கட்டுரைகள்

சீமான் – ஆர்எஸ்எஸ்ஸின் இன்னொரு நாக்கு!

- இளசை கணேசன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்,  நிறைய படிப்பதாக சொல்கிறார்கள். ஈர்க்கிற பேச்சாளர், தர்க்கம் செய்வதில் வல்லவர்தான்.

ஆனால், தர்க்கம் செய்வதில் தரவுகள்தான் பிரதானம். தரவுகளுக்கு தொடர்பில்லாத தனது சொந்த கருத்தை திணித்தால் தடுமாற்றம், திசைமாற்றம் ஏற்படும்.

இப்படிச் செய்வதால் சீமான் பல சமயம் தடுமாறி திசைமாறி எல்லை தாண்டி விடுகிறார். நேற்று என்ன பேசினோம்? இன்று என்ன பேசுகிறோம்? நாளை என்ன பேசுவோம்? என்பதில் அவராலேயே அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை!

“அவரு ரொம்ப நல்லவருதான் ஆனால் அவ்வப்போது வெங்காயம் தின்பார் அவ்வளவுதான்” இதன் முழு கதை சீமானுக்குப் பொருந்தும்.

நிறைகுடம் தளும்பாது. ஆனால் இவர் அடிக்கடி தளும்புவார். ‘தளும்பி’க் கொண்டே பேசவும் செய்வார்!

மணிப்பூருக்காக என்று கூறி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜூலை 30ல் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு மணிப்பூரில் நடைபெற்ற அந்தக் கோரத்தாண்டவத்தின் கொடூரத்தை தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.

கலவரம் நடத்தி, நடத்தி ஆட்சியைப் பிடித்தால் காடுகளின், வனங்களின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். காடுகளில், வனங்களில் வாழும் பழங்குடி இன மக்களை வெளியேற்றுகிறார்கள்.

தேசம் வெட்கித் தலைகுனிகிறது. பாரத மாதா நிர்வாணமாக  நிற்கிறாள் என்று சில நிமிடங்கள் மட்டும் சரியாக சுருக்கமாக குறிப்பிடுகிறார். மற்றபடி முழுக்க முழுக்க தனது தேர்தல் பிரச்சார‌மாகவும் ஆர்.எஸ்.எஸ்  ஆதரவாகவும் மாறிவிட்டது.

இஸ்லாமியர், கிறிஸ்தவர், காங்கிரஸ், திமுக, பாஜக, மற்றும் கம்யூனிஸ்டுகள் என எல்லாவற்றின் மீதும்  சீமானின் விமர்சனம் இருந்தது. ஒரு கட்சி என்ற முறையில் மற்ற கட்சிகளை தாக்குவதை -அது உண்மையோ, பொய்யோ- தவறாகச் சொல்ல முடியாது.

ஆனால் மதரீதியாக, இஸ்லாமியர் கிறிஸ்தவர் மீது வேட்டை விலங்கு ஒன்று தன் இரையை கவ்விப்  பிடிப்பதைப் போன்ற ஆவேசம் தெரிந்தது.

பாஜக, மோடி மற்றும் அண்ணாமலை மீதான விமர்சனங்கள் தாய் விலங்கு, தன் குட்டியைக் கவ்விப் பிடிப்பது போல் ரொம்ப நெகிழ்வாக இருந்தது.

“கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தேவனின் பிள்ளைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி ரொம்ப நாளாச்சு” என்று சீமான் பேசியிருக்கிறார்.

* முற்றிலும் சிறுபான்மையினருக்கு எதிரான ஆதிக்க அரசியல் சூழல்.

* கட்டுப்படுத்த முடியாத அரச பயங்கரவாத வன்முறை கட்டமைப்பு.

* சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாக கூட இருக்க முடியுமா என்ற நிலை

இப்படி சிறுபான்மையினர் வெந்து கொண்டிருக்கின்ற நிலையில் வெந்த புண்ணில் துருப்பிடித்த வேலை பாய்ச்சுகிறார் சீமான். இத்தோடு நிறுத்தி விடவில்லை!

”நாட்டில் நடந்திருக்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் இவர்கள் தான் காரணம்!”

“எவன் எவனுக்கோ நாட்டை கொடுத்து விட்டார்கள்”.

”பாவங்களின் பெரும்பான்மையே இவர்கள்தான்”,என்று நாலாந்தர அரசியல்வாதிக்கும் கீழாகச் இறங்கி ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வக்காலத்து வாங்கியும் பேசியிருக்கிறார்.

2 ஆம் தேதி வியாழக்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசுகிறபோது “தான் பேசியது குறித்து எந்த வருத்தமோ விளக்கமோ தெரிவிக்கவில்லை.” எதிர் எல்லைக்குச் சென்றவர் வேறு எல்லைக்”இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பை கழட்டி அடிப்பேன்” என்று தனது கொந்தளித்த உணர்ச்சியை வெளிக்காட்டியதோடு செருப்பை கழட்டும் பாவனையில் குனிந்தார்!

பத்திரிகையாளர்களிடம் எதிர்ப்பு கிளம்புவதை கண்டு உடனே சுதாகரித்துக் கொண்டு.. “வந்தவன், போனவன் எல்லாம் இஸ்லாமியரை, கிறிஸ்தவரை சிறுபான்மையினர் என்று சொன்னா செருப்ப கழட்டி அடிப்பேன்” என்று மாற்றிப் பேசினார்.

இஸ்லாமியர்களின் நேர் எதிரிகள் நாங்கள்தான் என்று அக்மார்க் முத்திரை குத்திக்கொண்டு, தனது ஆக்டோபஸ் கொடுங்கரங்களில் சிக்க வைத்து சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட இப்படி பேசியதில்லை. ஆனால் சீமான் பேசியிருக்கிறார்.

“அப்பா இளையராஜா பெரும்பான்மை இந்து. மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மையா? ஏ.ஆர்.ரகுமான் இஸ்லாமில் சேர்ந்து விட்டால் சிறுபான்மையாகி விடுவாரா? இப்படி நினைப்பது பைத்தியக்காரத்தனம் இல்லையா?” என்று சீமான் வாய் வீச்சு தர்க்கம் செய்கிறார்.

இஸ்லாமில் சேர்ந்து விட்டால் தாங்கள் சிறுபான்மை ஆகிவிடுவோம் என்பது யுவன் சங்கர் ராஜாவுக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் நன்றாகவே தெரியும், தெரியும். சீமானுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

“எனது பேச்சு என்பது பேரன்பின் வெளிப்பாடு, எனது கோபத்தில் உள்ள பேரன்பினை யாரும் புரிந்து கொள்ளவில்லை”

ஆஹா! சாதாரண அன்பு இல்லையாம்! பேரன்பாம்! கேழ்வரகில் நெய் வடிகிறதாம்! கேனையர்களே கேளுங்கள் என்கிறார்.

யாரும் இதுவரை அடிக்காத அந்தர் பல்டியை சீமான் அடித்துள்ளார். இது பைத்தியக்காரத்தனமாகத் தெரியவில்லையா?

சீமானின் பேச்சு சறுக்கல் என்றோ, பக்குவம் இல்லாத, பண்பாடு அற்ற, அரைவேக்காட்டு அரசியல் என்றோ ஒதுக்கித் தள்ளிவிட முடியாது! மணிப்பூருக்கான போராட்டத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என்று வெகுநேரம் சீமான் பேசினார்.

58 நிமிட பேச்சில், 2 நிமிடம் பேசியதில் மட்டும் குறை கண்டுபிடிக்கப்படுகிறது என்று அவரே பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதே 58 நிமிடப் பேச்சில் மணிப்பூர் வன்முறை குறித்து எவ்வளவு நேரம் பேசினீர்கள்? நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.

“மணிப்பூரில் கலவரம்” என்று பேச்சை துவங்குகின்றீர்கள்! இதுதான் உங்கள் மதிப்பீடா? கலவரத்திற்கும், வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும், திட்டமிட்ட அரச பயங்கரவாதத்திற்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?

மத்திய, மாநில அரசுகளின் இரட்டை அரச பயங்கரவாதம் மெய்தி இனத்தை கருவியாக பயன்படுத்தி பழங்குடி இனத்தவர்கள் மீது கொடுமையான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, இன்னொரு குஜராத் வன்முறை அரங்கேறுகிறது.

இந்த வன்முறை மணிப்பூரோடு நிற்கப்போவதில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி ஜுரம் தலைக்கேறி விட்டதால், நாடு முழுவதும் வன்முறைகளை அரங்கேற்ற துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

சீமான் அவர்களே இதை திட்டமிட்ட இரட்டை அரசு பயங்கரவாத வன்முறை என்று கூறுகின்றீர்களா? அல்லது இல்லை என்று மறுக்கிறீர்களா?

உண்மையில் மணிப்பூர் வன்முறை கொடுமைகளை மட்டும் விவரித்துப் பேசினால், நீங்கள் எடுத்துக்கொண்ட 58 நிமிடம் போதாது.

முன்பு சீமானின் ஆதரவு பேச்சு குறித்து ‘சுவராஜ்யா’ என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை பாராட்டி எழுதியிருந்தது. தற்போதைய சீமான் தனது பேச்சில் ஆர்.எஸ்.எஸ் அஜன்டாவை சொல்வதில் அவர்களை விடவும் விஞ்சியிருகிறார்.

2 நிமிடமா, 2 ரெண்டு நொடியா  என்பதா முக்கியம்? சீமான் பேசிய பேச்சு விஷமத்தனமானதா, இல்லையா? துளி விஷம் என்றாலும் விஷம், விஷம் தானே?

சீமானுக்கு அதிகாரப் பசி அதிகரித்துவிட்டது. வாக்காளர்களை வென்றெடுக்கும் பொறுமை அவருக்கு இல்லை.  வாக்காளர் மீது பழிபோடத் துடிக்கிறார்.

இதற்கு முன்பு கூட “நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடாதவர்கள் நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்திருக்க முடியாது” என்று திமிரெடுத்து வாய்க்கு வந்தபடி வாய் சவடால் அடித்தார்.

டி. என். ஏ. டெஸ்டு தேவை இல்லாமல் செய்து விட்டார் சீமான். மனிதர்கள், மனித மாண்பு என்பதையெல்லாம் விட சீமானுக்கு ஓட்டு பெரிதாகி விட்டது!

* மக்களை வாக்காளர்களாக பார்ப்பது.

* வாக்காளர்களை அடையாளமாகப் பார்ப்பது.

இந்த இரண்டும் அடையாள அரசியலின் அடிப்படை.

வாக்காளர்களை மத அடிப்படையில் பிரிப்பது என்பது மதவாத அடையாள அரசியல்.

வாக்காளர்களை தமிழினமாக பிரிப்பது தமிழ் தேசிய அடையாள அரசியல்.!

சீமான் தமிழ் தேசிய அடையாள அரசியல் குறித்து பேசும்போது இந்துத்துவ மதவாத அடையாளத்துக்கு அடிபணிந்து அத்துமீறுவது ஏன்?

எந்த மதமும், எந்த சாதியும், எந்த இனமும் ஒட்டுமொத்தமாக ஒரே கட்சிக்கு, ஒரே கூட்டணிக்கு வாக்களித்து விடுவதில்லை.

தமிழ் தேசியம் என்ற பெயரில் நீங்கள் பேசுவதெல்லாம், தமிழர்களுக்கு ஏற்புடையவைதானா? திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழர்கள் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒட்டுமொத்தமாக வாக்களித்து விடவில்லை. தங்களின் அரசியல் வாழ்க்கை சூழலின் அனுபவத்திலிருந்து கணிசமானோர் வாக்களித்திருக்கிறார்கள்.

ஏன் என்ற காரணம் சீமானுக்கு தெரியாத ஒன்றல்ல!

யார் இந்து என்று யாராலும் அடையாளப்படுத்தி விட முடியாது. அதனால் தான் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சட்டமே அடையாளப்படுத்துகிறது.  இந்துக்களுக்கெல்லாம் தான்தான் பிரதிநிதிகள் என்று கொட்டி முழக்கும் பாஜகவுக்கும் அதன் கூட்டணிக்கு இந்துக்கள்  எல்லாம் வாக்களிப்பார்களா என்ன? திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள் யார்?

“இந்துக்கள் அரக்கர்களின் அல்லது அசுரர்களின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள்” எனறு சீமான் ஏன் பேசவில்லை?

சீமான் இப்படி பேசுவது புதிதல்ல. இதற்கு முன்பும் இதுபோன்று பேசியிருக்கிறார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தமிழரின் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும்.

கிறிஸ்தவம் ஐரோப்பாவில் இருந்து வந்தது! இஸ்லாமியர்கள் எல்லாம் அரபு தேசத்தவர் என்று இதற்கு முன்பு அடிப்படை ஆதாரங்கள் இன்றி அளந்துவிட்டார்.

*தமிழர்களிடையே, தமிழர்களுக்கு என்று, தனித்த மதம் தோன்றியதா?

* தமிழர்களின் தாய் மதம் எது?

* மத மாற்றம் ஏன் நடைபெற்றது?

* சைமன் என்ற பெயர் கொண்ட சீமானும், செபஸ்தியன் என்ற பெயர் கொண்ட தங்கள் தந்தையரும் எப்போது தாய் மதத்திற்கு திரும்பினீர்கள்?

* ‘அன்பே சிவம்’ என்ற சைவக் கொள்கையைத்தான் நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சீமான் பதில் சொல்வாரா?

தமிழர்களிடையே தனித்த மதம் என்று உருவாகவில்லை. அதுமட்டுமல்ல ‘மதம்’ என்ற சொல் தமிழர்களின் வழக்கத்தில் இல்லை. இது பின்னர் திணிக்கப்பட்டது!

கிறிஸ்தவம் ஐரோப்பாவில் தோன்றியது அல்ல. அது தோன்றிய இடம் இன்றைய மத்திய ஆசியா பகுதி. அது தோன்றிய காலத்தில் கண்டங்கள் என்று பிரிக்கப்படவில்லை.

இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தமிழர்களின் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தது ஏன்?

சீமான் குறிப்பிடும் சைவமும் மாலியமும் (வைணவம்) இந்து மதம் என்ற பெயரில் சங்கமம் ஆகிவிட்டது. தமிழரின் தாய் மதத்திற்கு திரும்புங்கள் என்று சீமான் சொல்வது இந்து மதத்திற்கு வாருங்கள் என்று அழைப்பதாகத் தானே அர்த்தம்?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  “கர்வாப்சி’ (தாய் மதத்திற்கு திரும்புங்கள்) என்ற இந்துத்துவ அஜன்டாவைத்தான் சீமான் தன் மொழியில் பேசுகிறார்.

‘சிறுபான்மையினர்’, என்ற சொல்லும் அதன் உள்ளடக்கமும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். மத ரீதியான, இனரீதியான, மொழி ரீதியான சிறுபான்மையை வரையறுத்து அவர்களின் உரிமை குறித்த சாசனத்தை ஐ.நா.சபை 1992 டிசம்பர் 18 ல்  அறிவித்தது

”சிறுபான்மையரின் அடையாளங்கள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். சிறுபான்மையரின் பின்தங்கிய நிலைமையை மேம்படுத்த அந்தந்த நாடுகள் முயற்சி செய்ய வேண்டும்” என்று ஐ.நா.பிரகடனம் செய்தது.

உலக அளவில் டிசம்பர் 18 தேசிய சிறுபான்மையினர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சீமான் உணர்ச்சியில் உண்மை இருந்தால் அவர் செருப்பைக் கொண்டு அடிக்க வேண்டிய இடம் ஐ.நா. சபையைத்தான். அடிப்பாரா?

1992 டிசம்பர் 6ல் உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு, இந்தியாவில் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான ஆணையமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர், கிறிஸ்தவர், பௌத்தர், சீக்கியர், பார்ஸி போன்றோர் மத வழி சிறுபான்மையினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். 2014 ல் ஜைனரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 2006 ல் சிறுபான்மையினருக்கான தனி அமைச்சகமும் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேசிய சிறுபான்மை ஆணையச் சட்டத்தை செருப்பால் அடிக்கப் போகிறாரா? தேசிய சிறுபான்மை ஆணையத்தை செருப்பால் அடிக்கப் போகிறாரா?

இந்திய அரசியல் சாசனம், குடியரசுத் தலைவர், இந்திய பிரதமர், அமைச்சர் பெருமக்கள், மாநில கவர்னர்கள், மாநில முதலமைச்சர்கள்,  மாநில அமைச்சர்கள், ஒன்றிய மாநில அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள், மற்றும் பொதுமக்கள் என்று பெரும்பான்மையாக  சிறுபான்மையினர் என்று பேசுகிறார்கள்.

கழட்டிய செருப்போடு அவர் மட்டும்தான் இருக்கிறார். அடிக்கப்படுவதற்கு  வேறு ஆள் இல்லை! என்ன செய்வதென அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

– இளசை கணேசன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button