இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை- 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை, 31.03.2026 அன்று கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டு, அதன் முக்கிய அம்சங்களை விளக்கிக் கூறினார். முதல் பிரதியை கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி பெற்றுக் கொண்டார். தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தலைவரும் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருமான டி.எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக்குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, எஸ்.கே.சிவா, மு.வரதன், லி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்துகளையும், தமிழ்நாட்டின் தனித்தன்மைகளையும், ஒன்றிய அரசால் தமிழ்நாடு குறிவைத்து தாக்கப்படுவதையும் விளக்குவதோடு, இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது.
ஒன்றியத்தில் ஆளுகிற ஆர்எஸ்எஸ், பாஜகவின் மக்களைப் பிளவுபடுத்தும் மதவெறி அரசியல், தொழிலாளர்களின் உரிமைகள் சட்ட ரீதியாகப் பறிக்கப்படுதல், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைக்கூட ஒன்றிய அரசு நிறைவேற்ற மறுத்தல், பெண்களை ஒடுக்கி வைக்கும் கருத்தியலை முன்னெடுத்துச் செல்லுதல், பண மதிப்பிழப்பு மற்றும் தன்னிச்சையான ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு குறு நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டு வருதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தரைமட்ட விலைக்கு அல்லது இலவசமாகவே கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்தல், கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே புதிய சட்டங்களை நிறைவேற்றுதல், அரசியல் அமைப்புச் சட்டம் நிறுவியுள்ள தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை சுதந்திரமாக செயல்பட விடாமல் தன்வயப்படுத்துதல், அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளை புகுத்தி வரலாற்றைத் திரித்து எழுதுதல், சாதாரணக் குடும்பங்களின் குழந்தைகளை, தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக கல்வி கற்றலில் இருந்து விலக்குதல், அதற்காக 3, 5, 8, 10, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுத வைத்து அச்சுறுத்தும், அவற்றைக் கற்றுத் தேர்வு பெற்றாலும் அதற்கும் மேலாக நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளைத் திணித்து வடிகட்டுதல், கல்வியை வணிக மயமாக்குதல், இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை வலுக்கட்டாயமாக திணித்தல், கீழடி உள்ளிட்ட தமிழர்களின் தொன்மைகளை நிரூபிக்கும் அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளை ஏற்க மறுத்தல், பாரம்பரியமாக மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் நிலவுகிற தமிழ்நாட்டில் சமூக அமைதியை சீரழிப்பதற்காக திட்டமிட்டு மதவெறி, சாதிவெறியைத் தூண்ட இடைவிடாமல் முயற்சித்தல், தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரியில் மாநிலத்துக்கு உரிய பங்கைத் தர மறுத்தல், கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளையும் தமிழகத்துக்கு வழங்க சட்டவிரோதமாக மறுத்தல், பேரிடர் கால நிவாரணத் தொகையையும் வழங்க மறுத்தல், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுப்பணி மற்றும் வங்கி போன்ற ஒன்றிய அரசு சார்ந்த பணிகளில் தமிழர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து வேற்று மாநிலத்தவரை புகுத்துதல், ஆளுநரைப் பயன்படுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடக்கம் செய்து போட்டி அரசு நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கு விரோதமாகவும், குறிப்பாக தமிழ்நாட்டின் நலன்களை குறிவைத்துத் தாக்கியும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தத் தீய செயல்களை எதிர்த்து, தமிழ்நாட்டில் பகிரங்கமாகப் பேசி, செயல்படுகிற ஒரே கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மட்டுமே தான்.
பாஜகவோடு கூட்டணி சேர மாட்டோம் என்று முன்னர் அறிவித்த அதிமுக, இப்போது கூட்டணி சேர்ந்து இருக்கிறது. அதன் தலைமையில் கூட்டணி இருப்பதாகச் சொன்னாலும்கூட, ஒன்றிய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அணிக்கு மற்ற கட்சிகளை பாஜகதான் கொண்டு வந்திருக்கிறது.
அதிமுக தனது தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று சொன்னாலும் கூட, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் என்று திரும்பத் திரும்ப பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். அஇஅதிமுக தமது தொடக்க கால கருத்தியல்கள் அனைத்தையும் கரைத்து விட்டு, ஆர்எஸ்எஸ் ஜோதியுடன் தற்போது ஐக்கியமாகிவிட்டது.
இவற்றுக்கு எதிராக தமிழ்நாட்டைக் காப்பதற்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால் தான் முடியும் என்பதால், அதனை எப்படியாவது உடைத்து விட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாஜக – அதிமுக கூட்டணி அமைந்து இருந்தாலும் கூட, அந்தக் கூட்டணிக்கு வெளியிலும் பாஜகவை வெளிப்படையாக கண்டிக்க மறுப்பவர்கள், மறைமுகமாக அதனோடு ஒத்துழைப்பவர்கள் வாக்குகளை பிரிப்பதற்காக போட்டியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே, மக்களுக்கு விரோதமான, ஜனநாயகத்தை அகற்றி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தத் துடிக்கிற, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பதிலாக ஒற்றைத் தன்மையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கிற, அதற்காக இந்தியாவின் பன்மைத் தன்மையை குலைக்கிற, தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நலன்கள் அனைத்திற்கும் எதிராக தாக்குதல் தொடுக்கிற ஆர்எஸ்எஸ் – பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்துவதும், அதனை வெற்றி பெறச் செய்வதும்தான் அரசியல் அறமும் இலக்கும் ஆகும். அந்தத் திசையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் திட்டத்தை வகுத்துள்ளது. தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரின் வெற்றிக்காகவும் முழுத் திறனோடு பாடுபடுவது என உறுதி ஏற்கிறது.
கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் ஐந்து பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுகிறது. இவர்கள் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும்போது, தமிழ்நாட்டின் நலன்களைக் காப்பதற்காக சட்டப்பேரவைக்கு உள்ளும், சட்டப்பேரவை உறுப்பினர் என்ற தகுதி நிலையை பயன்படுத்தியும் தொடர்ச்சியாக இயங்குவார்கள்; குரல் கொடுப்பார்கள். கோரிக்கைகள் நிறைவேற தமிழ்நாட்டு மக்களுடன் சேர்ந்து நிற்பார்கள்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாட்டையும் மக்கள் நலனையும் ஒருங்கிணைப்பதோடு, பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து அனைத்து வகைகளிலும் முயலும், போராட்டங்களை முன்னெடுக்கும் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறோம். இந்த வாக்குறுதியுடன் 47 தலைப்புகளில், விரிவான பட்டியல் தேர்தல் அறிக்கையில் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, சிறு குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் விவசாயம், பாசன வசதிகள் மேம்பாடு, குடிநீர் வணிக மயமாக்கப்படுவதைத் தடுத்து அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், சுற்றுச்சூழல் மேம்பாடு, சமூக நீதி காத்தல், தமிழ் மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொழிலாளர் நலன் பாதுகாத்தல், விவசாயிகளின் நலனை மேம்படுத்துதல், விவசாய தொழிலாளர் வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஆற்ற வேண்டிய பணிகள், விபி ஜி ராம் ஜி திட்டத்தை கைவிட்டு மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை மேம்படுத்தி ஆண்டுக்கு 200 நாள் வேலையும் 700 ரூபாய் தினசரி ஊதியமும் வழங்குதல், கைத்தறி உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை பாதுகாத்தல், மீனவர் நலன்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் மற்றும் இளைஞர் நலன், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் மாணவர் நலன், பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள், குழந்தைகள் நலன், ஒடுக்கப்பட்ட சமூகம் உயர்வு அடைவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பழங்குடி மக்களை பாதுகாத்தல், மூத்த குடிமக்களின் நலன்களைப் பேணுதல், மக்களுக்கான மருத்துவ வசதிகளை இன்னும் விரிவாக்குதல், பத்திரிக்கையாளர் நலனை மேம்படுத்த புதிய ஊதியக் குழு அமைத்தல், காட்சி ஊடகங்களில் பணிபுரிவோருக்கும் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நலன்களை விரிவுபடுத்துதல், மது மற்றும் போதைப் பொருள் பிரச்சனையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய பல்துறை நடவடிக்கைகள் மற்றும் மது போதை மீட்பு மையங்களை அமைத்தல், ஊழல் தடுப்புக்காக லோக் ஆயுக்தா சட்டத்தை உரிய வகையில் திருத்தி செயல்படுத்துதல், ஊபா உள்ளிட்ட கொடுங்கோன்மை சட்டங்களை கைவிட ஒன்றிய அரசை வலியுறுத்துதல், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சிறுபான்மையினர் நலன் பாதுகாத்தல், வெளிப்படையான நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், குடியிருப்பு, மனைநிலம் பட்டா பிரச்சனைகள், வீட்டு வாடகைக்கு வரம்பு விகித்தல் இரட்டை ஆவண மோசடிகளை தடுத்தல், பண ஆதிக்கத்தை தடுத்து மெய்யான ஜனநாயகம் நிலவுவதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல், மனித உரிமைகள் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுதல், பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துதல், திருநங்கையர் திருநம்பியர் வாழ்க்கை மேம்பாட்டுக்காக செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள், வழக்கறிஞர்களுக்கான கோரிக்கைகள், கோவில் மனைகளில் குடியிருப்போர் மற்றும் விவசாயம் செய்வோரைப் பாதுகாப்பதற்கான செயல்முறைகள், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்துதல், பட்டாசு தொழிலை பாதுகாத்தல் ஆகியவை உட்பட தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான, 302 அம்ச செயல் திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை முன்வைத்துள்ளது.
தேர்தல் அறிக்கை முழுவதையும் படிக்க.. (pdf வடிவத்தில்)