கட்டுரைகள்

தூக்குமேடைகள் வாழ்வின் முடிவல்ல…

நியூ ஏஜ் தலையங்கம் (அக். 4– 10)

இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பின் திட்டங்களை விவரித்த சுற்றறிக்கைகளை மத்திய சட்டமன்ற ஹாலில் வீசியும், தலைவர்களையும் மக்களையும் விழிப்படையச் செய்ய வெடிகுண்டு வீசிய பிறகு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பகத்சிங், தனது வாழ்வின் இறுதி நெருங்கியதை முழுமையாக அறிந்திருந்தார். அவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரி இது குறித்து அவரை எச்சரித்தார். அதற்கு பகத்சிங் அளித்த பதில், “உடல் மட்டும் தானே அழிகிறது கருத்துக்கள் அல்லவே, அவை தொடர்ந்து உயிர்ப்புடன் வாழும்.” அவர் கூறியது போலவே பகத்சிங் இன்று இல்லை; ஆனால் இப்போதும்கூட அவர் வாழ்கிறார்: நினைவுகளில் மட்டுமல்ல, மாறாக மக்களுக்காகப் போராடுபவர்களின் ஒவ்வொரு மூச்சு காற்றிலும் அவர் வாழ்கிறார்.

மகாத்மா காந்தியும்கூட அதே பாதையில், வெகுவாக விலகி இருந்த போதும், பயணித்த ஒருவர். அதுபோலவே நாட்டிற்கும் அதன் மக்களுக்குமான அவர்களின் அன்பில் மட்டுமல்லாமல் தங்கள் மரணத்திலும் ஒன்றுபோல இருந்தவர்கள். பகத்சிங் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்; மகாத்மா காந்தி ஆர்எஸ்எஸ்-காரர் ஒருவரால் சுடப்பட்டார். 1869 அக்டோபர் இரண்டாம் நாள் பிறந்த காந்திஜியின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 1948 ஜனவரி 30 அவர் படுகொலை செய்யப்பட்டார்; ஆனால் வகுப்புவாத பாசிச இந்துத்துவ சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டு சக்தியாக அவர் இன்னும் ஜீவிதமாக நீடிக்கிறார்.

அடிமைப்பட்டு இருந்த இந்தியாவில் ஒரு உள்ளூர் பள்ளியில் காந்தி படித்தார்; பின்னர் சட்டம் பயில உயர் கல்விக்காக லண்டன் சென்றார். அடிமை இந்தியாவின் நிழலில் உருவாகி வந்த சுதந்திர நாட்டின் தேசியத்துடன் அவர் வளர்ந்தார். இந்தியாவில் காலனியத் தளைகளைத் தகர்க்காமலும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை நிறுவாமலும் சுதந்திரம் முழுமை பெறாது என்று அவர் பிரச்சாரம் செய்தார். அரசியல் அமைப்புச் சட்ட முகவுரையில் இறையாண்மை, ஜனநாயகம், குடியரசு போன்ற வார்த்தைகள் இடம் பெற செய்யப்பட்டன; ஏனெனில், அவர் தலைமை தாங்கிய தேசிய இயக்கத்தின் கூட்டு உறுதிப்பாடு மற்றும் கூட்டு உணர்வின்  பின்னணியில் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தன. இந்தக் கொள்கைகளுக்காகவே அவர் உயிர் துறக்கவும் செய்தார்.

காந்திஜியின் தியாகத்திற்கு பம்பாய் சட்டமன்றத்தில் அஞ்சலி செலுத்திய அதன் உறுப்பினர் தோழர் எஸ்ஏ டாங்கே, “அவர் ஒரு முனிவர் என்பதற்காகப் படுகொலை செய்யப்படவில்லை,  நாட்டின் அரசியல் விவகாரங்களில் அவரது வழியில் அவர் தலையிட்டார் என்பதற்காகவும் அவர் படுகொலை செய்யப்படவில்லை.  இந்து –முஸ்லிம் ஒற்றுமை என்ற தேசத்தின் நெருக்கடியான கட்டத்தின் அரசியல் சூழலில் அவர் தலையிட்டது வகுப்புவாதப் பிற்போக்கு சக்திகளால் விரும்பப்படவில்லை. இந்த ஒரு பாவத்தை அவர் செய்தார்; மற்றும் குறிப்பான இந்தப் பாவத்தின் குற்றத்திற்காகவே அவர் படுகொலை செய்யப்பட்டார். அது தவிர அமைதி, அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைக் கருத்தியல் ரீதியில் (in the abstract) போதித்தார் என்ற காரணத்திற்காக அவர் படுகொலை செய்யப்படவில்லை. நிலப்பிரபுகள் மற்றும் குத்தகைதாரர்கள் இடையேயும், விவசாயிகள் மத்தியிலும் அவர் அன்பைப் போதித்தார்; ஆனால் கிசான்கள் அவரைக் கொல்லவில்லை. எந்த ஒரு தொழிலாளியோ, விவசாயியோ அல்லது கம்யூனிஸ்டோ அவரைக் கொல்லவில்லை. அவரைக் கொல்ல சூழ்ச்சி செய்தது மன்னர்கள், நிலப் பிரபுக்கள் மற்றும் முதலாளிகளே ஆவர்”

காந்திஜியைப் பொறுத்தவரை எதுவும் முழுமை பெற்ற ஒன்று (absolute) அல்லது மாறாதது அல்ல, வாழ்நாள் முழுவதும் அவர் தொடர்ந்து பரிசோதனை செய்த ‘உண்மை’யும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சமூகத்தில் வர்க்கப் பகுப்பாய்வு மற்றும் வர்க்கப் போராட்டத்தின் பங்கு என்பதைக் காந்திஜி ஏற்கவில்லை என்பது உண்மையே; ஆனால் அடிப்படையில் சமூக மாற்றத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

குத்தகை மற்றும் நில வருவாயைக் கணிசமாகக் குறைப்பதிலும், நிலத்தில் விவசாயம் செய்ததற்கு எதிராக நிலப்பிரபுகளுக்குச் செலுத்த வேண்டிய குத்தகை பாக்கிகளையும் மற்றும் கட்டாய உழைப்புமுறையை ஒழிப்பதிலும் காந்தியடிகள் நம்பிக்கை கொண்டிருந்தார். குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களால் நிலம் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்கவும் காங்கிரஸ் அமைச்சரவைகள் சட்டங்களை இயற்றின. இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டன. இடதுசாரிகளின் அரசியல் மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகள் இயக்கத்தின் அரசியல், சோசலிசத்தை ஆதரிக்காத காங்கிரஸ் வலதுசாரிகளையும் ஈர்த்தன. நிலச் சீர்திருத்தம், நிலப்பிரபுத்துவ முறை ஒழிப்பு மற்றும் உழுபவனுக்கு நிலத்தை மீண்டும் உரிமையாக்குவதை ஆதரிப்பதில் அந்த இயக்கம் முழுவதுமாக ஒரு நேர்மறையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

காந்தியடிகள் தீவிரமான பாதையை நோக்கி நகர்ந்தபோது, தேசிய இயக்கத்தின் முழுமையான கருத்தியல் போக்குமே அவரால் வழி நடத்தப்பட்டது என்று சொல்லலாம். தனிச் சொத்துரிமையை அவர் எதிர்க்கத் தொடங்கியதுடன், அறங்காவலர் முறைக்கு (trusteeship) தீவிர வடிவம் அளித்து முன் வைத்தார். 1942ல் அமெரிக்கப் பத்திரிகையாளர் லூயிஸ் ஃபிஷர் அறங்காவலர் முறை குறித்து அவரிடம் வினவியபோது, காந்தியடிகள் ‘அறங்காவலர்களுக்கு எதிராகச் செல்வதற்கே நான் முன்னுரிமை தருவேன்; தேவை எனில் முன்பு ஒரு நேரத்தில் தாம் ஆதரித்த அறங்காவலர்களுக்கு எதிரான வெளிப்படையான எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வேன்’ என்று பதில் அளித்தார்

‘விவசாயிகளின் மேம்பாட்டிற்கான அவரது திட்டம் என்ன’ என்ற லூயிஸ் ஃபிஷரின் கேள்விக்குப் பதிலளித்த காந்திஜி, “விவசாயிகள் நிலத்தை எடுத்துக் கொள்வார்கள். நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாம் அவர்களிடம் கூற வேண்டியது இல்லை, அவர்களே எடுத்துக் கொள்வார்கள்” என்றார்.  நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்று ஃபிஷர் தொடர்ந்து கேட்டபோது, “இல்லை, அது நிதிநிலை ரீதியாகச் சாத்தியமற்றது” என்று பதில் அளித்தார்.

மேலும் அதை விளக்கிய காந்திஜி, “கிராமங்களில் விவசாயிகள் வரி செலுத்துவதை நிறுத்துவர்… அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை நிலத்தைக் கைப்பற்றுவதாக இருக்கும்” என்று கூறினார். நிலத்தைக் கைப்பற்றுவதில் வன்முறை ஏதேனும் இருக்குமா என ஃபிஷர் கேட்டபோது, “அங்கு வன்முறை நிகழக்கூடும், ஆனால் பின்னர் நில உரிமையாளர்கள் மீண்டும் ஒத்துழைக்கவும் செய்யலாம்… அங்கிருந்து ஓடி விடுவதன் மூலம் அவர்கள் ஒத்துழைக்கலாம்”என்று காந்திஜி பதிலளித்தார்.

நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவத்தைக் காந்திஜி வன்மையாக எதிர்த்தார். சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்ததுடன்,, பெண்களின் விடுதலையை அவர் ஆதரித்தார். அவரது எழுத்துக்கள் எப்போதும் நலிவடைந்தோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சுரண்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வெளிப்பட்டது.

காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவர், இந்து ராஷ்டிரா திட்டத்தையும், அதற்குத் தூண்டுதலாக இருந்த கொடிய சித்தாந்தத்தையும் முழுமையாக முறியடித்திருந்தார் என்பதை அவரது வாழ்க்கைப் பயணம் வெளிப்படுத்துகிறது; அந்தக் கொடிய சித்தாந்தத்தை முன்னெடுத்த அமைப்புகளான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் இந்து மகா சபாவை இந்திய அரசியலில் ஓரம் கட்டும்  நிர்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார்.

காந்திஜியின் அளப்பரிய தார்மீக வலிமை மற்றும் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சபட்ச தலைவராக அவர் மேற்கொண்ட முழு வீச்சிலான முயற்சிகள் ஆகியவற்றின்  காரணமாகவே, சுதந்திரமடைந்த குறுகிய காலத்திலேயே மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக தேசமாகத் திகழும் தொலைநோக்குப் பார்வையின் செல்லுபடியாகும் தன்மை கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக நிலை பெற்றது. அது அக்காலகட்டத்தின் கொந்தளிப்பான சூழலைக் கடந்து சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை ஒன்றிணைக்கும் கோட்பாடாகத்  திகழ்ந்தது.

காந்திஜியின் படுகொலையானது, சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற திட்டத்தைத் தடம் புரளச் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையே ஆகும். காந்தியின் படுகொலைக்கு எதிராக எழுந்த மக்களின் கொந்தளிப்பு மற்றும் நீடித்த வெறுப்புணர்வு ஆகியவற்றின் பின்னணியில் பார்க்கும்போது, கோட்சே உண்மை என்று நம்பி முன்வைத்த தீர்வு முயற்சி இப்போது, அறியாமையில் ஊறியதாகவும், ஏன் தனக்கே பாதகமாக முடியக்கூடியதாகவும் கூடத் தெரிகிறது.

ஆனால் அப்படுகொலைக்கு வித்திட்ட சர்ச்சைக்குரியவர்கள் தப்பித்து, தொடர்ந்து நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக இருந்ததுடன், அவர்களின் தேர்தல் பிரிவான பாஜக மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகும், மகாத்மா காந்திஜி போராடி தன் உயிரையே தியாகம் செய்த மதச்சார்பற்ற இந்தியாவின் அடித்தளத்தையே அச்சுறுத்தி வருகிறார்கள்

அரசு நிர்வாக அமைப்பில் பாஜக அரசு ஏற்படுத்திய சீர்கேடு என்பது, தேர்தல் ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தேர்தல் முறைகேடுகளைச் செய்வதுடன் முடிவதில்லை. அது அதைவிட பெரிதானது. அது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் அச்சுறுத்துகிறது.

மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டுப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பொருத்தப்பாடும் முக்கியத்துவமும் இன்றைய நிலையைவிட ஒருபோதும் கூடுதல் பொருத்தமானதாக இருக்க முடியாது.

காந்தி ஜெயந்தி நாளில் மகாத்மாவுக்கு நமது அஞ்சலியை உரித்தாக்குவோம்!

–தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button