ஆம் ஆத்மியின் எழுவர் இணைப்பில் பா.ச.க.வின் பெருந்திட்டம்
பஞ்சாப் மாநிலச் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை ஆம் ஆத்மிக் கட்சியின் உறுப்பினர்கள் ஏழு பேர் பா.ச.க.வில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தில்லி முன்னாள் முதல்வர் கேச்ரிவாலின் ஆம் ஆத்மிக் கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் மூன்று, மாநிலங்களவையில் பத்து உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில், மாநிலங்களவையின் பத்து உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு மேலாக எழுவர் தனியாகப் பிரிந்து பா.ச.க.வில் இணைந்துள்ளதால், இது அரசமைப்புச் சட்டத்தின் கட்சித் தாவல் பிரிவுகளின் அடிப்படையில் ஏற்கத் தக்கது என்று பிரிந்தோர் கூறுகின்றனர்.
இதில் முடிவெடுக்கக்கூடிய கடமையுள்ள குடியரசுத் துணைத் தலைவர், ஆளுங்கட்சிக்கு எதிராகத் தீர்ப்புக் கூறுவார் என எதிர்பார்க்க இயலாது. அரசமைப்புச் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்ற விளக்கங்களுக்கும் மாறாக முடிவெடுக்கக்கூடாது என ஆம் ஆத்மிக் கட்சி மாநிலங்களவைத் தலைவருக்கு மடல் எழுதியது.
ஆனால், எதிர்பார்த்தது போலவே மாநிலங்களவைத் தலைவரான குடியரசுத் துணைத் தலைவர், ஆம் ஆத்மிக் கட்சியின் ஏழு உறுப்பினர்கள் பா.ச.க.வில் சேர்ந்ததைக் கட்சிகளின் இணைப்பு என்று முடிவெடுத்து ஒப்புதல் தந்துவிட்டார். அதாவது, பிளவு என்பதற்கு மாறாக இணைவு என்ற சொல்லினைப் பயன்படுத்தி இந்தத் தாவல் ஒப்புதல் பெற்றுள்ளது.
அடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லலாம். முடிவுகள் காண ஆண்டுகள் பல காத்திருக்கவேண்டும்.
இதன் எதிரொலியாக, பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பலர் பா.ச.க.வில் இணைந்து, அங்குப் பா.ச.க. ஆட்சி அமையப்போவதாகவும் செய்திகள் உலவுகின்றன.
அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?
அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது இணைப்பு, கட்சித் தாவல் பற்றி விரிவாக வரையறுத்துள்ளது. முதன்மை, அதாவது அடிப்படை அரசியல் கட்சி, அதில் ஏற்படுகின்ற பிளவு ஆகியவற்றைக் கூறியிருப்பதுடன், பிளவு ஏற்படும்போது அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அது விரிவாகப் பேசுகிறது.
பேரவைக் கட்சி என்பதற்கான விளக்கத்திலும், ஓர் உறுப்பினர் சார்ந்திருக்கும் முதன்மை அரசியல் கட்சிதான் (பத்தி 1பி) குறிக்கப்படுகிறது. ஓரிடத்தில் மட்டும் (பத்தி 8பி), கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வாக்களிக்கும் உறுப்பினர்களது தகுதி நீக்கத்துக்கு விலக்களிக்கும் அவையின் கட்சித் தலைவரது அறிக்கை பற்றிக் கூறப்படுகிறது.
கட்சிகளின் பிளவும் இணைவும்
கட்சியில் பிளவு என்பது ஒரு முதன்மை அரசியல் கட்சியில் ஏற்படுகின்ற பிளவுதான் என்பதை அரசமைப்புச் சட்டம் தெளிவாக்குகிறது.
இணைவு என்றாலும், முதன்மை அரசியல் கட்சி வேறு ஒரு கட்சியுடன் இணையவேண்டும். அடுத்து, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் இதில் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது இணைப்பிலுள்ள பத்தி 4 வெளிப்படையாகக் குறித்துள்ளது.
கட்சிப் பிளவு அல்லது இணைவு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு அவைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால், ஆளும் கட்சிக்குச் சார்பான தீர்ப்புகளையே அவர்கள் தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர்.
நீதிமன்றங்கள் இந்தத் தீர்ப்புகளில் தலையிடக்கூடாது என்று அரசமைப்புச் சட்டம் கட்டுப்படுத்தியிருந்தாலும், உச்ச நீதிமன்றம் தனக்குத் தலையிட உரிமையுள்ளது என்பதை நிலைநாட்டியுள்ளது.
முதன்மை அரசியல் கட்சி வேறு, பேரவை அரசியல் கட்சி வேறு என்றாலும், முதன்மை அரசியல் கட்சியில் ஏற்படும் பிளவு மட்டுமே கட்சித் தாவல் பிரிவுகளில் விவரிக்கப்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆம் ஆத்மிக் கட்சியில் பிளவு ஏற்படவில்லை
ஆம் ஆத்மிக் கட்சியைப் பொறுத்தவரை, அதன் அமைப்பில் எத்தகைய பிளவும் இன்று வரை ஏற்படவில்லை. அப்படியிருக்கும்போது, மாநிலங்களவை உறுப்பினர்களிடையே ஏற்படும் பிளவு கட்சித் தாவலாகவே மதிக்கப்படவேண்டும்.
நாடாளுமன்ற மக்களவை, மாநிலச் சட்டப்பேரவை போன்றவற்றின் உறுப்பினர்களுக்கு, அவர்கள் சார்ந்த கட்சியின் ஒப்புதலுடன்தான் சின்னம் ஒதுக்கப்படுகிறது. கட்சியினுடைய கொள்கைகள், நிறுவன அமைப்பு, நடைமுறைத் திட்ட வகுப்பு, தலைமையின் ஈர்ப்பு, தொண்டர்களின் உழைப்பு போன்றவைதாம் அவர்களது வெற்றியை உறுதி செய்கின்றன.
இவ்வாறு வென்ற சட்டப் பேரவை உறுப்பினர்களே, மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்கின்றனர். மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு என்பது, அவர்களது பங்களிப்புக்காகக் கட்சி வழங்கும் கொடை என்றே கூறலாம். இவ்வாறெல்லாம் கட்சியின் முத்திரையுடன் வென்றோர், தங்களை நாடாளுமன்றக் கட்சியினர் சட்டப்பேரவைக் கட்சியினர் என்று தனித்துப் பிரித்துப் பேசுவதில் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே அவர்கள் தங்களை வேறாகவோ தனியராகவோ கருதிக்கொள்ள முடியாது.
கட்சித் தாவல் பற்றி நீடிக்கும் குழப்பங்கள்
கட்சித் தாவல் குறித்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் 1985இல் நடைமுறைக்கு வந்துவிட்டாலும், அதன் விளக்கங்கள் இன்னும் குழப்பங்களையே கண்டு கொண்டிருக்கின்றன.
பிளவு குறித்து முடிவெடுக்கின்ற உரிமை பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், முதன்மை அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்யும் முழுமையான வாய்ப்பு அவரிடமில்லை. இந்த வாய்ப்பு தேர்தல் ஆணையத்திடம்தான் தற்போதைக்கு உள்ளது.
தேர்தல் ஆணையம் அவ்வப்போது முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் பொதுக்குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் போன்றோரது விவரங்களைப் பெறுகிறது. பிளவு ஏற்படும்போது, முதன்மைக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரது சார்பு நிலையினை அடிப்படையாக வைத்துப் பிளவு குறித்து ஒரு முடிவினைத் தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும். ஆனால், இதுவரை தேர்தல் ஆணையம் தெளிவான முறைமைகளை வகுத்துக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஒன்றிய அரசின் மனப்போக்கையே நிறைவேற்றி வருகிறது.
நம்பகத் தன்மை இல்லாத தேர்தல் ஆணையம்
இந்த நிலையில், கட்சிப் பிளவு குறித்துத் தனக்கென ஒரு குறிப்பிட்ட கொள்கையினை வகுத்துக்கொள்ளாத தேர்தல் ஆணையத்தை நம்ப இயலாது. தேர்தல் நடத்தும் முறைகளில் ஆளும் ஒன்றிய பா.ச.க. அரசின் கட்டுப்பாட்டில், பா.ச.க.வின் கட்டளைப்படி நடந்துகொள்ளும் ஒரு துணை அமைப்பாகவே அது தற்போது மாறிவிட்டது. நேர்மையான தனித்த, சார்பற்ற அமைப்பு என்ற நம்பிக்கையை தேர்தல் ஆணையம் என்றோ இழந்துவிட்டது.
எனவே, இந்தத் தேர்தல் ஆணையத்திடம் கட்சித் தாவல் குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை வழங்குவதிலும் சிக்கல் இருக்கிறது.
அவையில் ஏற்படும் பிளவு குறித்து அவைத் தலைவர் எடுக்கும் முடிவுகளுக்கும், அரசியல் கட்சி அமைப்பில் ஏற்படும் பிளவுக்குத் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்கும் முரண்கள் தோன்றுவதால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஆண்டுக் கணக்கில் வழக்குகள் இழுபறியில் தொடர்கின்றன.
முறைமைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கவேண்டும்
ஒன்றிய அரசின் தன்விருப்பில் 356 என்ற பிரிவைப் பயன்படுத்தி, மாற்றுக் கட்சி ஆளும் மாநில அரசுகள் நூற்றுக்கும் மேற்பட்ட முறை கலைக்கப்பட்டு வந்த நிலையை நிறுத்தும் அளவில் உச்ச நீதிமன்றத்தின் பொம்மைத் தீர்ப்பு அமைந்தது. அதுபோல், கட்சித் தாவல் குறித்தும் சில வரையறைகளையும் முறைமைகளையும் உச்ச நீதிமன்றம்தான் வகுக்கவேண்டும்.
அவையில் மட்டும் ஏற்படும் பிளவு, முதன்மை அரசியல் கட்சியில் காணும் பிளவு போன்ற நிலைமைகளில் அவைத் தலைவருக்கு உள்ள உரிமை, தேர்தல் ஆணையத்தின் கடமை போன்ற அனைத்தையும் முறையாகவும் முழுமையாகவும் தெளிவாகவும் அரசமைப்புச் சட்டம் பத்தாவது இணைப்பில் கண்டுள்ளபடி தெளிவாகக் கால எல்லையுடன் உச்ச நீதிமன்றம் வரையறுக்கவேண்டும்.
மக்கள் தீர்ப்பை மறுக்கும் பா.ச.க.
மக்கள் அளித்த வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசும் பா.ச.க.வும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
பிற மாநில வாக்காளர் திணிப்பு, மென்பொருள்வழி வாக்குத் திருட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் இழுப்பு எனப் பல்வேறு வழிகளில் மக்களது தேர்வினை மாற்றியமைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து பா.ச.க. ஈடுபடுவதைத் தட்டிக் கேட்கும் நிலை இப்போதைக்கு இல்லை.
ஒன்றிய அரசின் செல்வாக்கு, அதில் கிடைக்கும் பயன்கள், பொருளிய நன்மைகள், புலனாய்வு போன்ற ஒன்றிய அரசு அமைப்புகளின் நெருக்குதல்கள் எனப் பலவற்றையும் பயன்படுத்திக் கட்சித் தாவல்களை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பது பா.ச.க.வினரின் போக்காக மாறிவிட்டது. மக்கள் ஏற்பு இல்லாமல் மாநில ஆட்சியைக் கைக்கொண்டவுடன், அந்தச் செல்வாக்கைக் கொண்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் பா.ச.க.வின் வழிமுறையாகும்.
பஞ்சாப்பில் சிறு கட்சிகளின் உறுப்பினர்களை ஆம் ஆத்மிக் கட்சிக்கு இழுத்து, அவர்களை விலகச் செய்து, பின்னர் இடைத் தேர்தல்களில் தன் கட்சி சார்பில் அவர்களையே நிறுத்தி வெற்றி பெறச் செய்யும் பா.ச.க. வழியினை ஆம் ஆத்மிக் கட்சியும் பின்பற்றி வந்தது. ஆம் ஆத்மிக் கட்சி பயன்படுத்திய கத்தி, இப்போது அதன்மீது திரும்பப் பாய்கிறது.
பா.ச.க.வின் நீண்ட காலத் திட்டம்
இப்போதைய தாவல் அல்லது இணைவில் பா.ச.க. கூடுதல் எண்ணிக்கையைப் பெற்றாலும், மாநிலங்களவையில் தனிப்பட்ட பெரும்பான்மையைப் பெறவில்லை. கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து பெரும்பான்மை இருந்தாலும், மூன்றில் இரண்டு பங்கினைத் தொட இன்னும் 17 இடங்கள் வேண்டியுள்ளன. மேலும் சில தாவல்களில் கிடைத்தாலும் பயன் ஏற்படப் போவதில்லை. ஏனெனில், மக்களவையில் மூன்றில் இரண்டு அளவு எண்ணிக்கை பா.ச.க.வுக்கு இப்போது இல்லை. இருப்பினும், கட்சித் தாவலைத் தொடர்ந்து பா.ச.க. ஊக்குவித்துவருகிறது.
ஒருவேளை, 2029 மக்களவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு அளவு கிடைத்தால் விருப்பப்படி அரசமைப்புச் சட்டத்தை மாற்றிக்கொள்ளும் நீண்ட காலத் திட்டமாகும் இது. மாநிலங்களவையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரேயொரு தேர்தலில் மட்டுமே வேண்டிய எண்ணிக்கை கிடைத்துவிடாது. இதனால். இப்போதிருந்தே மாநிலங்களவையில் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்வது தொடர்பான நீண்ட காலக் கணக்காகும் இது.
இதில் இன்றிலிருந்தே விழிப்புடன் இல்லையென்றால், பா.ச.க. தனது பகடைக் காய்களாக நாட்டின் அரசியல் அமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை உருவாகிவிடும் என்பதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்கும் புரியச் செய்யவேண்டும்.