
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களான நெல், கோதுமை, சோளம், பருப்பு வகைகள், கடலை, எள், கரும்பு என அனைத்து விளைபொருட்களுக்கும், விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் படைத்தது ஒன்றிய அரசு. இதனை இன்று, நேற்றல்ல. காலம் காலமாகப் பின்பற்றியும் வருகிறது.
அதனால்தான் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில், விடுதலை போரில் பங்கேற்ற விவசாயிகள், அந்நிய ஆட்சிக்கு எதிராக சமர் புரிந்த போது,
“ஊரான், ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விற்க சொல்லி
காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்”
என்ற அன்றைய முழக்கம் இன்றும் தொடர்கின்றது.
மூர்க்கமான ஒன்றிய மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை, திரும்பப் பெறக்கோரி ஒரு நாள், இருநாள் அல்ல, ஒரு மாதம், இரு மாதம் அல்ல, 13 மாத காலம் கடும்குளிரையும் கடும் பனியையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் எனப் பாராமல், கொடிய கொரோனாவை எதிர்கொண்டு, 700க்கும் மேற்பட்ட விலைமதிக்க முடியாத, விவசாயிகள் உயிரைக் கொடுத்துப் போராடினர். இதன் காரணமாக ஒன்றிய அரசு தான் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும், வேறு வழியின்றி திரும்பப் பெற்றது.
திரும்பப் பெற்றது மட்டுமின்றி, விவசாய விளைபொருட்களுக்கான விலை நிர்ணயச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டக் காலத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தது.
அந்த வாக்குறுதி என்னவாயிற்று? இன்று வரை பதில் இல்லை.
இவை ஒருபுறம் இருக்க, நெல்லுக்கு ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் விலை போதுமானதல்ல, கூடுதல் விலை வேண்டும் என விவசாயிகள் போராடிய நிலையில், மாநில அரசு தன்னுடைய நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்கி வருகின்றது. குறிப்பாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 156, பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 131 வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், விவசாயிகளுக்கு 2500 கோடி ரூபாய்க்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

ஊக்கத் தொகை கூடாது நிர்மலா சீத்தராமன்
ஒன்றிய அரசு, அதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக அரசு, விவசாயிகளுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளது.
மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கு ஒன்றிய அரசு கூறும் காரணம் வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.
மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவதால் நெல் உற்பத்தி அதிகரித்து, பெரும் பிரச்சனை ஏற்படுகின்றது. ஆகவே ஊக்கத்தொகை வழங்குவதை, தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எந்தக் கவலையுமின்றி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
ஒன்றிய அரசின் இத்தகைய சுற்றறிக்கை குறித்து கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கை குறித்து புள்ளிவிவரங்களுடன் பேசினார்.
அவரது உரையின் காரணமாக ஒன்றிய அரசு அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கின்றது.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களும் கொடுக்க மாட்டார்கள், மாநில அரசு கொடுப்பதையும் கொடுக்கக் கூடாது என்று தடுக்கின்றார்கள் என்று, ஒன்றிய அரசு மீது விவசாயிகள் கடும் கோபமடைந்துள்ளனர்.
வைக்கோல் போரில் நாயை கட்டி வைத்தால் தானும் தின்னாது, தின்ன வரும் மாட்டையும் திங்க விடாது என்ற பழமொழிக்கு ஏற்ப, பாஜக அரசு விவசாயிகளுக்கு பெரும் துரோகம் செய்கின்றது என்று விவசாயிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
சுற்றறிக்கை விட்டு மாட்டிக்கொண்டு, ஆப்பசைத்த குரங்கு போல் விழிபிதுங்கி நிற்கும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் அப்படியெல்லாம் கடிதம் எழுதவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே, அரசியல் ஆதாயத்திற்காக இப்படி கூறுகின்றார்” என்று, மனசாட்சி அற்ற முறையில் அறிக்கை வெளியிடுகிறார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கட்டுப்பாட்டில் உள்ள நிதியமைச்சகம், தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது.
ஒன்றிய அரசின் அந்தத் கடிதத்தை தான் கூறினேன் என்று தேர்தல் பரப்புரையில் வெளிப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் அவர்களே! நீங்கள் பாரதியார் குறித்து அடிக்கடி பேசி வருகின்றீர்கள்.
உங்கள் தலைவர் திருவாளர் மோடியார் கூட, ஏதோ பாரதி குறித்து நன்கு அறிந்தவர் போல தாராளமாகப் பேசுவார்.
நீங்கள் பேசும், புகழும் பாரதியார் “பொய் சொல்லக் கூடாது பாப்பா” என்றும் பாடியுள்ளார். அதனையும் படியுங்கள்.
பொய்யுரைக்கும் மோடி அரசுக்கு, தன்னை ஒரு விவசாயி என நாள்தோறும், மூச்சுக்கு முந்நூறு முறை பேசி வரும் எடப்பாடி, ஊக்கத்தொகை கொடுக்கக் கூடாது என தடை போடும் ஒன்றிய அரசுக்குத் துணை போகலாமா? துரோகத்திற்கு துணை போகலாமா?
ஒன்றிய அரசின் துரோகத்திற்குத் துணைபோகும் எடப்பாடியையும் அவர்களின் கூட்டணியையும் முற்றிலும் துடைத்தெறிய வேண்டாமா?
இது ஒவ்வொரு விவசாயியின் கடமை அல்லவா? கடமையை செய்வீர்! துரோகத்தை முறியடிப்பீர்!

