
வங்கி ஊழியர் தொழிற்சங்க இயக்கத்தில் தாரகையாய் ஜொலித்த, மாபெரும் தலைவர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தியின் நூற்றாண்டு வருகிற ஜூன் 2ம் தேதியில் நிறைவடைகிறது.
ஒரு வக்கீல் குமாஸ்தாவின் மகனாக 1926 ஜூன் இரண்டில் பிறந்து, அரும்பாடு பட்டு கல்வி கற்று, அந்த வறுமையிலும் வங்கப் பஞ்சத்தில் மக்களைக் காப்பாற்றுவதற்காக பணியாற்றி, பின்னர் ஒரு வங்கி ஊழியராக நியமனம் பெற்று, தன் குடும்பத்தை மட்டுமல்ல, அனைத்து வங்கி ஊழியர்களின் குடும்பங்களையும், ஏன் வங்கிகளையுமே காப்பாற்றுவதற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்து 02.05.2003ல் மறைந்த தாரகேஷ்வர் சக்கரவர்த்தியின் நூற்றாண்டையொட்டி,
வங்கி ஊழியராகவும், வங்கி தொழிற்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நிர்வாகியாகவும் உள்ள ப.பா.ரமணி “வங்கம் தந்த வணங்காமுடி” என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார்.
வங்கி ஊழியர்களின் துவக்க கால வாழ்க்கை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதையும், பிரபாத்கர், பர்வானா ஆகிய தலைவர்கள் வங்கி ஊழியர் சங்கத்தைத் துவக்கி பல துயரங்களைத் தாங்கி அதனை வளர்த்தெடுத்த வரலாற்றை சுருக்கமாக முன்வைத்து விட்டு, தாரகேஸ்வரின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நூல்.
வங்கி ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்க 1952ல் கே.சி.சென் தீர்ப்பாயம், 1954ல் நீதிபதி கஜேந்திர கட்கர் தீர்ப்பாயம், 1960ல் கே.டி.தேசாய் தீர்ப்பாயம் என பல நடுவர் மன்றங்கள் நியமிக்கப்பட்டும், அவற்றினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை உணர்ந்து, இனி எங்களுக்கு தீர்ப்பாயங்களே வேண்டாம், இருதரப்பு பேச்சு வார்த்தைகள் மூலமாகவே ஒப்பந்தம் என்ற வலுவான கோரிக்கையை 1964ல் முன்வைத்து வங்கி ஊழியர்கள் போராடத் துவங்கிய வரலாற்றை இது உள்ளடக்கியுள்ளது.
பர்வானாவின் மறைவுக்குப் பின்பு 1980ல் தாரகேஷ்வர் சக்கரவர்த்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் (ஏஐபிஈஏ) தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அவர், மறையும் வரையில் நிகழ்த்திய சாதனைகள் பல. அனைவராலும் “தாரக்தா” என்று அன்போடும் மரியாதையோடும் விளிக்கப்பட்டவர்.
1980களின் துவக்கத்தில் கணினி (கம்ப்யூட்டர்) அறிமுகமாகிறது. கணினியை நுழைய விட மாட்டோம் என்று பல துறைகளில் மொன்னையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, அறிவியலின் வளர்ச்சிக்குத் தடை போட முடியாது என்பதை உணர்ந்து, வங்கிகளில் எவ்வளவு திறன் கொண்ட கணினிகளைப் பயன்படுத்துவது என்று வரையறை வைத்து 1983ல் தாரகேஷ்வர் ஒப்பந்தம் போட்டார்.
அன்று சிபிஎம் தொடர்புடைய பல்வேறு சங்கங்கள் இதற்காக அவரை மட்டுமல்ல, ஏஐபிஈஏ, ஏஐடியுசி, ஏன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைக் கூட பலமாகத் தூற்றின. ஆனால் அது எவ்வளவு மிகச் சரியான ஒப்பந்தம் என்பதைக் காலம் தெளிவுபடுத்தியது.

1992ல் பங்குச் சந்தையில் நிலவும் மோசடிகளை தாரகேஷ்வர் வெளிக்கொணந்தார். இது வங்கி ஊழியர்கள் நலன் குறித்தது அல்ல; நாட்டைக் காப்பாற்றுவதற்கானது. ஏஐடியுசி பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா உடன் நிற்க அது இந்திய அளவில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது.
1993இல் வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதிலும் மூன்றாவது நலனாகத்தான் ஓய்வூதியம் வேண்டும் என்று சிபிஎம் தொடர்பான சங்கங்கள் அவரைத் தூற்றின. ஓய்வூதியத் திட்டத்திலிருந்து 40% ஊழியர்களை விலக்கி நிறுத்தின. ஆனால் பல ஆண்டுகள் கழித்து அந்த ஓய்வூதியத்தின் நலன்களைக் கண்ணாரப் பார்த்து, ஓய்வூதியத்தில் சேர்வதற்கான இரண்டாவது வாய்ப்பை வாங்கித் தருமாறு ஏஐபிஈஏ-விடம் அதே ஊழியர்கள் வேண்டுகோள் வைத்தனர்.
அதனைக் கையாளும் பொறுப்பு, தாரகேஸ்வர் மறைவுக்கு பின்பு, இன்றைய பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலத்திடம் வந்து, அதுவும் நிறைவேற்றப்பட்டது.
தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளில் கடனாகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாங்கி ஏமாற்றிய கார்ப்பரேட் பெரும் முதலாளிகளின் பட்டியலை வெளியிட வங்கிகளும் ஒன்றிய அரசும் மறுத்தன. மிகுந்த துணிச்சலோடு தாரகேஷ்வர் அந்தப் பெயர் பட்டியலை “கருப்பு புத்தகம்” என்ற தலைப்பில் வெளியிட்டார்.
இதற்காக டாட்டா, டிஸ்கோ, சிஐஐ போன்ற முதலாளித்துவ குழுமங்கள் தம்மை அவமதித்து விட்டதாக அவர் மீது வழக்கு தொடர்ந்தன. “வெளியிட்ட செயலுக்காக பெருமைப்படுகிறேன் இதற்காக தண்டிக்கப்பட்டால் சிறை செல்லவும் தயார்” என்று முழங்கினார் தாரகேஷ்வர்.
நாடெங்கும் சிறு வங்கிகளை உருவாக்கி, இந்தியாவின் வங்கிக் கட்டமைப்பை உடைக்க ஒன்றிய அரசு முயன்ற போது, அதுவரை தன்னைத் தூற்றிய சங்கங்களையும் ஒருங்கிணைத்து வங்கி ஊழியர்களின் ஐக்கிய முன்னணி (யுஎஃப்பியு) உருவாக்குவதிலும், அவர்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதிலும் மிகப்பெரிய பங்கு வகித்தவர் தாரக்.
கியூபாவில், ஃபிடல் காஸ்ட்ரோ பொதுக் கூட்டங்களில் மூன்று, நான்கு மணி நேரங்கள் பேசுவார் என்று அறிந்திருக்கிறோம். அதேபோல கூட்டங்களில் நான்கு மணி நேரம் வரை கூட அலுப்புத் தட்ட விடாமல் பேசக்கூடியவர் தாரக். தேதி, நாள், இடம், நபர் அனைத்து விவரங்களையும் எந்தக் குறிப்பையும் பார்க்காமல் பேசுகிற நினைவாற்றல் கொண்டவர். அதுபோன்றே எழுதிக் குவித்தவர்.
தோழர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தியை ஒரே வரியில் வரைவது என்றால், “அவருடைய லட்சிய நோக்கு, கருணை உள்ளம், நேர்மை, எளிமை, தொலைநோக்கு, விடாமுயற்சி, துணிவு, தோழர்கள் மீதான அன்பு, வங்கி துறையின் நலன் மீதான அக்கறை, விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல், ஓய்வறியா உழைப்பு, இவை எல்லாம் என்னை கவர்ந்த குணாதிசயங்களாக எனக்கு உந்துசக்தியாக இருந்துள்ளன” என்று இன்றைய பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், நூலின் முன்னுரையில் எழுதி இருப்பதைச் சொல்லலாம்.
வங்கி ஊழியர் இதயத்தில் மட்டுமல்ல, முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட அனைவர் மனங்களிலும் தோழர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தி நிலைத்து வாழ்வார்.
பல தரவுகளைச் சரியாக கையாண்டு புத்தகத்தை எழுதியுள்ள ப.பா.ரமணி, விடுதலைக்குப் பின் 19.011982ல் நடந்த முதல் பொது வேலைநிறுத்தத்தில், மறியல் போராட்டத்திற்கு தலைமையேற்றுப் போராடி உயிர் நீத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், தியாகி ஞானசேகரனின் பெயரைக் குறிப்பிட மறந்து விட்டார். அதேபோல வலிமை மிக்க அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை சீர்குலைத்து பிளவுபடுத்தியவர் யார் என்பதையும், கணினி ஒப்பந்தம், ஓய்வூதிய ஒப்பந்தம் ஆகியவற்றில் அவரைப் படுமோசமாக தூற்றியவர்கள் யார் என்பதையும் குறிப்பிட மறந்து இருக்க மாட்டார்; ஒற்றுமை கருதி விட்டிருப்பார்.
வங்கி ஊழியர் இயக்கத்தையும், இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தையும் புரிந்து கொள்வதற்கு ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் வெளியீடாக வந்துள்ள “வங்கம் தந்த வணங்காமுடி” நூலின் விலை வெறும் 100 ரூபாய்தான்.
தொழிற்சங்க ஊழியர்களும், வரலாற்று ஆர்வலர்களும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது.