மாநில செயலாளர்

இடது அரசியல்தான் மாற்று; அதுவே எதிர்காலத் திசை

மு.வீரபாண்டியன்

தோழர்களே வணக்கம்!

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளுக்காக நாம் காத்திருக்கிறோம்.

கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால், நாம் மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிறப்பான வெற்றியை பெறும் என நாம் திடமாக நம்புகிறோம்.

பிஜேபியின் அரசியல் கணக்குகள் சாதாரணமானதல்ல, அது மிக, மிக ஆபத்தானது.

மேற்கு வங்க பிஜேபி தேர்தல் பிரச்சார முறைகள், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள், அதே முறைகள் தமிழ்நாட்டில் எடுபடவில்லை, தமிழ்நாட்டின் அரசியல் களம் வேறு.

இங்கு பிஜேபி பிரச்சார முறைகள் எடுபடவில்லை.

அரசியல் எதுவுமில்லாமல், திரைக் கவர்ச்சி மூலம் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது, பிரச்சாரங்களில் அறிய முடிந்தது.

தொண்டு, சேவை, நாட்டு நலன் சார்ந்த அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டு, சிறந்த அரசியல் கருத்துக்களை கடந்து, இளைஞர்கள் சிலர் வெறுமனே திரைக் கவர்ச்சியால் ஈர்க்கப்படுவதும், ஜனநாயகத்திற்கு ஆபத்தானதுதான்.

மாற்றம், மாற்றம் என சிலர் பேசுகின்றார்கள். கட்சிகள் மாறுவது, தலைவர்கள் மாறுவது அல்ல மாற்றம்.

அரசியல், வர்க்க அரசியல்.

நிலவும் முதலாளித்துவ அரசியலுக்கு மாற்றாக, இடது அரசியல்தான் மாற்றாக எழ முடியும். எதிர்காலத்தில் அதுதான் திசை. அதுதான் பயணம்.

ராணுவ வலிமை கொண்ட நாடு, பிரிதொரு சிறிய நாட்டின் அதிபரை கடத்த முடிகிறது. இது அரச பயங்கரவாதம். இதனை கண்டிப்பது தான் இடது அரசியல்.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம், கலவரம்,

இன பாகுபாடுகளுக்குள் சில அமைப்புகள்.

மத வேறுபாடுகளுக்குள் சில இயக்கங்கள்.

அனைத்தையும் கடந்து ஒற்றுமைக்காக முன் எழும் பாட்டாளிகளின் ஒற்றுமை, உழைக்கும் மக்கள் ஒற்றுமை என்பதுதான் இடது முழக்கம். இடது அரசியல்.

மெய்தி, குக்கி என இரு பிரிவிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒற்றுமை என்பது தான் இடது முழக்கம்.

போர் கூடாது, இனப்படுகொலைகள் கூடாது. நான் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் என போப் பேசினாலும், அவருக்கு பெயர் இடதுசாரி. இன்னும் அதிகம் நீதி பேசினால், அவருக்கு பெயர் தீவிர இடதுசாரி, அதாவது அர்பன் நக்சல்.

ஆக நீதியின் குரல் இடது, அமைதியின் குரல் இடது, போர் எதிர்ப்பின் குரல் இடது.

தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், கேரளா, புதுவை ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் பிரச்சார முறைகள், தேர்தல் சீர்திருத்தத்தை கோருகிறது.

இந்தியா உலகின் மிகச் சிறந்த ஜனநாயக நாடு. இது தழைக்க வேண்டும்.

இந்திரஜித் குப்தா கமிட்டி தேர்தல் கால சீர்திருத்தங்கள், பரிந்துரைகள் மிக, மிக அவசியமாகிறது.

டாக்டர் கலைஞர் தனது நிறைவு காலத்தில் தேர்தல் சீர்திருத்தம் குறித்து பேசியது மிக, மிக சிந்தனைக்குரியது.

தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால், ஜனநாயகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது.

அதுதான் இடது சிந்தனை! இடது சிந்தனை வளர்க!

தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button