
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தப் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு ஒன்றினை விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் தமிழக அரசு அமைத்துள்ளது.
புதிய குழுவில் அறிவியலாளர் த.வி. வெங்கடேசுவரன், சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியை ரீட்டா சான், தமிழ்ப் பேராசிரியர் சுதந்திரமுத்து ஆகியோருடன், அறிவியல், வரலாறு, கல்வியியல் போன்ற வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கெனப் புதிய நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் தரம் கொண்ட பாடத்திட்டத்தை உருவாக்குவது இக்குழுவின் நோக்கமாகும்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பேராசிரியா் சுல்தான் அகமது இசுமாயில் தலைமையில், விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் இயக்குநர் நாராயணன், அறிவியலாளர் த.வி.வெங்கடேசுவரன், கிரிக்கெட் வீரா் அசுவின் உள்ளிட்டோா் அடங்கிய பாடத்திட்ட வடிவமைப்பு உயா்நிலைக் குழு மற்றும் வல்லுநா் குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழு, பாடத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவற்றில் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்களை ஆய்வு செய்து, ஆசிரியா், பெற்றோா், கல்வியாளா், மாணவா் உள்பட பல்வேறு நிலையினரின் கருத்துகளைப் பெற்றுப் பரிந்துரைகளை அளித்திருந்தது. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
ஆகவே, புதிய குழு 4 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கித் தரும்.
மாநிலக் கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்
புதிய நுட்பங்களுடன், தமிழ்வழிக் கல்விக்குச் சிறப்பிடம் தருவதும் இக்குழுவின் அடிப்படை நோக்கங்களாகக் கருதப்படுகிறது.
ஆகத்து 2025ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையின் (State Education Policy) அடிப்படை இலக்குகளைப் பின்பற்றிப் பாடத்திட்டத்தை வடிவமைக்கவேண்டும் என்பது குறிக்கத் தக்கது. இதனால் இருமொழிக் கொள்கை உறுதிப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கான பாடத்திட்டம் அவ்வப்போது புதிய வளர்ச்சிகளுக்கும் வேண்டல்களுக்குமேற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இக்குழுவின் மூலம் தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலையில், பள்ளிக் கல்வியினை அடுத்து, மருத்துவம் (நீட்) உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதவேண்டிய நெருக்கடியில் மாணவர்கள் உள்ளனர்.
அந்த நுழைவுத் தேர்வுகள் பெரும்பாலும் ஒன்றிய அரசின் பாடத் திட்டத்தை ஒட்டியே அமைகின்றன. இதனால், பள்ளிக் கல்விக்குப் பின்னர் தகுந்த பயிற்சியைப் பெற்றுத்தான் அத்தகைய நுழைவுத் தேர்வுகளை எழுதவேண்டும் என்னும் நிலை உருவாகிவிட்டது.
வினாக்களுக்கு விடையளிக்கும் முறை, அதற்கான கால வரையறை ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது, இத்தகைய பயிற்சிகள் இன்றியமையாத நிலையை உருவாக்கிவிட்டன. ஏனெனில், நுழைவுத் தேர்வு முறைகளுக்கேற்ற பயிற்சியும் பழக்கமும் மாணவர்களுக்குப் பள்ளிகளில் வழங்கப்படுவதில்லை.
சிறந்த தமிழ்நாட்டுப் பாடத்திட்டம்
தமிழ்நாட்டில் தற்போதுள்ள பாடத்திட்டமானது, ஒன்றிய அரசின் பாடத்திட்டத்திற்கு எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. சில கூறுகளில் ஒன்றிய அரசின் பாடத்திட்டம் மேம்பட்டதாகத் தெரிந்தாலும், மாநில அரசின் பாடத்திட்டமும் வேறு வகையில் சிறப்புக் கொண்டதாகவே காணப்படுகிறது. ஆனாலும், இரண்டுக்கும் இடையில் சில இடைவெளிகள் இருப்பதையும் மறுக்க இயலாது.
குறிப்பாக, ஒன்றிய அரசின் பயிற்று முறை, கற்றுக்கொண்ட அறிவைப் பயன்படுத்தும் நிலையிலும் பகுப்பாய்வு செய்யும் வகையிலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் பாடத் திட்டத்தின் பயிற்றுமுறை விவரங்களை ஆழமாக அறியும் அடிப்படையில் அமைந்திருப்பதாக அமைகிறது.
நுழைவுத் தேர்வு இல்லாத தமிழ்நாடு
மருத்துவம் அல்லாத உயர் கல்விக்குத் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லை. அத்துடன், வேண்டிய அளவுக்கான தரமான கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளுக்கான கல்லூரிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான சேர்க்கைகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இதனால் தமிழ்நாட்டில், 12ஆம் வகுப்பில் மிகுந்த மதிப்பெண்கள் பெறுவதே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மனப்பாடம் செய்து பயிற்றுவிக்கும் நிலை பெரிதும் நிலைத்துவிட்டது. இத்தகையோர் உயர் கல்விக்குச் செல்லும்போது கற்றுக்கொண்ட அறிவைப் பயன்படுத்தும் நிலையில் சில வேளைகளில் பின்தங்கிவிடுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படிப்போர், நுழைவுத்தேர்வை எதிர்கொண்டு உயர்கல்வியில் சேரும் நிலையில் பெரிதும் இருக்கின்றனர். அவர்களால் மிகுந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தமிழ்நாட்டில் மருத்துவமல்லாத உயர் கல்வியில் சேர்வதற்கான முதன்நிலை அமைவதில்லை. ஆகவே அவர்கள், அடிப்படை அறிதலைக் கற்றுக்கொள்வதற்கு மாறாக, எட்டாம் வகுப்பிலிருந்து நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளைப் பெறும் வகையில் தங்களுடைய தேர்வெழுதும் திறனை வளர்த்துக்கொள்கின்றனர். ஒன்றிய அரசுப் பாடத்திட்டப் பள்ளிகளில் அறிவியல், கணக்கு போன்ற பாடங்களின் அடிப்படைகளைக் கற்பதற்கு மாறாக, நுழைவுத் தேர்வினை எதிர்கொள்வதற்கு வேண்டுமான பயிற்சியே முன்னெடுக்கப்படுகிறது.
இதனால் அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பினைப் பெற்றாலும், அந்தப் படிப்புகளில் உள்ள சுமையினைத் தாங்கும் அளவிற்கு அடிப்படைப் புரிதல்கள் இல்லாமல் போய்விடுவதாகக் குறை கூறப்படுகிறது. தற்கொலைகளும் இதனால் அவ்வப்போது நிகழ்கின்றன.
பயிற்சிக்கூடங்களின் வணிகம்
குறிப்பாக, நடுநிலை உயர்நிலைப் பிரிவு செல்வ மாணவர்கள், தங்களுடைய வாய்ப்புகளைப் பெருந்தொகை செலவிட்டு வணிகப் பயிற்சிக்கூடங்களில் விரிவுபடுத்திக்கொள்வதால், புதிய நிலைமைகளைக் கடந்துவிடுகின்றனர்.
ஆனால், போதுமான செல்வ நிலை இல்லாதோர், பெருந்தொகை செலவிட்டுப் பயிற்சி பெற இயலாத நிலையில் பின்தங்கும் போக்கு ஏற்பட்டுவிடுகிறது.
மாநிலப் பாடத் திட்டத்தின் ஆழமான அறிதல் ஆற்றலும், ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் பயன்படுத்தல் பயிற்று முறை மேம்பாடும் இன்றைய வாழ்முறையில் வேண்டியனவாகவே இருக்கின்றன.
இந்த இரண்டு நிலைகளும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுதான் புதிய குழு எதிர்கொள்ளும் பெரும் பணியாக இருக்கும். அறிவுலகத்தின் எதிர்பார்ப்பும் இதுதான்.
ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் நடுத்தர அல்லது உயர்நிலை பிரிவை சேர்ந்த செல்வம் படைத்தவராகவே அமைகின்றனர். ஆனால், மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அடித்தட்டு மக்களிலிருந்து வருவோர்க்கு இந்த வாய்ப்பு முழுமையாக அமைவதில்லை.
இதனால், அடித்தட்டு மக்களுக்குப் போதுமான அறிதிறன் இருப்பதில்லை என்று கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. இதனால்தான், பள்ளிப் பாடத்திட்டங்களை மேம்படுத்துவதில் தடைகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுடைய அறிநிலை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடியனவல்ல.
பயிற்சி பெற்றால் பயன் பெறலாம்
1. உரிய பருவம் வரும்போது பள்ளிகளில் சேரும் அளவு
2. இடைநிற்றல் குறைவு
3. 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெறுகின்ற தேர்ச்சி அளவு
4. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பிற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக எட்டிப் பிடிக்கும் நிலையில் உள்ள நிலை.
இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது உரிய பயிற்சியும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டால், எளிய மாணவர்களும் ஏற்றம் பெறுவார்கள் என்பதில் அய்யம் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசுப் பள்ளிகளில் முழுமையான தேர்ச்சி (100%) என்பது ஆண்டுக்கு ஆண்டு மிகுந்து வருகிறது. சென்னை போன்ற மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் இது பொருந்தும்.
எனவே கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு வேண்டிய ஊக்கம் கொடுத்தால் தனியார் பள்ளிகளைப் போன்று அரசு சார்ந்த பள்ளிகளும் முன்னேற்றம் காணும் என்பதை மறுப்பதற்கில்லை.
குழுவில் ஆசிரியர் பங்களிப்பு வேண்டும்
புதிய குழுவில் ஓரிருவரைத் தவிர, துறை வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது உண்மைதான். கல்வியோடு தொடர்பில்லாத ஓரிருவர் ஏன் கல்விக் குழுவில் இணைக்கப்பட்டனர் என்பது வழக்கம் போலப் புதிர்தான். இருந்தாலும், அன்றாடம் மாணவர்களைப் பயிற்றுவித்த பட்டறிவு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவரையன்றி எவரும் இல்லை என்பது ஒரு குறைதான். மாணவருடைய அறிதிறன் என்ன, அவர்களுக்கு எத்தகைய முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்பவற்றை முழுமையாக அறிந்தோர் அவர்கள்தாம்.
குறிப்பாக, ஒன்றிய, மாநிலப் பாடத்திட்டங்களில் பல்லாண்டுகள் பயிற்றுவித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிலர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும். குறைந்தது, அவர்களைத் துணைக் குழுக்களிலாவது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பல்வகைத் திறன்கள்
ஒரு காலத்தில் வேலை வாய்ப்புகளுக்குச் செல்லும்போது, மொழியறிவு, தொழில்சார் அறிவு ஆகியன மட்டுமே போதுமானவையாகக் கருதப்பட்டன. அடுத்து, மொழியறிவைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஆற்றல் பெரிதாக எடுக்கப்பட்டது. ஆனால் இன்று, உயர் நிறுவனங்களுக்கான சேர்க்கைகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் பல்வகைத் திறன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முடிவெடுக்கும் தன்மை, அந்த முடிவெடுப்பதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு, மதிப்பிடுவதில் உள்ள நுட்பம், கணக்கிடுவதில் தெளிவு, செயல்பாட்டு ஆளுமை எனப் பல்வகையான ஆற்றல்கள் வேண்டப்படுகின்றன.
இவற்றை மதிப்பிடுவதற்கான முறைமைகள் யாவை, இவற்றைக் கற்றுத் தருவதற்கான வாய்ப்புகள் என்ன என்பவற்றையும் புதிய குழு புறக்கணித்துவிடக் கூடாது.
அய்.அய்.எம். போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முறையும் பெரும் நிறுவனங்களின் தேர்வு முறையும் அறிந்துள்ள வல்லுநர்களும் துணைக்குழுக்களிலாவது இடம்பெற வேண்டும்.
புதிய தலைமுறையினர் உருவாகவேண்டும்
ஏனெனில், பள்ளிக் கல்வி என்பது வெறும் உயர் கல்வி பெறுவதற்கான ஒரு படிக்கட்டாக மட்டும் கட்டுக்குள் அடங்கவில்லை. மாறாக, இந்த உயர் கல்வி நுழைவு, அடுத்தடுத்துச் சமூகத்தையும் நாட்டையும் கட்டமைத்துத் தரும் உறுப்பினர்களை உருவாக்கும் கடமைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.
இவை அனைத்தையும் பள்ளிகளிலேயே கற்றுத் தர முடியாமலிருக்கலாம். ஆனால், இளம் தலைமுறையினரைப் பக்குவப்படுத்தி, அடித்தளம் அமைக்கும் பணியினைப் பெற்றோருடன் பள்ளிகள்தாம் இணைந்து நிறைவேற்ற முடியும்.
அதனால், புதிய பாடத்திட்டம் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கவேண்டும்.