
தமிழ்நாட்டில் நவோதயாப் பள்ளிகளைத் திறக்க மாவட்டந்தோறும் முப்பது ஏக்கர் நிலங்களை ஆறு வாரங்களில் அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றத்தின் நீதியர்கள் நாகரத்தினா, மகாதேவன் அமர்வு ஆணையிட்டுள்ளது.
நவோதயாப் பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுவதால், இரு மொழிக் கொள்கையினைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு நவோதயாப் பள்ளிகளை ஏற்கவில்லை.
மொழி தடையாக இருக்கக்கூடாது, ஒன்றிய மாநில அரசுகள் கலந்து பேசி, விட்டுக்கொடுத்துத் தீர்வு காணவேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மாநிலத்தின் கொள்கை முடிவு இருமொழி
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக இருப்பதுடன், நவோதயாப் பள்ளிகளுக்குத் தமிழ்நாடு அரசு தன்னுடைய செலவில் நிலங்களைத் தருவதும், வேறு செலவுகளும் சேர்ந்து மாநில அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்துமென தமிழ்நாடு அரசு தனது நிலையினை உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியது.
ஆனால், தமிழ்நாடு அரசு நிலங்களை அடையாளம் காணவேண்டும் என்று வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், இந்தித் திணிப்பைக் கைவிட்டு இரு மொழித் திட்டத்தை ஒன்றிய அரசு ஏற்கவேண்டும் என்று வற்புறுத்தவில்லை என்பதுதான் நெருடலாக உள்ளது.
நவோதயா பள்ளிகள் ஏன்?
ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் கல்வி தரும் ஊரக மாணவர்க்கான நவோதயாப் பள்ளிகளில் கல்வி, உறைவிடம். பாடநூல்கள் என அனைத்தும் கட்டணமின்றித் தரப்படுவதாகக் கூறப்பட்டாலும், ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயில்வோர் கட்டணம் செலுத்தியாகவேண்டும்.
மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என்ற அளவில் நுழைவுத் தேர்வு வழியாக ஆறாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு என்றாலும், 75% ஊரக மாணவர், 25% நகரத்தினர், கூட்டாக இவர்களில் 35% மகளிர், 3% மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைகளும் இருக்கின்றன.
நவோதயாப் பள்ளிகள் தரமான கல்வி தருவதால், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முறையே 99.71%, 98.93% தேர்ச்சி உள்ளது என்பது உண்மைதான். ஆயினும், வேறு பல நிலைமைகளையும் புறக்கணித்துவிட முடியாது.
நலம் தராத நவோதயாப் பள்ளிகள்
01. ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை இடை நிற்றல் மிகுந்திருப்பதால், 11ஆம் வகுப்புக்கு மீண்டும் நுழைவுத் தேர்வு வழியாக மாணவர்களைச் சேர்க்க வேண்டியுள்ளது. இது நவோதயா முறையின் சிறப்பை அய்யப்பட வைக்கிறது.
02. ஒன்றிய மாநிலங்களில் ஏறக்குறைய 800 மாவட்டங்கள் இருக்கும்போது, 649 மாவட்டங்களில் மட்டுமே நவோதயாப் பள்ளிகள் உள்ளன. தமிழ்நாட்டைக் கழித்துப் பார்த்தாலும், நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நவோதயாப் பள்ளிகள் இல்லை.
03. 2023-24 அளவில், 649 நவோதயாப் பள்ளிகளில் 317 பள்ளிகள் இந்திய வளர்ச்சிக்கான பிரதமரின் பள்ளிகள் (பிஎம் ஸ்ரீ) என்ற வகைக்கு மாற்றப்பட்டுவிட்டன.
04. ஏழை ஊரக மாணவர்களுக்கு 75% ஒதுக்கீடு என்று கூறப்பட்டாலும், நுழைவுத் தேர்வு இருப்பதால் செல்வநிலை மாணவர்களே பெரிதும் சேர்கின்றனர். அய்ந்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள முடிவதில்லை.
05. வரைமுறைகளுக்கு மாறாக, வகுப்புகளில் மாணவரின் மிகு எண்ணிக்கையால் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தனி ஈடுபாடு காட்ட முடிவதில்லை.
06. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தாய் மொழியில் பயிற்றுவிப்பதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் ஆங்கிலம் அல்லது இந்தி வழியாகத்தான் கற்பிக்கப்படுகிறது.
07. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தாய் மொழியில் கற்பித்தாலும், ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலத்துக்கு மாறுவதால், இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
08. ஆறு முதல் ஒன்பது வரை மும்மொழி என்றிருந்தாலும், இந்தி பேசும் மாநிலங்களில் மூன்றாவது மொழி எதுவும் கற்பிக்கப்படுவதில்லை. வடகிழக்கு மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி ஆகியவற்றை முதன்மைப்படுத்தித் தாய்மொழி பெயருக்கு மட்டுமே விருப்பப் பாடமாக உள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் மட்டுமே இந்தி அல்லது சமக்கிருதம் திணிக்கப்பட்டு மும்மொழியென வற்புறுத்தப்படுகிறது.
09. தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் 93.08%, பன்னிரண்டில் 95.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி என்று எடுத்துக்கொண்டாலும், பத்தாம் வகுப்பில் 91.26%, பன்னிரண்டில் 91.94% அளவுக்குத் தேர்ச்சியுள்ளது. நவோதயாப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இத்தகைய தேர்ச்சி அளவைக் குறைத்து மதிப்பிட முடியாது.
10. உறைவிடப் பள்ளியாக இருப்பதால், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கும், பிறருக்கும் ஏற்படும் பாகுபாட்டினைக் களையப் போதுமான ஆற்றுப்படுத்தல் ஏற்பாடுகள் இல்லை
11. ஆசிரியரது கொடுமை, வன்முறை போன்றவற்றைத் தீர்க்க வழி ஏதும் செய்யப்படவில்லை.
12. அரசு சார்ந்த மேலாண்மை நடைமுறைகள், அலுவலகச் சீர்கேடுகள், காலந்தாழ்த்தும் போக்குகள் ஆகியன தீர்வுகளை விரைவில் எட்டமுடியாமல் செய்துவிடுகின்றன.
13. இளம் பருவத்தினருக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றை நீக்கும் வகையிலான கலந்துரையாடல், அறிவுறுத்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
14. மன அழுத்தம் மிகுவதால், தற்கொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
15. பள்ளி மற்றும் உறைவிடங்களின் கட்டமைப்புக் குறைகள் தொடர்வதுடன், போதுமான வாழ்நிலை ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்படாமலே இருக்கின்றன.
16. இளம் தலைமுறையினருக்கு இன்று எளிதில் கிடைக்கக்கூடிய இணையம் போன்ற வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
17. நகர்ப்புறங்களில் இல்லாமல் ஊரகப் பகுதிகளில் இருப்பதால், நல்ல ஆசிரியர்கள் பெரிதும் பணியில் இல்லை.
18. கேந்திரியப் பள்ளிகள் நகரங்களில் அமைந்து, அரசு ஊழியர் போன்ற வருவாய் மிகுந்திருப்போர் பிள்ளைகள் இல்லத்திலிருந்து வந்து படிக்கின்றனர். ஆனால், ஊரகங்களில் எளிய மாணவர் பயிலும் உறைவிடப் பள்ளிகளின் வேண்டல்கள் விரைவில் நிறைவேற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
19. தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கம் நிறைவேறியதாகத் தெரிய வில்லை. இங்கு பயிலும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்நிறுவனங்களில் பெருமளவில் சேர்ந்ததாக விவரங்கள் இல்லை.
20. தொடர்ந்து ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற எளிய ஊரக மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீடு இருப்பதால், மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வியில் சேரும் வாய்ப்புக் கிடைக்கிறது. இத்தகைய வாய்ப்புகள் நவோதயா மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை.
21. தமிழ்நாட்டில் தரத்துடன் சிறப்பாகச் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் ஆகியன மிகுதியாக உள்ளன. நவோதயாப் பள்ளிகள் வந்துதான் தரமான கல்வி தரவேண்டும் என்ற நிலை இங்கில்லை.
22. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், கல்விக் கட்டணம் பெறப்படுவதில்லை. பாடநூல்களும் சீருடைகளும் தொகையின்றித் தரப்படுகின்றன. மாணவர்களுக்கு மடிக்கணினியும் பணமேதும் பெறாமல் வழங்கப்பட்டுவருகின்றன. மகளிருக்கு ஈருருளை வண்டிகள் கொடுக்கப்படுகின்றன. கட்டணமின்றி எளிய மாணவர் தங்கிப் படிக்க ஆங்காங்கு உணவுடன் கூடிய விடுதிகள் பல உள்ளன. இவை நவோதயாப் பள்ளிகள் தரும் வாய்ப்புகளுக்குக் குறைந்திருக்கவில்லை.
23. விருப்பத்துக்கு மாறாகப் பகிர்தல் என்ற பெயரில் நவோதயா மாணவர்கள் ஓராண்டுக்கு வேற்று மொழி மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றனர். தேசிய ஒருமைப்பாடு என்ற நோக்கில் செய்யப்படும் இது ஒத்திசைவு இல்லாமல் வேறுபாடுகளையே வளர்க்கிறது.
24. நவோதயாப் பள்ளிகளால் தமிழ் மக்களுக்கு வேறு வகையான நலனும் பயனும் கிடைக்கவில்லை.
25. தனது செலவில் மாநில அரசு நிலம் ஒதுக்கித் தந்தாலும், வேறு சில செலவினங்களை ஏற்றுக்கொண்டாலும், பாடத்திட்டம் அன்றாடச் செயல்பாடுகள், மேலாண்மை என எதிலும் மாநில அரசுக்குப் பங்களிப்பில்லை. நவோதயாப் பள்ளிகளின் மேலாண்மை அமைப்பில் உறுப்பினராகக்கூடத் தமிழ்நாடு அரசு சார்பில் எவருமில்லை.
இந்தித் திணிப்புக்குத் தமிழ்நாடு நிதி எதற்கு?
தமிழ்நாட்டில் கேந்திரியப் பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் பல ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில், இந்தி கற்பிக்கும் மும்மொழியை ஏற்றுச் செயல்படுகின்றன. இவற்றுக்குத் தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; எதிர்ப்புக் காட்டவும் இயலாது.
இந்தப் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் நிதி உதவி எதுவும் பெறவில்லை. நிலங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து தரவில்லை.
இந்தி மொழியைத் திணித்தாலும் இந்தப் பள்ளிகளுக்கு மின் கட்டணம், உள்ளூர் வரிகள் போன்றவற்றில் தள்ளுபடி, விலக்கு, கூடுதல் பயன் ஆகிய நலன்களை மாநில அரசு மறுக்கவில்லை.
ஆனால், நவோதயாப் பள்ளிகளுக்குத் தனது செலவில் மாநில அரசு மாவட்டந்தோறும் முப்பது ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. மேலும், பிற செலவுகளும் உள்ளன.
கேந்திரியப் பள்ளி, தனியார் பள்ளி போன்று, இந்தி அல்லது சமக்கிருதத் திணிப்புடன் அடங்கிய ஒன்றிய அரசுப் பாடத்திட்டம் இருந்தாலும், மாநில அரசுக்குச் செலவில்லாமல் இருந்தால் தடையேதும் இருக்கப்போவதில்லை.
மாநிலத்தின் தன்னாட்சி உரிமை
இரு மொழிகள் மட்டுமே என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு. இதில் தலையிட ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் உரிமையில்லை.
மாநிலத்தின் கொள்கை முடிவிற்கு அப்பால், மாநில அரசுக்கு எத்தகைய பங்களிப்பும் இல்லாமல், மாநில மக்களது நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு மாநில மக்களின் நிதியினைப் பயன்படுத்துமாறு கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
மாநில நிதியினை எவ்வாறு செலவிடுவது என்று முடிவெடுக்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு மட்டுமே உள்ளது.
தமிழ் மாநிலச் சட்டப்பேரவையின் கொள்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மாறாக, ஒன்றிய அரசு மறைமுகமாக மாநில நிதியினைப் பயன்படுத்த முயல்வதும், இதற்கு உச்ச நீதிமன்றம் துணைபோவதும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மாநிலங்களின் தனியுரிமைகளை, தன்னாட்சி உரிமைகளை மறுப்பதாகும்.
தன்னாட்சிக்கு மாறான உச்ச நீதி மன்றத்தின் முடிவினை மேலாய்வு செய்ய மாநில அரசு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.