பாலஸ்தீனக் குழந்தைகள் மீதான கொடூரம் உலக மனசாட்சியை உலுக்கும் ஐ.நா. அறிக்கை
டி.எம்.மூர்த்தி

பாலஸ்தீனர்களின் வம்சத்தையே அழித்து முடித்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில், குழந்தைகளைத் தேடித் தேடி, இஸ்ரேல் கொன்ற கொடூரத்தை ஐ.நா. சபையின் அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது.
கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு பிரதேசங்களில், இஸ்ரேல் நடத்திய ஈவிரக்கமற்ற தாக்குதல் தொடர்பாக விசாரித்த ஐக்கிய நாடுகள் சபையின் சுயேச்சையான சர்வதேச விசாரணைக் குழுவின் அறிக்கை அண்மையில் வெளியானது.. இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் தலைமையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, 2026 ஜூன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்டது.
காசா போரினால் பாலஸ்தீனக் குழந்தைகள் சந்தித்த மனிதாபிமான பேரழிவை, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டது.
விசாரணைக் குழுவின் நோக்கம்
- பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப்பட்டது, காயமடைந்தது,
- மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது,
- உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டது,
- கட்டாயமாக மக்களை இடம்பெயர வைத்தது,
- கைது செய்யப்பட்டு பாலஸ்தீனக் குழந்தைகள் நடத்தப்பட்ட விதம்,
ஆகியவை சர்வதேச சட்டப்படி போர்க்குற்றங்களா, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களா, அல்லது இனப்படுகொலையா என்பதைக் கண்டறிவதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.
அறிக்கையின் முடிவு
அறிக்கை மிகக் கடுமையான முடிவை முன்வைக்கிறது.
- இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் மக்கள் கொல்லப்பட்ட போது குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன என்று கருதமுடியாது.
- மாறாக, பாலஸ்தீனர்களின் குழந்தைகளை விட்டு வைத்தால், எதிர்காலத்தில் மீண்டும் பாலஸ்தீனர்கள் சமூகம் உயிர் வாழ்ந்துவிடும் என்பதற்காகவே குழந்தைகளைக் குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, இனப்படுகொலை (Genocide), மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes Against Humanity), போர்க் குற்றங்கள் (War Crimes) என்ற மூன்று சர்வதேச குற்றங்களையும் இஸ்ரேல் திட்டமிட்டுச் செய்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைகள் எவ்வாறு கொல்லப்பட்டனர்
அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்,
- 20,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
- மொத்த உயிரிழப்புகளில் சுமார் 30 சதவீதம் குழந்தைகள். இடிந்த கட்டடங்களின் கீழ் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
- இன்னும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பார்வையிழந்த வர்கள், தீக்காயமடைந்தவர்கள், மூளை மற்றும் முதுகுத்தண்டு பாதித்தவர்கள் உள்ளனர். இவர்கள் உயிர்பிழைத்திருந்தாலும், தமது நோய்களாலும், உறுப்பு இழப்பாலும் நீண்ட காலம் உயிர் வாழவோ, இனப்பெருக்கம் செய்யவோ முடியாது
- குழந்தைகள் மருத்துவமனைகள் குறிவைத்து குண்டுவீசித் தாக்கப்பட்டன.
- குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மின்சாரம் இல்லாமல் செயலிழந்ததால். சிகிச்சையில் இருந்த குழந்தைகளும் இறந்துவிட்டன.
- இன்குபேட்டர்களில் இருந்த குறைப் பிரசவக் குழந்தைகள் உயிரிழந்தனர்.
- ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டன அல்லது தடுக்கப்பட்டன.
- குழந்தைகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
இதன் விளைவாக, மரணத்தைத் தடுக்கும் வாய்ப்பிருந்தும், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்தனர்.
பட்டினி போட்டே கொன்றார்கள்
அறிக்கையின் மிகவும் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று,
இஸ்ரேல் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, உணவு, குடிநீர், மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றை பல நாடுகள் அனுப்பியிருந்தும், அவை மக்களுக்கு சென்று சேராமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்துவிட்டது என்று அறிக்கை கூறுகிறது.
இதன் விளைவாக, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் பட்டினியால் உயிரிழத்தல், நீரிழப்பு, அசுத்தமான குடிநீரால் நோய்கள் பரவுதல்போன்றவை பெருமளவில் ஏற்பட்டது.
இது சர்வதேச சட்டப்படி போர்க்குற்றமாகவும், இனப்படுகொலையின் ஒரு கூறாகவும் இதனைக் கருதமுடியும் என்று அறிக்கை கூறுகிறது.
கல்வி நிலையங்களை அழித்தனர்
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன.
தாக்குதலிலிருந்து தப்பிக்க பள்ளிகளில் தஞ்சமடையுமாறு அறிவித்துவிட்டு, மொத்தமாக பொதுமக்கள் அங்கு சென்றதும் குண்டுகளை வீசி பள்ளிகளை அழித்தனர்.
பள்ளிகள், கல்லூரிகள் அழிந்தாலும் ஆசிரியர்கள் இருந்தால் குழந்தைகளுக்குக் கல்வி கிடைத்துவிடும் என்பதற்காகவே ஏராளமான ஆசிரியர்களைக் கொன்று குவித்தனர்.
பல இலட்சம் குழந்தைகள் நீண்டகாலமாக கல்வியை இழந்தனர். ஒரு தலைமுறையின் எதிர்காலமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை எச்சரிக்கிறது.
குழந்தைகளின் மனநலம்
அறிக்கை குழந்தைகளின் உளவியல் பாதிப்பையும் விரிவாக பதிவு செய்கிறது.
குழந்தை, தனது புலன்களால் வளம் கொஞ்சும் இயற்கையை, தன்னைக் கொஞ்சும் உறவுகளைப் பார்த்து, அவர்களைப் போல பேசி, விளையாடி மகிழ்ந்து வளர்கிறது.
ஆனால் பாலஸ்தீனக் குழந்தைகளோ, இடைவிடாத குண்டுவீச்சு தரும் பயம், அதனால் கருகிப்போன சுற்றுப்புறம், இடிந்து போன வீடுகள், பெற்றோர்கள், சகோதரர்கள் கண்முன்னே சாகும் கொடூரம் இவற்றையே ஆண்டுக்கணக்கில் பார்க்கிறார்கள். குண்டுகளுக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். துணைக்கு உறவுகள் இல்லை, பசிக்கு உணவில்லை. உடுத்த ஆடைகள் இல்லை. காயங்களுக்கு மருந்தில்லை. அழுகையை ஆற்றுவதற்கு ஆளில்லை.
குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த மனரீதியான பாதிப்பு, அவர்கள் உயிரோடு இருந்தால் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
மேற்குக் கரையில் குழந்தைகள் கைது
அறிக்கை மேற்குக் கரையையும் ஆய்வு செய்துள்ளது.
அதில் கைது செய்யப்பட்ட குழந்தைகள்:
உடல் வன்முறை, மிரட்டல், நீண்ட நேர விசாரணை, சட்ட உதவி மறுக்கப்படுதல், மனரீதியான கொடுமைகள் ஆகியவற்றை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இவை அனைத்தும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என அறிக்கை கூறுகிறது.
“இனப்படுகொலை” என்பது ஏன்?
1948-ஆம் ஆண்டு இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனை ஒப்பந்தத்தின் (Genocide Convention) அடிப்படையில், ஒரு தேசிய, இன, மத அல்லது இனக்குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் செயல்கள் இனப்படுகொலையாக கருதப்படுகின்றன.
இது இங்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை,
- குழந்தைகள் உயிரிழப்பது தெரிந்திருந்தும் தொடர்ச்சியான தாக்குதல்கள்.
- மருத்துவம், கல்வி, குடிநீர், உணவு போன்ற உயிர்வாழ்வின் அடிப்படை அமைப்புகளை அழித்தல்.
- மனிதாபிமான உதவிகளைத் தடுப்பது.
- பாலஸ்தீன மக்களைப் பற்றிய சில இஸ்ரேலிய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களின் பொது அறிக்கைகள்.
ஆகிய ஆதாரங்களோடு அறிக்கை விளக்குகிறது.
அறிக்கையின் பரிந்துரைகள்
ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் என்ன செய்ய வேண்டும் என்று அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
- உடனடி போர்நிறுத்தத்தை உறுதி செய்ய வேண்டும்.
- மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைய வழிவகுக்க வேண்டும்.
- பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் விசாரிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
- மருத்துவமனைகள், பள்ளிகள் மீண்டும் கட்டப்பட வேண்டும்.
- குழந்தைகளுக்கு நீண்டகால மருத்துவ மற்றும் மனநல சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உள்ளிட்ட அமைப்புகளின் விசாரணைகளுக்கு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
இஸ்ரேலின் எதிர்வினை
மனிதாபிமான, நெறிமுறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத படுபாதக ஆட்சியைக் கொண்ட இஸ்ரேல் இந்த அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளது.
அது விசாரணைக் குழு மீது குற்றம் சுமத்துகிறது. முன்கூட்டிய உள்நோக்கத்தோடும், அரசியல் பாரபட்சத்துடனும் விசாரணைக்குழு செயல்பட்டுள்ளதாக அது கூறுகிறது.
பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் “இனப்படுகொலை” என்ற சர்வதேச குற்றத்தின் வரையறைக்குள் வரக்கூடும் என்று ஐ.நா. விசாரணைக் குழு வெளிப்படையாகக் கூறியுள்ளது.
இது நீதிமன்றத் தீர்ப்பு அல்ல. இருப்பினும், இந்த அறிக்கை, சர்வதேச நீதிமன்றங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் முன் நடைபெற்று வரும் விசாரணைகளில் முக்கிய ஆவணமாக நிலைபெற்றுள்ளது.