தனியார் பல்கலைக் கழகங்கள் திருத்த மசோதா உயர்கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள தனியார் பல்கலைக் கழகங்கள் திருத்த மசோதா, உயர்கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சி என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 10.09.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிலம் மற்றும் வைப்புநிதி தேவைகளைக் குறைக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது உயர் கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியாகும். தனியார் பல்கலைக் கழகங்களையும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும்.
ஏற்கனவே, தவெக அரசு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia – UWA) சென்னையில் தனது புதிய சர்வதேசக் கிளை வளாகத்தை அமைக்க அனுமதி அளித்துள்ளது.
தனியார் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தப் படுவதில்லை. எனவே இது சமூக நீதிக்கும், அடித்தட்டு சமூக மாணவர்களுக்கும் எதிராக அமையும்.
தனியார் பல்கலைக் கழகங்களைத் தொடங்க, குறைந்தது 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் வேண்டும் என்பதை இந்த மசோதா குறைத்துள்ளது. அதாவது, சென்னை பெருநகரப் பகுதிக்கு 12 ஏக்கரும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 18 ஏக்கரும், இதரப் பகுதிகளுக்கு 25 ஏக்கரும் இருந்தால் போதும் என நிலத் தேவை குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கான நிரந்தர அறக்கட்டளை நிதித் (Permanent Endowment Fund) தேவையும் குறைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நமது நாட்டில் உயர்கல்வி பயில தகுதியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நமது வேலை வாய்ப்புகள், அறிவியல் தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி, பல்துறை உழைப்பு சக்திகளின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசே போதிய உயர் கல்வி நிறுவனங்களையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் துவக்குவது தான் சரியாக இருக்கும்.
அதை விடுத்து தனியார் பல்கலைக்கழகங்களையும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் அதிக அளவில் தொடங்குவது கல்வியை தனியார் மயமாக்கி விடும், வணிக மயமாக்கி விடும், கார்ப்பரேட் மயமாக்கி விடும். ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக கல்வியை காவி மயமாக்கிவிடும்.
இத்தகையப் போக்கு, அடித்தட்டு மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது. எனவே, மாணவர்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.