கட்டுரைகள்வரலாறு

மருத்துவ கல்லூரியிலிருந்து மக்கள் போராட்ட களத்துக்கு!

கோவை வழக்குரைஞர் கே.சுப்ரமணியன்

(6.6.2026-ம் நாள் தோழர் சி.ஆரின் 111-வது பிறந்த நாள்)

இருபத்தெட்டு ஆண்டுகள் (1964 – 1992) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து மறைந்த தோழர் சி.ராஜேஸ்வர ராவ் வசதி படைத்த பெரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

அவர் பாகத்துக்கு கிடைத்த பரம்பரை சொத்து விவசாய நிலங்கள் முழுவதையும் விற்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்கொடையாகக் கொடுத்தவர்.

1931-ம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பாடத்தில் பட்டம் பெற காசிக்கு சென்றார். அங்கு பயின்ற மாணவர்களிடையே “மார்க்சீய படிப்பு வட்டம்” தீவிரமாகச்செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாணவன் ராஜேஸ்வர ராவும் மார்க்சீய தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார்.1931-ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

விஞ்ஞான பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு வகுப்பில் சேர்ந்தார். மருத்துவ கல்லூரி மாணவனாக இருந்துகொண்டே மருத்துவமனை ஊழியர்களின் சங்கத்தை தொடங்கி அவர்களுக்கு வழிகாட்டினார். விசாகப்பட்டினம் துறைமுகத் தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தைத் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்தார்.

1936-ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவனாக இருந்த போது, மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை புரிவதைவிட புரட்சிகரமான சமூக மாற்றம் காண உழைப்பது என்ற முடிவுடன் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியரானார். தனது சொந்த மாவட்டமான கிருஷ்ணா மாவட்டத்தில் (விஜயவாடா) குத்தகை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டும் வேலைகளில் முழுமூச்சாக இறங்கினார். மாணவர்கள், இளைஞர்களையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்தார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலேயே பெரிய ஜமீன்தார் செல்லபள்ளி ராஜா அவருக்கு மட்டும் 17,000 ஏக்கர் செழிப்பான விவசாய நிலம் சொந்தம். பல தலைமுறைகளாக அவரது பூமியில் விவசாயம் செய்து வந்த ஏழை, எளிய விவசாயிகளை திடீரென்று விவசாய நிலத்தைவிட்டு வெளியேற்ற அந்த ஜமீன்தார் நடவடிக்கையை (1938-ம் ஆண்டில்) மேற்கொண்டார். வெளியேற மறுத்த விவசாயிகள் மீது குண்டர் படையை ஏவிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார். அந்த குத்தகை விவசாயிகளை சங்கமாக திரட்டி ஜமீன்தாரின் சட்ட விரோதமான நிலவெளியேற்றத்தை தடுத்து நிறுத்தினார். சி.ஆரின் முதல் மக்கள் போராட்ட அனுபவம் இதுவே.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு வரலாற்றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்திய போராட்டம் “தெலிங்கானா ஆயுதங்தாங்கிய போராட்டம்” (1946-1950) ஹைதராபாத் நிஜாம் மன்னனை எதிர்த்து தெலிங்கானா மாவட்டங்களில் விவசாயிகள் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத்திய வீரஞ்செறிந்த ஆயுதப்போராட்டத்தின் முன்னணித் தளபதி தோழர் சி.ஆர்.கம்யூனிஸ்ட் கட்சி மன்னனுக்கு எதிராக 4000 கிராமங்களில் போட்டி அரசாங்கத்தையே நடத்தியது. ஜமீன்தார்களின் கைகளிலிருந்த 48,000 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து ஏழை எளிய குத்தகை விவசாயிகளுக்கு நிலவிநியோகம் செய்து வரலாறு படைத்த போராட்டமது. இந்த மக்கள் எழுச்சி போராட்டத்தை 1950-ம் ஆண்டு வாபஸ் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக தோழர் சி.ஆர்.தலைமையில் தோழர்கள் எஸ்.ஏ.டாங்கே, அஜாய் கோஷ் மற்றும் பசவபுன்னையா தூதுக்குழு மாஸ்கோ சென்று தோழர் ஸ்டாலினைச் சந்தித்து விவாதம் நடத்தியதும் கட்சியின் வரலாறாகும்.

தோழர் சி.ஆர். கட்சித்தலைமைப் பொறுப்பில், இருந்த காலத்தில்தான் அவரது முன்முயற்சியால் நாடு முழுவதும் விவசாயத்தொழிலாளர்களின் கோரிக்கைப் போராட்டங்கள் நடத்துவதற்கு 1968 செப்டம்பர் மாதம் பஞ்சாப் மாநிலம், மோகாவில் “அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம்” உதயமாயிற்று.

1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் அதிகாலை கிழக்கு பாகிஸ்தானில் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான “முக்தி வாஹினி” விடுதலைப்படைக்கு ஆதரவாக இந்திய ராணுவத்தை இந்திரா காந்தி அனுப்பினார். வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த ராணுவ நடவடிக்கை செய்தியை முதன் முதலாக தோழர் சி.ஆர். மற்றும் இந்திரஜித் குப்தா ஆகியோரிடம் தனது இல்லத்துக்கு பிரதமர் இந்திராகாந்தி நேரில் வரவழைத்த தகவல் சொன்னார். ராணுவ நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் கேட்டார் என்று சி.ஆர்.நினைவஞ்சலிக்கூட்டத்தில் இந்திரஜித் குப்தா தெரிவித்தார்.

தோழர் சி.ஆர். பொதுச்செயலாளராக இருந்த காலத்தில் கட்சி அணிகள் முழுவதும் களத்தில் இறங்கி நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம். 1970 “நிலமீட்சிப் போராட்டமாகும்”. தமிழகத்தில் தோழர் எம்.கல்யாணசுந்தரம் திருச்சி நங்கவரம் பண்ணையிலும், பாலதண்டாயுதம் நீலகிரி மாவட்டம் ஓவேலி எஸ்டேட்டிலும், தோழர் தா.பா. வர்ஷநாடு பண்ணையிலும், நல்லகண்ணு நாங்குனேரி பண்ணையிலும் நிலத்தைக் கைப்பற்ற இறங்கி கைதாகி சிறை சென்றதை நாமறிவோம். அந்த சிறை நிரப்பும் அகில இந்திய போராட்டம் கட்சி வாழ்க்கையில் முத்திரை பதித்த போராட்டமாகும்.

தோழர் சி.ஆர். கட்சியின் முழுநேர ஊழியர்கள்தான் கட்சியின் விலைமதிப் பில்லாத சொத்து என்றும், அவர்கள் புரட்சி செய்வதையே தங்கள் வாழ்நாள் தொழிலாகக் கொண்டவர்கள் என்றும் சொல்வார். அவர்கள் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார் என்று தோழர் சி.ஆர். நினைவஞ்சலிக் கூட்டத்தில் தோழர்கள் இந்திரஜித் குப்தா, ஏ.பி.பரதன், ஜெகனாத் சர்க்கார் ஆகியோர் பேசியிருக்கிறார்கள். அவரது எளிமையான வாழ்க்கையை நினைவு படுத்தினார்கள்.

தோழர் சி.ஆர்.கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக உலக கம்யூனிஸ்ட் நாடுகள் மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்திலும், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவராற்றிய பங்களிப்பு பணிகளைப் பாராட்டியும் சோவியத்நாடு அந்த நாட்டின் உயரிய விருதான “லெனின் விருதை” அவருக்கு 1974ம் ஆண்டில் வழங்கி கவுரவித்தது. பல்கேரியாவின் “ஜார்ஜ் டிமிட்ரோவ் விருது”, செக்கோஸ்லாவேக்கியாவின் “மக்கள் நண்பன்” விருது, வியத்நாம், மங்கோலியா நாட்டு விருதுகள் என்று பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர். இவ்வளவு விருதுகள் பெற்றிருந்தும் சாதாரண கட்சி உறுப்பினர்களின் தோளில் கைபோட்டு நெருக்கமாக அன்புடன் உரையாடும் உயரிய பண்பு படைத்தவர் என்று அவருடன் பழகிய தலைவர்கள் அனைவரும் தங்கள் நினைவுகளைப் பதிவு செய்திருக் கிறார்கள்.

1994 ஏப்ரல் 9-ம் நாள் இயற்கையெய்துவதற்கு முன் அவரெழுதிய உயில் கடைசி விருப்பம் அதிசயமானது என்று பத்திரிக்கைகள் எழுதின” எனது உடலை ஊர்வலமாக பேரணியில் எடுத்துச்சென்று பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது. எனது உடல்மீது எந்தவிதமான மதச்சடங்கும் செய்யக்கூடாது. எனது பூர்வீக சொத்து முழுவதையும் விற்று ஏற்கனவே நான் கட்சிக்கு கொடுத்துவிட்டேன். எனக்கென்று எந்த சொத்துமில்லை. எனது வேஷ்டிகள், சட்டைகளை தீயில் போட்டு வீணாக்காமல், தேவைப்படும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு கொடுத்துவிடவும். எனது வீட்டு நூலக புத்தகங்களை கட்சிக்கு கொடுத்துவிடவும்.

ஆந்திர தோழர்கள் அவரது மறைவுக்குப்பின்னர் “தோழர் சி.ஆர். அறக்கட்டளை” என்ற அமைப்பை நிறுவி அதன் சார்பில் அவரது நினைவாக “மார்க்சீய சிந்தனைக் கருத்தரங்குகளை” அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளன்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button