கட்டுரைகள்

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து; மூடல்: தனியார் வங்கி மாயை உடைந்ததா?

சி.எச்.வெங்கடாசலம்

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட்டின் வங்கி உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி 2026 ஏப்ரல் 24 அன்று ரத்து செய்துள்ளது. இது ஒரு தனி நிறுவனத்தின் நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; “பேமெண்ட்ஸ் வங்கி” என்ற முழு மாதிரியின் தோல்வியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சம்பவமாகும்.

அப்படியானால் மக்களின் சேமிப்பை தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பது பாதுகாப்பானதா?

ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாடுகள் வங்கியின் நலனுக்கும், வைப்புதாரர்களின் நலனுக்கும் பாதகமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது. வங்கி நிர்வாகத்தின் செயல்பாடு பொது நலனுக்கு எதிரானது என்றும், இவ்வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்றும் RBI கூறியுள்ளது. இதன் அடிப்படையில்தான் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இது திடீர் முடிவு அல்ல. பல ஆண்டுகளாக தொடர்ச்சியான விதிமீறல்கள் நடந்தன. 2022 மார்ச் மாதத்திலேயே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு RBI தடை விதித்தது. காரணம், KYC உள்ளிட்ட அடிப்படை இணக்க விதிகளில் கடுமையான குறைபாடுகள் இருந்தன. 2024 மார்ச் மாதத்தில் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய வைப்புகளை ஏற்க முடியாது, கடன் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது, வாலெட், ஃபாஸ்டேக், NCMC அட்டைகளில் டாப்-அப் செய்ய முடியாது என்று முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இறுதியில் 2026-ல் உரிமமே ரத்து செய்யப்பட்டது.

இதன் மூலம் மிகப் பெரிய கேள்வி ஒன்று எழுகிறது. பேடிஎம் மட்டும் தோல்வியடைந்ததா? இல்லை. உண்மையில் தோல்வியடைந்தது “பேமெண்ட்ஸ் வங்கி” என்ற முழு மாதிரிதான். 2013-ல் நச்சிகேத் மோர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சிறு வணிகர்கள், ஏழை மக்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வங்கி சேவைகளை கொண்டு செல்லும் பெயரில் இந்த மாதிரி உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 11 பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அவற்றின் நிலை என்ன? ஆதித்யா பிர்லா பேமெண்ட்ஸ் வங்கி லாபமில்லை என்று 2019-ல் மூடப்பட்டது. சோழமண்டலம் தொடங்கவே இல்லை. வோடஃபோன் எம்-பெசா உரிமத்தை திருப்பிக் கொடுத்தது. டெக் மஹிந்திரா, சன் பார்மா போன்ற நிறுவனங்கள் “இது லாபகரமானது அல்ல” என்று கூறி தொடங்காமல் விலகின. ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அனுமதியின்றி கணக்குகள் திறந்ததற்காக ரூ. 5 கோடி அபராதம் கட்டியதுடன், 4 மாதங்களுக்குப் புதிய கணக்குகளைச் சேர்க்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஜியோ பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் இருந்தாலும் அது செயல்பாட்டில் இல்லை. இப்போது பேடிஎம்-மும் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இந்த மாதிரி, தானே அடிப்படையில் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த மாதிரி தோல்வியடைந்தது? காரணம் மிகவும் எளிமையானது. ஒரு வங்கிக்கு முக்கிய வருவாய் கிடைப்பது கடன் வழங்குவதிலிருந்து. ஆனால் பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கு பெரிய அளவில் கடன் வழங்க அனுமதி இல்லை. மக்கள் பணத்தை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து பெரிய வருவாய் ஈட்ட முடியாத அமைப்பில் ஒரு வங்கி எப்படி நீண்ட காலம் நிலைத்து நிற்கும்? இது ஆரம்பத்திலிருந்தே குறைபாடுள்ள மாதிரி. வங்கி நடத்தும் பெயரில் கட்டுப்பாடுகள் மட்டும் இருந்தால், லாபம் எங்கிருந்து வரும்?

இந்தத் தோல்வியின் சுமையை யார் சுமக்கிறார்கள்? வங்கி நிர்வாகமா? இல்லை. முதலில் பாதிக்கப்படுவது ஊழியர்கள். பேடிஎம் வங்கியின் 2025 ஆண்டு அறிக்கைப்படி, 14,500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், சுமார் 66,000 வணிகத் தொடர்பாளர்கள் இந்த அமைப்புடன் இணைந்திருந்தனர். இவர்களின் வேலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை.

அடுத்து பாதிக்கப்படுவது பொதுமக்கள். சுமார் 9.5 கோடி வாடிக்கையாளர்கள் இந்த வங்கியுடன் தொடர்புடையவர்கள். 540 மாவட்டங்களில் உள்ள 15,000 கிராமங்களில் 66,000 வணிகத் தொடர்பாளர்கள் கடைசி மைல் வங்கி சேவையை வழங்கி வந்தனர். கிராமப்புறங்களில் வங்கி கிளை இல்லாத இடங்களில் மக்கள் இவர்களையே நம்பி பணம் செலுத்தினர், பணம் பெற்றனர், சிறு பரிவர்த்தனைகளை செய்தனர். இப்போது அந்த மக்களின் நிலை என்ன? இந்தக் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

இதில் அரசியல் பொறுப்பும் தவிர்க்க முடியாதது. இந்த வங்கி அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் திறந்து வைக்கப்பட்டது. “டிஜிட்டல் இந்தியா” என்ற மோடி அரசின் கனவுத் திட்டத்தின் முக்கிய முகமாக இது விளம்பரப்படுத்தப்பட்டது. பிரதமரின் படத்தைப் பயன்படுத்தி மக்கள் நம்பிக்கை பெறப்பட்டது. இன்று அந்த மாதிரி முறிந்தபோது, அதற்கான அரசியல் பொறுப்பு யாருக்கு?

இங்கே இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்த மாதிரி, அடிப்படையிலேயே தவறானது என்றால், அதை வடிவமைத்து அனுமதி வழங்கிய ரிசர்வ் வங்கியின் பொறுப்பு என்ன?

ஒழுங்குமுறை அமைப்பாக இருந்த ரிசர்வ் வங்கி, விதிமீறல்கள் நடந்த பிறகு மட்டுமே நடவடிக்கை எடுப்பதா? ஆரம்பத்திலேயே அமைப்பு ரீதியான பலவீனங்களை ஏன் தடுக்கவில்லை?

இதிலிருந்து ஒரு பெரிய பாடம் கிடைக்கிறது. வங்கிகள் சாதாரண வணிக நிறுவனங்கள் அல்ல. அவை மக்களின் வாழ்நாள் சேமிப்புகளை கையாளும் அமைப்புகள். ஒருவரின் ஓய்வூதியம், விவசாயியின் சேமிப்பு, தொழிலாளியின் சம்பளம், சிறு வணிகரின் நம்பிக்கை-இவை அனைத்தும் வங்கிகளில்தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட அமைப்புகளை தனியார் லாப நோக்கத்திற்காக விடுவது ஆபத்தானது.

1969-ல் முக்கிய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னணி இதுதான். மக்களின் சேமிப்பை பாதுகாக்கவே அந்த முடிவு எடுக்கப்பட்டது. 1980-ல் மேலும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இன்று பொதுத்துறை வங்கிகள் சுமார் 140 லட்சம் கோடி ரூபாய் மக்களின் பணத்தை பாதுகாத்து வருகின்றன. அதே நேரத்தில் தனியார் வங்கிகள் சுமார் 85 லட்சம் கோடி ரூபாய் பொது சேமிப்புகளை கையாளுகின்றன. பல தனியார் வங்கிகள் சிக்கலில் சிக்கும்போது, இறுதியில் பொதுத்துறை வங்கிகளே அவற்றை காப்பாற்ற வேண்டிய நிலை வருகிறது.

தனியார் துறையின் “செயல்திறன்” என்ற பெயரில் மக்களின் பணத்தை ஆபத்தில் விட முடியாது. பெருந்தொகை வாராக்கடன்கள் யாரால் உருவாகின்றன? சாதாரண மக்களால் அல்ல. பெருநிறுவனங்களும் பெரிய முதலாளிகளும் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் விட்டதால்தான் வங்கி நெருக்கடிகள் உருவாகின்றன.

அதனால் தீர்வு தெளிவானது. வங்கிகளை சந்தைப் பொருளாக அல்ல, பொதுச் சொத்தாகப் பார்க்க வேண்டும். தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும். வங்கி அமைப்பு முழுவதும் பொதுத்துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். மக்களின் சேமிப்பைப் பாதுகாக்கவும், ஊழியர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், கிராமப்புற மக்களுக்கு நம்பகமான சேவையை வழங்கவும் இதுவே சரியான பாதை.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் மூடல் ஒரு நிறுவனத்தின் முடிவு மட்டும் அல்ல; அது தனியார் வங்கி மாயையின் முகமூடி கிழிந்த தருணம். இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் “டிஜிட்டல் இந்தியா” என்ற விளம்பர கோஷங்கள் மக்களின் வாழ்வைக் காப்பாற்றாது. வங்கிகள் லாபத்திற்காக அல்ல, மக்களுக்காக இயங்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button