கட்டுரைகள்

சீறிப் பாயுமா சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை?

மே.து.ரா.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த நாளன்று முதலமைச்சர் விசய் கையெழுத்திட்ட மூன்று முதன்மைக் கோப்புகளில் ஒன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையாகும்.

கடந்த சூன் ஒன்பதாம் நாள் நடைபெற்ற தொடக்க விழாவன்று நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட முழுப் பக்க விளம்புகைகள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் செயல்பாடுகள் குறித்துக் கூறுகின்றன.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் செயல்பாடுகள்

1. குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல்

2. காவல் துறையின் இருப்பை உறுதிசெய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல்

3. பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளுதல்

4. பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல்

5. பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல்

6. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கமாகச் செயல்படுதல்.

இவை அனைத்தும் அன்றாடச் சட்டம் ஒழுங்கு குறித்த காவலர்களின் பணிகளாகவே தெரிகின்றன.

அதிரடிப் படையின் கட்டமைப்பு

இந்த அதிரடிப் படைக்கென ரூ. 354 கோடி ஒதுக்கப்பட்டு, 2545 மகளிர் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1620 காவலர்கள், 196 இரண்டாம் நிலைக் காவலர்கள், 638 உதவி ஆய்வாளர்கள், 49 ஆய்வாளர்கள் என்ற படிநிலைகளில் இவர்கள் இருப்பர். எஞ்சியுள்ள 42 பணியிடங்கள் உயர் அலுவலர்களுக்கானதாக இருக்கலாம். இவர்கள் அனைவரும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், இப்போது பணிகளில் உள்ளோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அய்ந்து நாள்கள் மட்டும் கொடுக்கப்பட்ட பயிற்சியில், அதிரடிப் பணிகளை முழுமையாகச் செய்யத்தக்க தகுதி பெற்றிருப்பார்களா என்பது அறியக் கிடைக்கவில்லை.

இவர்களது பயன்பாட்டுக்கென, 319 வண்டிகள், 101 ஈருருளை வண்டிகள் தரப்பட்டுள்ளன. மேலும், 49 ஆளில்லாச் சிறு பறக்கைகள் (டிரோன்), 220 சீருடையில் பொருத்தப்படும் படக்கருவிகள், 50 தொலைபேசி இணைப்புகள், 639 கம்பியில்லாப் பேசிகள், 310 கம்பியில்லாக் கருவிகள், 270 கையடக்கக் கணினிகள் ஆகியனவும் வழங்கப்படுகின்றன.

தலைமைக் காவல் இயக்குநர் இருக்கின்ற வளாகத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 270 களப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 70 அணிகளில் சுற்றி வரும் காவல் குழுக்களாகச் செயல்படுவர்.

குற்ற வழக்குகளைப் பதிவு செய்யும் உரிமை இப்போதைக்கு இவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனினும், குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

தனிச்சீருடையில் உள்ள இவர்களை வழக்கமான சட்டம் ஒழுங்கு, பொதுக் காவல் பணி போன்றவற்றிற்குப் பயன்படுத்தக்கூடாது என்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் முன்னெடுப்பு

மகளிரை முதலாவதாகக் காவல் பணிகளில் இணைத்திட்ட பெருமை கலைஞர் அவர்களையே சாரும். அடுத்து, செயலலிதா காலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ‘இளஞ்சிவப்புக் காவலர்’ என்னும் தனி மகளிர் காவல் படை உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணத்தில் வண்டிகளும் தரப்பட்டு, அழைத்தவுடன் வரத்தக்க வகையில் அவை பல பகுதிகளில் சுற்றிச்சுற்றி வலம்வந்துகொண்டிருந்தன.

இந்த மகளிர் படைதான் தற்போது பெயர் மாற்றம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை.

தமிழ்நாட்டில் காவலர் கட்டமைப்பு

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1300 காவல் நிலையங்கள் சட்டம் ஒழுங்கை மட்டும் பேணுவதற்காகத் தற்போது செயல்படுகின்றன. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 244 உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் உள்ளனர்.

இவர்களன்றி, போக்குவரவு, தனிக்காவல் பிரிவினர், கருவிப் படையினர் என மிகு எண்ணிக்கை கொண்டோர் தனியே உள்ளனர்.

இத்தகைய பெரும் கட்டமைப்புக் கொண்ட காவல் துறை என்ற நிறுவனம் செய்ய முடியாத அல்லது நிறைவேற்ற முடியாத பணிகளை, 2045 என்ற சிறு எண்ணிக்கை மட்டும் கொண்ட அதிரடிப்படை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை.

பேரிடர் மேலாண்மை போன்ற நெருக்கடிகளில் கடமைகளைச் செய்ய உரிய பயிற்சி கொண்ட தனிப் பிரிவினர், அதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முழுத் தகுதியுடன் பணியில் உள்ளனர். வெள்ளம், இடிபாடுகள் போன்ற பேரிடர்கள் நேரும்போது, இவர்கள் விரைந்து புயலெனப் புகுந்து மக்களைக் காப்பர். தீயணைப்புப் பிரிவினர் தங்களுக்கெனத் தனி மீட்புத் திறன்களைக் கொண்டுள்ளனர். இவர்களைப் போன்று, இந்தச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரும் தனிப் பயிற்சியும் தகுதியும் பெற்று தங்கள் பணிகளைச் செய்வார்களா அல்லது, அவ்வப்போது வழக்கம் போல மகளிர் காவலர்களிலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்ட தனிப் பிரிவினராகத தொடர்வார்களா என்பதெல்லாம் உறுதிப்படவில்லை.

மேலும், இப்போது காவல் தலைவர் நிலையில் பவனேசுவரி என்பார் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் தலைவராகப பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு மேல் காவல் துறை பொது இயக்குநர் வரை பல மேல்நிலைப் படிகள் உள்ளன. அவர்களது கட்டுப்பாடும் மேலாண்மையும் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

வேறுபட்ட கடமைகள் இல்லை

இந்த நிலையில், அவர்கள் புதிதாக அல்லது தனியாக எத்தகைய கடமைகளை ஆற்றப்போகின்றனர் என்பது புலப்படவில்லை.

பெண்கள், குழந்தைகள் ஆகியோர் தொடர்புள்ள குற்றங்கள் பெரிதும் இல்லங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் நான்கு சுவர்களுக்குள் நடப்பனவாகவும் இருக்கலாம். பொது இடங்களில் நடப்பனவும் எதிர்பாராத நிகழ்வுகளாகவே அமைந்துவிடுகின்றன.

நெருக்கடி நிலைமைகளில், தனி இடத்திலோ, பயணத்திலோ சீண்டல்கள் அல்லது அத்துமீறல்கள் நடக்கும்போது அவற்றை உடனடியாகக் காவல்துறையினருக்குத் தெரிவிக்கத் தனி எண்களும் செயலிகளும் தற்போது நடைமுறையில் உள்ளன. இவற்றை மீறித்தான் குற்றங்கள் நடைபெறுகின்றன.

குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்கான அறிவியல் முறைமைகள் இன்று வழக்கத்திற்கு வந்துவிட்டன. ஆங்காங்குள்ள தெருக் கண்காணிப்புப் படக்கருவிகள், கைபேசித் தூண்களின் பதிவுகள் போன்றவற்றின் துணையுடன் குற்றவாளிகள் எளிதில் பிடிபடுகின்றனர்.

ஆனாலும், குற்றவாளிகளுக்குக் குறுகிய காலத்தில் கடுமையான தண்டம் வழங்குவதன் வாயிலாகவே குற்றங்களைக் குறைக்க முடியும் அல்லது தடுக்க முடியும். இதுவே இப்போது பெருஞ்சுமையாக உள்ளது. குற்றவாளிகள் தப்பிக்க அரசியல் அல்லது மேல்நிலை அழுத்தங்களும் நுழைகின்றன. இவற்றையெல்லாம் முதல்வர் விசய் எப்படி முறைப்படுத்தப் போகிறார் என்பது வினாவாக எழுகிறது.

காவலர் மன நிலை மாறவேண்டும்

மகளிரையும் குழந்தைகளையும் காக்கும் காவல் படையினர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும், அவர்களது இன்றைய மனநிலை முழுமையாக மாறவேண்டும்.

பொது மக்களுக்கான பணிகளில் அவர்களைக் காக்கும் கடமைகளில் தாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்ற மனப்போக்கை அவர்களிடம் உருவாக்கவேண்டும். இல்லையெனில், காவல் துறையில் இருக்கின்ற பல பிரிவுகளில் இதுவும் மற்றொரு பிரிவாக மாறிவிடும் நிலைதான் மிஞ்சும். பெண்களுக்குத் தனிப் பயிற்சி கொடுத்துத் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதற்கான பயிற்சிகளைப் பரவலாகத் தரவேண்டும்.

மாறாக, வழக்கமான காவல் துறையினர் செய்கின்ற பணிகளையே இவர்களுக்கும் ஒதுக்குவதால் எத்தகைய தனிப்பயனும் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உண்டு.

மகளிர் காவல் நிலையங்கள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டிருந்தும் அவை குற்றங்களைத் தடுக்கும் நிலையில் இல்லாமல், குற்றங்களைப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தும் வாய்ப்புகளை மட்டுமே பெற்றுள்ளன.

இது போன்ற மற்றொரு பிரிவாக இந்த அதிரடிப்படையும் இருந்துவிடக்கூடாது.

இந்த அதிரடிப் படையினைத் தலைமை தாங்கி இயக்கும் பொறுப்பிலுள்ள உயர் அலுவலர்கள் வழக்கமான பணிகளில் இருந்து வருவோராக மட்டுமே இருப்பதால், அவர்களுடைய பணி நடைமுறைகளும் வாடிக்கையானதாகவே இருந்து விடக்கூடாது.

தனிப் படைப் பிரிவு மட்டும் பயன் தராது

விரைவில் தீர்வு காணவேண்டும் என்னும் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கென மேலாண்மைத் தீர்ப்பாயம் பல மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், உயர் நீதிமன்றங்களில் குவிந்திருக்கின்ற தீர்வு காணாத வழக்குகளைப் போன்று அங்கும் வழக்குகள் குவிந்தன. இதனால், தனிப்பயன் ஏதுமில்லை என்று தீர்ப்பாயத்தின் பணிகள் உயர்நீதிமன்றங்களுக்கே மாற்றப்பட்டன.

பசுமைத் தீர்ப்பாயம் என்று தனியே ஒன்று அமைக்கப்பட்டபோது, அங்கு நீதியர்கள் பணியமர்த்தப்படாமல் அவ்வப்போது தேக்க நிலைகாணப்படுகிறது. உயர்நீதிமன்றமே இப்பணிகளையும் மேற்கொண்டிருந்தால், பலரில் ஒருவர் இந்தப் பசுமை வழக்குகளையும் முடித்துத் தந்திருக்கலாம்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான குற்றச்சாட்டுகளை விரைவில் முடிக்கத் தனி நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அங்கும் வழக்குகள் ஆண்டுக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.

இவை போன்று வழக்கமான பணிகளுக்காக மட்டுமே தனியொரு பிரிவு தொடங்குவது பல வேளைகளில் பணி முடக்கத்தையோ அல்லது பணிச்சுமை மிகுதியையோ ஏற்படுத்திவிடுவதைக் காணலாம். நோக்கம் சிறப்பானதாக இருந்தாலும், செயல்முறைகள் அந்த நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.

எண்ணற்ற மகளிர் காவலர்களும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் இளஞ்சிவப்புக் காவல் பிரிவினரும் செய்யும் பணிகளைத்தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினரும் செய்வார்கள் என்றால், பயனேதும் கிடைக்கப் போவதில்லை.

மாறாக, புதிய நடைமுறைகளையும் செயல்முறைகளையும் உருவாக்கிக் கொள்ளவேண்டும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நோக்கங்களை மட்டும் பார்க்கின்றபொழுது, அவை வழக்கமான காவல் பணிகளாகவே இருக்கின்றன. தற்போது இருப்போர் மேற்கொள்ளும் பணிகளாகவே இருக்கின்றன.

வழக்குகளை நடத்தும் முறையில் கால மாறுதலுக்கேற்ற மாற்றங்கள் வராமல் நீதிமன்றங்களில் தேக்கம் தொடர்கிறது. அதுபோலத்தான் காவல் பணியாளர்களின் மனதிலும் போக்கிலும் நோக்கிலும் உள்ளத்திலும் உணர்விலும் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் வராமல் தீர்வு கிடைக்கப்போவதில்லை.

சீறிப் பாயும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையாக அதை மாற்றாவிட்டால், பயனேதும் வரப்போவதில்லை.

பெண்களின் காப்பினை உறுதி செய்துவிட்டார் விசய் என்ற பரப்புரைக்குப் பயன்படும் ஒன்றாகவே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இருந்துவிடக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button