந்த ஏகாதிபத்திய ஒழுங்குமுறையின் விளைவுகள் உலகின் பிற பகுதிகளைக் கடுமையாக பாதிக்கின்றன. இராணுவ மோதல்கள் வர்த்தகப் பாதைகளைச் சீர்குலைக்கின்றன, உள்கட்டமைப்பை அழிக்கின்றன, மானுட பேரழிவுகளைத் தூண்டுகின்றன. எரிசக்தி சந்தைகள் நிலையற்றதாக மாறுகின்றன. உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. ஒட்டுமொத்த மக்களும் இடம்பெயர்கின்றனர். ஏற்கனவே வரலாற்றுச் சுரண்டலால் சுமைக்குள்ளான பிராந்தியங்கள் ஆழமான நெருக்கடிகளுக்குள் தள்ளப்படுகின்றன. அதே நேரத்தில், முதலாளித்துவ வளர்ச்சியின் சீரற்ற தன்மை முதலாளித்துவ முகாமிலும் பிளவுகளை உருவாக்குகிறது. ரஷ்யாவால் ‘நேட்டோ’வின் விரிவாக்கம் தடுக்கப்பட்டது; ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் சில நேட்டோ உறுப்பு நாடுகளால் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும், மூலதனத்தின் தர்க்கத்தைப் பின்பற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கத்தால் உலகளாவிய சூழல் குழப்பமாகவே உள்ளது.
இந்த அழிவுகரமான பாதையின் தெளிவான உதாரணங்களில் ஒன்றாக மேற்கு ஆசியா உள்ளது. இப்பகுதி புவிசார் அரசியல் போட்டியின் நிரந்தரக் களமாக மாற்றப்பட்டுள்ளது. இராஜதந்திர ஈடுபாடு மற்றும் இறையாண்மை மதிப்புகளுக்குப் பதிலாக, இராணுவ விரிவாக்கமே மேலாதிக்கம் கொண்டதாக உள்ளது. ஈரான் மீதான சமீபத்திய தாக்குதல்களும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவரைப் படுகொலை செய்ததும் ஒரு ஆபத்தான நடவடிக்கையாகும். இது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் கணிக்க முடியாத உலகளாவிய பாதிப்புகளைக் கொண்ட ஒரு பரந்த போருக்குள் தள்ளக்கூடும்.
இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு, இந்த தீய விளைவுகள் அனைத்தும் எங்கோ தூரத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அல்ல, மாறாக நேரடி விளைவுகளைக் கொண்ட உடனடி சவால்கள் ஆகும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, வரலாற்று ரீதியாக தன்னாட்சி, அணிசேராமை, இறையாண்மை மீதான மதிப்புகள் ஆகிய கொள்கைகளிலிருந்து வலிமையைப் பெற்றது. இவை காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து உருவானவை. அந்தக் கொள்கைகள் மிகவும் சமத்துவமான உலக ஒழுங்கு கட்டமைப்பை தேடும் புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் விருப்பங்களை பிரதிபலித்தன.
இன்று மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் இந்தியாவின் மௌனம், மறைமுகமான அங்கீகாரமாகப் பார்க்கப்படுவது குறித்து வளர்ந்து வரும் கவலை உள்ளது. இத்தகைய மௌனம் தெற்கு உலகில், இந்தியாவின் தார்மீக மற்றும் இராஜதந்திர நிலையை பலவீனப்படுத்துகிறது. மோதல்கள் விநியோகத்தைச் சீர்குலைத்து விலைகளை உயர்த்துவதால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஏற்படும் அழுத்தம் கண்கூடாகத் தெரிகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கம் மூலம் சாதாரண மக்கள் இந்த அழுத்தங்களை அனுபவிக்கிறார்கள்.
தேசிய நலன்களைத் தெளிவோடும் சுதந்திரத்தோடும் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் இராஜதந்திர வேடிக்கைகளில் மூழ்கியிருப்பதாகத் தோன்றுகிறது. பிரதமரின் இஸ்ரேல் பயணம் இந்திய திட்டமிடுதலின் வெளிப்பாடாக முன்னிறுத்தப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. இராஜதந்திர வெற்றியைக் குறிக்க வேண்டிய ஒன்று, விரைவிலேயே தொலைநோக்கு பார்வையும் சுதந்திரமான நிலைப்பாடும் இல்லாததை அம்பலப்படுத்திய ஒரு சங்கடமாக மாறியது.
இறையாண்மை கொண்ட பக்கத்து நாட்டுத் தலைவரின் படுகொலையைக் கண்டிக்கவோ அல்லது முறைப்படி இரங்கல் தெரிவிக்கவோ கூட அரசாங்கம் மறுத்தது இன்னும் கவலையளிக்கிறது. இத்தகைய மௌனம் வலிமையை அல்ல, மாறாகப் பணிந்து நிற்பதையே பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் குரலை வாஷிங்டனின் தந்திர விருப்பங்களுடன் இணைப்பதற்கான இசைவையே குறிக்கிறது.
அமெரிக்க அதிகார மையங்களுக்குள்ளிருந்தே வெளிவரும் அறிக்கைகளை ஆராயும்போது இத்தகைய சீரமைப்பின் ஆபத்து இன்னும் தெளிவாகிறது. சீனா தனது உற்பத்தி சக்திகளை உருவாக்கி உள்ளது போல, இந்தியாவும் உருவாக்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் அறிவித்தார். இத்தகைய கருத்துக்கள் ஏகாதிபத்திய தந்திர உத்திகளின் அடிப்படைத் தர்க்கத்தை வெளிப்படுத்துகின்றன.
மற்றொரு அதிகாரி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு ‘அனுமதி’ வழங்கினார். இது தன்னைத்தானே ‘விஸ்வகுரு’ என்று அறிவித்துக்கொண்டவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வந்துள்ளது. தெற்கு உலகின் சுதந்திரமான வளர்ச்சி அமெரிக்காவின் நோக்கமாக இருந்ததில்லை என்பது தெளிவாகிறது. வளரும் நாடுகள் உலகளாவிய முதலாளித்துவ அமைப்பிற்குள் அடிபணிந்த சந்தைகளாகவும், வளங்களை அள்ளி வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
அமெரிக்க-இஸ்ரேல் அச்சுடன் இந்தியா மிகவும் ஒத்துழைத்து, இணைந்து செயல்படுவதாகத் தோன்றினால், ‘பிரிக்ஸ்’ போன்ற தளங்களுக்குள் இந்தியாவின் நம்பகத்தன்மை சிதைவடையும் அபாயம் உள்ளது. மேற்கத்திய நிதி மற்றும் அரசியல் கட்டமைப்புகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் முயற்சியாக ‘பிரிக்ஸ்’ உருவானது. தற்போது இந்தியா தலைமை தாங்கும் இத்தகைய தளங்களில் இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்துவது, சமநிலையான மற்றும் உண்மையான பலமுனை உலக ஒழுங்கைக் கட்டியெழுப்பும் பரந்த திட்டத்தைச் சிதைக்கும்.
இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கான தாக்கங்களும் சம அளவில் தீவிரமானவை. அமெரிக்கத் தலைமையிலான முதலாளித்துவத்துடன் விமர்சனமற்ற முறையில் இணைவது, இந்தியா-அமெரிக்கா மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற கட்டாய வர்த்தக ஏற்பாடுகள் மற்றும் சமமற்ற ஒப்பந்தங்களுக்கு நாட்டை ஆளாக்குகிறது. இத்தகைய அழுத்தங்கள் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை அச்சுறுத்துகின்றன. தேசியப் பொருளாதாரக் கொள்கை ஏகாதிபத்தியத்தில் உலகம் தழுவிய அரசியல் நலன்களுக்கு அடிபணியும்போது, அதன் சுமை தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்கள் மீதே விழுகிறது.
எனவே இன்று உருவாகி வரும் நெருக்கடி வெறும் உலகளாவிய அரசியலைச் சார்ந்தது மட்டுமல்ல. இது அமைப்பு ரீதியானது. ஏகாதிபத்திய நிலையில் உள்ள முதலாளித்துவம் வெளிநாடுகளில் போர்களையும் உள்நாட்டில் சமத்துவமின்மையையும் உருவாக்குகிறது. இது ஒரு சிலரின் கைகளில் செல்வத்தைக் குவிக்கிறது, அதே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதுகாப்பின்மை மற்றும் சுரண்டலுக்கு ஆளாக்குகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, நமது சொந்த மக்களின் இழப்பில் இந்தியாவை அந்தப் பாதையில் அதிவேகமாக இழுத்துச் செல்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இருபதாம் நூற்றாண்டு, ஏகாதிபத்தியத்தின் வரையறையற்ற மூலதன ஏற்றுமதியை குறித்தது என்றால், இருபத்தியோராம் நூற்றாண்டு போரை ஏற்றுமதி செய்வதை அதன் மிகக் கொடூரமான வெளிப்பாடாகக் காண்கிறது. அழிவிலிருந்தே லாபத்தைப் பிரித்தெடுக்க முடியும் என்பதால் ஒட்டுமொத்த பிராந்தியங்களும் போர்க்களங்களாக மாற்றப்படுகின்றன.
ஜனநாயகத்தின் சொல்லாட்சி, ஆதிக்கத்திற்கான ஒரு மறைப்பாக மாறுகிறது. பாதுகாப்பின் மொழி முடிவற்ற இராணுவமயமாக்கலுக்கான ஒரு சாக்காக மாறுகிறது. மனிதகுலம் இப்போது ஒரு ஆபத்தான குறுக்குச் சாலையில் நிற்கிறது. ஒருதலைப்பட்ச அதிகாரம், நிரந்தரப் போர் மற்றும் பொருளாதாரக் கட்டாயம் ஆகியவற்றின் மீது கட்டப்பட்ட உலக ஒழுங்கு முறை நிலைத்தன்மையையோ அல்லது நீதியையோ உருவாக்க முடியாது. அதனால், துயரத்தை ஆழப்படுத்தவும் உலகளாவிய பிளவை வேகப்படுத்தவும் மட்டுமே முடியும்.
உலகெங்கிலும் உள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த தருணத்தின் தீவிரத்தை உணர வேண்டும். இன்றைய போராட்டம் ஒரு குறிப்பிட்ட போருக்கு அல்லது கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல. அவற்றை மீண்டும் மீண்டும் உருவாக்கும் ஓர் அமைப்பிற்கு எதிரானது.
இறையாண்மை, சமாதானம், சமூக நீதியைப் பாதுகாப்பதற்கு உலகளாவிய முதலாளித்துவத்தைத் தக்கவைக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கக் கட்டமைப்புகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். சுரண்டலின் அடிப்படையில் கட்டப்பட்ட அமைப்புகள், எந்த மக்களை அடிபணிய வைப்பதற்காக முயற்சிகள் எடுத்ததோ, அதே மக்களிடமிருந்தே எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
ஏகாதிபத்தியப் போர்கள் நாடுகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கலாம், ஆனால் அவை அந்தப் போர்களை நடத்தும் ஒழுங்கின் தார்மீக மற்றும் அரசியல் தோல்வியையும் அம்பலப்படுத்துகின்றன.
மனித குலம் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மிகத் தெளிவானது. ஒன்று, அழிவின் மூலம் லாபம் ஈட்டப்படும் இராணுவமயமாக்கப்பட்ட முதலாளித்துவப் பாதையில் உலகம் தொடர்ந்து செல்ல வேண்டும், அல்லது கண்டங்கள் கடந்து மக்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு, இறையாண்மை மற்றும் மனித கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு மாற்று சர்வதேச ஒழுங்கைக் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த ஏகாதிபத்தியப் பாதை சவாலுக்கு உள்ளாக்கப்படாமல் இருந்தால், இருபத்தியோராம் நூற்றாண்டு நிரந்தரப் போரால் வரையறுக்கப்பட்ட ஒரு யுகமாக மாறும் அபாயம் உள்ளது. ஆனால் ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் கருத்தியல் தெளிவுடன் அதை எதிர்கொள்ள எழுந்தால், முதலாளித்துவத்தின் நெருக்கடியே மிகவும் நீதியான, மனிதாபிமானமிக்க உலகத்திற்கான சாத்தியத்தைத் திறக்கக்கூடும்.
இன்றைய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில், எந்த ஒரு இடத்திலும் அல்லது நாட்டிலும் நிகழும் போர் மற்றும் பொருளாதாரப் பேரழிவு என்பது, மற்ற இடங்களில் துயரங்களைக் குறிக்கிறது.
போருக்கு வழிவகுக்கும் முதலாளித்துவ நெருக்கடியின் இந்தச் சுழற்சியை உடைக்க, முதலாளித்துவ அமைப்பின் தர்க்கமே சவாலுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மனிதகுலத்தின் எதிர்காலமே இதில் பணயமாக உள்ளது. வரும் தலைமுறைக்கு அமைதியான உலகம் வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரும் முதலாளித்துவத்தின் இந்த ஒழுக்கமற்ற மற்றும் இழிவான அமைப்பைத் தோற்கடிக்க ஒன்று சேர வேண்டும்.
அப்போதுதான் மனிதகுலத்தின் உயிர்வாழ்வை உறுதி செய்ய முடியும்.

