கட்டுரைகள்

தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட விண்வெளித்துறை

வ.மணிமாறன்

இந்திய விண்வெளித்துறை, இஸ்ரோ, அவற்றின் கட்டமைப்பு வசதிகள், வளர்ந்த நுட்பங்கள், அதன் அறிவாற்றல் என அனைத்தும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், விளைவுகள் பற்றிப் பார்க்கலாம்.

இந்தியாவின் விண்வெளித் திட்டம் என்பது ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் பற்றியது மட்டுமல்ல. அரசின் நிதி, அறிவியலாளர்களின் உழைப்பு, ஆய்வகங்கள், சோதனை மையங்கள், ஏவுதளங்கள் உட்பட பொதுச் சொத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அறிவியல்–தொழில்நுட்பக் கட்டமைப்பாகும். இதன் மைய நிறுவனமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation – ISRO) இருந்து வருகிறது.

இஸ்ரோ தொடங்கப்பட்டு ஆறே ஆண்டுகளில் 1975-ல், இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஆரியபட்டா’ விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகு நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-1, சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகிய விண்கலங்களையும், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தையும் அனுப்பினர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தயார் நிலையில் உள்ளது. பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ஏவூர்திகள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பினர்.

இந்நிலையில், “விண்வெளித்துறை சீர்திருத்தம்” என்ற அலங்காரப் பெயரில் பெரும் மாற்றத்தை 2020ல் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்தது. இதன் மூலம் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, இஸ்ரோவின் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளைப் பயன்படுத்த தனியாருக்கு வாய்ப்பு, அரசு நிதி மற்றும் முதலீட்டு ஆதரவு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெறும் வகையில் தளர்வுகள், செயற்கைக்கோள் தரவு மற்றும் விண்வெளிச் சேவைகளை வணிகமாக்கி லாபமீட்டுவதற்கான வாய்ப்புகள் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டன.

ஏறத்தாழ 56 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுநிதியில் உருவாக்கப்பட்ட இந்திய விண்வெளி வளங்களை தனியார் வணிகத்திற்குத் திறந்து விடுவது சரியானதா? அதன் பலன் யாருக்குச் செல்கிறது? என்ற அடிப்படையான கேள்வியை இந்த “விண்வெளித்துறை சீர்திருத்தம்” எழுப்புகிறது.

மேலும்“விண்வெளித் துறை சீர்திருத்தம்” வழங்கல் சார்ந்ததாக (Supply Based) இல்லாமல், தேவை சார்ந்ததாக (Demand Based) விண்வெளித் துறை மாற வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரோவே அனைத்து செயல்பாட்டு விண்வெளி கட்டமைப்புகளை உருவாக்கி நடத்துவதற்குப் பதிலாக, சந்தையின் தேவைக்கேற்ப தொழில்துறையை ஈடுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, விண்வெளித்துறையை தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதாகும். விண்வெளித் துறையில் — ராக்கெட், செயற்கைக்கோள், அவற்றை ஏவுதல், தரவு, விண்வெளிச் சேவை உள்ளிட்டவற்றில் — தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதாகும்.

இதற்காக இஸ்ரோவுடன் இரண்டு முக்கிய நிறுவனங்களை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL — NewSpace India Limited); இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe — Indian National Space Promotion and Authorisation Centre). இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமானவை. விண்வெளித் துறையின் கீழ் செயல்படக் கூடியவை.

நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம் இஸ்ரோவின் வணிகப் பிரிவு போன்று செயல்படும். இதன் பணிகளில், பி.எஸ்.எல்.வி (PSLV), எஸ்.எஸ்.எல்.வி (SSLV) போன்ற ஏவுகணைகளின் உற்பத்தி, அவற்றை விண்வெளிக்கு ஏவுதல், செயற்கைக்கோள் மற்றும் விண்வெளிச் சேவைகள், இதுதொடர்பான இஸ்ரோவின் தொழில்நுட்ப வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றிக் கொடுப்பதும் அடங்கும்.

விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) என்பது தனியார் நிறுவனங்களுக்கான ஒற்றைச் சாளர அமைப்பாக செயல்படும். தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல், அவர்களின் விண்வெளிச் செயல்பாடுகளை மேற்பார்வையிடுதல், இஸ்ரோ மற்றும் விண்வெளித் துறையின் வளங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருதல், புதிய விண்வெளி உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுத்தல் ஆகியவை இதன் பணிகளாகும்.

சுருக்கமாகச் சொன்னால், விண்வெளித்துறை சீர்திருத்தம், கட்டமைப்பு மாற்றம், சந்தையின் தேவைக்குத் திறந்துவிடுதல் என்று சொல்லப்படுவ தெல்லாம், பொதுச் சொத்தில் உருவான விண்வெளித்துறையின் வளங்களையும், நுட்பங்களையும் தனியாருக்குத் தாரைவார்ப்பதாகும். இது எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1.இஸ்ரோவின் உள்கட்டமைப்பு

இஸ்ரோவின் மிகப்பெரிய சொத்து அதன் ராக்கெட்டுகள் மட்டுமல்ல. அரசின் நிதியில் உருவாக்கப்பட்ட ஆய்வகங்கள், சோதனை மையங்கள் ஆகும். அதாவது, உந்துவிசை வசதிகள் (propulsion facilities), செயற்கைக்கோள் ஆய்வு வசதிகள் (satellite testing facilities), ஏவுதளக் கட்டமைப்பு வசதிகள் (launch infrastructure), கண்காணிப்பு வசதிகள் (tracking facilities) போன்ற தேர்ந்த நுட்பம் கொண்ட கட்டமைப்புகள் நாட்டின் மிகப்பெரிய சொத்துகளாக, வளங்களாக உள்ளன. பெரும் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்ரோவின் இந்த வளங்கள் அனைத்தையும் தனியார் பயன்பாட்டுக்கு “விண்வெளி சீர்திருத்தம்” திறந்துவிட்டுள்ளது.

2. தனியாருக்குச் செல்லும் இஸ்ரோவில் நுட்பங்கள்

“இந்திய சிறிய செயற்கைக்கோள்-1” (IMS-1) இஸ்ரோவின் மேம்பட்ட நுட்பங்களில் ஒன்றாகும். இந்த நுட்பத்தை ‘ஆல்ஃபா டிசைன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ (ADTL) மற்றும் ‘துருவா ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு என்.எஸ்.ஐ.எல் நிறுவனத்தின் வழியாக ஒன்றிய பாஜக அரசு கொடுத்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டது தான் என்.எஸ்.ஐ.எல் எனப்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்.

3. தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு அரசு நிதி

தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு முதலீட்டு உதவி செய்வதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2024ல் ஒன்றிய பாஜக அரசு தொடங்கியதுதான் விண்வெளித்துறைக்கான வென்சர் கேபிடல் ஃபண்ட் ஆகும். இதன் மூலம் அரசு நேரடியாக நிதி அளிக்கிறது. 500 கோடி ரூபாயில் நுட்பங்களைத் தமக்குரியதாக்குவதற்கான நிதியம் (Technology Adoption Fund) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒன்றிய பாஜக அரசு வழங்கும் நிதி, மானியம், வசதி மற்றும் நுட்பங்களைப் பெற்றுக்கொள்ளும் தனியார் விண்வெளி நிறுவனங்களால் சமூகத்துக்கும் மக்களுக்கும் என்ன பயன்?

4. வெளிநாட்டு முதலீட்டுக்கு கதவு திறப்பு

விண்வெளித்துறையில் 100 விழுக்காடு அயலக நேரடி முதலீடுக்கு (FDI) 2024 ஆம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. செயற்கைக்கோள், ஏவூர்தி உட்பட அனைத்துப் பிரிவுக்கும் அயலக நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் உலகளாவிய முதலீடுகளைப் பெறுவது எளிதாகின்றன. விண்வெளித் துறையில் உலகளாவிய முதலீடுகளை அனுமதிப்பது, தொழில்நுட்பக் கட்டுப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, உள்நாட்டுத் தரவுகளின் கட்டுப்பாடு போன்றவை கேள்விக்குரியதாகின்றன.

5. செயற்கைக்கோள் ஏவுவதற்கான கட்டமைப்பு

செயற்கைக்கோள், ராக்கெட் போன்றவற்றை ஏவுவது, புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது இஸ்ரோவின் பொறுப்பாக இருந்து வருகிறது. இப்பணிகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உதிரிப் பாக உற்பத்தியாளர்களாக இருந்த நிறுவனங்கள், விண்வெளி தொழில் நிறுவனங்களாக மாறி இருக்கின்றன. இதற்கான முயற்சிகளில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

6. வருவாய் ஈட்டித்தரும் செயற்கைக்கோள் தரவுகள்

விண்வெளி சார்ந்த தொழிலுக்கு அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்), புவிவட்டப் பாதை வளங்கள் (Orbital Resources), மற்றும் செயற்கைக்கோள் தரவுகள் (Satellite Data) முக்கியமானவையாகும்.

தொலை உணர்வுத் தரவுகள் (Remote-Sensing Data) மிகப்பெரிய பொருளாதார வளமாகவும் வணிகமாகவும் மாறியுள்ளது. அதாவது தொலை உணர்வுத் தரவு என்பது, பூமியின் மேற்பரப்பு, வளிமண்டலம், பெருங்கடல்கள் குறித்து, எந்தவொரு நேரடிப் பொருள் வழித் தொடர்புமின்றி செயற்கைக்கோள்கள், வானூர்திகள் அல்லது ட்ரோன்கள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் ஆகும்.

இந்தத் தரவுகள், விவசாயம், நீர்வளம், கனிமம், நகரமைப்பு, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற பல துறைகளில் பயன்படுகிறது. இந்தத் தரவுகளை வணிகமாக்கி தனியார் நிறுவனங்கள் பெரும் லாபமீட்டுவதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

“இஸ்ரோவை தனியாரிடம் விற்கவில்லை. இஸ்ரோவை மையமாகக் கொண்ட அரசு விண்வெளிக் கட்டமைப்பு – PPP (Public Private Partnership) மாடலில் மாற்றி அமைத்திருக்கிறோம்” என்று ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. அரசு–தனியார் கூட்டிணைந்த வணிக விண்வெளி அமைப்பாக மாற்றி இருப்பதாகக் கூறுகிறது.

“நீ அரிசி கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன், இருவரும் ஊதி ஊதித் தின்போம்” என்பதுதான் இதுவாகும். அரசின் முதலீட்டு உதவி, இஸ்ரோவின் நுட்பங்கள், இஸ்ரோவின் ஏவுதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் தரப்படும். இவற்றைக் கொண்டு பெரும் லாபம் ஈட்டிக்கொள் என்பதுதான் இந்த PPP மாடல். (அரசிடம் பெறும் இந்த முதலீடும் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்பது வேறு கதை)

♦ பொது நிதியில் உருவான தொழில் நுட்பத்தை யார் பயன்படுத்துகிறார்கள்? அதற்கான கட்டணம் மற்றும் ராயல்டி எவ்வளவு? அது நியாயமானதா?

♦ அரசு வழங்கும் நிதி ஆதரவைப் பெற்ற நிறுவனங்கள் இந்த சமூகத்திற்கு திருப்பிக் கொடுப்பது என்ன?

♦ செயற்கைக்கோள் தரவு போன்ற பொதுவளங்களின் பயன்பாட்டில் பொதுநலன் முன்னுரிமை பெறுமா?

♦ இஸ்ரோவின் நீண்டகால தொழில்நுட்பத் திறன் பாதுகாக்கப்படுகிறதா?

♦ நாட்டின் நலன் சார்ந்த முக்கியமான நுட்பங்கள் மீதான அரசின் கட்டுப்பாடு தொடர்கிறதா?

♦ வெளிநாட்டு முதலீட்டை 100 விழுக்காடு அனுமதிக்கப்படும் போது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்துகளை ஒன்றிய அரசு எவ்வாறு கட்டுப்படுத்தும்?

♦ ராணுவம், படைபலம், நாட்டின் வளங்கள் உட்பட அனைத்துத் தரவுகளும் – எந்த ரகசியமும் இன்றி – தனியாரிடம் செல்லும்போது நாட்டின் பாதுகாப்புக்கு, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் தடுக்க அரசால் முடியுமா?

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் “இல்லை” என்பதுதான். இதனால் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள். பெரும் அச்சம் ஏற்படும்.

இவற்றுடன், பொது வளத்தில் உருவான அறிவும் தொழில்நுட்பமும், தனியார் லாபத்தையும் தாண்டி, இந்திய மக்களின் அறிவியல், பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் எப்படிப் பயன்படுகிறது? என்ன கிடைக்கிறது? என்பதில்தான் அதன் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. இதற்கு மாறாக, எத்தனை தனியார் நிறுவனங்கள் உருவாகியிருக்கின்றன? அவை லாபம் ஈட்டியுள்ளனவா? என்று பார்ப்பது பாசிச முதலாளித்துவக் கும்பலின் இயல்பு. அதைத்தான் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button