இந்தியாகட்டுரைகள்

இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம்

அ.பாஸ்கர்

இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் 28.01.2024 முதல் 30.01.2024 வரை சென்னையில் சங்கத் தலைவர் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியாணா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து 93 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான நாகேந்திர நாத் ஓஜா பொதுக்குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

நாட்டின் வரலாற்றில் விவசாயத் தொழிலாளர்களை தனி அமைப்பில் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. விடுதலை போராட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட “உழுபவருக்கே நிலம்” என்ற தேசிய முழக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நிலச் சீர்திருத்தம் மற்றும் நில உச்சவரம்பு சட்டங்கள் கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக 1960 நில உச்சவரம்பு சட்டங்கள் பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டன. இதனையொட்டி 1968 செப்டம்பர் 28, 29 பஞ்சாப் மாநிலம் மோக நகரில் நடந்த விவசாயத் தொழிலாளர் மாநாட்டில் இந்திய விவசாயத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாம் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்று, ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களாக அமலாக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச ஊதிய சட்டம், குடியிருப்பு மனை பெறும் உரிமை, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், வேலைக்கு உணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் என்பது உள்பட அரசுகளால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நமது போராட்டங்களின் நிர்பந்தத்தால் அறிவிக்கப்பட்டவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இடதுசாரி சக்திகள், ஜனநாயக கட்சிகள் ஒன்றிய ஆட்சியில் தலையிடும் வலிமை பெற்றிருந்த காலகட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் 2005 நிறைவேற்றப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளாக நன்முறைப்படுத்தப்படும் இத்திட்டத்தால் ஊரகப் பகுதி வறுமை குறைந்திருக்கிறது. வேலை தேட புலம் பெயர்ந்து செல்லும் அவலம் தணிந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் வளம் அதிகரித்துள்ளது. சமூக சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயத் தொழிலாளர் நலனுக்கும் உதவும் வேலை உறுதியளிப்பு திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக ஆட்சி பத்தாண்டுகளாக தாக்குதலை நடத்தி வருகிறது.

விவசாயத் தொழிலாளர் உள்ளிட்ட ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்கள் போராடி பெற்றுள்ள சட்டபூர்வ வேலை பெறும் உரிமை மறுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. வேலை உறுதியளிப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்தி ஆண்டுக்கு 200 நாள் வேலை பெறுவதற்கும், தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.700 பெறுவதற்கும் தீவிரமான போராட்டங்களை நடத்த வேண்டும். முதுமை காலத்தில் கண்ணியமாக வாழ்ந்திட ஓய்வூதியம் என்பது மிக, மிக அவசியம் என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

மேலும் கார்ப்பரேட் ஆதரவு வகுப்புவாத, மதவெறி ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளிபடுத்தி, மக்கள் நலன் சார்ந்த, ஜனநாயக முறைகளை பாதுகாக்கும் புதிய அரசு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வாழ்த்தி பேசியது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எழுச்சியூட்டுவதாக அமைந்தது.

தோழர்.இரா.நல்லகண்ணு, “எனக்கு 99 வயதாகிறது. 45வது வயதில் சங்க வேலைகளுக்காக சென்னைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பிகார் மாநிலம் ராஜ்கீர் நகரில் கடந்த ஐந்தாவது தேசிய மாநாட்டில் மட்டும் நான் பங்கேற்க முடியவில்லை. மற்றபடி பெரும்பாலான மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளேன். விவசாயத் தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். நிலம், வீட்டு மனை, வேலை, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு போராடுவது மட்டும் அல்ல. சாதிய சமூகத்தில் தீண்டாமையும், ஒடுக்குமுறையும் ஆதிக்கம் செலுத்தி வந்ததை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளோம்.
ஆனால் இன்று பாஜக ஆட்சி சனாதன வர்ணாசிரம நடைமுறைகளை புதுப்பிக்க விரும்புகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்தி வருகிறது. ராமர் கோயில் குடமுழுக்கை பயன்படுத்தி பெரும்பான்மை மத அடிப்படைவாத சக்திகளை அணிதிரட்டி, தேர்தலில் ஆதாயம் தேடும் சமூக விரோத செயலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் மக்கள் நிச்சயம் தோற்கடிக்கப்பார்கள். வடமாநிலங்களில் இருந்து வந்துள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவர் மாநிலங்களில் சமூகநீதி கொள்கையை முன்னெடுத்து பாஜகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் சீ.தினேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

பொதுச்செயலாளர் குல்கர் சிங் கொரியா – கடந்த 2023 நவம்பர் 2, 3, 4, 5 தேதிகளில் பிகார் மாநிலம் பாட்னாவில் நடந்த 15வது தேசிய மாநாட்டிற்கு பின்னர் சங்கம் மேற்கொண்ட பணிகள், மாநிலங்களில் நடந்துள்ள வேலைகள் குறித்த அறிக்கையை அறிமுகம் செய்தார்.

இந்த அறிக்கையின் மீதான விவாதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 33 பேர் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர். விவாதத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு விளக்கம் கூறி, பொதுச் செயலாளர் தொகுப்புரை வழங்கிய பிறகு – பொதுச் செயாளர் அறிக்கையை பொதுக்குழு ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்க

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்திற்கு ஆரம்ப நிலையிலேயே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக, ஒன்றிய ஆட்சியை கைப்பற்றிய பிறகு அதன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் பாஜக ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து வாழ் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவுகள் வேலை உறுதியளிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தி, அதன் திட்டப் பணிகளை சிதைக்கும் திசை வழியில் தான் அமைந்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஒதுக்கீட்டுக்கான நிதியை தொடர்ந்து குறைத்து வருகிறது.

கடந்த 2023 – 24 ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக வெட்டி குறைத்து விட்டது. இந்தத் தொகை நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் (செப்டம்பர் 30) முழுவதும் செலவழிந்து விட்டது. கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமலும், வேலை உறுதியளிப்புச் சட்டப்படி 100 நாள் வேலை மறுப்பதுமான சட்ட அத்துமீறலில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோத நடவடிக்கையை இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் வரும் 2024 – 25 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்கு ரூபாய் நான்கு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

2. ஆதார் இணைப்பு உத்தரவை ரத்து செய்க!

விவசாயத் தொழிலாளர்களும், அவர்களது அமைப்புகளும் நீண் காலம் போராடியதன் காரணமாகவும், இடது சாரி, ஜனநாயக சக்திகள் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடும் வலிமை பெற்றதாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை வழங்கப்பட்டது. இச் சட்டத்தின் கீழ் திட்டப் பணிகளை தேர்வு செய்யும் அதிகாரம் கிராம ஊராட்சிகளுக்கும், கிராம சபாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்ட நடைமுறைகளை அரசின் நிர்வாக அமைப்புகள் அலட்சியப்படுத்தி, அதிகார வர்க்க நடைமுறைகளை பின்பற்றுவதால் ஊழலும், முறைகேடுகளும் தொடர்கின்றன.

தவறுகளை தடுத்து திட்டப் பணிகளை வெளிபடைத்தன்மை மற்றும் நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக ஒன்றிய அரசு வேலை அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 6 கோடி வேலை அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதை இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன், அரசின் சேவைகளை பெறுவதற்கும், சட்டபூர்வ உரிமைகளை பெறுவதற்கும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவிட்டிருப்பதற்கு எதிராக செயல்படுவதை கைவிட்டு, ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தின் வேலை அட்டையுடன், ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து, வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் நிபந்தனையின்றி வேலை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

  1. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம்

பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு கால ஆட்சி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளது. நாட்டின் பெரும் பகுதி மக்களின் நலனை புறக்கணித்து விட்டு, உயர்த்தட்டில் உள்ள ஒரு தலித் பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாக அரசின் கட்டமைப்பையும், சட்டங்களையும் திருத்தியமைத்து வருகிறது. இதனால் வேலையின்மையும், வேலையிழப்பும் அதிகரித்து வருகிறது.

அத்தியாவசிய உணவு தானியங்கள், காய்கறி வகைகள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பும், மறைமுக வரிகளும் கழுத்தை முறிக்கும் சுமையாக ஏறி வருகிறது. இந்த கடுமையான வாழ்க்கை சூழலிலிருந்து மீள்வதற்கான கோரிக்கைகளை வைக்கும் மக்கள் அடக்குமுறை நடவடிக்கையால் ஒடுக்கப்படுகிறார்கள். இதன் உச்சகட்டமாக மதச்சார்பற்ற தன்மையை அடித்தளமாகவும், வேற்றுமையில் ஒற்றுமை பேணும் மரபை பண்பாகவும் கொண்டுள்ள அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகிறது.

பெரும்பான்மை மத அடிப்படைவாத உணர்வையும், வெறுப்பு அரசியலையும் முன்னெடுத்து மனித சமூகத்தை சாதி அடையாளங்களுடன் பிளவுபடுத்தும் சனாதன, வர்ணாசி முறைகளை அமலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பட்டியலின, பழங்குடியினர் மீதும், மதச்சிறுபான்மையின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. மாநிலங்களின் அதிகாரங்களையும், உரிமைகளையும் பறித்து, தனிநபர் மையப்பட்ட, பாசிச சர்வாதிகாரமாக உருவாகி வரும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவும், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்து, ஜனநாயக ஆட்சி முறையை நிலைநிறுத்தவும், மக்கள் நலன் சார்ந்த, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு காக்கும் மாற்று அரசு அமைக்கவும் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினை பொதுக்குழுக் கூட்டம் அண்ணல் காந்தி நினைவு நாளில் உறுதி ஏற்று, வகுப்புவாத, மதவெறி சக்திகளையும், அதன் கூட்டணிகளையும் நாடாளுமன்ற தேர்தலில் (2024) தோற்கடிக்க வேண்டும் என நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறது.

4, பிப்ரவரி 16 வேலைநிறுத்தம் – கிராமங்கள் முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்போம்

விவசாயிகளையும், தொழிலாளர்களையும், ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும் வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஐக்கிய விவசாயிகள் முன்னணியும், மத்திய தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வரும் 16.02.2024 ஆம் தேதி நாடு முழுவதும் தொழிலாளர் வேலை நிறுத்தம் – கிராமங்களில் முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நாட்டின் பிரதமர் அளித்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.

விவசாயிகள் சாகுபடி செய்யும் அனைத்து பயிர் வகைகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யும் சட்டபூர்வ நிர்வாக ஏற்பாடு செய்யவும், தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த உற்பத்தி செலவுகளுக்கு மேல் 50 சதவீதம் சேர்த்து (சி2+50%) குறைக்கப்பட்ட விலை நிர்ணயம் செய்து, விவசாய விளைபொருட்கள் அனைத்தும் அரசே முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பிப்ரவரி 16 கிராமிய முழுஅடைப்புப் போராட்டத்தில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் முழுமையாக பங்கேற்பது, விவசாயத் தொழிலாளர்களை பெருமளவில் திரட்டி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என தேசிய பொதுக்குழுக் கூட்டம் தீர்மானிக்கிறது.

அ.பாஸ்கர்
பொதுச்செயலாளர்
தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button