கட்டுரைகள்

சுதந்திரத்திற்குப் பின் இந்தியா சந்தித்த பெரும் பொருளாதாரப் பேரிடரே பணமதிப்பு நீக்கம்

ந.சேகரன்

பொதுவாக மனித குலம் சந்திக்கும் பேரிடர்களை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, இயற்கையால் நிகழ்த்தப்படும் பேரிடர். இன்னொன்று மனிதர்களால் நிகழ்த்தப்படும் பேரிடர்.

சில சமயங்களில் இயற்கையி்ன் பேரிடரால் மனிதகுலம்  சந்திக்க நேரிடும் பேரிடர்களை விட  ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களால் நிகழ்த்தப்படும் பேரிடர் ஆகப்பெரும்பாதிப்புக்களை உண்டாக்க வல்லது என்பதற்கு சமகால சாட்சியமாக விளங்குவதுதான் கடந்த நவம்பர் 8ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்த ரூ 500 ரூ1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற தடாலடி  பணமதிப்பு நீக்க நடவடிக்கை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமுலாக்கப்பட்டு இன்றோடு சரியாக 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன  .  இந்தியச் சுதந்திரத்திற்குப்பின் நாடு சந்தித்த மிகத் துயரமான பொருளாதார பேரிடராக இந்த பணமதிப்பு நீக்கம் என்பதை கடந்த 5 ஆண்டு காலம்  நாடு சந்தித்த துயர சோக அனுபவங்கள் நிரூபித்து வருகின்றன.

பணமதிப்பு நீக்கம் பற்றி மோடியார் கூறியது என்ன?

2016 நவம்பர் 8 ந் தேதி அன்று ரூ500,ரூ1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற  அறிவிப்புக்கு பிரதமர்  மோடியார் இட்ட பெயர் ” மகாயக்ஞ” .அதாவது ”மாபெரும் புனிதப் போர்”. கறுப்புப்பணம்- கள்ளப்பணம்-தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்து இந்த போர் தொடங்கப்பட்டுள்ளதாக மோடியார் தனக்கே உரித்தான வார்த்தைகளில் ஜாலம் செய்தார். அதுமட்டுமல்ல…இந்தப் போர் இந்தியாவைத் துாய்மைப்படுத்தும் போர் என்றும் கறுப்புப்பணத்தின் மீதான துல்லிய தாக்குதல் இது என்றும், இந்தியக் குடிமகன்கள் அனைவரும் தவறாது இந்தப்  போரில் பங்கேற்று தங்கள் கடமை ஆற்றுமாறும் மோடியார் அறைகூவல் விடுத்தார்.

”இந்த அறிவிப்புமூலம்,  தேசத்துரோகிகள் சமூக விரோதிகள் பதுக்கிவைத்திருக்கும் ரூ500 ரூ1000 பணத்தாட்கள் இனிமேல் வெற்றுக்காகிதங்களாகி விடும். “ என்று வாய்ச்சவடால் வேறு அடித்தார் பிரதமர் மோடியார்.

மோடியார் கணக்கு தப்பான வரலாறு

பணமதிப்பு நீக்க நாளுக்கு முன், அதாவது 2016 நவம்பர் 4 ந்தேதிய நிலவரப்படி நாட்டில்புழக்கத்திலிருந்து ரூபாய் நோட்டுக்களி்ன் மதிப்பு ரு17.74 லட்சம்கோடிகள்ஆகும். இதில் ரூ500,ரூ1000 நோட்டுக்களி்ன் புழக்கமதிப்பு ரூ15.44 லட்சம்கோடிகள். அதன்படி மொத்தப்பணப்புழக்கத்தில் இந்த நோட்டுக்களி்ன் பங்கு என்பது 86 சதவீதமாகிறது..

ஆக மொத்தப் பணப்புழக்கத்தில் 86 சதவீத நோட்டுக்கள் திடீரெனஒரு நாள் இரவிலிருந்து செல்லாது என அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை  நாசகரமான விளைவுகளுக்கும், இந்தியமக்களை பெரும் துயரத்திற்கும் இட்டுச்சென்றது.  பல மனித உயிர்கள்  காவு வாங்கப்பட்டதும்  பெரும்  சோகமாக நீடிக்கிறது.

கறுப்புப்பணம் இந்தியாவில் எவ்வளவு பதுங்கியுள்ளது என்ற புள்ளி விபரம் ஒன்றிய அரசிடம் இல்லையாம்…ஆயினும் இந்த பணமதிப்பு நீக்கத்தால்,  ஏறத்தாழ ரூ 5 லட்சம்கோடிகள் மதிப்புக்கு நிகரான பணத்தாட்கள் கறுப்புப் பணமாக  வங்கிகள் வழியே திரும்ப அரசு கஜானாவுக்கு வராது என ஒன்றிய  அரசு மனக்கோட்டை கட்டியது .

ஆனால் நடந்தது என்ன?

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களில் 99.3 சதவீதம் திரும்ப வந்துவிட்டது என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் 2017-18 ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதாவது பணமதிப்பு நீக்கம்செய்யப்பட்ட நோட்டுகளின் மதிப்பு ரூ15.44லட்சம்கோடிகள்.  . இதில் ரிசர்வ் வங்கியின் முதற்கட்ட அறிக்கையில், 2017 ஜீன் 30 வரையிலும் ரூ15.28 லட்சம் கோடிகள் மதிப்பு நோட்டுக்கள்  அரசு வங்கிகளுக்கு வந்துவிட்டன .பின்னர் 2 ஆண்டுகள் கழித்து,திரும்பவந்த பணத்தாட்களை சரிபார்க்கும் பணி பிரம்மாண்டமாக நிறைவேற்றப்பட்டதாகவும் அதன்படி ரூ15.31லட்சம் கோடிகள் ஆகும். ஆதாவது வெறும் 11 ஆயிரம் கோடி மதிப்பு ரூபாய் தாட்கள் தான் அரசுவங்கிகளுக்குதிரும்ப வில்லை என்றனர். ஆனால்  நிர்வாக நடைமுறைச் சிக்கலால் மத்திய , மாவட்ட கூட்டுறவு வங்கிகளால்  திரும்பச் செலுத்த இயலாமல் உள்ளதாக ரிசர்வ் வங்கிக்குத் தெரிவித்த தொகையையும் கணக்கில் சேர்த்தால் ஏறத்தாழ 100 சதவீதப்பணத் தாட்கள் திரும்பவந்துவிட்டன என்பது தெளிவாகிவிட்டது…

பணமதிப்பு நீக்கத்தால் கறுப்புப்பணம் ஒழிக்கப்படும் என்ற மோடி அரசின் வாதம் தவிடுபொடியாகிவிட்டது. பணமதிப்பு நீக்கம் என்ற பொருளாதார நடவடிக்கை படு தோல்வி அடைந்தவிட்டது.

இதில்  வேடிக்கை என்னவென்றால் அரசின் இந்த நடவடிக்கையால் ரொக்கமாக பதுங்கியிருந்த கறுப்பாக இருந்த பணமும் அரசு கஜானாவுக்கு வந்ததின் மூலம் வெள்ளைப் பணமாகிவிட்டது என்பதுதான் கொடுமை.இதுபற்றிய விபரங்களும் அரசிடம்இல்லை  என்பது அதைவிடக்கொடுமை என்பதோடு அரசி்ன் நிர்வாகத் திறனின்மையை வெளிக்காட்டியது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் படு தோல்வி அடைந்த மோடியார் அரசு தனது நாசகாரமான பொருளாதார நடடிவக்கை குறித்து கவலைப்பட்டதாக வெளியே காட்டிக் கொள்ளாது இருந்தாலும் அதன் விரல் கணுக்களில் பிரம்படி விழுந்திருக்கிறது என்ற மோடி அரசின் நிலையை பி.பி.சி. செய்தி நிறுவனம் விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்புப்பணம் என்பது ரொக்கமாக கையிலோ சாக்குப் பையிலோ இருப்பதில்லை. மாறாக கறுப்புப்பணம், சொத்துவடிவங்களிலும், வணிக நடவடிக்கைகளிலும், அன்னிய நாட்டு வங்கிகளிலும் முதலீடு செய்யப்படுகிறது. மிகச் சாதாரணமான உண்மை பாமரரும் அறிவர்..

எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்ற  கருத்து நகைப்புக்குள்ளானது பற்றி ஒரு புறம் இதனால் ஏழை  எளிய சாதாரண, நடுத்தர மக்கள் பட்ட அவதிகள்  சொல்லி்ல் அடங்கா. பணமதிப்பு நீக்க காலத்தில் தங்கள் கைவசம் உள்ள தாட்களை திரும்ப ஒப்படைக்கவும், பின் அரசு நிர்ணயித்த அதிகபட்ட தொகை ரூ2000 பெறவும் , வங்கி ஏடிஎம் திரண்ட கூட்டங்களும், அதன்  பொருட்டு மரணித்த இந்தியக் குடிமகன்களினன் ரத்தக் கறை படித்த வரலாற்றை மக்கள் மனதிலிருந்து நீங்காது.

சரடு மேல் சரடு விட்ட அரசுதரப்பினர்

ஆக பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக முதன்முதலில் சொல்லப்பட்ட கறுப்புப் பண ஒழிப்பு என்பது புஸ்வாணமாகிவிட்ட நிலையில், தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரித்த விட்ட அடுத்த சரடுதான் ” பண மதிப்பு நீக்கத்தின்  நோக்கம் மக்களிடையே ரூபாய்நோட்டு புழக்கத்தைக் குறைப்பதும்-அதாவது ரொக்கமற்ற பரிவர்த்தனை (cashless transaction ) மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிப்பது” என்ற புதிய காரணத்தை அவிழ்த்து விட்டனர்.

அரசு கணித்தபடி பணப்புழக்கம் குறைந்ததா?

பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையால் மக்களிடையே பணப் புழக்கம் குறையும் ரொக்கமற்ற பரிவர்த்தனை அதிகரிக்கும்  எனற அரசின் கருத்து எடுபட்டதா?

நடைமுறை அனுபவம் சொல்வது என்ன?  ரிசர்வ்  வங்கி அளித்த விபரங்களைப் பார்ப்போம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நாளான 2016 நவம்பர் 4 நிலவரப்படி புழக்கத்திலிருந்த பணத்தாட்களின் மொத்த மதிப்பு ரூ17.97 லட்சம்கோடிகள்.

நாசகாரமான இந்த நடவடிக்கை அமுலாக்கப்பட்டு 5 ஆண்டுகள்  முழுமையடைந்த இன்றைய நாளில் ரொக்கப்பணத்தின் அதாவது புழக்கத்தில் உள்ள பணத்தாட்களின் மொத்தமதிப்பு ரூ29.44 லட்சம் கோடிகள். பணப்புழக்கம் முன்பை விட  ஏறத்தாழ 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பதன் மூலம் ரொக்கப் பணப் புழக்கம் குறையும் என்ற அரசின் வாதமும் பொய்யாகி வி்ட்டது.ஏனெனில் இந்த 5 ஆண்டுகளில் கிரெடிட் கார்ட், டிபிட் கார்ட் மற்றும் UPI  மூலம்  மேற்கொள்ளப்பட்ட  டிஜிட்டல் பரிவா்த்தனை அளவும் 200 சதம் அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதிலிருந்து ரொக்கப் பணப் புழக்கமும்  அதற்கிணையாக டிஜிட்டல் பரிவா்த்தனையும் அதிகரித்துள்ளன. எனவே டிஜிட்டல் பரிவா்த்தனையால் ரொக்கப் பணபரிவர்த்தனை இல்லாமல் போகும் எனற அரசி்ன் வாதம் தவிடுபொடியாகிவிட்டது. ஆக  அரசால் சொல்லப்பட்ட 2 ஆவது காரணமும் நோக்கமும் செல்லுபடியாகவில்லை என்பது நடைமுறை அனுபவம் மெய்ப்பித்த உண்மைகள்.

அடுத்து 3 வதாக தீவிரவாதம் குறையும், கள்ள நோட்டு இருக்காது என்ற புதிய கதைகளும்அரசால் சொல்லப்பட்டு வந்தது.

அரசு உறுதியளித்தவாறு தீவிரவாதம் குறைந்ததா?

காஷ்மிரில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புப் படைகள் மீது கற்கள் எறிவதற்கு நபர் ஒருவருக்கு ரூ.500 ம், மற்ற உயரதிகாரிகள் மீத எறியவதற்குரூ1000 யும் காஷ்மீர்  தீவிரவாதிகளால் கொடுக்கப்பட்டுவந்தது என மறைந்த முன்னாள் கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் ராணுவ அமைச்சராக இருந்தபோது கூறியிருந்தார். இந்த நிலைமை பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் முற்றுப்பெறும் என்றார். ஆனால் நடந்தது என்ன?

2016 நவம்பர் முதல் 2017 ஆகஸ்ட்  வரையிலான மிகக் குறுகிய காலத்திலே 1067 கல்எறிசம்பவங்கள் காஷ்மீரில் நிகழ்ந்தேறியுள்ளன.

அதுமட்டுமல்ல

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பி்ன் ஒராண்டு காலத்திலே காஷ்மீர் பள்ளத்தாக்கில்  தீவிரவாதிகள்-பாதுகாப்புப்படை மோதல்களில் உயரிழந்த அப்பாவிகளின் எண்ணிக்கை 152 ஆக அதாவது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 88 சதவீதம் கூடியுள்ளது. அதேபோல் பாதுகாப்புப் படையினரின் உயிரிழப்புக்கள் 217 ஆக அதிகரித்து 99 சதவீதம் கூடியுள்ளது. தீவிரவாதிகளின் உயிரிழப்பும் 91 சதவீதம் அதிகரித்து 557 ஆக அதிகரித்துள்ளது. (ஆதாரம்: South Asian Terrorism Portal) ஆக எல்லா தரப்பிலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் உயிரிழப்புக்கள் அதிகரித்ததே தவிர அரசு பறை சாற்றியவண்ணம் உயிரிழப்புக்கள் குறையவில்லை.

ஆக மோடியாரின் வீண் சண்டமாருதம் வழக்கம் போல் மக்களை ஏமாற்றியதைக் கண்டோம்.

கள்ள நோட்டு தாக்கம்

புதிய ரூ2000 நோட்டுக்கள் யாராலும் கள்ள நோட்டு தயாரிக்க முடியா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக  அரசு தரப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் நடந்தது என்ன?

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் பணமதிப்பு நீக்க நாளிலிருந்து 53 நாட்களுக்குள் 2272 எண்ணிக்கையிலான ரூ2000 கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது ( (ஆதாரம்; the Quint web portal )

ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கையி்ன் படி 2016 நவம்பர்  முதல் மார்ச் 2017 வரையிலான மிகக் குறுகிய காலத்திலேயே ரூ2000 – இல் 638 கள்ள நோட்டுக்களும் 500 ரூ.இல்199 கள்ள நோட்டுக்களும் கைப்பற்றப்பட்டுளளதாக தெரிவித்ததுள்ளது. இநத புள்ளிவிபரத்தை குஜராத்தில்மட்டும்இரண்டே மாதங்களில் 2272 கள்ளநோட்டுக்கள் கைப்பற்றப்பட்ட நிகழ்வுடன்ஒப்பிடுகையில் உண்மையான புள்ளிவிபரங்கள் வெளிவரவில்லை என்பது தெளிவாகிறது..

அண்மையில் மக்களைவையில் , ரூ2000 மதிப்புள்ள  9254 கள்ள நோட்டுக்கள் எல்லை யோரப் பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2017 ஆண்டில் மட்டும்ரூ35லட்சத்திற்கு அதிகமான கள்ளநோடடுக்கள் உயா்ந்த தரத்தோடு புழக்கத்தில்உள்ளன என்ற அதிர்ச்சி தகவலை வருவாய் புலனாய்வுவின் மத்தியஇயக்குனகம் வெளியிட்டுள்ளது. உண்மை எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கும் என்பது நிதர்சனம்.

ஆக பிரதமர் மோடியால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப்பணம் மீட்கப்படவில்லை. ஒழிக்கப்படவும்இல்லை.  கள்ள நோட்டுகளும் புழங்கிக்கொண்டுதான் உள்ளன என்பதை அவ்வப்போது கைப்பற்றப்படும் கள்ள நோட்டுக்கள் பறை சாற்றுகின்றன. தீவிரவாதமோ குறையவும் இல்லை.

ரொக்கப் பணப்புழக்கம் வெகுவாக குறையும் என்ற அரசி்ன் அறிவிப்புக்கு முற்றிலும்  மாறாக பல மடங்கு அதிகரித்துள்ளது.இதையும் அரசின் ரிசர்வ் வங்கியே கூறுகிறது. ஆக ஒட்டுமொத்தத்தில் பணமதிப்புநீக்கம் படுதோல்வி என்பது நிருபணமாகி உள்ளது. இதனால் விளைந்த பேரிடர்களை ஆய்வோம்.

படுபாதக- பொருளாதார பேரிடரே பணமதிப்பு நீக்கம்

இந்தியா, ஏற்கனவே 1946 ஜனவரியிலும்,1978 ஜனதா ஆட்சியிலும் என இரு முறை பணமதிப்பு நீக்கத்தை கண்டிருக்கிறது. அப்போது பணப்புழக்கத்திற்குள்ளான தொகை மதிப்பில் மிகமிக சொற்ப அளவே அதாவது 0.6 சதவீதமே பணமதிப்பு நீக்கத்திற்கு உள்ளானது. ஆனால் மோடியாரின்  பணமதிப்பு நீக்கத்தில் 86 சதவீத பணபுழக்கத் தொகை உள்படுத்தப்பட்டது.

மொத்தஉள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ( ஜிடிபி)இல் ஒரு குறிப்பிட்டவிகிதத்தில் பணம் புழக்கத்திலிருப்பதை உறுதி செய்வார்கள். ஆனால் தற்போதைய பணமதிப்பு நீக்கத்தில் அந்த நடைமுறை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டது தான் பலன்.

பணமதிப்பு நீக்கம் என்ற மோடியாரி்ன் முன்யோசனையற்ற திட்டம் நாசகார நடவடிக்கை என்பதும் நாட்டு மக்களுக்கு சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாக்கியது என்பதும் இந்த 5 ஆண்டு கால அனுபவங்கள்  மெய்ப்பித்து வருகின்றன.

·         பணமதிப்பு நீக்கம் என்ற பொருளாதார நடவடிக்கைக்கு முன்பு,இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளா்ச்சியை நோக்கிவந்தது. ஆனால் பணமதிப்பு நீக்கத்திற்குப் பி்ன்னால் கோவிட்க்கு முந்தைய காலாண்டில் 9 யிலிருந்து 3 சதவீதம் என்று வீழ்ச்சிகண்டது.

·         இதன் காரணமாக பொருளாதார இழப்புமட்டும்  13 லட்சம் கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

·         2016 நவம்பர் தொடக்கம் 2018 வரை மட்டுமே ரொக்கப்பணப் புழக்கத்தை மையமாகக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்திய தொழிலாளிகள் ஏறத்தாழ 50 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று பெங்களுருவிலுள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் அமித் போஸ்லேவின் ஆய்வு அறிக்கை அம்பலப்படுத்துகிறது. பணமதிப்பு நீக்கத்தால் வேலை இழந்த தொழிலாளர் விபரம் ( டேட்டா) தன் வசம் என்று ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் கூறியதிலிருந்தே எவ்வளவுபொறுப்பற்ற தன்மையில் மோடியார் அரசு செயல்பட்டு வருகிறது என்பதை  உணரலாம்.

·         நாட்டின் மொத்த உற்பத்தியில் சிறு, குறுந் நடுத்தரத் தொழில்களின் பங்களிப்பு 45 % சதவீதமாகும். 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் வேலை செய்கின்றனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறுந் நடுத்தர தொழில் மையங்கள் இழுத்து மூடப்பட்டன. ஜாம்ஷெட்பூர் என்ற தொழில் நகரத்தில் மட்டும் இயங்கி வந்த 1000 தொழில் மையங்கள் மூடப்பட்டத்திலிருந்தே உண்மையான எண்ணிக்கை இன்னும்கூடுதலாகவே இருக்கும். லட்சக்கணக்கான தொழிலாளிகள்  வேலை இழந்து நடுத் தெருவுக்கு வந்ததுதான் பணநீக்க மதிப்பின்விளைவு.

·         புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்புக்காக ரிசர்வ்வங்கி செலவழித்த தொகை ரூ7965கோடிகள்.இதனால் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தொடர்புடைய பிற அரசு வங்கிகளின் வருமானம் பெரு்ம் பகுதி சரிந்தது  அரசுக்குகொடுக்கப்பட வேண்டிய ஈவுத் தொகை 50 சதவீதம் குறைக்கப்பட்டது.

·         பணமதிப்பு நீக்க காலகட்டத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கம் 0.03  சதவீதம் என்ற படுபாதாள வீழ்ச்சியை கண்டது.

·         வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாடுவோர் எண்ணிக்கை சதவீதம் கடந்த பத்தாண்டில் சதவீதம் 21.9 ஆக இருந்தது.பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக  தற்போது அது 2018-19 இல் 25.9 ஆக உயர்ந்துள்ளது.

·         பணமதிப்பு நீக்க காலத்தில் சொற்பதொகை ரூ2000 பெற ஏடிஎம் வரிசையில் நிற்கும் போதே மாண்டவர்கள் நுாற்றுக்கணக்கானோர். பணமதிப்பு நீக்கம் அறிவிப்பு வந்த ஒரு 25 நாட்களுக்குள் 82 பேர் மரணமடைந்தது இந்த நடவடிக்கையி்ன்  குரூரத்தை வெளிப்படுத்தியது. வாழ்வாதாரம் இழந்து மாண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் என இதன் விளைவு படு கோரமாக நீடித்து வருகிறது.

இவ்வளவு பெரும்  சீரழிவை கொண்டு வந்த மக்கள் பட்ட துயரங்களுக்கு ஆளும் ஆட்சிகாரத்திலுள்ளோர் வருத்தப்படவும் இல்லை கவலைப்படவும் இல்லை. பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகளை பற்றிபகுப்பாய்வு செய்யவும் இல்லை.

பெரும் பொருளாதாரப் பேரிடரிலிருந்து மீண்டு வர வேண்டியுள்ள இந்த காலகட்டத்தில், . பணமதிப்பு நீக்க என்ற நாசகாரமானநடவடிக்கையால்  மக்கள் அனுபவித்த கொடுமைகளை, மக்கள் மனதிலிருந்து திசை திருப்பும்  வேலையை சங் பரிவார் கூட்டத்தினர்  செய்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த நடவடிக்கையால் மக்கள் அனுபவித்த பேரிடர்கள் பற்றி. ஆங்கில அச்சு இதழ்கள் இணைய ஊடகங்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படுதோல்வி படுபாதகச் செயல் என வருணித்து வரும் வேலையில் குறிப்பாக பணமதிப்பு நீக்க நடவடிக்கையை வரவேற்று ஆஹா ஓஹோ என மோடியாரை வானாளவப் புகழ்ந்த தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தன்னை நேர்கொண்ட பார்வை என பீற்றிக் கொள்ளும் தினமணி, தாமரைக் கட்சிகள் அதிகாரபூர்வமற்ற தினசரி தினமலர், திசை மாறிய தமிழ் இந்து, தினத்தந்தி ஆகிய இதழ்கள் இந்த கொடுமைகள் பற்றி மௌனம் சாதிக்கின்றன.

இறுதியாக, பணமதிப்பு நீக்கம் என்ற பிரதமர் மோடியாரது நடவடிக்கை இந்திய மக்கள் மீதும் இந்திய நாட்டுப்பொருளாதாரத்தின்மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்றே கருதவேண்டியுள்ளது நாடு சந்தித்த இந்த பொருளாதாரப் பேரிடர் இன்னும் நீடித்து வரும் நிலையில் அதன் நாசகாரமான விளைவுகள் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் இவை குறித்து மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்த இடையறாது இயங்க வேண்டியது, ஜனநாயக, முற்போக்கு இடதுசாரி இயக்கவாதிகளின் கடமை.

கட்டுரை ஆக்கம் :  ந.சேகரன் 9443120051

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button