தமிழகம்

தோட்டக்கலை விளைபொருட்களை தமிழக அரசே கொள்முதல் செய்திட வேண்டும் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் தோட்டக்கலை விளைபொருட்களை தமிழக அரசே கொள்முதல் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பல மாவட்டங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் பருவகால சூழலின் பாதுகாப்பிற்கு ஏற்ப சில நேரங்களில் கூடுதல் விளைச்சல் தருகிறது. அப்படி விளையும் இந்த வேளாண் உற்பத்தி பொருட்களைச் சந்தையில் கொண்டு சென்றால், அடிமாட்டு விலைக்கு கேட்கப்படுகிறது. இப்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் விளைந்த தக்காளியைச் சந்தைப்படுத்தும் போது வியாபாரிகள் கேட்கும் மிக, மிக குறைந்த விலைக்கு விற்க முடியாமல் சாலைகளில் கொட்டி அழித்து விவசாயிகள் கண்ணீர் சிந்தினர்.

அண்மையில் கூட, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், விளைந்த தக்காளியை அரசே வாங்கிட வேண்டும் என தக்காளி விவசாயிகள் போராட்டம் நடத்தி அங்கு வந்த பொதுமக்களிடம் கிலோ ஒரு ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்தனர். தற்போது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் விளைந்து வரும் வெண்டைக்காய்களை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு போகிற பொழுது வியாபாரிகள் கிலோ 5 ரூபாய்க்கு கேட்பதால் வேதனையுற்று வேறு வழி இல்லாமல் செய்வதறியாது திகைத்து உள்ளனர். சில விவசாயிகள் ஆத்திரத்தில் சாலைகளில் கொட்டிச் செல்கின்றனர். இதே போல் கடந்த காலங்களில், தாங்கள் விளைவித்த பல நூறு கிலோ பூக்களை விற்க இயலாது விளைவித்த விவசாயிகளே அழித்ததும் நடந்தது.

குறுகிய கால பயிர்.. தோட்டக்கலை பயிர் என்ற நிலையில் குடும்பமே உழைத்துச் சாகுபடி செய்து வருகிற விவசாயிகளுக்குப் பல நேரங்களில் இப்படியான பொருளாதார அழிவும் பாதிப்பும் ஏற்படுகிறது.

அண்மையில் தமிழக முதல்வர் அவர்கள், பூக்கள் பூங்கா அமைத்து பெங்களூர் வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடு செய்திருப்பது பாராட்டக்கூடியது. எனவே, தமிழ்நாடு அரசு இதற்கென சிறப்பு திட்டம் வகுத்து காய்கறி, மலர், பழங்களுக்கு உரிய கொள்முதல் விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்திட வேண்டும். தமிழக அரசு இவைகளை பாதுகாத்திட, குளிர் சேமிப்பு கிடங்குகள் கட்டி நுகர்வோர்களுக்கு தேவையான நேரங்களில் விற்பனை செய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button