ஆரோக்கியம்கட்டுரைகள்

அரசுப் பணியிலிருந்து மருத்துவர்கள் விலகுவது ஏன்?

ஜி.ஆர்.இரவீந்திரநாத்

மருத்துவர்களை குற்றவாளிகளைப் போல் சித்தரிப்பதா?

அரசு வேலையை பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக மருத்துவர்கள் சிலர் கைவிடுகின்றனர். சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்கக் கூடிய, அரசுப் பணியை விட்டு அவர்கள் விலகுவது ஏன்? அதற்கான காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து களைந்திட வேண்டும். அதைவிடுத்து, அவர்களை மிகப் பெரும் சமூகக் குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசுப்பணிக்கு மருத்துவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆயிரம் அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு, 25 ஆயிரம் மருத்துவர்கள் போட்டியிடுகின்றனர். எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலைக்கு, கொடுக்கப்படும் குறைவான ஊதியத்திற்கு, முதுநிலை மருத்துவம் (MD/MS) படித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, உயர் சிறப்பு மருத்துவம் (DM/Mch) படித்த மருத்துவர்களும் கூட வேலைக்கு வரத் தயாராக உள்ளனர். அந்த அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் மருத்துவர்களிடம் அதிகரித்து உள்ளது. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில், புதிய மருத்துவக் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் அதிக மருத்துவர்கள்

தமிழ்நாட்டில் தற்பொழுது 78 க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். தவிர வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு 1500 பேர் வருகின்றனர். உலக நல நிறுவனம் 1000 மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் வேண்டும் என பரிந்துரைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 495 பேருக்கு ஒரு நவீன அறிவியல் மருத்துவர் உள்ளார். இந்த விகிதம் பீகாரில் 1:2148, உத்தரப்பிரதேசத்தில் 1:2363 என உள்ளது.

தமிழ்நாட்டில் அதிக மருத்துவர்கள் இருப்பது, வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதுடன், தனியாக மருத்துவத் தொழில் புரிவதிலும் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. அவர்களின் ஊதியத்தையும், சராசரி வருமானத்தையும் குறைத்து வருகிறது. சராசரி மாத வருவாய் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை உள்ளது.

இன்றைய நான்காவது தொழிற்புரட்சிக் காலக்கட்டத்தில், நவீன அறிவியல் தொழில் நுட்பம், டெலிமெடிசின் போன்றவை மருத்துவர்களின் தேவையை குறைத்து வருகிறது. கடுமையான வேலை இழப்பை உருவாக்கி வருகிறது. இதனாலும் வேலை வாய்ப்பின்மையை அதிகரித்து வருகிறது.

சுரண்டும் கார்ப்பரேட் மருத்துவமனைகள்

கார்ப்பரேட் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவது மிகவும் கடினமானதாக உள்ளது. அங்கு மனித உரிமைகள் மீறல்கள், தொழிலாளர் விரோதப் போக்குகள், மருத்துவ நெறிமுறை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. கார்ப்பரேட் மருத்துவமனைகளும், மருத்துவர்களின் உழைப்பை கடுமையாகச் சுரண்டுகின்றன. தனியார் துறையிலும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. வேலை தேடுவோரின் போட்டி அதிகரிப்பதால், ஊதியத்தை குறைக்கின்றன. எனவே, அரசுப்பணிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக அரசுப்பணியை விட்டு விலகும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகமாக இருந்தது.

அரசு மருத்துவப் பணிக்கு போட்டி கடுமையாக இருக்கும் அதேநேரத்தில், கிடைத்த அரசுப் பணியில் தொடர முடியாமல் சிலர் விலகுகின்றனர்.

அரசு இடஒதுக்கீடு மூலம் முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்கள், பணி ஓய்வு பெறும் வரை அரசுப் பணியில் தொடர்வோம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அரசிடம் ஒப்படைக்கின்றனர். அந்த ஒப்பந்தத்தை மீறினால் ரூ.20 லட்சம் முதல், ரூ.40 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்த விதி.

அவ்வாறு அபராதம் செலுத்தாமல் வெளியேறிய மருத்துவர்கள், அதாவது, சிலர் அனுமதியின்றி பணிக்கு வராமல் (unauthorised absent) இருக்கின்றனர். அத்தகைய மருத்துவர்களே இப்போது விவாதப் பொருளாகியுள்ளனர். சமூக ரீதியான இழிவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கிளினிக் நடத்த முடியாமை

தனியாக மருத்துவத் தொழில் செய்வதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தும் சட்டம் (Clinical Establishment Act), நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer protection Act) உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு மருத்துவர்கள் தொழில் செய்ய வேண்டி இருக்கிறது.

இவை தவிர சிறிய கிளினிக்குகளும், மருத்துவமனைகளும், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன் போட்டிபோட முடியாமல் மூடப்படுகின்றன. தனியார் மற்றும் அரசு மருத்துவக் காப்பீட்டை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லாத மருத்துவமனைகள் கடும் பொருளாதார இழப்புகளை சந்தித்து மூடப்படுகின்றன.

அரசுப்பணி விலகல் ஏன்?

இந்நிலையில் அரசு மருத்துவர்கள் பணியை விட்டு ஏன் செல்கிறார்கள் என்பதே கேள்வி. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

♦ மகப்பேறு மருத்துவத் துறை போன்ற பல துறைகளில் 24 மணி நேர தொடர் பணி என்பது மனிதத் தன்மையற்ற, தொழிலாளர் விரோதப் போக்காகும். இவர்களில் பல மருத்துவர்கள் குடும்பங்களை பிரிந்து, குழந்தைகளைப் பிரிந்து வெவ்வேறு ஊர்களில் பணிபுரிகிறார்கள். விடுப்பெடுக்க முடியாத சூழலிலும் பணிபுரிகிறார்கள். இதில் பலர் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உடையோராக உள்ளனர்.

♦ அரசு மருத்துவர்களின் ஊதியமும் மிகக் குறைவாகவே உள்ளது. அதே சமயம் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள் போன்ற பல செலவுகளை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். ஆனால், அவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை.

♦ ஊதியப் பட்டை நான்கை, பணியில் சேர்ந்த 12 ஆவது ஆண்டில் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

♦ நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்கி, இந்த இடங்களில் மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

♦ இதனால் பல இடங்களில் மகப்பேறு மருத்துவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை 24 மணி நேர வேலை பார்க்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக பலர் கடும் மன, உடல் உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

♦ அதிமுக ஆட்சிக்காலத்தில் போராடியதற்காக 128 மருத்துவர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். திமுக ஆட்சியிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. போராடிய மருத்துவர்கள் பெருமாள் பிள்ளை, போன்றோருக்கு 17(B) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு திமுக அரசால் தண்டனை இடமாற்றம் (punishment transfer) வழங்கப்பட்டது.

♦ பணியிடங்களில் பாதுகாப்பற்றச் சூழல், மோசமான பணிக் கலாச்சாரம், ஏராளமான மருத்துவ முகாம்கள், வி.வி.ஐ.பிக்களுக்கான டியூட்டிகள், காலமுறை பதவி உயர் இல்லாமை, நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களால் தாக்குதலுக்கு ஆளாவது போன்ற காரணங்களால் அரசுப் பணியை கைவிடும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக மகப்பேறு மருத்துவர்கள் அரசுப் பணியே வேண்டாம் என விலகி விடுகின்றனர்.

♦ தற்பொழுது முதுநிலை மகப்பேறு மருத்துவப் படிப்பில் சேரவே பெண் மருத்துவர்கள் தயங்குகின்றனர்.

♦ மருத்துவர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS) வழங்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது. இதனால் புற்றுநோய் போன்ற சீரியஸான உடல் நலப் பிரச்சினைகள் உள்ள மருத்துவர்கள் கூட, விருப்ப ஓய்வு பெற முடியவில்லை. ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்தியுள்ளது. இவை மருத்துவர்களை மேலும் பாதிக்கிறது.

♦ குறைந்த ஊதியம், விருப்ப ஓய்வு இல்லாதது, ஓய்வு பெறும் வரை உழைக்க வேண்டும், ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு, பழைய ஓய்வூதியமும் கிடையாது என்பவை தமிழ்நாடு அரசின் கொத்தடிமைகளாக அரசு மருத்துவர்களை மாற்றியுள்ளது.

♦ தமிழ்நாட்டின் பொதுமக்களின் சராசரி ஆயுட்காலம் 74 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், அரசு மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் 59 ஆண்டுகளாக மட்டுமே உள்ளது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

♦ ஒன்றிய அரசு மருத்துவர்கள், முதுநிலை மருத்துவத்தை, அரசு ஊதியத்துடன் படித்தால், அவர்கள் படிப்பை முடித்த பிறகு 5 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தால் போதும். விருப்ப ஓய்வும் பெற முடியும். ஊதியமும் அதிகம். ஆனால் தமிழ்நாடு அரசோ, ஓய்வு பெறும் வரை பணி செய்ய வேண்டும் என்கிறது. விருப்ப ஓய்வை மறுக்கிறது. ஊதியத்தையும் குறைவாக வழங்குகிறது. இது என்ன நியாயம்?

இத்தகைய காரணங்களைப் போக்க, உரிய பங்களிப்பை செலுத்தாமல், மருத்துவர்களை சமூகக் குற்றவாளிகளாக்குவது அறமாகாது.

தமிழ்நாட்டில் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை என்பதால் கொண்டுவரப்பட்ட விருப்ப ஓய்வு கிடையாது என்ற பழைய சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பை முடித்த மருத்துவர்களே ஏராளமானோர். அவர்கள் அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வேலை கிடைக்கும். இந்த விருப்ப ஓய்வு பெறும் நடைமுறை பல மாநிலங்களிலும், ஒன்றிய அரசிலும்கூட இருக்கிறது.

முதல் தலைமுறை மருத்துவர்கள் பாதிப்பு

அடுத்து, அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் பட்ட மேற்படிப்பை முடித்தவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள காரணங்களால் அரசுப்பணியை கைவிட்டால், அதற்கான இழப்பீட்டையும் கட்டிவிடுகிறார்கள். தமிழ்நாடு அரசும் கடந்த சில ஆண்டுகளாக வருவாய் மீட்புச் சட்டத்தின் (Revenue Recovery Act) கீழ் அத்தகைய மருத்துவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் உடனடியாக அந்த இழப்பீட்டுத் தொகையை செலுத்தி விடுகின்றனர். ஆனால், ஒடுக்கப்பட்டச் சமூகங்களைச் சேர்ந்த, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மருத்துவர்கள் அந்தத் தொகையை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலும் அவர்கள்தான் அரசுப் பணியிலிருந்து முறையாக விலக முடியாமல், அனுமதி பெறாத பணி விலகலை (Unauthorized absence) மேற்கொள்கின்றனர். இதுபோன்ற மருத்துவர்களின் பிரச்சினைகளை ஆழ்ந்து கனிவோடு பரிசீலிக்க வேண்டும். அவர்களை கிரிமினல் குற்றவாளிகளைப் போல் சித்தரிக்கக் கூடாது.

நடத்தை விதிகளைப் பின்பற்ற வேண்டும்

அதேநேரத்தில், ஒரு சில மருத்துவர்கள் தனியாகத் தொழில் செய்து அதிக வருவாய் ஈட்டுகின்றனர். இவர்கள் பணிக்குத் தொடர்ந்து வராவிட்டால், பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களது பணியிடங்களில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

இதற்கென ஏற்கனவே இருக்கும் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அதைவிடுத்து, அரசுப் பணியை விட்டு விலகிய அனைவரின் பதிவு எண்களையும் ரத்து செய்ய வேண்டும், அவர்களை மருத்துவத் தொழில் செய்யாமல் தடுக்க வேண்டும், அவர்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும், அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு அவமானப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அராஜகப் போக்காகும். சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய அறிதல் இல்லாத போக்காகும்.

மருத்துவர்களை, மருத்துவத் தொழிலை செய்ய விடாமல் தடுப்பது, தொடர்புடைய மருத்துவர்களுக்கு மட்டும் இழப்பல்ல; சமூகத்திற்கே இழப்பாகும்.

மருத்துவர்கள் அரசுப் பணியில் இருந்து விலகி, தனியாக மருத்துவத் தொழில் செய்யும் போக்கிற்கு, மருத்துவம் தனியார் மயமானதும், வணிக மயமானதுமே காரணமாகும். இன்றைய அரசு கடைபிடிக்கும் தனியார் மயமாதல் கொள்கைகளே காரணமாகும்.

உழைப்புச் சுரண்டலுக்கு துணை போகலாமா?

ஊழலுக்கு எதிரான செயல்பாடு என்ற பெயரில், முதலாளித்துவ அரசின் உழைப்புச் சுரண்டல் நடவடிக்கைக்குத் துணை நிற்பது தொழிலாளி வர்க்க அறமாகாது. அரசு மருத்துவர்களை தமிழ்நாடு அரசு கொத்தடிமை போல் நடத்துவதற்கு துணைபோவது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பதற்காக அரசு மருத்துவமனைகளிலேயே பணியாற்ற வேண்டும் என்ற வாதம், உழைப்புச் சுரண்டலில் ஈடுபடும் அரசுக்கு துணை போவதாகும்.

மருத்துவர்கள் மட்டுமல்ல, ஏராளமான முதுநிலை மருத்துவ மாணவர்கள்கூட கடும் உழைப்புச் சுரண்டலின் காரணமாக தங்கள் படிப்பை கைவிடுகின்றனர். ஒரு சில தற்கொலைகளும் நடைபெறுகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 332 முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை விட்டு விட்டு விலகியுள்ளனர். இதே போன்ற நிலை தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதும் உள்ளது. இதற்கும் பல காரணங்கள் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் பணியிலிருந்து விலகுவதும், முதுநிலை மருத்துவ மாணவர்கள் படிப்பை விட்டு விலகுவதும் மிகப் பெரும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினை என்பதையும், இன்றைய முதலாளித்துவ அரசின் தவறான கொள்கைகள் காரணம் என்பதையும் அனைவரும் உணர வேண்டும்.

பணிநேரத்தில் இல்லாத மருத்துவர்கள்

அரசு மருத்துவர்கள், பணி நேரங்களில் பணியில் இல்லாமல் தங்களது சொந்த அல்லது தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் இதுபோல் செய்கிறார்கள். இவர்கள் ஊதியத்தையும் பெற்றுக்கொண்டு அரசையும், மக்களையும் ஏமாற்றுகிறார்கள். இப்படி சில மருத்துவர்கள் பணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் இல்லாததை கண்காணித்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில் ஒரு நாள் பணி நேரம் 8 மணி நேரமாக இருப்பதையும், ஒரு வாரப் பணி நேரம் 48 மணி நேரத்திற்கு மிகாமல் இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். ஒரு வாரத்திற்கு 56 மணி முதல் 72 மணி நேரத்திற்கு மேலும் பணி வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கக்கூடாது.

வீட்டிலிருந்து வரவழைக்கக் கூடாது

24 மணி நேர மருத்துவமனை என அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பணியில் மருத்துவர்கள் இருப்பது போல் நியமனம் செய்யப்பட வேண்டும். நோயாளி வந்த பின், மருத்துவர்களை வீட்டிலிருந்து வரவழைத்து (Call duty) சிகிச்சை அளிக்கும் முறை கூடாது. இதனால் மருத்துவர்களின் பணி நேரம், பணிச்சுமை, மன உளைச்சல் அதிகரிக்கிறது. நோயாளிகள் அவசர நேரத்தில் சிகிச்சை பெறுவதில் காலதாமதமும் ஏற்படுகிறது. இதற்கு அரசின் சிக்கன நடவடிக்கையே காரணம். இதனால் மருத்துவர்கள் மட்டுமல்ல நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும்.

முக்கியமான கோரிக்கைகள்

♦ மருத்துவச் சேவையை தனியார் மயமாக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு சுகாதார அறக்கட்டளை (Health Foundation) அமைப்பதை கைவிட வேண்டும். அரசு மருத்துவக் கட்டமைப்பு தனியார்மயமாவது ஏழை – எளிய மக்களை பாதிக்கும்.

♦ மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்திட வேண்டும்.

♦ அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

♦ ஊதியப்பட்டை நான்கை பணியில் சேர்ந்த 12 ஆம் ஆண்டில் வழங்கிட வேண்டும். அரசாணை: 354 ல் இத்திருத்தங்கள் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

♦ பணியிடங்களில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, பணியிடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

♦ அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு 24 மணி நேரம் தொடர்ச்சியாக பணி வழங்குவதை கைவிட வேண்டும். எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

♦ உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும். நமது இடங்கள் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

♦ நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதால், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து ஒன்றிய அரசு விலக்கு வழங்கிட வேண்டும்.

♦ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணிபுரியும் பல் மருத்துவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும்.

♦ தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெறும் பயிற்சி மருத்துவர்களுக்கு (CRMI) கட்டணம் வசூலிக்கக் கூடாது என தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. பல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிக்காலத்தில் கூட கட்டணமாக ரூ 4.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

♦ முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள தனியார் மருத்துவர்களுக்கு பிணை ஒப்பந்தக் காலத்தை (Non Service PG bond period) ஓர் ஆண்டாக குறைத்துள்ளதை, அனைத்துத் துறை முதுநிலை மருத்துவப் படிப்பு தனியார் மருத்துவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

♦ வேலையின்மை பெருகியுள்ள இன்றைய நிலையில், தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு, தமிழ்நாட்டில் பிணை ஒப்பந்தம் அவசியமற்றது. இது குறித்து கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும்.

♦ 22.04.2025 அன்று அரசு நடத்திய கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்கள், கலந்து கொண்டு எந்த இடத்தையும் தேர்வு செய்யாதவர்கள் (opt out), இடத்தை தேர்வு செய்து விட்டு பணியில் சேராதவர்கள் என்று தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்காத மதிக்காத மருத்துவர்களுக்கு எல்லாம் பிணை ஒப்பந்தக் காலம் (Bond period) ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.

♦ அதேநேரத்தில் தமிழக அரசை மதித்து அதன் கட்டுப்பாடுகளை, விதிமுறைகளை ஏற்று பணியில் சேர்ந்து கடினமாக பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு இந்த பிணை ஒப்பந்தக் காலம் ஓராண்டாக குறைக்கப்படவில்லை. எனவே, 2025 இல் படிப்பை முடித்த அனைத்து மருத்துவர்களுக்கும் பிணை ஒப்பந்தக் காலத்தை ஓராண்டாக குறைக்க வேண்டும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button