
கடந்த 2014-க்குப் பிறகு இந்தியா தனது பழைய யுபிஏ அரசின் வளர்ச்சிப் பாதையிலேயே தொடர்ந்திருந்தால் கூட, 2023-ல் தனிநபர் வருமானம் தற்போது உள்ளதைவிட சுமார் 1,000 டாலர்கள் அதாவது சுமார் ரூ.1 லட்சம் அதிகமாக இருந்திருக்கும்.
ஆனால் மோடி அரசு நாட்டு மக்கள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மாறாக தனது அணுக்க நண்பர்கள் அதானி, அம்பானி, மற்றும் பெரும் நிறுவனங்களை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் அவர்கள் சங்க பரிவார குடும்பத்தை சார்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு அதீத பொருளாதார வளர்ச்சியை பரிசாக அளித்துள்ளது.
இந்தியா, உலக வங்கியின் உயர் – நடுத்தர வருமான வரம்பான (ஆண்டுக்கு ஒரு நபருக்கு 4,466 டாலர்) அளவிற்குக் கீழே உள்ள வருமான பிரிவில் தான் இருந்திருக்கும். ஆனால், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இந்த வருமானம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டால் கூட, வருமான அதிகரிப்பு மாதத்திற்குச் சுமார் ரூ. 27,000 ஆக இருந்திருக்கும். அது மேலும், ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஒரு நபருக்கு 1,000 டாலர் என்பது, ஓர் ஆண்டில் சுமார் 1.4 டிரில்லியன் டாலர் கூடுதல் பொருளாதார வளர்ச்சிக்கு சமமாகும்.
வராக் கடன் தள்ளுபடி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) பதிலின்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகளில் ரூ. 6.35 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களைத் தராக் கடன்களாக இருப்பதால் தள்ளுபடி செய்துள்ளன. மேலும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் 9.7% அதாவது ரூ. 62,220 கோடியை மட்டுமே வசூலித்துள்ளன. இந்தத் தகவல் அறியும் உரிமை பதிலில், இந்திய ரிசர்வ் வங்கி 2014-க்கு முந்தைய காலகட்டத்திற்கான தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் வசூல் குறித்த தரவுகளை வழங்கவில்லை, ஆனால் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன்களின் விவரங்களை வழங்கியுள்ளது.
2004 முதல் 2019 வரை, அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள் தங்கள் கணக்குகளிலிருந்து மொத்தம் ரூ. 8.41 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. இதில் 75% – அதாவது ரூ. 6.35 லட்சம் கோடி, 2014 மற்றும் 2019-க்கு இடைப்பட்ட முந்தைய 5 ஆண்டுகளில் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை வைத்து பார்த்தால் மோடியின் ஆட்சியில்தான் இது மிக மோசமாக மாறி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தள்ளுபடி மோசடி
வங்கிகள் தங்கள் கணக்குகளைச் சீர்படுத்துவதற்கும் வரி செயல்திறனுக்காகவும் வாராக் கடன்களைத் தங்கள் இருப்பு நிலைக் குறிப்புகளிலிருந்து தள்ளுபடி செய்கின்றன (நீக்குகின்றன). பின்னர், அந்தக் கடன்களிலிருந்து மீட்கப்படும் எந்தவொரு தொகையும் லாபமாகச் சேர்க்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய தரவுகளின்படி, வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட (நீக்கப்பட்ட) கடன்களில் கிட்டத்தட்ட 90% ஒருபோதும் மீட்கப்படுவதில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான கே.சி. சக்ரவர்த்தியும், இந்தத் தள்ளுபடிகளை ஒரு மோசடி என்று குறிப்பிட்டுள்ளார்; இதில் தள்ளுபடி செய்யப்படும் பெரும்பாலானக் கடன்கள் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெரிய கடன்களாகும்.
தொழில்நுட்ப ரீதியாக செயல்படாத சொத்துக்கள் (NPAs) என்று அழைக்கப்படும் இந்தக் வாராக் கடன்களே, கடந்த சுமார் 5 ஆண்டுகளாக வங்கி நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாக இருந்து வருகின்றன. வாராக் கடன்கள் குறைந்து விட்டதாகவும், வங்கிகள் அவற்றை வசூலிப்பதில் சிறப்பாகச் செயல்படுவதாகவும் ஆளும் அரசாங்கம் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறது. அவர்கள் கூறும் இந்த வாராக் கடன்களின் குறைப்பு உண்மையில் பெரியதல்ல, மேலும் இது நிச்சயமாக கடன் வசூலால் ஏற்பட்டதல்ல. சாதாரண மக்கள் குறைந்த வங்கி இருப்புக்காக தண்டத்தொகை வசூலிக்கும் அரசின் கொள்கை வராக் கடன்களில் பாராமுகமாகவே இருக்கிறது. மொத்த வாராக் கடன்கள் 2018-ல் 11.5%-லிருந்து 2019-ல் 9.3%-ஆகக் குறைந்தன, ஆனால் இந்த குறைவுக்கு காரணம் வங்கிகள் செய்த வசூலைவிட, வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்ததாலேயே அதிகம் நிகழ்ந்துள்ளது என்பதே உண்மை.
பொய் பேசும் நிதி அமைச்சர்
வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் 50 நபர்களின் வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டபோதும், மக்கள் அது குறித்து கேள்விகளை எழுப்பியபோதும் நிதி அமைச்சர் அதற்கு உகந்த பதிலை அளிக்கவில்லை. சுவையான செய்தி என்னவென்றால், வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களிலிருந்து வங்கிகள் வசூலித்த தொகை குறித்து மீண்டும் எந்தக் குறிப்பும் இல்லை.
“தள்ளுபடி என்பது தள்ளுபடி அல்ல, தள்ளுபடிகளால் கடனாளிகள் பயனடைவதில்லை, வங்கிகள் அந்தக் கடன்களைத் தொடர்ந்து வசூலிக்கின்றன” என்ற அரசின் கூற்றுகள் அப்பட்டமான பொய் என்பது உறுதியாகிறது. பெருமளவிலான தள்ளுபடிகளும் மிகக் குறைவான வசூலும், தங்கள் நிதிநிலையைச் சீர்செய்யும் பெயரில் வங்கிகள் பெருநிறுவனக் கடன்களைத் தள்ளுபடிகள் மூலம் தள்ளுபடி செய்து வருவதை தெளிவாக காட்டுகின்றன.
சுபாஷ் சந்திரா, சபாஷ் சந்திரா!
இந்தியாவில் முதன்முதலில் தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையான (Zee TV) ஜீ டிவி நிறுவனத்தை 1992-ல் தொடங்கியவர்.
தனிநபர் கடன் உத்தரவாத வழக்கில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) சுமார் ரூ.22,006 கோடி அளவிலான அவரது கடன் கோரிக்கைகளுக்கு ரூ.6.5 கோடி மட்டும் செலுத்த அனுமதிக்கும் தீர்ப்பை வழங்கி நாட்டை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 99.97% கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, வெறும் 0.03% மட்டுமே செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தான் ஊரான் வீட்டு நெய்யில் பெரும் நிறுவனங்கள் இனிப்பு செய்து சாப்பிட்டுக் கொள்வார்கள் என்பதா?
இதில் எல்.ஐ.சி. கொடுத்த கடன் ரூ.1,322 கோடி ஆகும். இதில் வெறும் 38லட்சத்தை கட்டிவிட்டு பெரும் ஏப்பம் விட்டுள்ளார். ஏற்கனவே ஓ.என்.ஜி.சி. 651 கோடி ரூபாயை 20 ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்களுக்கு அளித்ததையும், முன்னாள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மகள் படிப்புக்கான செலவு, விமான கட்டணம் உட்பட அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்களின் நிதியிலிருந்து செலவு செய்யப்பட்ட தகவல்களும் வெளியாகி அதிர்ச்சி அளித்த நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் வங்கிகள் சங்கிகளுக்கு பணத் தீனி போடும் இடங்களாக மாற்றப்பட்டு விட்டது என்பதையே இது தெளிவாக காட்டுகிறது.
75 வயதில் புதிய பணி
விவசாயக் கடன்கள், கல்விக் கடன்கள் வாங்கியவர்களுக்கு வங்கிகளின் வசூலிப்பு முறை, நாகரிகமற்ற வேறு முறையாகவும், அதுவே இந்த பெரும் நிறுவனங்கள் என்றால் போட்டி போட்டு தள்ளுபடி செய்வது மோடி அரசின் சாதனையா?
எஸ்செல் குழுமத்தின் கடன்களை அடைக்க தனது பெரும்பாலான சொத்துக்களை விற்றுவிட்டதாகவும், சுவிட்சர்லாந்தில் உள்ள நண்பர்களுடன் இணைந்து புதிய பணியில் பணியாற்றப் போவதாகவும் அவர் தனது 75 வது வயதில் இப்போது அறிவித்துள்ளார். கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்றான் கம்பன் ஆனால் இவர்களோ கடன் பட்டால் குதூகலிக்கும் மனநிலையில் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விடுகிறது.
2016-ல் ஹரியானாவில் இருந்து பாஜக கட்சியின் ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயல்பட்டு அதன் தலைவர்களுக்கு மிக நெருக்கமாக அறியப்பட்டவர். பல்வேறு தொழில்களை நடத்திய சுபாஷ் சந்திரா, கடந்த சில ஆண்டுகளாகவே தொழில் துறையில் பின்னடைவுகளை சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையாவின் கேள்வி?
6203 கோடி கடனுக்கு ஈடாக என்னிடம் ரூ.14,100 கோடி வசூலித்ததாக வங்கிகளும் அரசும் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் பல கோடி கடன் பெற்ற பலர் சிறிய அளவு கட்டிவிட்டு கடனிலிருந்து தப்பித்து விடுகின்றனர். இதுதான் இந்திய கடன் தீர்வு நீதியா? என கேட்டுள்ளார் விஜய் மல்லையா இந்த கடன் தள்ளுபடியில் பாதிப்படைந்துள்ள தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி இந்த தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துவிட்டது.
தொடரும் சலுகைகள்
தொலைபேசிக் கட்டணங்களில் பெரும் கொள்ளை லாபம் அடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ரூ. 11,000 கோடி வருமான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பரோடா வங்கி (Bank of Baroda) கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 35,715 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் இது குறித்து, எவருடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது? என்ற விவரங்களைக் கூட வெளியிட வங்கி மறுத்துவிட்டது ஏனெனில், திருட்டு அவ்வளவு இராணுவ ரகசியம் போன்றது போலும்!
இதே வங்கி, துபாய் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் கணக்குகளைச் முறையாகச் சரிபார்க்காமல் கடன் வழங்கியநிலையில், அந்த நிறுவனம் நொடித்துப் போனதால் தனது தவறுக்காக ரூ. 5,700 கோடியை இழந்துள்ளது.
சாதாரண மக்களிடம் கர்ணக் கொடூரமாக நடந்து கொண்டு சாம, தான, பேத, தண்ட முறையில் 74% கடன் திரும்ப வசூல் செய்யப்படுகிறது. ஆனால், பெரும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து வெறும் 15% கடன் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இது தற்போது 9 சதவீதமாக குறைந்து விட்டது. அதுவும் கெஞ்சி தான் வசூல் செய்யப்படுகிறது. இந்திய வங்கிகளும், நிதி நிறுவனங்களும், சட்டங்களும் தனது பாய்ந்தோடும் நிதியை எந்த அளவுக்குக் கார்ப்பரேட்டுகளின் வயல்களுக்கு மட்டுமே பாய்ச்சி செழிக்க வைக்கின்றன என்பதை இதன் மூலம் அறிய முடியும்.