காடுகள், மலைகளை சூறையாடியது கார்ப்பரேட்டுகளே! பழங்குடி மக்கள் அல்ல!
மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பதிலடி

நாட்டின் 20, 30 ஆண்டு கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காடுகளை, மலைகளை, இயற்கையை சூறையாடி இருக்கின்றன. பழங்குடி மக்கள் அல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் ஆகஸ்ட் 22 அன்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அவை வருமாறு:
காடு, காடு சார்ந்து, மலை, மலை சார்ந்து வாழ்கிற தொல்குடி மக்கள், அலைகுடி மக்கள், பழங்குடியினர்தான் நாகரிகத்தின் தோற்றுவாயே. ஆனால், அவர்களின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. வனத்திலிருந்து பழங்குடிகளை வெளியேற்ற நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் அண்மைய உத்தரவு மேகமலை பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிராக இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் குரல் எழுப்புகிறோம்.
வன உரிமைச்சட்டப்படி வன உரிமைகளை அங்கீகரிக்கும் பணிகள் முடியும் வரை வனத்திலிருந்து யாரையும் வெளியேற்ற மாட்டோம் என்கிற நிலையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம்- நிறைவான நம்பிக்கையே நீதிமன்றங்கள்தான். எளிய மக்கள், உழைக்கும் மக்கள், மலைமக்கள் நலம் சார்ந்த தீர்ப்பாக அது இருக்க வேண்டும்.
நீதிமன்றங்கள், நாடாளுமன்றங்கள் மக்களுக்கானதே. மக்கள்தான் எஜமானர்கள். அவர்களை இன்னலுக்கு உள்ளாக்கக் கூடாது. பரிதவிக்க விடக்கூடாது. இதுபோன்ற வழிகாட்டுதல் ஏற்புடையதல்ல.
பல்லாண்டுகள் காடு, காடு சார்ந்து, மலை, மலை சார்ந்து பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களால் வனவிலங்குகள் பாதுகாக்கப்படுகிறது. வனம் பாதுகாக்கப்படுகிறது.
20, 30 ஆண்டு கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால் நாடுகடந்த நிறுவனங்கள்தான் காடுகளை, மலைகளை, இயற்கையை சூறையாடி இருக்கின்றன. பழங்குடிகள் அல்ல, தொல்குடிகள் அல்ல. அந்த எளிய மக்கள் அல்ல. ஒவ்வொரு வன விலங்கின் உயிரும் முக்கியம். அதைவிட முக்கியம் மனித உயிர்.
எனவே, இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அடுத்தடுத்த நீதிமன்ற முறையீடுகளுக்கு, மேற்படியான நடவடிக்கைகளுக்கு நகர வேண்டும். எப்போதுமே அரசு பழங்குடிகள் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில், கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் பெறுகிற சட்டமன்றங்களில் பழங்குடி மக்களின் நலன் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம், போராடியிருக்கிறோம். ஊட்டச்சத்துக் குறைவால், ரத்த சோகையால் பெருமளவு பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கர்நாடக அரசு உணவு தானியங்கள், முட்டை, நெய், பருப்புகள், சமையல் எண்ணெய் – இதுபோன்ற சத்துணவுத் தொகுப்புகளை வழங்கி அவர்கள் உடல்நலத்தைப் பேணுகிறது. தமிழ்நாடு அரசும் இதுபோன்றதொரு திட்டத்தை தமிழ்நாட்டுப் பழங்குடியினருக்குக் கொண்டு வரவேண்டும்.
மேகமலைப் பகுதியில் மக்களை அரசு வெளியேற்றக் கூடாது. மக்கள் மனம் உடைந்துவிடக் கூடாது. அரசியல் கட்சிகள், நல்லறிஞர்கள், தமிழ்நாட்டு மக்கள் மலை மக்களோடு இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் அவர்களோடு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, அவர்களுக்கு தமிழ்நாடே உறுதுணையாக இருக்கும்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள்
தமிழ்நாடு முழுவதுமிருந்து தூய்மைப் பணியாளர்கள் உட்பட 12 துறைகளைச் சார்ந்தவர்கள் மணப்பாறையில் 21.8.2026 அன்று பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகள் – பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும், மேலதிகாரிகள் அவர்களை வேலைவாங்கும் முறை ஏற்புடையதல்ல. ஒருமையில் பேசுவது, கண்ணியமற்ற வார்த்தைகளைப் பேசுவது, மிரட்டுவது ஏற்புடையதல்ல.
கொரோனா காலத்தில் அரசு மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள்தான் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றினார்கள். இராணுவம், காவல்துறை பணியாற்றுவது வேறு. அவர்களுக்கு அந்தப் பயிற்சி இருக்கிறது. எல்லாவிதமான திறன் வளர்க்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கை உத்தரவாதம் இருக்கிறது, அவர்கள் அப்பணியில் ஈடுபடுவது மிக இயல்பு. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோய்த் தொற்று பாதித்தோரை அரசு மருத்துவர்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாத்தார்கள். யாரையும்விட தூய்மைப் பணியாளர்கள்தான் அந்த காலக்கட்டத்தில் களப்பணி ஆற்றினார்கள்.
எல்லோருமே அஞ்சி நடுங்கியபோது, அந்த ஏழைகள்தான் கொரோனா காலத்திலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள். ஊரகப் பணிகளில் ஈடுபட்டார்கள். அவர்களின் கோரிக்கை மிக மிக எளிதானது. 5ஆயிரம், 6ஆயிரம் ரூபாய் என்றால், அதில் கூடுதல் ஊதியம் கேட்கிறார்கள். பணி நிரந்தரம் கேட்கிறார்கள். அதிகாரிகள் தங்களை மிரட்டுவது கூடாது என்கிறார்கள். இஎஸ்ஐ, பி.எஃப் போன்ற சட்டப்படியான உரிமைகளை அவர்கள் கோருகிறார்கள்.
தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் ஆதரவு தருகிறபோதுகூட நிபந்தனையாகச் சொன்னது, மதச்சார்பின்மை பேணப்பட வேண்டும். கடைக்கோடி மக்கள், கூலித் தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு தொழில் செய்கிற எளிய மக்கள் நலனில் அக்கறையோடு இருக்க வேண்டும். அவர்கள் நலன்சார்ந்த ஆட்சி நடத்த வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தோம். இதனை தமிழ்நாடு அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த எளிய மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தொடர்புடைய அமைச்சர் என்.ஆனந்த் அவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வாக்கு கொடுத்திருக்கிறார். அந்தப்போராட்டத்தைத் தலைமைதாங்கிய கிருஷ்ணசாமி முன்னிலையிலேயே வாக்குறுதியை அவர் அளித்திருக்கிறார். எனவே, முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மதச் சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டும்
தமிழ்நாடு அமைச்சர்கள் மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியோடு கடைப்பிடிக்க வேண்டும். அவரவர் மதம், அவரவர் பின்பற்றுவது- அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், நாடு மதச்சார்பற்ற நாடு. நாட்டுக்கென்று மதமில்லை. அரசுக்கென்று மதமில்லை. குடிமக்களுக்கு இருக்கிறது. அமைச்சர்களுக்கோ, நீதிபதிகளுக்கோ, உயர் அதிகாரிகளுக்கோ, பெரும்பெரும் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கோ, தனிப்பட்ட முறையில் மதங்களை அவர்கள் பின்பற்றலாம். சட்டம் அத்தகைய சுதந்திர உரிமைகளை வழங்குகிறது. அது பேணப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இதில் கூடுதல் கவனத்தை முதலமைச்சர் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பொதுச் சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்
பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது. காப்பீட்டு முறை என்று சொல்லி ரூபாய் 5லட்சத்திலிருந்து 25 லட்சத்துக்கு உயர்த்துகிறார்கள். ஆனால், அது எளிதாக கிடைப்பதில்லை. ஒரு சிறு குறை இருந்தாலும்கூட- அவசரகால சிகிச்சையின்போதுகூட திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதனால், நோயுற்றவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இதனால், காப்பீட்டுத்துறைக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும்தான் பெரும் லாபம்.
இவை எல்லாவற்றையும்விட மிகச்சிறப்பானது நமது பொது சுகாதாரத்துறை முறைதான். சென்னையில் இருக்கிற அரசு மருத்துவமனைக்கு நிகரே இல்லை.
பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகள் கொரோனா காலத்தில் இழுத்து மூடி, பெரிய பூட்டு போட்டு பதுங்கிவிட்டார்கள். அந்தக் காலத்தில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காப்பாற்றியது அரசு மருத்துவமனை, அரசு மருத்துவர்கள். எனவே, இந்த பொதுச் சுகாதார முறையைக் காப்பீட்டுச் சுகாதார முறையாக மாற்றிவிடக்கூடாது. அது நல்லதல்ல.
இருக்கிற அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு முறையை நவீனப்படுத்தி, பொது சுகாதார முறையை ஊக்குவிக்க வேண்டும், வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அநீதிக்கு எதிரான சிந்தனைகள்
நக்சல்களை சுட்டுக்கொன்றதாக உள்துறை அமைச்சர் சொல்கிறார், பிரதமர் சொல்கிறார். ஆனால், நக்சல் சிந்தனையைச் சுடமுடியவில்லை என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அநீதிகள், அதர்மங்கள் எங்கே நடந்தாலும், நீதிக்கான குரல்தான் இடது குரல். அதை நக்சல் குரல் என்கிறார்கள். நக்சல் நடைமுறையை கம்யூனிஸ்ட்கள் ஏற்கவில்லை. அவர்கள் ஜனநாயகப் பாதைக்கு வரவேண்டும். ஆனால், அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிரான சிந்தனைகளை நக்சல் குரல் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வார்களேயானால், அந்தச் சிந்தனை பல்கலைக்கழகம் முழுவதும் பரவி இருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், மிகச்சிறந்த மானுட விற்பன்னர்கள் அனைவர் சிந்தனையிலும் அது இருக்கிறது. அதை அழிக்கிற ஆயுதம் உலகில் எங்கேயும் இல்லை. அமெரிக்காவிடமும் இல்லை. அந்தக் குரல் வாழும். அது வெல்லும்” -இவ்வாறு மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.