இந்தியாகட்டுரைகள்

டெல்லியில் துணை ராணுவம் வெறியாட்டம்

த.லெனின்

அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் டெல்லி பெருநகரின் எல்லைகள் மூடப்பட்டு தடுப்பு அரண்களாகவே (பேரிகாட்) காட்சியளித்தன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் ஆளரவமற்றோ, காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினர் நிரம்பியோ இருந்தன.

மெட்ரோ ரயில்கள் ஓடவில்லை. இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இடதுசாரி இளைஞர் – மாணவர் அமைப்புகளும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் இணைந்து போராட்டம் அறிவித்திருந்தன. இதனைத் தடுப்பதற்குத்தான் ஒன்றிய மோடி அரசின் இத்தனை ஏற்பாடுகள்.

ஆனால் இளைஞர் – மாணவர் பட்டாளம் இத்தனையையும் மீறி போராட்டத்தில் இறங்கியது. அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றது. இடது சாரிக் கட்சிகளும் இந்தியா கூட்டணியும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியது.

ஜென்-சி இளைஞர்கள் தங்களது ஒவ்வொரு நாட்டிலும் மாற்றங்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். கட்டணக்கல்விக்கு எதிராக, வேலையில்லா திண்டாட்ட கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், ஊழல் எதிர்ப்பு, தேர்வு முறை, வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர்,

இந்தியாவின் தேர்தல் முறையில் செல்லரித்துப் போன மோசமான வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தி களத்தில் இறங்கிப் போராடுகின்றனர்.

இதற்குப் பதிலளிக்க வேண்டிய தேர்தல் ஆணையமோ அமைதியாக இருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., உள்ளூர் குண்டர்களை ஏவி விட்டு, போராட்டங்களை நசுக்க ஒன்றிய பாசிச பாஜக அரசு முனைகிறது.

ரயில்கள் ரத்து

அக்டோபர் 10 அன்று டெல்லிக்குச் சென்று போராட்டங்களில் சென்றடைய முடியாமல் தடுக்கும் வகையில் வெளிமாநிலங்களில் இருந்து சென்ற 200 ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டோ, தாமதப்படுத்தியோ இயக்கப்பட்டது. டெல்லிக்குச் செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு விட்டன.

அக்டோபர் 10 அன்று, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் இடதுசாரி இளைஞர் – மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த, 7,000-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் தடுத்து வைக்கப்பட்டனர். அடுத்த நாள், காட்டுமிராண்டித்தன, கொடூர அடக்குமுறை தாண்டவமாடியது. இதில் போராட்டக்காரர்களும், பத்திரிகையாளர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டதும் அடங்கும்.

சிறார்கள் உட்பட, தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு குழுவினர் கன்னாட் பிளேஸிலிருந்து அழைத்து வரப்பட்டு, சிறைச்சாலை போன்று கட்டமைக்கப்பட்ட பேருந்துகளில் பந்த்வாலன் குண்டில் உள்ள ஒரு சமூக மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டது மட்டுமல்லாமல், தங்கள் கைப்பேசிகள், சட்ட உதவி உட்பட எதனையும் அணுக முடியாதபடி முற்றிலும் சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்தியா கூட்டணி பேரணி

அக்டோபர் 12 அன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்ல விடுத்த அழைப்பு, பெரும் வெற்றி பெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்கள் ராமகிருஷ்ண பாண்டா, டாக்டர் கிரிஷ் சர்மா, ஆனி ராஜா ஆகியோரும், சிபிஐ டெல்லி மாநிலச் செயலாளர் தினேஷ் வர்ஷ்னே, ஏஐஎஸ்எஃப், ஏஐஒய்எஃப் மத்திய தலைமை மற்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம்., பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தோழர்களும், இதில் கம்பீரமாக பங்கேற்றனர்.

தொலைக்காட்சிகளின் செய்திகளில் சிபிஐ, ஏஐஎஸ்எஃப்-ஏஐஒய்எஃப் கொடிகளையும், தோழர்களையும் ஒளிபரப்பியது.

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பொதுச்செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பொதுச் செயலாளர் சுக்ஜிந்தர் மகேசரி தலைவர் ரோஷன் சின்ஹா மோஹித் டெல்லி பல்கலைக்கழகம், ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் சுவம், சட்ட மாணவர் டெல்லி பல்கலை ஆதவன் பாஸ்கர், வசந்த் சாதம், பிரதிபா, ஷ்ரேயா மற்றும் பலர் போராட்டங்களில் பங்கேற்றனர்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற டெல்லி மாநில செயலாளர் ஷிஜோ வர்கீஸ் இளைஞர் பெருமன்ற டெல்லி மற்றும் பஞ்சாப் தோழர்கள் தலைமையில் பெருங்கூட்டம் இருந்தபோதிலும், அனைத்து தோழர்களும் மண்டி ஹவுஸிலிருந்து பரகம்பா சாலை, கன்னாட் பிளேஸ் வரை சென்று மீண்டும் கன்னாட் பிளேஸுக்குத் திரும்பி, 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வீரதீரத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதுபோலவே இடதுசாரி மாணவர்கள் அமைப்பான இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பலவந்தமாக கைது செய்யப்பட்டனர்

அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தலைவர் நேஹா போரா, தேர்தல் ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான யோகேந்திர யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வத்ரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

பேட்மேன் முகமூடி அணிந்த பெண்

“அனைவரும் இங்கே இருக்கிறார்கள், அதில் ஓர் ஒற்றுமை தெரிகிறது. நாங்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வந்தோம். எனவே, இன்று நீங்கள் வந்து, உங்கள் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நாள்” என்று பேட்மேன் முகமூடி அணிந்திருந்த, 20 வயது உள்ள ஒரு போராட்ட வீராங்கனை கூறினார்.

பொதுமக்களும் பங்கேற்ற பேரணி

உச்சநீதிமன்றத்தை நோக்கிய பேரணியை ராகுல் காந்தியும் இந்தியா கூட்டணியும் அறிவித்து, இடதுசாரிக் கட்சிகளும் இணைந்த போதிலும், இறுதியில் அரசியல் சார்பற்றவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். சுமார் 2 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர்.

இருபத்தைந்து வயதான தீபிகா என்ற பெண், ஸ்டேட்ஸ்மேன் கட்டிடத்திற்கு வெளியே நடைபாதையில், “பாஜக குண்டர்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுங்கள்” என்ற பதாகையுடன் அமர்ந்திருந்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) தாக்கம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ்குமாரின் ராஜினாமாவை மையமாகக் கொண்டு இந்தப் போராட்டம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிராகக் குரல் எழுப்புவதற்காக அவர் வந்திருந்தார்.

“இந்துத்துவ வலதுசாரி குண்டர்கள் போராட்டங்களைத் தடுப்பதற்காக வந்துள்ளனர். அவர்களுக்கு டெல்லி காவல்துறை வசதிகளை செய்து தருகிறது, இது மட்டுமல்ல, காவல்துறையின் சீருடை அணிந்து கொண்டு, லத்தியை சுழற்றிக் கொண்டு அவர்கள் வலம் வந்ததை காட்சி வழியாக அனைவரும் பார்க்க முடிந்தது.

பயம் போய் கோபம் திரண்டது

அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்துக்கொண்டிருந்த 24 வயது மாணவரான ஏ.ஜே., “இந்த வாரத்தில் என்னை பலமுறை தடுத்து வைத்ததால், எனக்கு இருந்த பயம் நீங்கிவிட்டது. கோபம் மட்டுமே உள்ளது,” என்று கூறினார். “ஞானேஷ் குமாரின் ராஜினாமா மட்டும் போதாது. நாம் இன்னும் கடுமையான கேள்விகளைக் கேட்க வேண்டும். நான் செய்தி அறிக்கைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், இன்று காவல்துறைக்கு எதிராகவும் போராடுகிறோம்.” என்றும் கூறினார்.

வயதானவர்களும் பங்கேற்ற போராட்டம்

டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் மேற்கொண்ட கொடூரமான வன்முறையை அங்கு வந்திருந்த பலர் விவரித்தனர்.

மும்பையிலிருந்து வந்திருந்த 71 வயதான தலீப் என்ற போராட்டக்காரர், “இந்தப் பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்” என்று நேரடியாகக் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள், காவல்துறையினர் தங்களை அடித்ததாகவும், தங்களின் அந்தரங்க உறுப்புகளில் தாக்கியதாகவும், தங்களின் கைபேசிகளைப் பறித்ததாகவும், போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்களையும் காணொளிகளையும் தங்கள் கைபேசிகளிலிருந்து நீக்கியதாகவும் கூறினர். போராட்டக்காரர்கள் முதலில் சாவ்லா காவல் நிலையத்திற்கும், பின்னர் பந்தவாலன் குர்தில் உள்ள ஒரு சமூக மையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு வழக்கறிஞர்களையோ அல்லது மருத்துவ உதவியையோ அவர்கள் பெற முடியாமல் தடுக்கப்பட்டனர். பின்னர் பந்தவாலன் குர்த் சமூக மையத்திற்கு வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் தேடி வந்தனர். ஆனால், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் தங்களின் கடமைகளைச் செய்வதை காவல்துறையால் தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும், பாதுகாப்புப் படையினர் அவர்களை அனுமதிக்கவில்லை.

சித்திரவதையின் உச்சம்!

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 30 வயது வழக்கறிஞர் அர்ஜுன் உன்னிகிருஷ்ணன், கன்னாட் பிளேஸில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். மாலை சுமார் 4 மணியளவில், பெண் காவலர்கள் யாரும் இல்லாத நிலையில், ஆண் காவல்துறை அதிகாரிகள் ஒரு தம்பதியினரை இழுத்துச் செல்வதைக் கண்டதாகக் கூறினார். உன்னிகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களையும் கைது செய்து காவல் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.

டெல்லி நீல வேன் கொடூரம்!

“கன்னாட் பிளேஸில் உள்ள பிந்த் பலூச்சி உணவகத்திற்கு அருகில் இருக்கும் எல்.ஐ.சி கட்டடத்திற்கு நடுவே உள்ள ஒரு தனிமையான சாலைக்கு அவர்கள் எங்களை அழைத்துச் சென்றனர். அந்தச் சாலை முழுவதுமாகத் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. எங்கள் கைபேசிகளை வெளியே எடுத்து உதவி கேட்க அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. சாலையில், 10 பேர் வீதம் ஐந்து வரிசைகளில் எங்களை உட்கார வைத்தனர். அது ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் போல இருந்தது; அவர்கள் எங்களைச் சுட்டுவிடுவார்கள் என்று தோன்றியது. இந்தக் குழுவில், சுமார் 16-17 வயது சிறுவர்களும் இருந்தனர். பின்னர், போராட்டத்தில் வீடியோ பதிவு செய்த அல்லது புகைப்படம் எடுத்த நபர்களை அவர்கள் அடையாளம் கண்டு, அவர்களின் கைப்பேசிகளைப் பறித்தனர். அவர்கள் கைப்பேசி கடவுச்சொற்களைக் கேட்டனர், அதனை சொல்ல மறுத்தவர்களை அடித்து உதைத்தனர்,” என்று உன்னிகிருஷ்ணன் கூறினார்.

பின்னர், “தடுப்புகள் மற்றும் அறைகளுடன் கட்டமைக்கப்பட்ட நீல நிற டெல்லி போலீஸ் வேன் ஒன்றில், கைது செய்யப்பட்ட அனைவரும் வரிசையாகத் தள்ளப்பட்டனர்” என்றும் உன்னிகிருஷ்ணன் கூறினார்.

“காவலர்கள் வரிசையாக நின்று, ஒவ்வொருவராக மாற்றி மாற்றி அடித்தும், அந்தரங்க உறுப்புகளில் கண்டபடி கடுமையாகவும் தாக்கினர். எங்களுடன் இருந்த சிறுவர்களும் இதில் அடங்குவர்” என்று அவர் கூறினார்.

20 வயதுடைய மற்றொரு மாணவர், தானும் இதேபோல் ஜந்தர் மந்தர் அருகே இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, பல டஜன் பேர் இருந்த தடுப்புக் காவல் பேருந்தில் ஏற்றப்பட்டதாகக் கூறினார்.

அந்த மாணவர், அங்கு நின்ற பேருந்துகளைச் சிறைச்சாலை என்று வர்ணித்தார். ஐந்து அதிகாரிகள் ஒவ்வொருவரையும் மாறி மாறி அடித்ததாக அவர் கூறினார். “என் முகத்தில் அறைந்தார்கள், என் தலையில் அடிக்க முயன்றார்கள், என் உடல் முழுவதும் அடி விழுந்தது,” என்று அவர் கூறினார்

நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மட்டுமல்லாமல், காவல்துறை கைது செய்தவர்கள் நடத்தப்பட்ட விதம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த சட்டவிரோதக் காவல் நீடிக்கிறது.

தடுப்புக்காவலுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சூரியன் மறைந்த பிறகும் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டது, சிறார்கள் தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்பட்டது, கைப்பேசிகளைப் பறித்து கொடூரமாகத் தாக்கப்பட்டது போன்ற சட்ட விரோதச் செயல்கள் எந்தத் தடையுமின்றி நடந்தன. உண்மையில் சொல்லப் போனால், சீருடையில் இருந்த கிரிமினல்களாகவே காவல்துறையின் காட்சியளித்தனர்!

வழக்கறிஞர்களும் தப்பவில்லை

வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால், தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் என யாரையும் சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பல வழக்கறிஞர்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மன்றாடியும் அனுமதி மறுக்கப்பட்டது. இது சட்டத்தின் ஆட்சியை மறுக்கும் பாசிச காட்டாட்சியின் வெளிப்பாடாகும்.

பிரதமர் மோடி – அமித்ஷா வழிகாட்டலில், டெல்லி பெருநகரமே காவல் துறை மற்றும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் பறிக்கப்பட்டு, குற்றுயிரும் குலைஉயிருமாய் காட்சியளித்தது. ஆனால் இதற்கு அஞ்சாமல் தடைகளை உடைத்து இளைய தலைமுறை போராடி வருகின்றது. பாசிஸ்ட்டுகள் குப்பைக் கூடையில் வீசப்படுவது நிச்சயம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button