கட்டுரைகள்

அதிபர் டிரம்ப்பின் குடிவரவு கொள்கைக்கு எதிர்ப்பு: அமெரிக்க மக்கள் கொந்தளிப்பு

டி.எம்.மூர்த்தி

அமெரிக்காவில் தற்போது மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவை முக்கியமாக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான இரண்டாவது அரசாங்கத்தின் குடிவரவு கொள்கைகள் (Immigration Policies) மற்றும் அமெரிக்கக் குடிமக்கள் மீதான கூட்டாட்சி முகமைகளின் (Federal Agents) அத்துமீறல்களுக்கு எதிராக வெடித்துள்ளன.

மினியபொலிஸ், மின்னசோட்டா

மின்னசோட்டா என்பது அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இது கனடா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மினியபொலிஸ் மின்னசோட்டா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம். 2020ல் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டபோது உலகத்தையே உலுக்கிய போராட்டங்கள் இங்குதான் தொடங்கின. தற்போது 2026-லும் மீண்டும் இந்த நகரமே போராட்டங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

​கொலை செய்யப்பட்டது யார்? எப்போது? எப்படி?

​ஜனவரி 2026-ல் நடந்த இரண்டு முக்கிய மரணங்கள் இந்தப் போராட்டங்களுக்குத் தீ மூட்டின:
ரெனே குட் என்ற 37 வயதான அமெரிக்கப் பெண், ஜனவரி 7, 2026 அன்று மினியபொலிஸில் கூட்டாட்சி குடிவரவுத்துறை (ICE) அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு சோதனையின் போது தனது காரில் அங்கிருந்து விலக முயன்றார். அவர் தங்கள் மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்றதால் சுட்டுக் கொன்றதாக ஐஸ் அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்.

​அலெக்ஸ் ப்ரெட்டி என்பவர் 37 வயதான ஆண் செவிலியர். ஜனவரி 24, 2026 அன்று மினியபொலிஸில் போராட்டங்களின் போது கூட்டாட்சி முகவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்மீது ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடித்து கீழே தள்ளியபோது, அவரை அரவணைத்து நின்றதற்காக ப்ரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் துப்பாக்கியால் சுட முயன்றதால், தமது பாதுகாப்புக்காக சுட்டதாக அரசு கூறுகிறது. ஆனால் அவர் கையில் செல்போனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அவர் கொல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் காட்டிக் கொடுக்கின்றன.

​போராட்டங்களின் பின்னணியும் காவல்துறை நிலையும்

சட்ட விரோதமாக குடியிருப்பவர்களை கண்டறிந்து அகற்றுவதற்காக, டிரம்ப் நிர்வாகம் “ஆப்பரேஷன் மெட்ரோ சர்ஜ்” என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஐஸ் ஏஜெண்டுகளை மின்னசோட்டாவுக்கு அனுப்பியது. அவர்கள் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிவதாகக் கூறி, வீடுகள் மற்றும் பொது இடங்களில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டனர். இது உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்ததால் மக்கள் வீதியில் இறங்கினர்.

மினியபொலிஸ் மாநில காவல்துறையினர், ஐஸ் ஏஜெண்ட்டுகளுடன் முரண்படுகின்றனர். அமெரிக்க மாநிலங்களில் ஆளுநர்கள், நமது நாட்டின் மாநில முதல்வர்களைப் போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரம் கொண்டவர்கள். மின்னசோட்டா மாநில ஆளுநரும், மினியபொலிஸ் மேயரும், ஐஸ் ஏஜெண்ட்டுகள் தமது மாநிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஜனவரி 23 அன்று மின்னசோட்டாவில் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக “பொது வேலைநிறுத்தம்” நடைபெற்றுள்ளது.

தற்போதைய கள நிலவரம்

​பதற்றம்: ​ரெனே குட், ​அலெக்ஸ் ப்ரெட்டி இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவரே தவிர, வெளிநாட்டவர் அல்ல. அமெரிக்க அரசாங்கத்தின் ஐஸ் ஏஜெண்ட்கள் சொந்த நாட்டு மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியது அமெரிக்கர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெனே குட் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி ஆகியோரை “மக்களின் தியாகிகள்” (Martyrs) என்று போராட்டக்காரர்கள் அழைக்கின்றனர். அமெரிக்கா ஒரு “காவல்துறை நாடாக” (Police State) மாறிவிட்டதா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. “ஏன் ஒரு செவிலியர் சுட்டுக் கொல்லப்பட வேண்டும்?” என்ற கேள்வி அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற அன்று ஜனவரி 20 முதல் வாஷிங்டன் மற்றும் சில முக்கிய நகரங்களில் ‘நீ எனது ஜனாதிபதி அல்ல’ (நாட் மை பிரசிடெண்ட்) என்ற முழக்கத்துடன் சிறிய அளவிலான போராட்டங்கள் தொடங்கின. ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் வாழ்வதற்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத குடியேற்றக்காரர்களை நாடு கடத்தும் அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. ஆனால் அமெரிக்க குடிமக்களே அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.

மினியபொலிஸ் நகரெங்கும் ‘யாரும் அரசனில்லை’ (நோ கிங்), ‘ஐஸ் அதிகாரிகளே வெளியேறுங்கள்’ (ஐஸ் அவுட்) என தீப்பிடிக்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நகரின் பல பகுதிகளை போராட்டக்காரர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இரவு நேரங்களில் இளைஞர்கள் சேர்ந்து தெருக்களில் ரோந்து செல்கின்றனர். ஐஸ் ஏஜெண்ட்டுகள் தமது குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைய விடாமல் தடுத்து வருகின்றனர்.

ஜனவரி 23 அன்று தொடங்கிய பொது வேலைநிறுத்தம் இன்னும் தளர்ந்து விடவில்லை, நகரின் போக்குவரத்து இயங்கவில்லை. மூடப்பட்ட கடைகள் திறக்கவில்லை. இயல்பு நிலை திரும்பவில்லை.

காவல்துறை விலகி நிற்கிறது

மினியபொலிஸ் காவல்துறை, ஐஸ் ஏஜெண்ட்டுகளுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டது. இதனால் நகரத் தெருக்களில் உள்ளூர் போலீசாருக்கும், ஐஸ் ஏஜெண்டுகளுக்கும் இடையே ஒருவிதமான பனிப்போர் நிலவுகிறது.

மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள்

​போராட்டம் மினியபொலிஸோடு மட்டும் நிற்கவில்லை, அது அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியுள்ளது:

நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டில், போர்ட்லேண்ட் போன்ற நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். “மின்னசோட்டாவுடன் நாங்கள் நிற்கிறோம்” (ஸ்டாண்ட் வித் மின்னசோட்டா) என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கிறது.

​பல மாநிலங்களில் குடிவரவுத் துறை அலுவலகங்களுக்கு (ICE offices) முன்னால் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஆளுநர்களின் எதிர்ப்பு: கலிபோர்னியா, வாஷிங்டன் போன்ற ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள், தங்கள் மாநிலத்திற்குள் கூட்டாட்சி முகவர்களை அனுப்பினால் அவர்களைக் கைது செய்வோம் என்று மத்திய அரசுக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளனர்.

இந்தியச் சமூகத்தின் நிலைப்பாடு

​நியூஜெர்சி மற்றும் கலிபோர்னியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதிகளில், அமைதிப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

​மினியபொலிஸில் உள்ள இந்தியர்களில் பலர் மென்பொருள் துறை மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள இந்தியச் சங்கங்கள் மற்றும் கோவில்கள், போராட்டங்கள் குறித்த தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றன. அலெக்ஸ் ப்ரெட்டி கொல்லப்பட்ட நிகழ்வு, அங்கிருக்கும் இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் அவர் ஒரு சக செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

​இந்தியர்கள் நேரடியாக குறி வைக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் தற்போதைய அரசியல் மற்றும் போராட்டச் சூழல் அங்குள்ள இந்தியக் குடும்பங்களிடையே ஒருவித பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கியுள்ளது.

வெளிநாட்டிலும் எதிர்ப்பு

வாரண்ட் இல்லாமல் வீடுகளுக்குள் நுழைவது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்றவை அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல்களாக கருதப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், ஐஸ் நடவடிக்கைகள் குடும்பங்களைப் பிரிப்பதாகவும், அகதிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாகவும் கவலை தெரிவித்துள்ளது

​அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் மாநில அரசுக்கும் ( ஆளுநர்கள்) மத்திய அரசுக்கும் ( அதிபர்) இடையிலான இந்த மோதல் ஒரு “அரசியலமைப்பு நெருக்கடி” என அழைக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், கனடா, சீனா, ரஷ்யா, ஐக்கிய நாடுகள் சபை, இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்துள்ளன. “மற்ற நாடுகளுக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்கும் அமெரிக்காவின் நிலை இதுதான்” என்று விமர்சித்துள்ளன.

பின்வாங்குவாரா ட்ரம்ப்?

அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாட்டில், மாநில அரசும் மத்திய அரசும் நேரடியாக மோதிக் கொள்வது அந்த நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 2026-ல் டிரம்ப் நிர்வாகத்தின் பிடிவாதமான போக்கும், மக்களின் விடாப்பிடியான போராட்டமும் அமெரிக்காவை ஒரு பெரிய சமூக மாற்றத்தை நோக்கித் தள்ளி வருகின்றன.

ஒரு கடுமையான உள்நாட்டு நெருக்கடி உருவாகி அதிகரிக்கிறது. போராட்டங்களின் தீவிரம் மற்றும் “பொது வேலைநிறுத்தம்” காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் ஆரம்பத்தில் போராட்டக்காரர்களைக் கடுமையாக விமர்சித்தார். அலெக்ஸ் ப்ரெட்டி கொல்லப்பட்ட பிறகு, அவரை ஒரு “ஆயுதம் ஏந்திய நபர்” (Gunman) எனச் சித்தரித்தார்.

மக்களின் எழுச்சி மிகத் தீவிரமாக இருப்பதால், அரசு முழுமையாகப் பணிந்து போகவில்லை என்றாலும், தனது அதிரடி நடவடிக்கைகளைச் சற்றுத் தணித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போது ஐஸ் ஏஜென்ட்டுகளில் சிலரை திரும்பப் பெறச் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, மிதவாத வாக்காளர்களின் ஆதரவை இழக்காமல் இருக்க, வன்முறையைக் குறைக்கும் நோக்கில் அரசு பேச்சுவார்த்தைக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், ஒரு மூர்க்கனான ட்ரம்ப் தனது கொடூர நடவடிக்கைகளை முழுமையாக கைவிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button