
ஏழை – பணக்காரர் இடைவெளி மிகக் கடுமையாக அதிகரித்ததால் எழுந்த சமத்துவமின்மை வரிசையில் உலகின் முதன்மை நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 கூறுகிறது.
பொருளாதார வல்லுநர்களான லூகாஸ் சான்செல், ரிக்கார்டோ கோமஸ்-கரெரா, ரோவைடா மோஷரிஃப் மற்றும் தாமஸ் பிக்கெட்டி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘உலக சமத்துவமின்மை அறிக்கை 2026’ (World Inequality Report 2026) இல் வருமானம் மற்றும் சொத்து குறித்த மிக முக்கிய தரவுகள் இடம் பெற்றுள்ளன.
வருமானத்தில் பெரும் பிளவு!
இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் 58 சதவீதத்தை ஈட்டுகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
மக்கள் தொகையில் கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினர் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறார்கள் என்கிறது அந்த அறிக்கை.
செல்வ சமத்துவமின்மை, மேலும் அதிகரித்து உள்ளது, பணக்காரர்களில் 10% பேர் மொத்த செல்வத்தில் 65% ஐ வைத்திருக்கிறார்கள், மேல் அடுக்கினர் 1% பேர் சுமார் 40 சதத்தை வைத்திருக்கிறார்கள். மேல் அடுக்கிலுள்ள 10 சதவீதத்தினருக்கும் கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினருக்கும் இடையிலான வருமான இடைவெளி 2014 மற்றும் 2024 க்கு இடையில் நிலையானதாகவே இருந்தது.
தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 6,200 யூரோக்கள், வாங்கும் திறன் சமநிலை(PPP), மற்றும் சராசரி செல்வம் சுமார் 28,000 யூரோக்கள் ஆக உள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு 15.7% இல் மிகக் குறைவாகவே உள்ளது, கடந்த பத்தாண்டுகளில் எந்த முன்னேற்றமும் இதில் இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் சமத்துவமின்மை வருமான ஏற்றத்தாழ்வு, செல்வ குவிப்பு பாலின, அடிப்படையிலும் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது.
இது பாஜக அரசு கடைபிடித்து வரும் தவறான பொருளாதார கொள்கையின் விளைவால் எழுந்தது ஆகும்.
தரவு ஏமாற்று!
கடந்த ஜூலை மாதம் இந்திய ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) வெளியிட்ட அறிக்கையில், இந்தியா உலகின் நான்காவது சமத்துவ நாடாக உள்ளது என்று கூறப்பட்டிருந்தது, இந்த கூற்றை ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஆளும் பாஜக தலைவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டாடினர். அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில், இந்தியா 25.5 AQ (Gini) குறியீட்டைக் கொண்டுள்ளது (2022 தரவுகளின்படி), இது “மிதமான குறைந்த சமத்துவமின்மை” பிரிவில் வைக்கிறது. அமெரிக்கா (41.8) மற்றும் சீனா (35.7) போன்ற முக்கிய பொருளாதாரங்களை விட உலகளவில் நான்காவது மிகவும் சமத்துவ நாடாக உள்ளது என்று ஆனந்த கூத்தாடியது.
அரசாங்கத்தின் கூற்று உலக வங்கியின் 2025 இளவேனிற் கால, வறுமை மற்றும் பங்குகள் குறித்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டது, இது AQ கணக்கிடும் வருமானத் தரவை கொண்டு அமைந்தது அல்ல. ஆனால், நுகர்வுத் தரவைப் பயன்படுத்தி சொல்லப்பட்ட ஒன்று ஆகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த கூற்று ‘தரவு’ ஏமாற்று வேலை என்பதே உண்மை!
முகவை உயர்த்தி காட்ட பயன்படுத்தப்படும் நலத்திட்டங்கள்!
இந்தியா இலவச உணவு தானியங்களை வழங்குவதன் மூலம் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்கிறது என்பதையும், ஓரளவுக்கு அழிக்கப்படும் இலவச மருத்துவம், கல்வி மற்றும் மானிய விலையிலான பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது என்பதையும், இதன் மூலம் நுகர்வு மேம்பட்டுள்ளதாக காட்டி, தரவுகளை கையாண்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒன்றியஅரசாங்கம், சர்வதேச தொழிலாளர் கழகம் (ILO) மற்றும் உலக வங்கி (Word Bank) போன்ற சர்வதேச அமைப்புகள் சமத்துவமின்மையை அளவிடுவதற்கான அடிப்படையாக மேம்பட்ட நுகர்வை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. அத்தகைய நுகர்வின் அடிப்படையில், உலக வங்கி இந்தியாவை உலகின் நான்காவது மிகவும், சமமான நாடாக மதிப்பிட்டது.
தனிநபர் வருமானமே அடிப்படை
இருப்பினும், உலக சமத்துவமின்மை ஆய்வகம், தனிநபர் பெறும் வருமானத்தையே சமத்துவமின்மையை அளவிடுவதற்கான அடிப்படையாக ஆக்கியது.
இலவச உணவு தானியங்கள், மருந்துகள், கல்வி அல்லது மானிய விலையில் கிடைக்கும் பொருட்கள் ஒரு ஏழையை பணக்காரனாக்குவது இல்லை, மாறாக அவர்களின் வாழ்க்கையை
கொஞ்சம் மாற்றுகின்றன. ஏழை – பணக்காரர் இடையிலான சமத்துவமின்மை ஒருபோதும் இது போன்ற நடவடிக்கைகளால் நீக்கப்படவில்லை. ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர், மேலும் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்களாக மாறுகிறார்கள். எனவே, மக்களிடையே உள்ள சமத்துவமின்மையை அளவிடுவதற்கு வருமானம் மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும்.
மோசடி பிரச்சாரம் செய்யும் மோடி அரசு!
மோடி அரசாங்கத்தின் இந்த கூற்றை, எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், நேர்மையற்றது மற்றும் “மோசடியானது” என்று விமர்சித்துள்ளனர்.
ஏனெனில் வருமானம், பொதுவாக நுகர்வை விட மாறுபடும் ஒன்று ஆகும். உதாரணத்திற்கு மது நுகர்வை கணக்கில் எடுத்தால் இந்தியா வளர்ந்து விட்டதாகவே தம்பட்டம் அடிக்கலாம். ஆனால் அதனால் விளையும் கேடுகள், கல்லீரல் அழற்சி மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக ஆகும் செலவுகளை கணக்கிட்டால் அதிலும் கூட அவர்கள் தப்ப முடியாது.
சமத்துவமின்மையின் உச்சம் இந்தியா!
வருமானத்தின் அடிப்படையில் அளவிடப்பட்டிருந்தால், இந்தியா,உலக சமத்துவமின்மையில் 216 நாடுகளில் 176 வது இடத்தில் இருந்திருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.அதாவது மிகவும் நேர்மையான ஆப்பிரிக்க நாடுகளை விட கீழே இந்தியா இடம் பெற்றிருக்கும் என்பதை உண்மை.
கடந்த 1980 ஆம் ஆண்டுகளில், உலகளாவிய பெரும் பணக்காரர்கள், வட அமெரிக்கா, ஓசியானியா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாகக் குவிந்திருந்ததாக உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 கூறுகிறது, ஆனால் அப்போது சீனாவும், இந்தியாவும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் தான் இருந்தன.
சீன, இந்திய ஒப்பீடு!
ஆனால் 2025 ஆம் ஆண்டளவில், சீனாவின் நிலை இதில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. அதன் மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கம் 40%க்கு அதிகமாக, உயர்ந்துள்ளது, மேலும் அங்கு சமத்துவமும் வளர்ந்து வருகிறது. இது மற்ற ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக, இந்தியா ஒப்பீட்டளவில் தனது நிலையை இழந்துள்ளது, 1980இல், அதன் மக்கள் தொகையில் பெரும்பகுதி நடுத்தர வர்க்கத்தினராக, 40%இல் இருந்தது, ஆனால் இன்று கிட்டத்தட்ட அனைவரும் அடித்தட்டில் உள்ள 50%இல் சேர்ந்து உள்ளனர். இந்தியாவின் நடுத்தர வர்க்கம் மிகவும், கீழ் மட்டத்தில் உள்ளது, அதே நேரத்தில் சீனாவில் இது உயர்ந்து உள்ளது.
உலக சமத்துவம் இன்மை அறிக்கை 2026 தரவுகளை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது 100,000 க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மிகச்சிறிய நாடுகள், 1970 முதல் உலக சராசரியை விட மிக அதிகமாக தனிநபர் வருமானத்தைப் பதிவு செய்துள்ளன, மேலும் அவற்றின் ஒப்பீட்டு நன்மை காலப்போக்கில் விரிவடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 2024 வாக்கில், அவற்றின் வருமானம் உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, உலக சராசரியை விட தொடர்ந்து, குறைவான வருமானம், கொண்ட ஒரே நாடு இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகள் மட்டுமே.
இந்திய வருமானத்தில் இடைவெளி!
பன்முகத்தன்மை, சமத்துவமின்மை, தேசிய சூழல்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில், சாதி மற்றும் மத அடையாளங்கள் வருமானம் மற்றும் கல்விப் பிளவுகளுடன், ஒன்றுடன் ஒன்று இணைகின்றன என்று அறிக்கை வலியுறுத்தியது.
இந்தியாவில் மேல் அடுக்கில் உள்ள 1 சதவீதத்தினரின் சராசரி வருமானம், வாங்கும் திறன் சமநிலை (PPP) 140,649 யூரோக்கள் அதாவது ஒரு கோடியே 48 லட்சத்து 94 ஆயிரத்து 729 ரூபாய், அதே நேரத்தில் அவர்களின் சராசரி செல்வம் 1,128,435 யூரோக்கள், 11 கோடியே 95 லட்சத்து 1266 ரூபாய், கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினரின் வருமானம் மற்றும் செல்வம் 940 இருந்து, 1801 யூரோக்கள், அதாவது 99 ஆயிரத்து 546 ரூபாயிலிருந்து 1,90725 ரூபாய் மட்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் மோடி ஆட்சி ஏழைகளுக்கு எப்படி முடிவுரை எழுதி விட்டது என்பதை பணக்காரர்களுக்கு மேலும் வாய்ப்புகளை, வாரி வழங்கி வருவதால் இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது, அவர்களின் செல்வம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
வறுமைக்கான காரணங்கள்
மக்களின் சுகாதாரச் செலவுகளால் ஆண்டுதோறும், வறுமை கோட்டுக்கு மேலே இருக்கும் 63 மில்லியன் மக்களை மீண்டும், வறுமையில் தள்ளுகின்றன, மேலும் போதுமான ஊட்டச்சத்து இல்லாத உணவை வாங்க 74% இந்திய மக்கள் சிரமப்படுகிறார்கள்.இதேபோல கல்விக்கான செலவினங்கள், வெடித்து கிளம்பி உள்ள, வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகள், வறுமையை வளர்ப்பதில் முன்னிலை வைக்கின்றன. இதனை தீர்ப்பதற்கு பதிலாகத் தான் கோவில், கோவிலாக சுற்றி, மதவெறி, பிளவு அரசியலை முன்னெடுத்து வருகிறது மோடியின் பிஜேபியும், ஆர்எஸ்எஸ், சங்க பரிவார அமைப்புகளும் அதன் மூலம் மக்களை திசை திருப்பி,பெரும் பணக்காரர்களுக்கும், பெரும் நிறுவனங்களும் ஊழியம் செய்கின்றனர்.
சமத்துவத்திற்கான சக்தி மிக்க போராட்டங்கள் தொடரட்டும்! சமூக நீதிக்கான குரல், எங்கெங்கும் ஒலிக்கட்டும்!