தலையங்கம்

ராமன் அல்ல, எமன்

ஜனசக்தி தலையங்கம்

தசரா விழாவில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்: “நமது நாட்டின் கௌரவம், மரியாதை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை சீர்குலைக்க முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அவர்கள் நமது கலாசாரத்தின் மீது வெறுப்புடையவர்களாக திகழ்கின்றனர். இது போன்றவர்கள் நாட்டின் எதிரிகள். பாரத மாதாவின் எதிரிகளை சரியாக அடையாளம் கண்டு அவர்களை வீழ்த்த வேண்டும். ராம ராஜ்ஜியத்தில் யாருக்கும் எந்தப் பாகுபாடும் கிடையாது. அனைவருக்கும் உரிய நீதியும், சமவாய்ப்புகளும் கிடைக்கும்”

எதிரியான ராவணன் யுத்தகளத்தில் ஆயுதங்கள் இழந்து நின்ற போது, அவரை அம்பு விட்டுக் கொல்லாமல், “இன்று போய் நாளை வா “ என்று சொன்னவரல்லவா ராமர். எந்த ஆயுதமும் இல்லாமல், மக்களின் வாக்குரிமையைக் காப்பாற்றுவதற்காக முழக்கங்களை எழுப்பிக்கொண்டுவந்த பல்லாயிரக்கணக்கான சொந்த நாட்டு இளைஞர்கள், இளம் பெண்கள் மீது துணை ராணுவப் படையை ஏவித் தாக்குகிற மோடிக்கு, ராமன் பெயர் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

போராடுகிற இளம் பெண்களின் கால்களை ஆண் காவலர்கள் விரித்துப் பிடித்துக் கொண்டு கால்களுக்கிடையே பூட்ஸ் காலால் மிதிப்பதும், மார்பகங்களை கைகளால் பிடித்து கசக்குவதும் தான் நம் நாட்டின் கலாச்சாரமா?

எமது நாட்டின் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை எங்களிடமிருந்து பறிக்காதீர்கள் என்று கேட்பவர்களா தேசத் துரோகிகள்? இந்த தேசத்தின் விடுதலைக்காக ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல், வெள்ளையனுக்கு கால் பிடித்த பரம்பரையில் பிறந்தவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

கர்நாடகத்தில், தாம் இறந்து விட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு 37 பேர் படிவம் 7 தாக்கல் செய்துள்ளனர். 334 இணையர்கள் தமது கணவர் இறந்துவிட்டதாக மனைவியும், மனைவி இறந்து விட்டதாக கணவனும் மனுச் செய்து 668 பேரின் வாக்குரிமை நீக்கப்பட்டுள்ளது. இறந்துபோனவர் மனுச் செய்யும் விந்தை மோடி ராஜ்ஜியத்தில் நடக்கிறது! உயிரோடு இருப்பவர்களை இறந்துபோனதாக மனுச்செய்த அயோக்கியர்கள் யார்? இதைக் கண்டறிய முடியாத ஆணையத்தை எவ்வாறு நம்பமுடியும்?

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையும் வாக்காளர் பட்டியல் நீக்கங்களையும் ஒப்பிட்டு தி இந்து பிசினஸ் லைன் ஆய்வு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எந்தெந்தத் தொகுதிகளில் எல்லாம் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ, அங்கெல்லாம் தி.மு.க. தோற்றுள்ளது என்பதைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது.

மேற்குவங்கத்தில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களில் 38,20,683 பேர் தம்மைச் சேர்க்க வேண்டும் என மேல்முறையீடு செய்தார்கள். அவர்களில் 1,02,231 பேரை மட்டுமே ஆய்வு செய்தனர். மீதி 37,18,452 மேல்முறையீடுகள் நிலுவையில் இருந்தன. ஆனால் தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. அந்த 37 லட்சம் பேருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை.

நடத்தப்பட்ட தீவிரத் திருத்தத்தில் 13 கோடிப் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதில் முஸ்லிம்கள், பட்டியலினத்தவர் பெரும்பகுதியாக உள்ளனர்.

மக்கள் வாக்களித்து அரசைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, அரசு தனக்கு வாக்களிப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்று முடிவு செய்வது என்ன ஜனநாயகம்? இது என்ன வகையான கௌரவம், மரியாதை, சமூக நல்லிணக்கம்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமது ஆட்சேபனையை மீறி நடந்துகொள்கிறார் என்று சக தேர்தல் ஆணையர்களே சொல்கிறார்கள். இவற்றுக்கெல்லாம், ஞானேஷ்குமார் பதில் சொல்லவேண்டாமா? ஓடி ஒளிந்துகொண்டால், பதவியை விட்டு விலகு என்று கேட்பதைத் தவிர வேறென்ன வழி?

இதனைக் கேட்டால், நாட்டின் எதிரிகள், சமூகத்தைப் பிளவுபடுத்துபவர்கள் என்று அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு ஆலாபனை செய்வது தான் ராமராஜ்ஜியமா?

வாக்குரிமை பறிக்கப்பட்டதுடன் விட்டு விடப்போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். “வாக்காளர் பட்டியலில் இருந்து மட்டுமல்ல, இந்திய மண்ணிலிருந்து ஊடுருவல்காரர்கள் நீக்கப்படுவார்கள். ஒரு அந்நியர் கூட இந்திய குடிமகனின் உரிமையை பறிக்க பாஜக அரசு அனுமதிக்காது” என்று அசாம் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ்-பிஜேபிக்கு வாக்களிக்காத இந்திய மக்கள் எல்லாம் அந்நியர்கள் என்று முத்திரை குத்தி குடியுரிமையைப் பறிப்பதற்கும், உயிரோடிருப்பவர்களைச் செத்து விட்டதாக ஆவணப்படுத்துவதற்கும் ஞானேஷ்குமாருக்கோ, மோடிக்கோ, அமித்ஷாவுக்கோ என்ன உரிமை இருக்கிறது?

ராமன் என்று கூறிக்கொண்டு எமதர்மன் வேலையைச் செய்தால், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button