
தனது 75 வயதில் காலமான தேனிசைத் தென்றல் தேவா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என 400 திரைப்படங்களில் பாடல்களாலும் இசையாலும் ராக பூமாலை தொடுத்தது பிரமிப்பானது.
கிராமத்து கழனிக் காட்டு உழைப்பாளி மக்களின், தொழில் வழிபட்ட, குதூகலத்தையும் அதன் வலியையும், வலிமையையும் திரை இசை வாயிலாக, மக்களிசையாக ஜனநாயகப்படுத்தியவர் இசைஞானி இளையராஜா.
தேவாவோ சென்னை போன்ற பெரு நகரத்தின், தெரு ஓரத்து நாயகர்கள். குடிசை வாழ் அன்றாடங்காய்ச்சிகள், புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் மனதில் தூங்கிக் கிடந்த இசையை பூபாளமாக ஒலிக்கச் செய்த கானக்குயில்.
அதற்காக குடிசை மக்களின் கதறலை உரக்கக் கூவிய கானா இசை மட்டுமல்ல. தேவாவின் அடையாளம்.
ஆன்மீகத்தை அடியாள மனதின் மெலிதான, நீரோட்டமாக தவழ்ந்த கர்நாடக இசையின் உச்சத்தையும் தொட்டவர் தேவா.
ஆர்மோனியம், தபலா, கிட்டார், பியானோ என அனைத்து இசை வடிவங்களும் அவருக்குள்ளிருந்து அனாயசியமாகப் பொங்கி பிரவாகித்தன.
இவர் மட்டுமல்ல இவரது சகோதார்கள் சம்பத்குமார், சபேசன், முரளி, சிவா, மகன் ஸ்ரீகாந்த் தேவா என அத்தனை பேரும் இசையை லாவகமாக கைக்குள் அடக்கினர்.
இவரது சகோதரர் டிரம்மர் சம்பத்குமாரின் மகன் திரைக்கலைஞரான விஜய் என தொடரும் கலைக் குடும்பம்.
அப்போதைய வட ஆற்காடு மாவட்டம், இப்போதைய ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை ஒட்டியிருக்கும் பழைய மாங்காடுதான் இந்த அடித்தட்டு மக்களின் பூர்வீக பூமி.
அந்த மாவட்டத்திலிருந்து 90 வருடங்களுக்கு முன்பாக பஞ்சம் பிழைக்க ஒரு பெரும் மக்கள் கூட்டம் கர்நாடகா கோலார் தங்க வயலை நோக்கி படையெடுத்து.
சென்னை ஆயிரம் விளக்கு, ஆழ் தோட்டம், மக்கிஸ் தோட்டம், சேத்துப்பட்டு ஜெகநாதபுரம், மயிலாப்பூர் பல்லக்கு மாநகர், விசாலாட்சி தோட்டம் என பரவலாக குள்ளக் குடிசைகளுக்குள் புகுந்து சேரிப்பூக்களாக முகிழ்த்தனர்.
தேவாவின் குடும்பம் மயிலாப்பூர் கோயில் நிலமான விசாலாட்சி தோட்டத்தில் அவர்களின் ஆயாவும், தாத்தாவும் இடத்தை மடக்கி சென்னை பெருநகரத்தின் வளர்ச்சிக்கு அடிகோலினர்.
சென்னையில் பல பகுதிகளில் குடிசைவாழ் மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது கம்யூனிஸ்ட் கட்சி.

அப்படி விசாலாட்சித் தோட்டத்திலும் தலைமறைவு காலகட்டத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி கிளை இயங்கியது.
தோழர்கள் ஜீவா, பாலதண்டாயுதம், ஏ.ஆர்.எஸ்.சாரி உள்ளிட்ட பல தோழர்கள் அந்த குள்ளக் குடிசைகளில் தலைமறைவாக இருந்ததாகவும் மூத்தத் தோழர்கள்
ஆழ்வார்பேட்டை ராமலிங்கம், ஆ கா.மு. கணேசன் அப்போது தெரிவித்த தகவல்கள்.

ஆரம்பகால இந்திய கம்யூனிஸ்ட் தோழர் ஏ.எஸ். கேவின் தம்பி தான் பெரும் புகழ்பெற்ற பல பெரிய வழக்குகளை நடத்திய இவர் ஏ.ஆர்.எஸ்.சாரி, பிற்காலத்தில் தோழர்கள் பி.ஜி.கன்னியப்பன், (ஹிந்து அலுவலகம்) சொக்கலிங்கம் (தபால் துறை எழுத்தர்) பச்சையப்பன், (ஹார்பர்) பச்சையப்பன் மனைவி பூஷணம், கண்ணன் ரயில்வே) கோவிந்தராஜ், நடேசன் ஸ்டாண்டர்டு மோட்டார் இப்படி பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தனர்.
இதில் பி.ஜி.கன்னியப்பன் உள்ளிட்ட பலரும் இசை வல்லுநர் என்பதோடு எல்லோருமே உறவினர்கள்.
இதில் சொக்கலிங்கம்தான் தேவாவின் தந்தை.
இவர்களில் அரசு ஒப்பந்தக்காரர் ராமச்சந்திரன், கண்ணப்பன், வைத்திலிங்கம், கபாலி (தென் சென்னை மாவட்டஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக இப்போதிருக்கும் எஸ்.கே.சிவாவின் தந்தை)
ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, கபாலி உள்ளிட்ட தோழர்கள் இப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கின்றனர்.
பி.ஜி.கன்னியப்பன் அந்தக் காலத்திலேயே இயல் இசை நாடக மன்றத்தில் உறுப்பினர்.
சிறந்த தபேலாக் கலைஞராக இருந்தவர்.
தேவாவின் அப்பா சொக்கலிங்கம் ஹார்மோனிய கலைஞர் கேசவன் டோலக் வாசிப்பவர்.
இவர்கள் எல்லோரும் இணைந்து சென்னையில் அந்தக் காலத்தில் நடந்த பல நாடகங்களில் இசை அமைப்பாளர்களாகவும் கோலோச்சியவர்கள்.
தேவா ஆரம்பத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டவர்களின் நிரந்தர தபேலா கலைஞராக அடவு கட்ட வைத்தது.
முறையான இசையை இளையராஜா கற்றுக்கொண்ட தன்ராஜ் மாஸ்டர்தான் தேவாவுக்குள்ளும் ஐரோப்பிய பாணி இசையை விதைத்தார்.
செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கல்லறையில்தான் இந்த பகுதியின் இளைஞர்கள் ஒன்று கூடி சத்தம் போட்டு பலவகை கானாப் பாடல்களை ஒலித்தனர்.
சென்னை மொழியில் தேவாவுக்கு இந்தக் கல்லறைத் தோட்டம் தான் கானா பாடலை படைப்பதற்கும், எழுதுவதற்குமான களமானது.
தேவாவின் தந்தையும் அவரது உறவினர்களான பல தோழர்களும் இந்த குடும்பங்களை செதுக்கியதற்கும் …தோழர்களின் பங்கு மிக உயரமானது.
இந்த குடும்பங்களின் ஒற்றுமையும், உறவுப் பாலங்களும் வேறு வேறு வழிகளில் இன்னும் தொடர்கின்றன.
தேவாவின் ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து பயணிப்பதற்கு தேவாவின் காதல் மனைவி விஜயாவின் பங்கு இமாலய உயரம்.
இதில் தேவாவின் மூத்த தம்பி சம்பத்குமார்… என்னோடு 1973-75 களில் கிண்டி ஐ.டி.ஐயில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மாணவர் தலைவராக இருந்த போது, சம்பத் போராட்டங்களில் கலந்து கொண்டவர். என்னோடு எண் 45 பேருந்திலும் சக மாணவராக சம்பத் பயணப்பட்டவர். ஐ.டி.ஐ மாணவர் போராட்டங்கள் சிலவற்றில் சம்பத்தும் கலந்து கொண்டார்.
ஒரு போர்க்களத்தில், பெஞ்சமின் என்ற சக ஐடிஐ மாணவர் விபத்தில் சிக்கி மாண்டதும், அந்த நிகழ்வுகளிலும் சம்பத் உடன் இருந்தது இந்த நினைவுகளோடு கண்ணீர் கதை சொல்கிறது.
பழைய கம்யூனிஸ்ட் தோழர்களின் உறவுகளோடு பல்வேறு தளங்களில் மற்றவர்களை பயணிக்க வைப்பதும் தளிர்ப்பதும் கம்யூனிஸ்ட் பாணி குடும்ப உறவுகளின் எழுச்சியோடு தொடர்புடையது.
மாபெரும் கலைஞர் தேவாவுக்கு நேய அஞ்சலியும் அவரது குடும்பத்தின் நெடிய தொடர்புகளோடு செவ்வணக்கம்.