அறிக்கைகள்

சாதி  ஒடுக்குமுறைக்கும், நில அபகரிப்புக்கும் அமலாக்கத்துறை ஆயுதமா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள இராமநாய்கன்பாளையம் ஊராட்சியை  சேர்ந்த கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் தேவேந்திரகுல வேளாளர் சாதிப் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களது தந்தையார் சின்னையன் 40 ஆண்டுகளுக்கு முன்பு சுத்தக் கிரயம் மூலம் பெற்ற 6.5 ஏக்கர் நிலத்தை உழுது, சாகுபடி செய்து வாழ்ந்து வருகின்றனர்.

படிப்பறிவு குறைந்த, சமூகத்தில் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவில் உள்ள கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்களை வஞ்சகமாக ஏமாற்றி, அவர்களது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிக்கும் நோக்கத்துடன் பாஜகவின் அரசியல் செல்வாக்கு பெற்ற அதன் இளைஞர் அணி செயலாளர், சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த   குணசேகரன் போலி ஆவணம் தயாரித்து, ஏழை விவசாயிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் நிலத்திற்கும்,  மேல் பகுதியில் குணசேகரனுக்கு சொந்தமான நிலம் இருப்பதை பயன்படுத்தி, கீழ் பகுதியில் சாகுபடி செய்ய விடாமல் தொடர்ந்து  இடையூறுகளும் செய்து வந்தார்.

குணசேகரனின் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையில் புகார் கொடுத்து, அவர் மீது சட்டபூர்வ  நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. நீதிமன்றக் காவலில்  விசாரணை கைதியாக சிறையில் இருந்த குணசேகரன்  பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில் கண்ணையன், கிருஷ்ணர் சகோதரர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை நவம்பர் 27 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. இதில் சகோதரர்களை  “இந்து – பள்ளர்” என்று சாதி அடையாளப் படுத்தி அவமதித்துள்ளது. இது அப்பட்டமான தீண்டாமை குற்றச் செயலாகும்.

மேலும் கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்களின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களை மிரட்டி, நிர்பந்தித்து நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அவர்கள் மீது “சட்ட விரோத பணப் பறிமாற்றம்“ தொடர்பான குற்றம் சாட்டப்பட்டிருப்பதும், இதன் மீது போதுமான விசாரணை ஏதும் நடத்தாமல், குணசேகரனின் அரசியல் செல்வாக்கின் அழுத்தத்திற்கு பணிந்து அமலாக்கத்துறை செயல்பட்டிருப்பதும், அதன் தரத்தின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. அமலாக்கத்துறை விசாரணையில் வழக்கறிஞர் அனுமதிக்கப்படாமல் மறுக்கப்பட்டு, சகோதரர்கள் மிரட்டப்பட்டிருப்பது அதிகார அத்துமீறலாகும்.

பாஜகவின் அரசியல் கருவியாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை, தற்போது சாதிய ஒடுக்குமுறைக்கும், நிலப்பறிப்பு மோசடிக்கும் ஆயுதமாக மாறியிருப்பது விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றாக தகர்த்து வருகிறது.
அமலாக்கத்துறையின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன். பட்டியலின சமூகப் பிரிவு ஏழை விவசாயிகளான கண்ணையன், கிருஷ்ணன் நிலவுரிமை பாதுகாக்க களம் இறங்கி போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button