தமிழகம்

சாதி சான்றிதழ் வழங்க கால வரம்பு நிர்ணயம் செய்க! உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

“மலைக்குறவர்” சாதி சான்றிதழ் வழங்குவதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அலட்சியமும் வரம்பற்ற தாமதமும், வேல்முருகன் (49) உயிரைப் பறித்திருக்கிறது. இரக்கம் கொண்ட இதயத்தைக் கசக்கிப் பிழியும் துயரச் சம்பவம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்திருப்பது சமூகத்தின் முகத்தில் விழுந்த அடியாகும்.

கால வளர்ச்சியில், வாழ்க்கை முறையில், ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்னர் மலைப்பகுதிகளில் வாழ்ந்த ஆதிவாசிகள், பழங்குடிகள், மலைவாழ் மக்கள், வாழ்வாதாரம் தேடி சமவெளி பகுதிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், சமூக அமைப்பில் இவர்களது சாதிப் படிநிலையில் முழுமையான மாற்றங்கள் நிகழ்ந்து விடவில்லை. இதன் அவசியம் உணர்ந்து தான் சமூகநீதி அமலாக்கத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிலும், மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல்களிலும் இடஒதுக்கீடு நடைமுறை சட்டப்பூர்வாக ஏற்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டின் பலனைப் பெற சாதி சான்றிதழ் இன்றியமையாத் தேவையாகிறது.

சாதி சான்றிதழுக்கு வருவாய்த்துறை நிர்வாகத்தை அணுகும் போது, மக்களுக்கு ஏற்படும் அனுபவம் மிகவும் கசப்பானது. அரசு நிர்வாகத்தின் வரம்பற்ற காலதாமதமும், ஊழல், முறைகேடுகளும் மக்களுக்கு ஆத்திரமூட்டி வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் “மலையாளி” இன மக்கள், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்குவது போல் வழங்க வேண்டும் என முப்பது ஆண்டுகளாக கோரி வருகின்றனர். இன்றும் தீர்வு காண முடியவில்லை.

இது போன்ற பிரச்சினைகள் மீது தமிழ்நாடு அரசு காலத்தில் முடிவெடுத்து, சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமைப் படுத்தி, காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன். அவரது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கி, அவரது மனைவிக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும். உயிரிழந்த வேல்முருகனின் பிள்ளைகளுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்குவதுடன், அவர்களுக்கு ஏற்படும் கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button