
வைகாசி விசாகத்தன்றுதான் திருவள்ளுவர் பிறந்தார் என்று கூறி ஆளுநர் அர்லேகர், காவி உடை, கழுத்தில் உத்திராட்ச மாலை, கட்டுக் கட்டாய் விபூதிப்பூச்சுடன் கூடிய படத்தை வைத்து பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். தை மாதம் மூன்றாம் தேதியை தமிழ்நாடு திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடி வருகிறது. அதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?
ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி செய்ததை இவரும் செய்கிறார். ஒரே அச்சில் வடிக்கப்பட்டவர்கள்தானே! இயல்பாகவே கண்டனங்கள் எழுந்தன. உடனே வலதுசாரி மதவெறி இந்துத்துவ சக்திகள் தலையை விரித்துப்போட்டு பேயாட்டம் ஆடுகின்றன!
1904ல் வள்ளுவர் படத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களாம். கல்கியில் ஒரிஜினல் படம் வந்ததாம்! 1959 வரை வள்ளுவர் தாடி இல்லாமல், தலையில் குடுமியுடன், காவி அணிந்த துறவியாகத்தான் இருந்தாராம். கல்கி, ஏதோ வள்ளுவரின் புகைப்படத்தை எடுத்ததுபோலவும், 1935 ல் படம் வரைந்தவர் வள்ளுவரோடு பழகி வந்தவர் போலவும், சமூக வலைத்தளங்களில் பின்னி எடுக்கிறார்கள்.
1959ல் வேணுகோபால் ‘சர்மா’ என்பவர்தான், மத அடையாளங்களை நீக்கி, வெள்ளை உடை அணிந்தவராக மாற்றி வரைந்தாராம். கலைஞர்தான் அதனைப் பரப்பி, அது தான் திருவள்ளுவர் என்று நம்பவைத்துவிட்டாராம்.
1959ல் திருவள்ளுவர் படத்துடன் இந்திய அஞ்சல்துறை, ஒரு அஞ்சல் தலை (ஸ்டாம்ப்) வெளியிட்டது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. அஞ்சல்துறைக்குப் பொறுப்பான போக்குவரத்து, தகவல் தொடர்புத்துறை அமைச்சர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பி. சுப்பராயன். தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராஜர். எல்லோரும் காங்கிரஸ்காரர்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்க்கட்சியாகக் கூட இல்லை.
அவர் துறவியாம். அடப்பாவிகளா! அவரது காமத்துப்பால் குறள்களைத் தெளிவுரையோடு படித்துப் பாருங்கள். அந்த மனுஷனைப் போயி, முற்றும் துறந்த முனிவர் என்று சொல்கிறீர்களே, அடுக்குமா?
அப்புறம் அது என்ன சனாதனத் துறவி? சனாதனம் என்றால் என்ன? ஆளாளுக்கு ஒரு பொருள் சொல்கிறார்கள். சனாதனம் என்பது நித்தியமானதாம், மாறவே மாறாதாம்! உலகத்தில் மாறாதது என எது உள்ளது. எல்லாமும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை அறிவியல் எப்போதோ நிரூபித்துவிட்டது. கோவிட் வந்தவுடன் எல்லா சனாதனியும் மருத்துவமனைக்குத்தான்போனார்கள்.
இந்தியாவிலேயே, மிக அதிகமான கல்வெட்டுகள், ஆயிரக்கணக்கில் தமிழில் தான் கிடைத்திருக்கின்றன். வள்ளுவர் வாழ்ந்த காலத்துக்கும் முந்தைய எழுதப்பட்ட ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை எதிலும் சனாதனம் என்ற சொல் ஒரே ஒரு முறை கூட வரவில்லை. வள்ளுவர் தான் எழுதவில்லை. உலகில் பல இடங்களில் மனிதர்கள் பேசத்துவங்கும் முன்பாகவே எழுத்துக்களை உருவாக்கி பதிவு செய்துள்ள தமிழ்ச்சமூகம், சனாதனம் என்ற சொல் புழக்கத்தில் இருந்தால் ஒரு இடத்திலாவது எழுதி வைத்திருக்காதா?
இப்போதாவது சொல்லுங்கள்! “சனாதனம்”, வருணாசிரமத்தை ஏற்கிறதா, மறுக்கிறதா? மறுக்கிறது என்று யாராவது சொன்னால், வருணாசிரம விதிகளை மீற அவர் ஆயத்தமாக இருக்கிறாரா?
எல்லாமே நிர்ணயித்தபடி தான் நடக்கிறது. அது தான் விதி என்பவர்களே! அந்த விதியை மனிதன் முறியடிக்கலாம் என்கிறார் வள்ளுவர். “ஊழையும் உப்பக்கம் காண்பர்….” என்ற குறளைப் படியுங்கள்.
அவன் நம் தலையில் என்ன எழுதிவைத்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அவனன்றி ஓரணுவும் அசையாது, தெய்வம்தான் எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது என்பவரா நீங்கள்? செய்ய முடியாதென சாமியே மறுத்தாலும், மனிதனால் செய்து முடிக்க முடியும் என்று வள்ளுவர் கூறுவதை “தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” குறளில் படியுங்கள்.
பகவத்கீதையில் சனாதனமும்உண்டு; வர்ணாசிரமமும் உண்டு. இரண்டும் ஒன்று தான் என்று ராமகிருஷ்ண மடம் வெளியிட்ட மொழிபெயர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கீதையில், நான்கு வர்ணத்தை நானே படைத்தேன் என்கிறார் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா!
வள்ளுவருக்கு அதெல்லாம் உடன்பாடில்லை. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று அடித்து நொறுக்குகிறார். தமிழக அரசியலில் பலரும் இந்த “வசனத்தை”ப் பேசுவதைப் பார்க்கலாம்.
ஒருமனிதன் தன்னை நிரூபித்துக்கொள்ள அவனது புறத்தோற்றம் எப்படி இருக்கவேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. உலகம் எவற்றையெல்லாம் பழிக்கிறதோ, அவற்றை எல்லாம் விட்டொழித்துவிடுவதே போதுமானது என்பதே வள்ளுவர் வாக்கு. “மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின்”.(அதிகாரம் 28- கூடாவொழுக்கம்). அதாவது, உலகம் பழிக்கும் தீய செய்கைச் செய்யாமல் விட்டுவிட்டால் போதும், புற அடையாளமாக நீண்ட சடைமுடியும், தாடியும் வளர்க்க வேண்டாம், தலையை மொட்டையடித்துக்கொள்ளவும் வேண்டாம் என்று அதற்குப் பொருள்.
அப்படிச் சொன்னவருக்கு, தலையில் சடாமுடி வைத்து, நீண்ட தாடி வைத்தது மட்டுமல்லாமல், அவர் திருநீறு பட்டை, ருத்திராட்சக் கொட்டை, அப்புறம் பூணூலும் போடவேண்டும், அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டுப்போகட்டும், அவர் சொன்னதற்கு எதிராகவே இருந்தாலும், நான் சொன்னபடிதான் என அடம்பிடித்து விவாதமாக்குவது மடமையிலும் மடமை அல்லவா?
இப்படிப்பட்டவர்களை மகாகவி பாரதி, தனது சுயசரிதையில் “இந்த லூசுப்பயல்களுக்கு எப்படிடா சொல்லிப் புரியவைப்பேன், நெஞ்செல்லாம் எரியுதுடா” என்று திட்டித் தீர்க்கிறார்.
“அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்…
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கு இவர்க்கனெது உள்ளம் எரிவதே!”
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில், இந்து, கிறிஸ்துவம், முஸ்லீம் என்று எந்த மதமும் இல்லை. ஆனால் சைவம், சமணம், பெளத்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. வள்ளுவர் தனது 1330 குறள்களிலும் எந்தச் சமய அடையாளத்தையும் காட்டவில்லை.
ஆனால் அவர் காலத்தில் நிலவிய நம்பிக்கைகளை அவர் குறள்களில் வைத்திருக்கிறார். ஆனால் அவற்றைப் போற்றி எதுவும் சொல்லவில்லை. எல்லாவற்றையும் கடந்து மனிதனால் முன்னேற முடியும், நன்றாக வாழும் மனிதனே கடவுளாகிறான் என்பதே வள்ளுவர் வகுக்கும் மறை. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”.
வள்ளுவர் சிலை ஒரு கற்பனை வடிவம்தான். எதையும் உருவமாக வைக்கும்போது தான் நெஞ்சில் பதிகிறது. அவர் காவி அணிந்தாரா, வெள்ளை அணிந்தாரா யாருக்குத்தெரியும்?
ஆனால் இப்போது அவருக்கு காவி அணிவிப்பதற்கு வேறு அரசியல் உள்நோக்கம் உள்ளதை அறியாதவர்யார்? அவர்கள் வள்ளுவருக்கு மட்டுமா காவிச் சாயம்பூசுகிறார்கள்?
வர்ணாசிரமத்தைத் கிழித்தெறிந்து, இந்துவாக நான் சாக விரும்பவில்லை என்று கூறி பவுத்தமதத்தில் சேர்ந்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்து வாழ்நாளெல்லாம் களமாடிய நாத்திகரான தந்தைபெரியார், ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று அழைத்து, மதம், சாதி எதையும் பார்க்காத எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் மீது, ஏன் கலைஞர் சிலை மீதும் கூட காவிச்சாயம் ஊற்றுவதும், காவி உடை உடுத்துவதுமாக ஒரு மதவெறிக் கூட்டம் தமிழ்நாட்டில் அலைந்து கொண்டிருக்கிறது அறிவியலுக்குப் பொருந்தாத தனது அழுகி நாற்றமடிக்கும் கருத்துக்களை, அறிவியல் உருவாக்கித் தந்த நவீன சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்புகிறது.
எனவேதான் அதனை எதிர்த்து நிற்க வேண்டியது தமிழர்களின் கடமையாகிறது.
வள்ளுவர் மீது அவர்கள் காட்டும் அக்கறை உண்மை என்றால், கங்கைக்கரையில் நிறுவதற்காக தருண் விஜய் என்ற ஆர்எஸ்எஸ்காரர் எடுத்துச் சென்ற வள்ளுவர் சிலையை அங்கு வைக்க முடியாமல் போனது ஏன்? அப்புறம் சங்கராச்சாரி சதுக்கத்தில் வைக்க முயன்ற போது, ஆதிசங்கரருக்கு பக்கத்தில் ஒரு தலித் கவிஞரின் சிலையை வைப்பதா என்று பூணூல் கூட்டம் பொங்கி எழுந்தது ஏன்? வள்ளுவர் சிலை துணியால் சுற்றப்பட்டு ஒரு பூங்காவில் எறியப்பட்டது ஏன்?
திருவள்ளுவர், மனிதநேயத்தின் உலகக் குரல், அறம் போதிக்கும் அழியாத ஆசான், உலகப் பொதுமறைத் தந்தை, மனித வாழ்வின் வழிகாட்டி, ஒழுக்கத்தின் ஒளிவிளக்கு,
தமிழ்நாடு படைத்து உலகத்துக்குத் தந்த ஞானி.
திருவள்ளுவர் இன்றிருந்திருந்தால், இந்தக் களைகளைப் பறித்து எறிந்திருப்பார்.
வள்ளுவரின் பெயரால் எழுப்பப்படும் அறமற்ற, தீய குரல்களை வள்ளுவர் வழிநின்று முறியடிப்போம்.