
தலைப்பைக் கண்டு யாரும் கொதிநிலைக்குச் சென்று தாறுமாறாக பதிவு செய்திட வேண்டாம்!
பேசுவதை முழுமையாகக் கேட்டும், எழுதுவதை முழுமையாகப் படித்தும், அதன்பின்னர் தீர்ப்புக் கூறும் நல்லதொரு பழக்கத்தை மேற்கொள்வது பயனளிக்கச் செய்யும்.
அரசுக்கு அதிகாரிகளும், உடன் இருப்பவர்களும் அரிய ஆலோசனைகளை வழங்கத்தான் செய்வார்கள். அதனை மெய்ப்பொருள் கண்டு முடிவெடுத்து, அது மக்களுக்கு பயன்படும் எனில் அரசாணை பிறப்பிக்க வேண்டும். அரசாணை என்பது மிக வலிமையானது. அதனைப் பயன்படுத்தும் முன்பு – ஒரு முறையல்ல; பலமுறை பரிசீலித்து, சரி என்பதனை உறுதி செய்த பின்னர், அரசாணை பிறப்பித்து அதனை உறுதியோடு அமல்படுத்திட அரசு முன்வர வேண்டும். மாறாக, எடுத்தேன்- கவிழ்த்தேன் என செயல்படுவது சிறுபிள்ளைத்தனமானது, கேலிக்கூத்துக்கு ஆளாகிவிடும் என்பதனை அறிய வேண்டும்.
எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சியைக் காட்டிலும், அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கி விடக்கூடாது. அரசுக்கு கட்டுப்பட்ட அதிகார வர்க்கமில்லாமல் போனால் ஆட்சிக்கே ஆபத்து வரும்!
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் – அவருடைய கல்வி நிலை என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால், இவர் யாரைக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நம்பித்தான், அவர்களது ஒத்துழைப்பை பெற்றுத்தான் ஆட்சி நடத்த வேண்டும்.
காமராஜர் பிள்ளைகள் பள்ளிக்கு வராமல் பிற பணிகளுக்கு செல்வதை தவிர்க்க, அவர்களுக்கு மதிய உணவு வழங்குவதன் மூலம் சாத்தியப்படும் என்று விரும்புகின்றார். மதிய உணவு வழங்குவது குறித்து தான் நம்பியுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் இடத்தில் ஆலோசனை கேட்கின்றார் – குறிப்பாக நிதித்துறைச் செயலாளர் கருணையின்றி இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. அதிகாரிகள் என்ன சொன்னார்கள் – உடனே நோட்டையும், பேனாவையும் எடுத்து கூட்டல், பெருக்கல் கணக்குப் போட்டு, இதற்கு இவ்வளவு செலவாகும், அதற்குரிய நிதி கஜானாவில் இல்லை. ஆகவே, இத்திட்டம் சாத்தியமல்ல என கைவிரித்தனர். அதிகாரிகள் சொன்னதை அப்படியே, முழுமையாக – ஐஏஎஸ் படிக்காத முதலமைச்சர் காமராஜர் கேட்கவில்லை.
கல்வித்துறைச் செயலாளர் முற்போக்காளர் என்.டி.சுந்தரவடிவேல் துணை கொண்டு மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி, சாதனை படைத்தார். அதிகார வர்க்கத்தைக் கட்டுப்படுத்தினார் காமராஜர்.
1967 பொதுத்தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற்று அண்ணா முதல்வரானார். ஆட்சிக்குப் புதியவர்கள். வழக்கம்போல் நிதி இல்லை. தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிதி வருவாய்க்கு என்ன செய்யலாம்? ஆலோசனை கேட்டார் அதிகாரிகள் இடத்தில் அண்ணா!
தீர்வைச் சொன்னார்கள்- மதுவிலக்கு அமலைத் தளர்த்தி, சாராயம் விற்றால் நல்ல வருமானம் அரசுக்குக் கிடைக்கும் என்றார்கள். அண்ணா ஏற்க மறுத்தார். மக்களுக்குத் தீமையை விளைவித்து அதன் மூலம் வருவாய் ஈட்ட அனுமதிக்க மாட்டேன் என உறுதி காட்டி அதிகாரிகளின் ஆலோசனையை நிராகரித்தார்.
தற்போது என்னதான் நடக்கிறது?
த.வெ.க. அரசு புதிய அரசு. அரசு பிறப்பிக்கின்ற அரசாணைகள் மிக முக்கியமானவை. அரசாணைகள் பிறப்பிக்க யார் ஆலோசனை வழங்குகிறார்கள் என்று நமக்குத் தெரியாது. அது முதலமைச்சருக்குதான் தெரியும் – அவரது பார்வை இன்றி, ஒப்புதல் இன்றி அரசு ஆணை பிறப்பிக்க இயலாது. அரசாணைகள் பிறப்பிக்கப்படுகின்றன – சில நாட்களில் திரும்பப் பெறப்படுகின்றன. அரசாணைமீது இருந்த நன்மதிப்பு – மதிப்பிழந்து நகைப்பிற்கு உள்ளாகி வருவது கவலை அளிக்கின்றது.
அரசாணைகளும், அரசின் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுவதும் – அதே வேகத்தில் திரும்பப் பெறப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருப்பதன் மூலம், நடைபெற்று வருவது மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் தலைமையிலான ஆட்சியா? அல்லது அதிகார வர்க்கம்தான் கோலோச்சுகிறதா? என ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் எழுப்பும் வினாக்களுக்குத் தீர்வு காண வேண்டும். மாறாக, எதிர் வினையாற்றி அவதூறு பரப்புவதால், ஆளும் கட்சிக்கோ, நம்பி வாக்களித்த மக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படாது. இது மட்டுமல்ல, அதிகார வர்க்கத்தின் கை மென்மேலும் மேலோங்கும் என்பதனை கவனத்தில் கொள்வோராயின் நலம் பயக்கும்.
குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரையிலான இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் குடும்ப நிகழ்வுகள் அனைத்திலும் ஜோசியம் முக்கியம் வகிக்கிறது. பாமரர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள், பல்கலைக்கழகப் பட்டங்களை நிரம்பப் பெற்றவர்கள், பணக்காரர்கள் என எல்லோரும் ஜோசியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்!
ஜோசியம் பார்ப்பது, ஜாதகத்தை நம்புவது, கடவுள் நம்பிக்கை போன்ற பல்வேறு மூடநம்பிக்கை – பழக்க வழக்கங்கள் என நீண்ட நெடுங்காலமாக தொடர்கின்றன. இதனால், எத்தகைய பின்னடைவை நாம் சந்தித்து வருகின்றோம் என்பதை வாழ்க்கை அனுபவங்கள் உணர்த்தும்.
ஒரு தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் நல்ல நேரம் பார்த்துத்தான் வேட்புமனு தாக்கல் மேற்கொள்வார்கள். ஆனால், வெற்றி பெறுவது ஒருவர்தான். மற்றவர்களின் நல்ல நேரம் என்ன ஆனது?
திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு ஜோசியம்மீது முழு நம்பிக்கை இருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம்.
♦ ஜோதிடத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்ற ஒரே காரணத்துக்காக, முதலமைச்சர் தனது அரசியல் ஆலோசகராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டையும், வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி என்பவரையும், முதலமைச்சரின் பயணத்திட்டத்திற்கான ஆலோசகராக தொழிலதிபர் விஷ்ணு ரெட்டியையும் அரசின் சார்பில் நியமிக்கப்பட்டது சரியா என கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், அவை அரசால் திரும்பப் பெறப்படுகிறது – இது தொடக்கம்.
♦ அடுத்து, ஆவடி, திருச்சி, வேலூர், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் பங்களிப்பை மேற்கொள்ள டெண்டர் கோரிய அரசு – கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து திரும்பப் பெற்றது.
♦ திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாசில்தாரின் கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு சுற்றறிக்கை, இடதுசாரி மாணவர் அமைப்புகளில் போராட்டங்களில் மாணவர்கள் பங்கெடுக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கூறிய தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை கம்யூனிஸ்ட்களின் கடும் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டது.
♦ காவிரி நதிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முதலமைச்சர் கர்நாடகா செல்வதாக அறிவித்தது. பின்னர், மூச்சு பேச்சின்றி மவுனமானது.
♦ எதிர்க்கட்சித் தலைவரை போலீஸ் பெரும் பட்டாளத்துடன் சென்னையில் அவர் வீட்டுக்குச் சென்று கைது செய்து – தஞ்சைக்கு அழைத்துச் சென்று பின்னர், கைது செய்யவில்லை, விசாரணைக்காக அழைத்துச் சென்றோம் என கை விரித்தது.
♦ அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி, எம்.சாண்ட் போன்றவை கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்குத் தடை விதித்துப் போடப்பட்ட உத்தரவு பின் நீர்த்துப்போனது.
♦ என்ரிக்கா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு தடைவிதித்து அதற்கான சுற்றறிக்கையை டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் நந்தகுமார் ஐஏஎஸ் அனைத்து டாஸ்மாக் மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பினார் – என்ன நடந்தது என தெரியவில்லை – 24 மணி நேரத்தில் திரும்பப் பெற்றது.
♦ திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகே உள்ள மேல்மா கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைத்திட விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் போராடினர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிலங்களை அரசு கையகப்படுத்தாது என்று உறுதியளித்தார். ஆனால், உறுதிமொழிக்கு மாறாக, மேல்மா கிராமத்தில் 54 ஏக்கரைக் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. எதிர்ப்பு வலுக்கவே மீண்டும் அரசாணை திரும்பப் பெறப்பட்டது.
♦ சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சில மண்டலங்களில் சொத்து வரியை மூன்று மடங்கு உயர்த்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எதிர்ப்பு பீறிட்டுக் கிளம்பத் திரும்பப் பெறப்பட்டது.
♦ காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான அடிப்படை வசதிகளை தலைமை ஆசிரியர்களே தங்கள் சொந்தப் பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும் என அனுப்பப்பட்ட சுற்றறிக்கை – ஆசிரியர்களின் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டது.
♦ தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என அமைச்சர் கூறுகின்றார். ஆனால், உண்மை நிலை அடிக்கடி மின்வெட்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! தொழில் நிறுவனங்கள் இரவு குறிப்பிட்ட நேரங்களுக்கு ஜெனரேட்டரை பயன்படுத்த வேண்டும் என்று தற்போது அறிவித்துள்ளனர் மின்வெட்டு இல்லையெனில் இத்தகைய அரசின் அறிவிப்பு ஏன்?
மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்க குறைந்தபட்சத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்ற இடதுசாரிகளின் முன்மொழிவை காங்கிரஸ் அரசு ஏற்றதன் அடிப்படையில் இரண்டு முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
ஒன்று மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம்.
மற்றொன்று தகவல் உரிமை பெறும் சட்டம். இதன்மூலம் வெளிப்படைத் தன்மை நிலவ வாய்ப்பளித்தது.
♦ வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதாக நாளொரு தினமும் பேசி வரும் முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை என்று மறுத்து அரசாணை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு. கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவே, அரசு தனது அரசாணையை சத்தம் இல்லாமல் திரும்பப் பெற்றது.
அரசால் அரசாணை பிறப்பிக்கப்படுவதும் – பிறப்பித்த சில நாட்களுக்குள் திரும்பப் பெறப்படுவதும் வரிசை கட்டி நிற்கிறதே!
அரசாணைகள், சுற்றறிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கே வராமல் அனுப்பப்படுகின்றனவா? அவ்வாறு எனில் தலை ஆடாமல், வால் ஆடினால் – வாலை ஒட்ட நறுக்க வேண்டியவர் ஏன் நறுக்கவில்லை? நறுக்க வேண்டாம் – ரொம்ப வலிக்கும் – கொஞ்சம் கிள்ளியாவது பார்க்கலாமே! வெட்டவும் முடியாமல் – கிள்ளவும் முடியாமல் திரும்ப, திரும்ப, திரும்பப் பெற்றுக் கொண்டே போனால்…?
நாங்களும் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டியதுதான் என்று கொஞ்சம் யோசிக்க வேண்டிவரும் அல்லவா?
யோசியுங்கள்!