கட்டுரைகள்வரலாறு

தியாகச்சுடர் அமீர் ஐதர் கான்

எம்.ரவி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தருணத்தில் இந்தியாவின் தென்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர் தியாகச்சுடர் அமீர் ஐதர் கான்.

ஒன்றுபட்ட இந்தியாவில் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டிக்கு அருகில் கல்லார் மாவட்டத்தில், கலியன் ஸளியன் என்ற கிராமத்தில் முகமது கான் என்ற ஏழை விவசாயிக்கு 1900 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி மகனாக பிறந்தவர் அமீர் ஐதர் கான்.

பாகிஸ்தானில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, மேலை நாடுகளுக்குச் சென்று, சோவியத் யூனியன் மாஸ்கோவில் பயிற்சி பெற்று அங்கு கம்யூனிஸ்ட் ஆக பரிணமித்தவர் அமீர் ஐதர் கான்.

இந்தியாவின் தென்பகுதியில் உள்ள சென்னை மாகாணத்திற்கு தலைமறைவாக வந்து பல புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை கம்யூனிஸ்ட்டுகளாக உருவாக்கியவர் என்கிற வரலாற்றுச் செய்தி உண்மையில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. அதற்கு முன்பே கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பில் இருந்த அமீர் ஐதர் கான் பம்பாயில் இருந்த பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் மற்றும் தொடர்புகளுக்குரிய ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு இந்தியாவில் பெருகி வருவதை கண்ணுற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதைத் தடுக்க மீரட் சதி வழக்கு என்ற வழக்கை போட்டதோடு தோழர்கள் எஸ்.வி.காட்டே, எஸ்.ஏ.டாங்கே, பி.சி. ஜோசி, முஜாபர் அஹமது, பிலிப் ஸ்பிரட், எஸ்.எஸ்.மிராஜ்கர் உள்ளிட்ட 32 கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தோழர் பி.சி.ஜோசி அவர்களை கைது செய்வதற்கு முன்பு அவரை கப்பல் மூலம் மாறுவேடத்தில் ஜெர்மன் நாட்டிற்கு தப்பிச் செல்ல தோழர் அமீர் ஐதர் கான் ரகசிய வேலைகளில் ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. தோழர் பி.சி.ஜோசி கைது செய்யப்பட்டார்.

பி.சி.ஜோசியை தப்பிக்க வைக்க முயற்சி செய்தவர் யார் என்பதை அறிந்த பிரிட்டிஷ் உளவுத்துறை அமீர் ஐதர் கானை சுற்றி வளைத்தது. அவர் தப்பித்து விட்டார்.

ஆனால், அவரது அறையில் இருந்த 109 பொருள்களைக் கைப்பற்றியது. அவர் அகிலத்துடன் தொடர்பு கொண்டு பெற்ற கடிதங்கள், சோசலிசம் குறித்த புத்தகங்கள் ஆகியவற்றை காவல்துறை கைப்பற்றியது.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் மீரட் சதி வழக்கில் அமீர் ஐதர் கானும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். காவல்துறை அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கைகளை எடுத்தது.

அமீர் ஐதர் கான் மிகுந்த சாதுர்யமாக பம்பாயிலிருந்து கோவாவுக்குச் சென்று அங்கிருந்து ரயிலில் சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து கப்பல் மூலம் சோவியத் யூனியனுக்கு சென்று விட்டார்.

1929 ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு சென்ற அமீர் ஐதர் கான் இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்ட செய்திகளை படித்தார். இனியும் மாஸ்கோவில் இருப்பது சரியல்ல, தனது தாய் நாட்டிற்கு வந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது அவசியம் என முடிவு செய்தார்.

மாஸ்கோவிலிருந்து இந்தியாவுக்கு புறப்படும்போது ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மாஸ்கோ நகர பொதுச்செயலாளர் தோழர் லாஜி விஸ்கி “கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு வலுவான அமைப்பு இல்லாமல் அதன் திட்டத்தை நிறைவேற்ற இயலாது. எனவே, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும், வளர்ப்பதற்கும் முயற்சி செய்யுங்கள்” என்று அமீர் ஐதர் கானிடம் அறிவுறுத்தி யுள்ளார்.

தோழர் லாஜிவிஸ்கி கூறிய இந்தச் செய்தி தோழர் அமீர் ஐதர் கான் அவர்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உயிரைக் கொடுத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தை உருவாக்க முயற்சி எடுப்பது என்று முடிவெடுத்தார்.

1931 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். பம்பாயில் தலைமறைவாக இருந்த பி.டி.ரணதிவே, எஸ்.வி.தேஷ் பாண்டே போன்ற சில தலைவர்களை சந்தித்து கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான திட்டத்தை தெரிவித்தார்.

அமீர் ஐதர் கான் மீரட் சதி வழக்கில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்ததால், தான் பம்பாய் மாகாணத்தில் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்து, சென்னை மாகாணத்திற்கு சென்று கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவது என முடிவு செய்து சென்னைக்கு வந்தார்.

கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரியான தோழியர் சுகாசினி அவர்களின் அறிமுக கடிதத்துடன் சீனிவாசன் என்பவரை முதன்முதலாக சந்தித்து தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற்கான தனது எண்ணத்தை அவரிடம் கூறினார்.

“சாத்தியம் இல்லை, நீங்கள் பம்பாய்க்கு திரும்பி செல்வதே நல்லது” என்றும், “உங்களுக்கு நான் எந்த உதவியும் செய்ய இயலாது” என்றும் கூறிவிட்டார்.

இதனால் அமீர் ஐதர் கான் நம்பிக்கையை இழக்கவில்லை. அடுத்து சென்னை இங்கிலீஷ் எலக்ட்ரிகல் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்த மாத்யூ என்பவரை சந்தித்தார். தான் இஸ்லாமியர் என்பதை மறைத்து, தன்னை கத்தோலிக்க கிறிஸ்தவன் என்றும், தனது பெயர் பிரான்சிஸ் பெர்டினான்ட் என்றும், நான் கோவாவை சேர்ந்தவன் என்றும், அபூர்வமான பொருள்களை சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகர் என்றும் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டார்.

அடுத்து அந்த மாத்யூ அவர்களின் மூலமாக வெங்கட்ராமன் என்பவரையும், வெங்கட்ராமன் மூலமாக வி.கே.நரசிம்மன், ஜெயராமன் என்பவர்களையும் அவர்கள் மூலமாக சில இளைஞர்களையும் சந்தித்து பேசி ‘யங் ஒர்க்கர்ஸ் லீக்’ (இளம் தொழிலாளர் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

அமீர் ஐதர் கான் இந்த இளைஞர்களை எல்லாம் ஒரு ரகசியமான இடத்தில் வரவழைத்து அவர்களுக்கு மார்க்சீய கருத்துகளை சொல்லிக் கொடுத்தார். அப்போது தீவுத்திடலில் மாணிக்கம் என்பவரை சந்தித்து விசாரித்தபோது, தனது அண்ணன் வடிவேலு ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிக்கை நடத்தி வருவதாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் அமீர் ஐதர் கான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வடிவேலு அவர்களைச் சந்தித்தார்.

அந்த வடிவேலு ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த ஜஸ்டீஸ் கட்சியில் இருந்தவர். தற்போது ஜஸ்டீஸ் கட்சி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டதால் அதிலிருந்து வெளியேறி வறுமையின் கொடுமையிலும் ‘ஜனமித்திரன்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அவருடன் விவாதித்து ஜனமித்திரன் என்ற பெயரை ‘முன்னேற்றம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘முன்னேற்றம்’ பத்திரிகையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பத்திரிக்கையான ‘இம்பிரெகாரி’யில் வெளிவந்த கட்டுரைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

முன்னேற்றம் பத்திரிகையில் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளையும், மகாத்மா காந்தியின் கொள்கைகளையும் விமர்சித்து அமீர் ஐதர் கான் எழுதிய கட்டுரைகள் வெளிவந்தன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அரசும் புரட்சியும், மார்க்ஸின் வாழ்க்கையும் தத்துவமும் ஆகியவை போன்ற கம்யூனிச புத்தகங்களை அமீர் ஐதர் கான் வெளிநாடுகளில் இருந்து தருவித்து ‘யங் ஒர்க்கர்ஸ் லீக்’ இளம் தொழிலாளர்களிடம் ஒவ்வொரு பாராவாக படித்து அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறி வந்தார்.

அது மட்டுமல்லாமல் இளம் தலைவர்களை தொழிற்சாலைகளின் அருகே அழைத்துச் சென்று தொழிலாளர்களின் கட்டுப்பாட்டையும், அவர்களின் கஷ்டங்களையும், அதற்கான காரணங்களையும் எடுத்துச் சொல்வார்.

மாத்யூ, வெங்கட்ராமன், ஜெயராமன், வி.கே.நரசிம்மன், சத்தியநாராயணா, மாணிக்கம், வடிவேலு, டாக்டர் வரதாச்சாரி ஆகியோருடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் காவல்துறை வயர்லெஸ் கோபுரத்தின் உச்சியில் மூவண்ணக் கொடியை பறக்க விட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீவிர தேச பக்தர்.

கே.பாஷ்யம் (1932 சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஏறி பிரித்தானிய கொடியை இறக்கிவிட்டு இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றியவர் பாஷ்யம் எனும் ஆர்யா)வும் அமீர் ஹைதர் கானுடன் சேர்ந்து கொண்டார்.

சென்னையில் ரயில்வே தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தினார்கள். அந்த போராட்டக்காரர்களுடன் அமீர் ஐதர் கானும், அவருடன் சேர்ந்தவர்களும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தங்களது கருத்துகளை அவர்களிடம் விதைத்தனர். அதனால் அந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த காலகட்டத்தில் யாரோ வெளியில் இருந்து இந்த போராட்டங்களை தூண்டி விடுகின்றனர்- வழிநடத்துகின்றனர் என்பதை அறிந்த பிரிட்டிஷ் காவல் துறை அந்த நபரை கண்டுபிடிக்க வலைவீசியது.

இதனால் உஷார் அடைந்த அமீர் ஐதர்கான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் இரவில் தங்கினார். மேலும் இதுவரை கிறிஸ்துவராக வேடமிட்டிருந்த அவர், மொட்டை அடித்து சிறு குடுமியுடன் பூணூல் அணிந்து கொண்டு காலில் செருப்பு அணியாமல் சங்கர் என்ற பெயரில் சாட்சாத் பிராமணனாக புதிய அவதாரமெடுத்தார்.

சுந்தரய்யாவை கம்யூனிஸ்டாக்க முயற்சி

பெங்களூரில் செசன்ஸ் நீதிபதியாக இருந்த ஒருவரின் மைத்துனர் தீவிர காந்தி பக்தராக இருப்பதை கேள்விப்பட்ட அமீர் ஐதர் கான் ஒருநாள் அவரை சந்திக்க பெங்களூருக்கு சில தோழர்களுடன் சென்றார். அவரை தனியே ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கான தாங்கள் எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துக் கூறி, அவரை கம்யூனிஸ்ட் ஆக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த இளைஞர், “நான் முதலில் எனது படிப்பை முடிக்க வேண்டும், எனக்கு இதற்கு உரிய நேரமில்லை” என்று கூறி சென்று விட்டார்.

சுந்தரராம ரெட்டி தான் அந்த இளைஞர். பின்னர் பி.சுந்தரய்யா என்று பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர். தோழர் சுந்தரய்யா அவர்கள் அமீர் ஐதர் கானைப்பற்றி குறிப்பிடுகையில், “தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பை ஏற்படுத்தி. அதை அகில இந்திய கட்சியின் கிளையாக உருப்பெறச் செய்த சாதனையும். பெருமையும். தியாகமும் தோழர் அமீர் ஐதர் கான் அவர்களையே சாரும்.

அவருடைய அறிமுகம் 1931 ஆம் ஆண்டு கிடைத்தது. பின்னர் 1934 ஆம் ஆண்டு இரண்டு முறை சந்தித்து கட்சி அமைப்பு குறித்து விவாதித்து அவர் எனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்ற முனைந்தேன். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலே தோழர் அமீர் ஐதர் கான் நிர்வகித்த பாத்திரம் என்றுமே நினைவு கூரத்தக்கது. அவர் அந்தக் காலத்தில் கட்சியை கட்டி அமைக்க செய்த சேவை ஈடிணையற்றது” என்று கூறியுள்ளார்.

கட்டுரையும் கைதும்

1932ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் நாள் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவர்களது தியாகத்தை புகழ்ந்தும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளை கண்டித்தும் அமீர் ஐதர் கான் கூற அதை வி.கே.நரசிம்மன் அவர்கள் எழுதி ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டது.

அந்த பிரசுரம் சென்னையில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் பிரிட்டிஷ் காவல்துறை அதி தீவிரமாக வேட்டையாடி அமீர் ஐதர் கானைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் கம்யூனிஸ்ட் பிரச்சாரம்

அமீர் ஐதர் கான் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்து பம்பாயிலிருந்து பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் சென்னை வந்து மீரட் சதி வழக்கு குற்றவாளி அகப்பட்டுவிட்ட மகிழ்ச்சியில் அமீர் ஐதர் கானை துருவித் துருவி விசாரித்தார்கள்.

அமீர் ஐதர் கான் மீதான வழக்கு நீதிமன்றத்தில் பல மாதங்கள் நடைபெற்றது.

சிறையில் இருந்த அவர், சிறைச்சாலையை கம்யூனிஸ்டுகளை உருவாக்கும் அறச்சாலையாக பயன்படுத்திக் கொண்டார்.

1932 ஆம் ஆண்டு காந்திஜியின் அறைகூவலை ஏற்று அந்நியத் துணியை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தீவிர காங்கிரஸ் தேச பக்தர்கள் பலர் அமீர் ஐதர் கான் இருந்த சென்னை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அதில், அன்று காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸும் ஒருவர் ஆவார்.

ஏற்கனவே சிறைக்குள்ளே நடக்கும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் வீர சமர்புரிந்து கொண்டிருந்த அமீர் ஐதர் கான் அவர்களை தனிச்சிறையில் யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபடி அடைத்து வைத்திருந்தனர். ஆனால் கடுமையான உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி தனிமைச் சிறையிலிருந்து பொதுச் சிறைக்கு மாற்றப்பட்டார். பொதுச் சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டது. அமீர் ஐதர் கானின் அறிவு கூர்மையைக் கண்டு நேதாஜி இவரிடம் பல தத்துவ விஷயங்களை கேட்டறிந்தார்.

சிறையில் இருந்த தீவிர காங்கிரஸ் இளைஞர்கள் பலர் நேதாஜியிடம் அரசியல் குறித்து விவாதிக்க வருகிற போது, அதில் அமீர் ஐதர் கானும் தலையிட்டு பல விவரங்களை கூறுவார். மகாத்மா காந்தியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து பேசுவார், ஆனால் நேதாஜி அதற்கு எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பார்.

சிந்தனையை மாற்றிய சீனிவாச ராவ்

சுபாஷ் சந்திரபோஸை சந்திக்க வந்த ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் மனவோட்டத்தை கண்காணித்து வந்த அமீர் ஐதர் கான் தீவிரமான கருத்துக்களை கூறிய ஒருவரை முதன்முதலாக கம்யூனிச கருத்துக்குள் ஈர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.

அவரிடம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை கொடுத்து, “தம்பி இதை படித்துப் பார்” என்றும், “இதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் தொடர்ந்து படித்தால் புரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை வாங்கிய அந்த 25 வயது இளைஞர் நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசுபவர். உயர்ந்த சாதியில் பிறந்தவர். எனவே, அவருக்கு அமீர் ஐதர் கான் சொன்னது கோபத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து அந்த இளைஞரே எழுதியுள்ள கட்டுரை:

எனக்கு எனது வர்க்கத்திற்கே இருக்கும் மண்டை கனம் அதிகமாக இருந்தது. எனவே, உம்மைக் காட்டிலும் எனக்கு அதிகமாக இங்கிலீஷ் தெரியும் எனக்கொன்றும் கடினமாக இருக்காது, படித்துவிட்டு சொல்கிறேன் என்று அந்த புத்தகத்தை வாங்கிச் சென்றேன். அன்றிரவு அந்த புத்தகத்தைத் திரும்பத் திரும்ப படித்தேன். பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. ஆகவே, சலிப்புடன் அந்த புத்தகத்தை மூலையில் வீசி எறிந்து விட்டு தூங்கினேன். அமீர் ஐதர் கான், “தம்பி புத்தகம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். நான் அவரிடம் இறுமாப்போடு பேசியது ஞாபகம் வந்தது. நான் தோற்றுவிட்டேன் என்னை வெட்கம் பிடுங்கி தின்றது. ஆனால் எனது அறியாமையை ஒத்துக் கொள்ளாதபடி அசட்டு கௌரவம் வேறு எனக்கு குறுக்கே வந்து நின்றது. பழியை காரல் மார்க்சின் மீது தூக்கிப் போட்டேன்.

ஆனால் அமீர் ஐதர் கான் என்னை விடுபவராக இல்லை. தம்பி வா, எனக் கூறி ஒவ்வொரு வாக்கியமாக பொறுமையாக படித்து ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் என்று தெளிவாக எடுத்துரைத்தார். எனது சிந்தனை தெளிந்தது.

நான் புத்தகத்தை வாங்கிய போது அவரிடம் பேசியதற்காக மன்னிக்க வேண்டுமெனக் கேட்டு கொண்டேன். அது மட்டுமல்ல அன்று முதல் நான் அவரின் மாணவனாக மாறிவிட்டேன் என்று அந்த இளைஞர் கூறுகிறார்.

அந்த இளைஞர் வேறு யாருமல்ல, நமது அருமைத் தோழர் பி. சீனிவாச ராவ் தான் அந்த இளைஞர். அமீர் ஐதர் கான் கொடுத்த மார்க்சீய நூல்களை பி.சீனிவாச ராவ் தன்னுடன் சிறையில் இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் அவர்களுக்கு கொடுத்து படிக்கச் சொல்லி கலந்துரையாடினார். காங்கிரஸ்காரராக இருந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கம்யூனிஸ்ட் ஆக மாறினார்.

இன்னும் வரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button