கட்டுரைகள்

மரபு மீறிய குடியரசுத் தலைவர் விருந்து!

த.லெனின்

சாதிய,சனாதன, மரபுகளை உறுதியாக கடைபிடிப்பது ஆகாத ஆன்மீக, ஆகம விதிகளின்படி போகாத ஊருக்கு வழி சொல்லும் பாஜக! இன்று அரசமைப்புச் சட்ட அடிப்படையில் அமைந்த நாடாளுமன்ற மரபுகளை காலில் போட்டு மிதித்துள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து வளர்ந்த ஜனநாயக நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நிழல் பிரதமர் என்று அழைக்கப்படுகிறார். அவர் தனக்கு ஏற்ற வகையில் நிழல் அமைச்சரவையும் அமைத்து கொள்கிறார்கள். அப்படி அரசின் திட்டங்கள், செய் சட்டங்கள் அனைத்திற்கும் தங்களது ஜனநாயக பங்களிப்பை அளிப்பதற்கு துறைவாரியாக பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள்!

ஆனால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள், எதிரி கட்சிகளாக,ஏன் நாட்டின் எதிரிகளாக கட்டமைக்கப்படுகிறார்கள்?

அந்த அளவிற்கு வெறுப்பு,நெடி வீசும் ஓர் இடமாக இந்தியாவை மாற்றிவிட்டது சங் பரிவார், பாஜகவின் மோடி அரசு!

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சியினரை, எதிரியாக பாதிப்பது பொது இடங்களில் கூட முகம் சுழித்து திரும்பி கொள்வது, திருமணங்களின் போது திமுகவினர் என்றால் அழைக்க மறுப்பது, அப்படியே அழைத்து விட்டால் அவரை கட்சியிலிருந்து நீக்குவது என்று ஒரு மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.சபாநாயகர் இருக்கையில் தனது தோழியை அமர்த்தி அழகு பார்த்தார். ஆனால் வட மாநிலங்களில் நாடாளுமன்ற அரசியலில் எதிரும், புதிருமானவர்கள் கூட அருகருகே அமர்ந்து, அளவலாவி கொள்வதும், உணவு அருந்துவதும், வாஜ்பாய், மன்மோகன் சிங் காலம் வரை ஒரு அன்றாட நடவடிக்கையாக நீடித்தது.

இழுக்கை ஏற்படுத்திய மோடி!

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இவற்றையெல்லாம் அழுக்காக கருதி புறக்கணித்து விட்டார். இதன் மூலம் இந்திய ஜனநாயகத்திற்கு உலகளாவிய முறையில் பெரும் இழுக்கை ஏற்படுத்திவிட்டார்.

நாடாளுமன்ற, எதிர்க்கட்சிகளை இப்படி விலக்குவது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வலியுறுத்தும் அரசியலமைப்பின் விழுமியங்களை இனி இந்தியா கடைப்பிடிக்காது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

விருந்தில் நஞ்சு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சமீபத்தில் இரண்டு நாள்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசு விருந்து அளித்தார், மாநிலங்களவை மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியை இதற்கு அழைக்காதது, இந்திய அரசுக்கும் அரசியலமைப்பிற்கும் அளிக்கப்படும் மரியாதை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய குடியரசுத் தலைவர் முர்மு அரசின் தலைவராக உள்ளார், வருகை தரும் ஒரு பிரமுகரை கௌரவிக்கும் வகையில் அவர் ஒரு அரசு விருந்தை நடத்தும்போது, அது இந்திய அரசு குறித்த நீடித்த கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டும்.

குடியரசு மாளிகையில் உயரிய முறையில் நடத்தப்படும் விருந்தில், நாடுகளுக்கு இடையிலான நட்பு மீண்டும் உறுதிப்படுத்தப்படுவது தான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, உள்நாட்டு விருப்பு, வெறுப்புகளை முன்னிலைப் படுத்த அல்ல.

அரசமைப்பு மீறல்!

இப்படி அவர்களை விலக்கி வைத்தது அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்திய செயலாகும்.இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் அரசியலமைப்பு பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் (LoP) அரசு என்ற வரையறை உள்ளடக்கியுள்ளது. அவர்களும் அரசியலமைப்பின் பிரிக்க முடியாத பக்கங்களே ஆவர்.

ஆனால் நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் விருந்துக்கு அழைக்கப்பட்டதை எப்படி எடுத்துக் கொள்வது? நல்ல மரபுகளை அழித்து, தனது தணியாத,தனிப்பட்ட கோபத்தை மோடி காட்டுவது என்பதைத் தவிர வேறு என்ன?

தொடரும் புறக்கணிப்பு!

இது ஏதோ அரிதாக நடைபெறும் ஒன்றல்ல திட்டமிட்ட முறையில் தொடர்ந்து நடைபெறுகிறது.இதற்கு முன்பு சிந்தூர் ராணுவ நடவடிக்கைகளை வெளிநாடுகளுக்கு விளக்கும் குழுவை மோடி அரசு அமைத்தது.

காங்கிரசை கலந்தாலோசிக்காமல் இதில் அந்தக் கட்சியைச் சார்ந்த, சசி தரூரை, வெளிநாடுகளுக்குச் செல்லும், அனைத்துக் கட்சிக் குழுவில் மோடி அரசாங்கத்தால் ஒரு தலைப்புச்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது எதை காட்டுகிறது?

பிளவு அரசியல் வெறுப்பு அரசியல் இப்போது கட்சிகளையும் பிளப்பது என்பதில் தனது சாணக்கிய முத்திரை இது என்று அவரது அடி பொடிகள் ஆனந்த கூத்திடலாம்.ஆனால் அரசமைப்பின் நியதி அதன் ஒழுக்கம் சிதைத்து, சின்னா பின்னமாக்கப்பட்டு விட்டது என்பதையே இது காட்டுகிறது.

அந்தக் குழுவின் நோக்கம், காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் துயரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் செல்வதாகும்.இதில் கூட ஒற்றுமையை காட்டாத இவர்கள் எப்படி தேசத்தின் ஒற்றுமையை பாதுகாப்பார்கள்?

அரசியலமைப்பின் மீது தாக்குதல்!

அரசியலமைப்பின் 79 வது பிரிவின்படி, இந்திய நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசு தலைவரையும், ராஜ்யசபா மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளையும் கொண்டுள்ளதாக கூறுகிறது.

அதன் வார்த்தைகளிலேயே சொன்னால் “யூனியனுக்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும், இது குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டு அவைகளைக் கொண்டிருக்கும், அவை முறையே மாநிலங்களவை மற்றும் மக்களவை என அறியப்படும்.” எனக் குறிப்பிடுகிறது.

எனவே, இரு அவைகளிலும் உள்ள இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். குடியரசுத் தலைவர் முர்மு இரு தலைவர்களையும் ரஷ்ய அதிபர் புடினுக்கான விருந்தில் சேர்த்திருக்க வேண்டும்.

அரசியலமைப்பைப் பாதுகாக்க, குடியரசுத் தலைவர் எடுத்த உறுதிமொழி, அவரது அனைத்து செயல்களிலும் போதுமான அளவு இதில் பிரதிபலிக்க வில்லை. கார்கே மற்றும் ராகுல் காந்தியை ஒரு அரசின் திட்டத்தில் இருந்து விலக்கி வைப்பது அந்த உறுதிமொழியையே மீறுவதாகும்.

முன்மாதிரிகளை பின்பற்றாத முர்மு

முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இதற்காக அமைத்த முன்மாதிரிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. மறைந்த ஆர். வெங்கடராமன் மற்றும் கே.ஆர். நாராயணன் உள்ளிட்டோர் முர்முவின் புகழ்பெற்ற முன்னோடிகள் ஆவர்.

வெளியுறவு அமைச்சகத்தால் இதுபோன்ற விருந்துகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாளர்களின் பட்டியல் தொடர்பாக குடியரசு தலைவர்கள் என்ற முறையில் தங்கள் சிறப்புரிமையைப் பயன்படுத்தினர்.

தொகுப்பாளர்களாக, யாரைச் சேர்ப்பது அல்லது விலக்குவது என்பதைத் தீர்மானிப்பது அவர்களின் தனிப்பட்ட பொறுப்பாகும். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுபோன்ற நிகழ்விலிருந்து விலக்கப்பட்ட ஒருநிகழ்வு இதற்கு முன்பு ஒருபோதும் நடந்ததில்லை.

இது இன்றைய குடியரசுத் தலைவரின் முடிவுகள் குறித்து கேள்விகளை பலமாக எழுப்புகிறது.

ஒரு பக்கம் பட்டியல், பழங்குடியின முதல் குடியரசுத் தலைவர் என்கின்றனர் ஆனால் பட்டியலிடப்பட்ட மரபுகளில் இருந்து அரசு நிகழ்ச்சிகளை விலக்குவதற்கு அவரையே பயன்படுத்துகின்றனர்.

இதைத்தான் நரி தந்திரம் என்பதா?

குடியரசுத் தலைவர் பதவியின் மதிப்பைக் இது குறைக்கிறது என்பதுடன் பிரதமர் நரேந்திர மோடி அல்லது பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில், நாடாளுமன்ற, எதிர்க்கட்சி தலைவர்களை அழைக்க வேண்டாம் என்ற குடியரசுத் தலைவர் முர்மு முடிவு செய்ததால், அவரது பதவியின் மதிப்பு கடும் சேதாரத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டது.

அரசையும், அரசியலமைப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு. நிர்வாகத்தின் ஒரு கருவியாக குடியரசுத் தலைவர் தனது பதவியைப் பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்துவது உலகளாவிய இந்தியாவின் மரியாதையை,கௌரவத்தை மிகக் கோரமாக சிதைப்பதற்கு வழி வகுத்து விட்டது என்பதே உண்மை.

நாகரிகம் மற்றும் நடவடிக்கை

சில மாதங்களுக்கு முன்பு, ஜக்தீப் தன்கர் இந்திய துணை குடியரசு தலைவராக பணியாற்றியபோது, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் இந்திய வருகையின் போது, அவரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை ஆக வேண்டுபவர், வேண்டாதவர் என்கிற வெறுப்பை ஒரு புதிய முறைமையாக இன்றைய பாஜக மோடி அரசு நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டது.

இந்திய அரசையும், அரசியலமைப்பையும் நிலைநிறுத்த, அதன் கண்ணியத்தை காக்கும் இப் போராட்டத்தில் இடதுசாரி,ஜனநாயக, மதச்சார்பற்ற, தேசபக்த சக்திகள் ஒன்றிணைந்து எழ வேண்டும். இல்லையெனில் கும்பல் வன்முறை போல நல்ல நடைமுறைகள் மெல்ல சாகும்! மரபுகள் மழுங்கடிக்கப்பட்டு திரிபுகள் கோலோச்சும்! குற்றுயிரோடு போராடும் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுப்போம், பற்றி பரவும் பாசிசத்தை முறியடிப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button