தமிழகம்

தமிழ்நாடு அரசே! தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்று! பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தராதே!

தமிழ்நாடு ஏஐடியூசியின் 21வது மாநாட்டு அறைகூவல்

தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை முற்றாகப் பறித்து, நிரந்தரவேலை முறைமையை ஒழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அந்நிய பகாசுரக் கம்பெனிகளுக்கும் சாதகமான கொள்கைகளை மோடியின் ஒன்றிய அரசு, மிக வேகமாகச் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு, முந்தைய காலத்தில் தொழிலாளர் நலன் பயக்கும் சட்டங்களை இயற்றி செயல்படுத்தியுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இடைவிடாத தொடர்ச்சியான போராட்டங்களால் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியிலும் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, அந்நிய முதலீட்டை ஈர்ப்பதாகக் கூறி, கார்ப்பரேட் ஆதரவு நிலைக்கு மாறியது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 12 மணி நேரம் வேலை வாங்கலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கடுமையான எதிர்ப்புகளுக்குப் பின் திரும்பப் பெறப்பட்டாலும், தொழிலாளர்களுக்கு விரோதமான செயல்பாடுகள் தொடர்ந்தன.

அரசுடன் தொடர்புடைய பல தொழில்களில் நிரந்தர வேலை வாய்ப்பை குறைத்து, வேலைக்கும் ஊதியத்துக்கும் எந்த பாதுகாப்புமற்ற காண்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறை செயலுக்கு வந்தது.

“மாநில அரசு தனது தொழிலாளர் கொள்கையை அறிவிக்க வேண்டும்” என்று ஏஐடியுசி போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. போராட்டங்களை எல்லாம், திமுக அரசு சட்டம்- ஒழுங்குப் பிரச்சனையாகவே பார்த்தது.

சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. தேர்தல் அறிக்கையில், ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம், அரசுப் பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000 தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், 5 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசுத்துறையில் 5 லட்சம் புதிய அரசு வேலைகள், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ4,000 வரை உதவி தொகை என வாக்குறுதிகள் தரப்பட்டன. த.வெ.க.வுக்கு மக்கள் வாக்களித்து தனிப்பெரும் கட்சியாக தேர்வு செய்தனர்.

த.வெ.க. ஒரு வழியாக ஆட்சியமைத்த பின்னர் இந்த வாக்குறுதிகளில் எதைப்பற்றியும் அக்கறை செலுத்தவில்லை.

தொழிலாளர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர், பதவி ஏற்று ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை தொழிற்சங்கத் தலைவர்களை ஒரு முறை கூட சந்திக்கவில்லை.

இது சம்பந்தமாக முதலமைச்சரை நேரில் சந்தித்து தேங்கிக் கிடக்கும் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசுமாறும், முத்தரப்பு குழுக்களை உடனடியாக அமைக்குமாறும் கோரி, நிலைமைகளை விளக்கி, ஏஐடியுசி கடிதத்தைத் தந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த அசைவும் இல்லை.

தொழிலாளர் மானியக் கோரிக்கையின்போது, வெளியிடப்பட்ட 15 அம்ச அறிக்கையில், நலவாரியங்களின் நிதியை வீண் செலவு செய்வது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அதிலும்கூட கட்டிட, உடலுழைப்புத் தொழிலாளர்கள் நீண்டகாலமாகப் போராடிக் கேட்டு வரும் நிதிப் பயன்களை உயர்த்துவது பற்றி ஒரு சொல்லும் இல்லை.

தமிழ்நாடு முழுமையிலும் உள்ளாட்சித் தொழிலாளர்களை காண்ட்ராக்ட் விடுவதற்கு வேகமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்த போது, தொகுப்பூதியத்தை உயர்த்தலாம், ஆனால், நிரந்தரம் பற்றி பேசமுடியாது என உறுதியாகக் தெரிவிக்கப்பட்டது.

மின்சார வாரியத்தில், 64,000 பணியிடங்கள் காலியாக இருந்தும், காண்ட்ராக்ட தொழிலாளர்களை பணியமர்த்தினர். மின்வாரியத்தால் குறைந்த முதலீட்டில் நிறுவ முடிந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்துதல் தனியாருக்குத் தரப்பட்டுவிட்டது. துணை மின்நிலையங்கள் அமைத்தல், மின் பரிமாற்றம் (டிரான்ஸ்மிஷன்) உள்ளிட்டவை தனியாருக்குத் தரப்படுகின்றன.

போக்குவரத்துக் கழகங்களில், 30,000 நிரந்தரப் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, நடத்துநர்களை தினக்கூலிகளாக நியமிக்க உத்திரப் பிரதேச நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் தரப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான மின்சாரப் பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர் பணி ஆகியவை தனியாருக்குத் தரப்படுகின்றன.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், பணி பாதுகாப்பு, 2023–24க்கான நிலுவை ஊக்கத்தொகை, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் போராடிய செவிலியர் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று தலைமைச் செயலகத்தில் கைது செய்தனர். அனுமதி பெற்று உண்ணாவிரதமிருந்த இடத்தில் விளக்குகளை அணைத்து குழந்தைகளைக்கூட அடித்து, பல நூறு பேரைக் கைது செய்தனர்.

உயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவுட்சோர்ஸ் செய்யப்படுவதை எதிர்த்துப் போராடுகின்றனர்.

இவையனைத்தும் வெறும் வேலைவாய்ப்புப் பிரச்சினை மட்டுமே அல்ல. நிரந்தரப் பணியிடத்துடன் வரும் ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகியவை ஒப்பந்த முறையில் முற்றாகப் பறிக்கப்படும்.

த.வெ.க.வின் தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு நேர் எதிரான திசையில் அதன் அரசு பயணிக்கிறது.

தெருவோர வியாபார சட்டத்துக்கு எதிராக, பெரிய கடை முதலாளிகளின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கி தமிழ்நாடு முழுவதும் தெருவோர வியாபாரிகளை ஈவிரக்கமின்றி அகற்றி வருகிறது. கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் மீனவர்களை அகற்றி விட்டு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கிறது.

கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் தொழிலாளர்களைக் கைது செய்வது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையை ஈடுபடுத்துவது போன்ற போராடும் உரிமையை மறுக்கிற சட்ட விரோத நடவடிக்கை, கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

  • தமிழ்நாடு அரசு தனது தொழிலாளர் கொள்கையை விரிவாக அறிவிக்கவேண்டும்.
  • மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம், கட்டட உடலுழைப்புத் தொழிலாளர் வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து முத்தரப்புக்குழுக்களையும் உடனே நியமித்து செயல்படுத்த வேண்டும்.
  • அரசுத்துறைகள், அரசு சார்ந்த தொழில்களில் காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் முறைகளை முற்றாக அகற்றி, தமிழ்நாடு நிரந்தரத் தகுதி வழங்குதல் சட்டப்படி இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ், ரூ 42,000 என குறைந்தபட்ச ஊதியத்தை அகவிலைப்படியோடு சேர்த்து அறிவிக்கை செய்து, உறுதியாக அமல் நடத்த வேண்டும்.
  • கட்டடம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு நலவாரிய நிதிப்பலன்களை தாமதமின்றி உயர்த்த வேண்டும்.
  • பெண் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். உழைக்கும் பெண்களின் மாதவிடாய் விடுப்பை உறுதிப்படுத்தத் தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
  • அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த, தற்காலிகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும், மகப்பேறு நலச் சலுகைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • அமைப்புசாராத் துறை பெண் தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் மூலம் ஆறு மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு உதவித்தொகை வழங்க வேண்டும்

உள்ளிட்ட துறைவாரியான கோரிக்கைகளை வலியுறுத்தி,

  • ஏஐடியுசியின் 107வது அமைப்பு நாளான 2026, அக்டோபர் 31ம் தேதியன்று மாவட்டத் தலைநகர்கள், தொழில் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும்,
  • 2026, டிசம்பர் 13 முதல் 20ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், ஏஐடியுசியுடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் அனைத்தும் இணைந்து, தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் விரிவான பரப்புரை இயக்கத்தை நடத்துவதென்றும்
  • 2027ல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடரின்போது மறியல் போராட்டத்தை நடத்துவது என்றும்

தமிழ்நாடு ஏஐடியுசியின் 21வது மாநில மாநாடு தீர்மானிக்கிறது.

தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான இந்த இயக்கங்களில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாநாடு அறைகூவல் விடுக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button