கட்டுரைகள்

மீண்டும் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி

அ.பாஸ்கர்

நாட்டின் அரசியல் வரலாற்றில் இடதுசாரி கட்சிகளின் முன் முயற்சியால், ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு, 2005 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில், உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்று இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள், கிராமத் தொழிலாளர் குடும்பங்கள் தலா ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவது சட்டபூர்வ உரிமையாக வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர்ல இந்தத் திட்டம்தான் கிராமப்புற மக்களைக் காப்பாற்றியது. கோடிக்கணக்கான மக்களை பட்டினிக் கொடுமையில் இருந்து பாதுகாத்தது கொரோனா ஊரடங்கின்போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கியது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த முன்னோடி திட்டத்திற்கு தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயர் சூட்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் மற்றும் திட்டப்பணிகள் மூலம் ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இருபதாண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரில் உள்ள “மகாத்மா காந்தி “ பெயரை நீக்கி விட்டு, “ பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா” என பெயரை மாற்றுவது என, பாஜக ஒன்றிய அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் (12.12.2025) முடிவு செய்தது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGS) பெயரை விக் ஷித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிசன் (கிராமின் விபி-ஜிராம்-ஜி என்று மத்திய பாஜக அரசு மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய முன்வந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைய மண்டபத்தில் உரத்த குரலிட்டு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி காந்தி சிலைக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேச விடுதலைப் போராட்டத்தின் தலைவராக விளங்கிய மகாத்மா காந்தியை “தேசத் தந்தை” என்று நாடு போற்றிப் பாராட்டி வருகிறது. அவர் பின்பற்றிய மதச்சார்பற்ற கொள்கையும், அகிம்சா வழி முறையும் உலகம் முழுவதும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.

ஆனால், பெரும்பான்மை மத அடிப்படைவாதக் கொள்கையில், மதவெறியோடு செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் தாய்வழி அமைப்பான இந்து மகாசபையும் மகாத்மா காந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாடறியும்.

“ஈஸ்வர் அல்லா தேரே நாம், சப்கோ சன்மதி தே பகவான்” அனைத்து சமயங்களையும், சமமாக மதித்து, மக்கள் ஒற்றுமைக்கு வாழ்நாளை அர்ப்பணித்த அண்ணல் மகாத்மா காந்தி, இந்து மதவெறி சக்திகளால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதன் துயர வடு என்றென்றும் மாறாது.

பாஜக தலைமையிலான அரசு அமைந்த காலத்திலிருந்து, கடந்த 11 வருடங்களாக சவார்க்கர், நாதுராம் கோட்சே போன்றவர்களுக்கு நற்சான்று வழங்கி, அவர்களை நாட்டின் தலைவர்களாக முன்னிறுத்தும் வரலாற்றுப் புரட்டில் சங் பரிவார் கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் பெயரை மாற்றும் நடவடிக்கையும் அமைந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நாட்டின் கிராமப்புற வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம் குறிப்பிடத்தக்கது. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (UPA) முதல் ஆட்சிக் காலத்தில் பொது குறைந்தபட்ச செயல் திட்டத்தின் (Common Minimum Programme) அழுத்தத்தின் காரணமாகவே திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

2014இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், வேலை உறுதியளிப்பு திட்டத்தை சிதைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை குறைத்தல், நிதிய சரியான நேரத்தில் வழங்காதிருத்தல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பெயரால் தொழிலாளர்களை வெளியேற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. கடந்த வாரம் மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலின்படி 2019-2020 மற்றும் 2024-2025க்கு இடையில் நாடு முழுவதும் 4.57 கோடி வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

2025 நவம்பர் முதல் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஆதார் அடிப்படையிலான பதிவு கட்டாயமாக்கப்பட்டது. பதிவு செய்துள்ள சுமார் 27.6 கோடி தொழிலாளர்களிடம் இந்தச் செயல்முறையை உடனடியாக முடிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

ஒரு மாதத்திற்குள் மட்டும் 27 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மொபைல் கண்காணிப்பு அமைப்பு மூலம் “அட்டெண்டன்ஸ் ஆப்”பில்” பதிவு செய்ய வேண்டும் என்றும், நேரடிப் புகைப்படத்தை எடுத்து அதை அவர்களின் ஆதார் படத்துடன் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் மூலமும் நாடு முழுவதும் பல லட்ச மக்கள் இத்திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஆரம்ப நாளிலிருந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைத்து, அதன் திட்டப் பணிகளை சிதைத்து வரும் ஒன்றிய பாஜக அரசு, இன்று அதன் பெயரில் மாற்றம் செய்து, முற்றிலும் அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

“மகாத்மா காந்தி” பெயரில் பாஜக ஒன்றிய அரசு நடத்தும் வன்மம் இது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் நூறு நாள் வேலையைத் தொடர்ந்து வழங்க வேண்டும், வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாகவும் தினசரி குறைந்த பட்ச ஊதியம் ரூ 700 /= ஆக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

பிஜேபி அரசால் கொண்டுவரப்படும் திருத்த மசோதாவில் அப்படிப்பட்ட அறிவிப்புகள் ஏதும் இல்லை இனி ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாள்கள் வேலைவாய்ப்பு, தினசரி ஊதியம் வாராந்திர அடிப்படையில் வழங்கல், விவசாயப் பருவத்தில் விடுமுறை போன்ற அறிவிப்புகள் எல்லாம் வந்துள்ளன.

கடந்த காலங்களில் இத்திட்டத்திற்கு நிதி கொடுக்காத காரணத்தால் ஆண்டுக்கு 50 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை என்பதை நாடறியும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கான முழு நிதியும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வந்தது. புதிய மசோதாவில் மத்திய அரசின் நிதிப் பொறுப்பை குறைத்து மாநிலங்களின் பொறுப்பை அதிகரிக்கும் பரிந்துரைகள் இதில் உள்ளன,

முந்தைய சட்டப்படி ஊதிய செலவையும் முழுமையாக மத்திய அரசே ஏற்று வந்தது. அதேநேரத்தில் உள்கட்டமைப்பு பொருள்கள் மற்றும் நிர்வாக செலவுகளின் பங்கினை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிலையிருந்தது.

புதிய மசோதாவின் பிரிவு 22-இன்படி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் தவிர மற்ற மாநிலங்கள் மொத்த செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்களின் நிதிச் சுமை அதிகரித்தாலும் திட்டத்தை எங்கே எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

மத்திய அரசின் அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசே தீர்மானிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, மாநிலங்கள் அதிக நிதியை செலவிட வேண்டி இருந்தாலும், திட்ட அமலாக்கமும், கட்டுப்பாடும் மத்திய அரசு வசமே இருக்கும் என புதிய மசோதாவில் உள்ளது.

“கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு, கிராம மக்கள் மேம்பட வேண்டும்“ என்ற மகாத்மா காந்தியின் உன்னதக் கொள்கையை மோடி அரசு சிதைப்பதை நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த அநீதியை எதிர்த்து குரல் கொடுப்போம்! பிஜேபியை வீழ்த்த ஒன்றுபட்டு எழுவோம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button