
ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு நீதித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளைத் தன்னுடையை கைப்பாவையாக மாற்றி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) எனும் பெயரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பல்வேறு முறைகேடுப் புகார்கள் எழுந்துள்ளன. 13 கோடிப் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த வாக்குத் திருட்டுக்கு காரணமான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் மாணவர் – இளைஞர் பெருமன்றம் உட்பட இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்புகள், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணைந்து அக்டோபர் – 10 அன்று நடத்திய போராட்டத்தின் மீது மோடி அரசு அடக்குமுறையை ஏவி விட்டது. காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் 35 ஆயிரம் பேரைக் குவித்து கட்டுப்படுத்த முயன்றது. ரயில்கள் ரத்து, வலுக்கட்டாய கைது, வீட்டுச்சிறை, கொடூரத் தாக்குதல் என பல்வேறு அடக்குமுறைகளை ஒன்றிய பாஜக அரசு கட்டவிழ்த்து விட்டது.
அதேநாளில் (அக்டோபர் 10) தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சிம்சன் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். இதற்கு இளைஞர் மாணவர் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததால், காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்ல முயன்றனர். இதில் கவின் என்ற மாணவரின் மண்டை உடைந்தது. பலருக்கு சிறாய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

சேலத்தில் ரயில் நிலையம் முற்றுகையிட்ட மாணவர் – இளைஞர் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவையில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

திருப்பூரில் தலைமைத் தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது. திருச்சி ரயில் நிலையம் முற்றுகையிடப்பட்டது. திருவாரூரில் தலைமைத் தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது. தஞ்சாவூர் ரயில் நிலையம் முற்றுகையிடப்பட்டது. கள்ளக்குறிச்சி நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்ட இளைஞர் – மாணவர் பெருமன்ற தோழர்கள் அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர் – மாணவர் பெருமன்றம் தெரிவித்துள்ளது.