ShortNoticeகட்டுரைகள்

அழிவிலிருந்து மீண்டெழ, ஈரானில் அத்துமீறும் அமெரிக்கா

மே.து.ரா.

பேச்சுக்களில் உடன்பாடு காண இரண்டு வாரக் கெடு ஏப்ரல் 21இல் முடிவடைந்த நிலையில் பாக்கித்தான் கேட்டுக்கொண்டபடி, ஈரானுடன் உடன்பாடு காணும் வரை தாக்குதல் நிறுத்தம் தொடரும் என்று அமெரிக்காவின் டிரம்ப் அறிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் வேண்டுமெனத் தாங்கள் கேட்கவில்லை என்றும், ஈரானியத் துறைமுகங்களை முடக்கும் முற்றுகை நீக்கப்படும் வரை பேச்சுக்கள் தொடங்காது என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

பாக்கித்தானில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுக்களில் அமெரிக்கத் துணைத் தலைவர் வான்சு கலந்துகொண்டபோதிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. ஈரான் நெகிழ்வுடன் நடந்துகொள்ளவில்லை என அமெரிக்காவும், அமெரிக்கா முடிவுக்கு ஆர்வம் காட்டவில்லை என ஈரானும் தத்தமது நிலைகளில் நின்றுகொண்டிருப்பதையே வெளிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்கா 15 கட்டுப்பாடுகளைத் தொடக்கத்திலேயே முன்மொழிந்தது. இதற்கு மாறாக, ஈரான் 10 நிலைப்பாடுகளை முன்வைத்தது. இவற்றின் அடிப்படைகள் அனைவரும் எதிர்பார்த்தவைதாம்.

அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் ஈரானின் நோக்கமும்

அணுச் செறிவூட்டலை ஈரான் நிறுத்தவேண்டும், முன்னரே செறிவூட்டிய யுரேனிய இருப்புகளை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும், ஆக்க – ஆய்வுப் பணிகளுக்கான வேண்டல்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம், ஏர்முசு நீரிணை யைக் கட்டுப்பாடு ஏதுமில்லாமல் வணிகக் கப்பல்களுக்குத் திறந்துவிடவேண்டும் என்பவைதான் அமெரிக்க நிலைகளின் அடிப்படைகளாக இருந்தன.

ஈரானைப் பொருத்தவரை, ஈரான் கடற்பகுதிகளிலிருந்து அமெரிக்கப் போர்க் கப்பல்களை அகற்றவேண்டும், ஏற்றுமதி இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் ஈரானியத் துறைமுகங்களின் முற்றுகையை நீக்கவேண்டும், தான் விரும்பியவாறு ஆக்கப் பணிகளுக்கு அணுச் செறிவூட்டும் உரிமையை ஏற்கவேண்டும், எண்ணெய் ஏற்றுமதி உள்ளிட்ட பொருளியத் தடைகளை முற்றிலும் விலக்கவேண்டும், போர் இழப்பீடுகளை வழங்கவேண்டும் என்பவற்றில் உறுதியாக நின்றது.

ஈரானின் வலிமை கண்டு அஞ்சும் இசுரேல்

நடுஆசியப் பகுதிகளில் தற்போது ஈரான் மட்டுமே படை வலிமையில் முன்னிற்கிறது. இதனை அழித்து ஒழித்துவிட்டால், தான் நினைத்தவற்றையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என இசுரேல் காணும் கனவுக்கு அமெரிக்கா துணையாக இறங்கியுள்ளது என்பதுதான் நடைமுறை உண்மை.

ஈரான் நெடுநாள் போரினைத் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய அமெரிக்க, இசுரேல், முதலாளித்துவ நாடுகளின் மதிப்பீடுகள் தவறாகிவிட்டன.

அமெரிக்க நட்பு நாடுகளின் நடுக்கம்

பக்ரைன், கத்தார், குவைத் அரபு எமீரகம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள 20 அமெரிக்கப் படைத்தளங்களை ஈரான் தாக்கித் தகர்க்க முடியும் என்பதை ஈரான் முன்னரே உறுதிப்படுத்தியிருந்தது. இருப்பினும், அமெரிக்க, இசுரேல் நாடுகளின் பெரும் தாக்குதல்களில் ஈரானின் வலிமை முற்றிலும் முறிந்திருக்கும் என்ற அமெரிக்க, இசுரேலிய எதிர்பார்ப்புகள் தவறாயின.

அமெரிக்கப் படைத்தளங்கள் மட்டுமல்லாது, படைத்தளங்கள் அமைக்க இடமளித்த நாடுகளின் எண்ணெய் வளங்கள், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்கப் பெரும் நிறுவனங்களின் கட்டமைப்புகள், நன்னீர் உருவாக்கத் தொழில்கள் போன்றவையும் தாக்குதல்களைக் கண்டன. அவற்றின் பொருளிய வலிமை, கேள்விகளுக்கு உள்ளானது. இந்த நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தத் தொடங்கிவிட்டன.

எண்ணெய் வணிகத்தில் 20% மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஏர்முசு நீரிணையைக் கடக்க முடியாததால் உலகெங்கும் பல நாடுகளில் அன்றாடப் பயன்பாடுகளுக்கு எண்ணெய் கிடைக்காததுடன், அமெரிக்காவிலும் விலை உயர்வு ஏற்பட்டு மக்கள் எதிர்ப்பை உருவாக்கியது.

அமெரிக்காவின் படைக் கருவிகள் பற்றாக்குறை

உக்ரைன் போருக்குப் படை உதவியதால் ஏற்பட்ட இருப்புக் குறைவு, ஈரான் போரினைத் தொடர்ந்து நடத்தும் சூழலில் அமெரிக்காவை வைத்திருக்கவில்லை. இதைச் சுட்டிக்காட்டிய படைத் தலைவர்கள் பலர் நீக்கப்பட்டனர். அண்மையில் கப்பற்படைச் செயலாளர் தானாகப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

அமெரிக்க டாலர் பயன்பாட்டுச் சரிவு, உலக வணிகப் பங்களிப்புகளில் வீழ்ச்சி, நுட்ப வளர்ச்சியில் சீனாவின் மேன்மை, தொழில் வளர்ச்சிக் குறைவு போன்ற காரணிகள் முதன்மை நிலையில் இருந்த அமெரிக்காவைத் தாழ்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் நிலைநிறுத்த, அச்சுறுத்தல் – அழிவை உண்டாக்குதல் என்ற வகையில் தனது தாழ்வுக்கு அடிப்படையாக உள்ள நாடுகளை முடக்க நினைக்கிறது அமெரிக்கா.

ஈரான் நாட்டினை ஒட்டிய கடல்களில் ஈரான் வணிகம் செய்ய முடியாதவாறு போர்க் கப்பல்களை நிறுத்தி அமெரிக்கா தடுக்கலாம். ஆனால், எர்முசு நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் செல்லக் காவல் தருவது எளிதானதன்று. ஈரான் நினைத்தால் கடக்கும் கப்பலைத் தடுத்து நிறுத்தலாம். அல்லது தாக்கலாம். மேலும், கடலில் விதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை நீக்கக் குறைந்தது ஆறு திங்கள்கள் வரை ஆகலாம் என அமெரிக்க வல்லுநர்களே கூறுகின்றனர்.

அது வரை அமெரிக்கா தாக்குப்பிடிக்கவேண்டும். உலக நாடுகள் பொறுத்திருக்கவேண்டும்.

போர் நிறுத்தத்துக்கு காத்திருக்கும் அமெரிக்கா

சில நாள்களில் முடியும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கு இப்போது போர் நிறுத்தமே முதல் தீர்வு.

ஏனெனில், இதனால் அமெரிக்காவுக்கு ஏற்படும் பொருளியச் சுமை மிகுந்துவிட்டது. மேலும் சுமை கூடுவதை அமெரிக்கா தாங்காது. இது ஈரானுக்குத் தெரியும். அமெரிக்க நிலைமைகளைப் புரிந்துகொண்டிருக்கும் ஈரான், பொருளியத் தடை நீக்கம் என்ற நோக்கத்தினை முன்னிறுத்துகிறது.

பாக்கித்தானில் தொடர்ந்து பேச்சுக்கள் நடக்கலாம். அல்லது நாள்கள் சில கடக்கலாம். இருப்பினும், அமெரிக்க எதிர்பார்ப்புகளுக்கும் ஈரானிய நோக்கங்களுக்கும் ஓர் உடன்பாடு காண்பது அவ்வளவு எளிதல்ல.

2015இல் ஈரான் தொடர்பான அணு விரிவாக்கத் தடை குறித்து ஏற்பட்ட உடன்பாட்டில் ரசியா, சீனா, அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட அய்ந்து ஐ.நா. நிலை நாடுகளுடன் செர்மனியும் இணைந்து கையெழுத்திட்டன. பொருளியத் தடைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன. ஆயினும், 2018இல் டிரம்பின் முதல் முறை ஆட்சியில் அமெரிக்கா இந்த உடன்பாட்டிலிருந்து தானாகத் தனித்து வெளியேறியது. தானாக ஈரான் மேல் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினார் டிரம்ப். ரசியா, சீனா தவிரப் பிற நாடுகளை ஏற்கச் செய்தார்.

இப்போது இந்த நாடுகளையெல்லாம் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, அவர்களுக்குத் தெரியாமல், அறிவிக்காமல் அணுச் செறிவூட்டல் தொடர்வதாகக் கூறி ஈரான் மேல் போரினைத் தொடங்கியுள்ளார். போரினை முடிக்க முடியாமல் அவ்வப்போது அறிக்கைகள் விடுத்து மிரட்டியும் விரட்டியும் ஈரானைப் பணிய வைக்க முயல்கிறார்.

ரசியாவும் சீனாவும் ஈரானுக்கு நேரடியாக உதவவில்லை என்றாலும் நுட்பப் பகிர்தல்களில் துணை நிற்கின்றன. மேலும் பல நாடுகளும் துணை நிற்கத் தயங்கவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இதில் அமெரிக்காவின் டிரம்புக்கு அஞ்சி இந்தியாவின் மோடி மட்டுமே வாய்மூடி இருக்கிறார்.

தன்னுடைய வலிமையில் தன்னம்பிக்கை இல்லாவிட்டாலும், அமெரிக்கா மிரட்டிப் பணியவைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், ஈரானோ விடாப்பிடியாக நின்று தன்னுடைய சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிடவேண்டும் என்று உறுதியாக நிற்கிறது.

இதில் வெல்வது ஈரானாகவே இருக்கும். ஏனெனில், அத்து மீறிய போர்களில் என்றுமே அமெரிக்கா வென்றதில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button