அறிக்கைகள்

நூறுநாள் வேலைக்கு ஆதார் அட்டை கட்டாயம்  என வேலை பெறும் உரிமையை மறுப்பதா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் வேலை பெறுவதற்கு  சட்டபூர்வ உரிமை வேண்டும் என போராடி வந்த நிலையில்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை 2005 செப்டம்பர் 5 ஆம் தேதி நிறைவேற்றியது. இச் சட்டத்தின் கீழ் நடைபெறும் திட்டப் பணிகளில், ஊரகப்பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு தலா நூறு நாள் வேலை பெறுவதற்கு  சட்டபூர்வ உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006 பிப்ரவரி 2 முதல் நடைமுறையில் உள்ள வேலை பெறும் உரிமைச் சட்டத்தை சீர்குலைத்து, சிதைத்து முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் பாஜக ஒன்றிய அரசு பத்தாண்டுகளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இணைய வலை தள இணைப்பு நாடு முழுவதும் கிடைக்காத நிலையில், நகரப் பகுதிகளிலும் சீரான வலைதள தொடர்பு உறுதி செய்யாத நிலையில், தேசிய அலைபேசி வருகைப்பதிவு முறையை (என்எம்எம்எஸ்) கட்டாயப்படுத்தி ஏற்கனவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துள்ளது.

தற்போது வேலை அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என நிர்பந்தம் செய்கிறது. பாஜக ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், வேலை உறுதியளிப்புச் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளுக்கு எதிரானது.

பாஜக ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தொடர்பாக வெளியிட்ட உத்தரவுகள் திட்டத்தை பெருமளவு பலவீனப்படுத்தி  சுமார் 6 கோடி தொழிலாளர்களின்  வேலை அட்டைகளை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் அவர்களது வேலை பெறும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மிகக் குறைந்த நிதி ஒதுக்கம் செய்து, வேலை செய்த தொழிலாளர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் வழங்காமல் வஞ்சித்து வருகிறது.

இந்த நிலையில் ஆதார் அட்டை – வேலை அட்டை இணைப்பை கட்டாயப்படுத்தி, 30.12.2023 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை இணைக்காத தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தொழிலாளர்களின் சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை முற்றாக பறிக்கும்  ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்துகிறது. இது தொடர்பாக மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button