கட்டுரைகள்தமிழகம்

பிப்.12 பொது வேலைநிறுத்தம்

திருச்சி ஆயத்த மாநாட்டில் பல்லாயிரம் பேர் பங்கேற்பு

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி 2026 ஜனவரி 23 அன்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் ஆயத்த மாநில மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் தொமுச தலைவர் கி.நடராசன், ஏஐடியுசி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி, சிஐடியு துணைத்தலைவர் ஏ.சவுந்தரராசன், எச்எம்எஸ் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணி, ஐஎன்டியூசி மாநில துணைத்தலைவர் டி.வி.சேவியர், ஏஐசிசிடியு மாநில பொதுச்செயலாளர் க.ஞானதேசிகன், எல்எல்எப் மாநில அமைப்பாளர் க. பேரறிவாளன், எம்எல்எப் இரா. அந்திரிதாஸ், டபிள்யூ.பி.டி.யு.சி ஆர்.சம்பத் சம்பத், எஸ்கேஎம் மாநில ஒருங்கிணைப்பாளர் க.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் (சிபிஐ) மாசிலாமணி, சாமி நடராஜன் சிபிஎம், ஏஐபிஇஏ செயலாளர் இ.அருணாசலம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

 

தமிழ்நாடு ஏஐடியுசி தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன், பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன், செயலாளர்கள் எம்.ஆறுமுகம், எஸ்.சந்திரகுமார், எஸ்.சின்னசாமி. என்.சேகர். வி.ஆதிமூலம், சிஐடியு மாநில தலைவர் ஜி.சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், எச் எம் எஸ் சுப்ரமணியபிள்ளை, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் எல்.பி.எப் குணசேகரன், சி.ஐ.டி.யு ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், எஸ்.கே. எம் சிவசூரியன், ஏ.ஐ.சி.சி.டி.யு அருண்குமார், எச்.எம். எஸ் ஞானதுரை, ஐ.என்.டி.யு.சி வெங்கட் நாராயணன் உள்பட பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு ஏஐடியுசி வெளியீடான “உழைக்கும் மக்களின் உரிமைப்போர் பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம்” என்னும் பிரசுரத்தை சிஐடியு துணைத்தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் துணைத்தலைவர் ஆர்.சம்பத் பெற்றுக்கொண்டார். சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வெளியீடான “தொழிலுறவு தொகுப்பு சட்டங்களை ஏற்க முடியாது, தூக்கியெறிய வேண்டும்” என்னும் பிரசுரத்தை தொமுச தலைவர் கி.நடராசன் வெளியிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாரியப்பன் பெற்றுக்கொண்டார்.

ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து பிப்ரவரி 12-2026 அன்று நடைபெற உள்ள, அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கான, ஆயத்த மாநில மாநாட்டு தீர்மானங்கள் பின்வருமாறு :

ஒன்றிய மோடி அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, பொதுமக்கள் விரோத, மற்றும் ஜனநாயக விரோத போக்குகளை கைவிட வேண்டும்.

நூற்றாண்டு காலம் போராடி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பும் -பின்பும், உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் சட்டத்தில் 29 சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக்கியதன் மூலம், 80 சதவிகித தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே தள்ளுவதோடு, இந்நாட்டு – பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு சாதகமாகவும், இலகுவாக வணிகம் செய்வதை நோக்கமாக கொண்ட, சட்டத் தொகுப்புகளை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.

விவசாயிகளை பாதிக்கும், விதை சட்ட முன் வடிவை கைவிட வேண்டும். விளைப்பொருட்களுக்கு உரிய ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மின்சார உற்பத்தி – விநியோகத்தை தனியார் மயமாக்கும் நோக்கத்தோடு விவசாயிகள், விசைத்தறியாளர்கள், ஒரு விளக்கு பயன்பாட்டாளர் உட்பட அனைத்துத் தரப்பினரையும், பாதிக்கும் மின்சார சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப்பெற வேண்டும்.

மகாத்மா காந்தி, ஊரக வேலை உறுதி சட்டத்திலிருந்து, தேச தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கியதோடு, ஒன்றிய அரசு, தனது பங்களிப்பை குறைத்து, மாநில அரசுகளுக்கு நிதிச்சுமையை கூடுதலாக்குவதை கண்டிப்பதுடன், மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, முன்பிருந்த நிலையில் செயல்படுத்த வேண்டும்.

காப்பீட்டு துறையில், 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, கைவிட வேண்டும் .

அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி மசோதாவான ‘சாந்தி – 2025’ ஐ திரும்பப்பெற வேண்டும்.

முன்னதாக, தொமுச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன் வரவேற்புரை ஆற்றினார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் வே. நடராஜா நன்றி கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button