இந்தியா

தனியார்மயம் – ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்

’நியூஏஜ்’ தலையங்கம்

பாஜக – ஆர்எஸ்எஸ் ஒன்றிய அரசு தனது தனியார் மயமாக்கல் கொள்கைகளுடன் தீவிரமாகச் செயல்படுகிறது. அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இதனை வெளிப்படுத்தினார்.

“நமது நாட்டில் பொதுத்துறை அழிவதற்கே பிறந்தது’’ என்பதுதான் அவருடைய சொற்கள். எந்த உயர்ந்த கோட்பாடுகளுக்காக நமது நாடாளுமன்றம் நிற்கிறதோ அதற்கு முரணானது அவருடைய பேச்சு. சோசலிசக் கோட்பாடுகளுடன் சமூகத்தைக் கட்டமைப்பதை நோக்கி நமது அரசியல் அமைப்புச் சட்டம் பற்றுறுதி கொண்டுள்ளது. (‘நாமிருக்கும் நாடு நமது என்று அறிவோம், அது நமக்கே உரிமையாம்’ என) பொது சொத்துரிமை மற்றும் தேசியப் பொருளாதாரம் தனது கேந்திரமான பிரிவுகளுடன் அனைத்தையும் கட்டுப்படுத்தும் உயர்ந்த இடத்தில் இருப்பதை நாம் விரும்புகின்ற நிர்வாக ஆட்சி முறைக்குத் தவிர்க்க முடியாத கட்டாயம் என்று கருதப்பட்டது.

நாம் விடுதலை அடைந்த போது, நீண்ட பல ஆண்டுகள் காலனியப் பொருளாதார அடிப்படைகளை அழித்திருந்ததால், பிரதானமான தேவை பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதாக இருந்தது. அதன் பொருள், தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கில் இருந்து விடுதலை பெற்று, நமது மக்கள் ஒவ்வொருவருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கவேண்டும் என்பதே. அது, சமூக நீதியுடன் கூடிய ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம். இந்த நோக்கங்களுடன் தேசத்தைக் கட்டியமைக்கும் இந்த முயற்சிகளுக்குப் போதுமான நிதியாதாரம் கிடைப்பது தேவையாக இருந்தது.

முதலில் தேசியமயமாக்கப்பட்டது ஆயுள் காப்பீடு, பிறகு இந்திய இம்பீரியல் வங்கி. அடுத்து பிற நிறுவனங்களும் பொதுத்துறையாக மாற்றப்பட்டன. பெரிய வங்கிகளும்கூட தேசியமயமாக்கப்பட்டன. பொது நிதி தேங்காமல் இயங்குவதுடன், அடிப்படை அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமின்றி ஏற்றுமதிக்காகவும் உற்பத்திப்பிரிவுகளில் அடிப்படை கட்டுமானங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1969 ஆம் ஆண்டில்தால் மிக முக்கியமான அந்த மாற்றம் ஏற்பட்டது.

ஏகபோகங்களுக்குச் சொந்தமான 14 பெரிய வர்த்தக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. தேசிய மயத்திற்குப் பிறகும் தனியார் தொழிற்சாலைகள், வர்த்தகத்திற்குத் தேவையான கடன் தேவைகள் தீர்க்கப்படும் என்றும் அரசு வலியுறுத்திக் கூறியது. உற்பத்திப் பிரிவின் – குறிப்பாக, விவசாயம், சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின்– தேவைகளை நிறைவேற்றவே தேசியமயமாக்கல் நிகழ்முறை தொடங்கப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், புதிய மற்றும் வளரும் முன்னெடுப்பு முயற்சிகளுக்கும், நாட்டின் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட முகம்கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி மக்களின் பணத்திற்கான பொது சொத்துரிமை, யூக மற்றும் உற்பத்திச் சாராத பகுதிகளில் செலவழிக்கும் நிகழ்முறையைக் குறைப்பதிலும் உதவியது.

சிலர் கட்டுப்பாட்டில் இருந்ததை நீக்கி, முன்னுரிமைப் பிரிவுகளுக்குக் கடன் வசதியை நீட்டிக்கவும், வங்கி நிர்வாக மேலாண்மையில் நிபுணத்துவத்தை வழங்கி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களில் புதிய வகுப்புகளை ஊக்குவிப்பதும் அதன் நோக்கம். மேலும் மக்களின் திறமைகளையும் மூலதனத்தையும் ஒன்று சேர்ப்பது, சமூக முன்னேற்றங்களில் உதவுவது. நீதிபதி கிருஷ்ணய்யர், “மக்களின் சேமிப்புக்களைத் திரட்டி (அந்தத் தொகையை) ஆதரவு வேண்டி நிற்கும் பிற பிரிவுகளுடன் வேளாண் பிரிவில் முதலீடு செய்வதே தேசியமயத்தின் நோக்கம்” என்று கூறியுள்ளார். அதன் நோக்கப்பயன் ஒவ்வொருவரையும் ஒருவரோடு ஒருவராக இணைத்து, அவர்களின் திறன் மற்றும் திரட்டிய மூலதனத்துடன் முன்னோக்கிச் செல்லச் செய்வதாகும். இவ்வளர்ச்சிச் செயல்திட்டங்களுக்கு உதவிடவே உயர் வளர்ச்சி விகிதத்தையும், ஏழ்மை, இல்லாமை விகிதத்தைக் குறைப்பதையும் வங்கிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஏராளமான வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. சேமிப்பு டெப்பாசிட்டுகளின் அளவும், குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் வளர்ந்தது. இரண்டு ஆண்டுகளில் வங்கிக்கடன் வசதி அளிப்பது 14 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக முன்னுரிமைப் பிரிவுகளுக்குத் திருப்பிவிடப்பட்டது. வருமானத்தில் சமத்துவமற்ற நிலையை அகற்றுவதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிட்டியது. வருமானத்தில் சமத்துவமற்ற நிலையைக் குறைப்பதைத் தொடர்ந்து சாதிக்கும் வகையில் வங்கிக் கொள்கை நீட்டிக்கப்பட்டது. இந்தக் கொள்கைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை மட்டுமல்ல, ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தையும் பெரும் பொருளாதார நெருக்கடியான உருகுநிலை விளைவுகளிலிருந்தும் (மெல்ட் டவுன் எஃபெக்ட்) பாதுகாத்தது.

இந்தச் சாதனைகளையும் தாண்டி, கால ஓட்டத்தில் சவால்கள் தலைவாயிலில் காத்திருந்தன. முதலாளித்துவ முறைமை முதிர்ந்து நிதி மூலதனத்திற்கு இடமளித்தது. கார்ப்பரேட் பிரிவை ஆதரித்து வளர்த்தது, மக்களின் நலவாழ்வுப் பொறுப்பு இனிமேலும் அரசுக்கு இல்லை என்றானது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாஜக உட்பட பல்வேறு ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்தன. ஆனால் பாஜக- ஆர்எஸ்எஸ் அரசு ஆட்சிக்கு வந்த 2014ல் தான் பங்கு விலக்கலுக்கான பெரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மற்றும் உத்திசார் விற்பனை மூலம் ஒன்றிய அரசு 4.04 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்ட முடிந்ததாக நிதியமைச்சகத் தகவல்கள் கூறுகின்றன. (அதாவது மூதாதையர்கள் திரட்டி வைத்த சொத்துகளை விற்றுப் பணம் திரட்டியது). அந்த நடவடிக்கைகளில் ஏர் இந்தியா உட்பட 10 நிறுவனங்கள் விற்கப்பட்டன. அந்த விற்பனைகள் கடந்த எட்டு ஆண்டுகளில் அரசு கஜானாவிற்கு ரூ. 69,412 கோடி ஈட்டித்தந்தன. 45 நிறுவனங்களில் பங்குகளைத் திரும்பப் பெறுவதன் மூலம் ரூ. 45,104 கோடியை ஈட்டியது. இப்படி பொதுத்துறை நிறுவனங்களை அக்கக்காகப் பிய்த்தெறிவது தொடர்ந்து நடந்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களின் மரணத்தைப் பற்றி பிரதமர் பேசிய போது அவர், நாட்டில் ஜனநாயக நிகழ்முறை நொறுங்குவதையும் புலப்படுத்தினார் என்றே பொருள். அப்படி நொறுங்கி வீழ்வதற்கு, ஒன்றிய அரசு கையில் எடுத்துள்ள பெருமளவிலான தனியார் மயமாக்கல்தான் காரணம். பொதுத்துறைப் பிரிவு இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு, பொருளாதார வளர்ச்சியில் அது கேந்திரமான முக்கிய பங்காற்றுகிறது. அதன் இறுதி லட்சியம் உற்பத்திக் கருவிகளைச் சமூக மயமாக்குவது. குறிப்பிட்ட சமூகப் பொருளாதார நோக்க இலக்குகளைச் சாதிக்கும் முயற்சியில் பொதுத்துறை பிரிவின் பிரதான அக்கறை, அரசு சொத்தாக அரசு கட்டுப்படுத்தும் தேசப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதே.

அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளை நாட்டு மக்களுக்கு வழங்கிடவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், சமூகத்தின் எளிய பிரிவினர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படை அத்தியாவசியமான சேவைகளை மக்களுக்கு வழங்குகிறது. தேசியமயமாக்கல் தொடங்கப்பட்ட போது, அது வேலையில்லா திண்டாட்டப் பிரச்சனையைத் தீர்க்கவும் உதவியது. வேலைவாய்ப்புக்களைக் கொண்டு வந்ததுடன் இறுதியில் ஜனநாயகத்தை வலிமைப்படுத்த பொதுத்துறைகள் அடிப்படை கட்டுமானங்களுக்கான வழிவகைகளையும் வழங்கியது.

ஆனால் இன்றோ பொதுத்துறை பிரிவுடன் நமது பன்மைத்துவக் கலாச்சாரம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக உணர்வின் பண்புகளும்கூட அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளன. ஓர் உதாரணம் மணிப்பூர். அங்கே மனிதகுலமே வான் நோக்கி வளரும் நெருப்பில் வீசப்பட்டுள்ளது. அத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை இந்தியா ஒருபோதும் சந்தித்ததில்லை. அது பழங்குடி தகுதி வழங்கும் பிரச்சனையும் அல்ல, பழங்குடி இன மக்களிடையே நடக்கும் மோதலும் அல்ல. முக்கியமான பெரும் பிரச்சனைகள் – வேலையின்மை, கல்வி வாய்ப்பு, மருத்துவ சுகாதார வசதி, இறுதியில் செல்வாதாரங்கள் போன்ற பிரச்சனைகளை ஓரம்கட்டி மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியே ஆகும்.

மேலும் அவர்களைப் பிளவுபடுத்துவதன் மூலம் அதிருப்தியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கெட்ட நோக்கமுடைய முயற்சியாகும். அம்முயற்சிகளை முறியடிக்க இந்தியா மக்களைத் திரட்டி விழிப்படையச் செய்யட்டும்!

’நியூஏஜ்’ தலையங்கம், தமிழில்: நீலகண்டன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button