
மகாகவி பாரதி தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறந்ததால் தன்னுடைய தாய்மொழி தமிழ்மொழி மீது தீராத பற்று கொண்டானில்லை. பல மொழிகளை கற்றறிந்த பாரதி தமிழ்மொழியோடு இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காள மொழி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை அறிந்து வைத்திருந்தார். எல்லா மொழிகளையும் ஒப்பிட்டு பார்த்து பாரதி தமிழ்மொழியே உலகிலுள்ள அனைத்து மொழிகளில் சிறந்த மொழி என்கிறார்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
என்று கவிதை எழுதிய பாரதி, கம்பனின் கம்பராமாயணத்தையும், வள்ளுவனின் திருக்குறளையும், இளங்கோவின் சிலப்பதிகாரத்தையும் படித்து சுவைத்து நம்முடைய அடிமைத்தனம் அகல வேண்டாமா? நம் வாழ்க்கையில் துன்ப துயரங்கள் அற்றுப்போக வேண்டாமா? நாம் இன்பமாக வாழ வேண்டாமா? அதற்கு தமிழ்மக்களைப் பார்த்து,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
தாய்மொழிப் பற்று வந்து விட்டால் தாய்நாட்டுப் பற்று தானாக வந்துவிடும். தாய்நாட்டுப் பற்று வந்துவிட்டால் அந்நியரை விரட்டியடிக்க ஆக்ரோசம் நெஞ்சில் வந்து விழும். எல்லோருக்கும் வந்து விட்டால் ஏகாதிபத்தியம் தூள் தூளாகி அஞ்சி ஓடும். மொழியின் மூலம் விடுதலைக்கு வழி தேடியவன் மகாகவி பாரதிதான். தமிழ் மொழி ஒரு தேங்கி நிற்கும் ஒரு குட்டையும், குளமும் அல்ல. அது சீறிப்பாயும் பேரருவி. காலத்திற்கேற்றவாறு தாய்மொழி தன்னை புணரமைத்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் புதுமைத் தென்றலாக பூமணம் வீசி பூத்துக் குலுங்கும் என்று பாரதி அறிந்தான்.
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்
பாரதியின் கவிதை வாக்கு பலித்தது, மகாத்மா காந்திக்கும் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கும் கடிதப் போக்குவரத்து இருந்தது.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
என்ற குறளை ஆங்கிலத்தில் மகாத்மா காந்திக்கு டால்ஸ்டாய் எழுதி அனுப்பினார்.
அந்தக் குறளின் பொருளறிந்த காந்தி, திருக்குறளை அதன் மூலமொழியான தமிழிலே படிக்க வேண்டும் என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். இதைத்தான் பாரதி,
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
என்று அறுதியிட்டு பாடினார். பாரதியின் தமிழ்மொழி தாகத்திற்கு அவர் வாழ்க்கையில் நடைபெற்ற இரண்டு சுவையான நிகழ்வுகளை சுட்டி காட்டலாம்.
பாரதியார் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது பாரதியைப் போன்றே அக்ரகாரத்தில் பிறந்திருந்தாலும் பூநூலைக் கழற்றி எறிந்த திருவையாறு திங்களூர் தமிழ்த்திருமகன், அக்ரகாரத்தின் அதிசய மனிதர் என்று பேரறிஞர் அண்ணாவால் அன்போடு அழைக்கப்பட்ட வ.ரா என்ற வ.ராமசாமி அய்யங்கார் பாண்டிச்சேரியில் பாரதியை சந்திக்க வந்தார். வ.ரா. பாரதியை பார்த்து சாஷ்டாங்கமாய் காலில் விழுந்து நமஸ்காரம் செய்ய முயன்றபோது புலி பாய்வதுபோல் பாரதி பாய்ந்து வ.ரா-வை காலில் விழுவதை தடுத்து, “நீ யார்? வந்த காரியத்தை சொல்லும்” என்று பாரதி அழகு தமிழில் கேட்ட கேள்விக்கு, வ.ரா. ஆங்கிலத்திலே, My Name is V.Ramasamy Ayyangaar Shortly all call me as Va.Ra. என்று ஆங்கிலத்தில் சொன்ன மறுவிநாடியே பாரதிக்கு கண்கள் சிவந்தன. உரத்த குரலில் தன்னுடைய உதவியாளராக இருந்த பாலு என்பவரிடம், “அடே பாலு, என்னை பார்க்க வந்த இவன் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறான்டா! அவரிடம் நீ பேசு, எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு அப்பால் நகர்ந்து போய்விட்டார்.
போன பாரதி திரும்பிவந்து “டேய் பாலு, இந்த உலகத்தில் மகா கேவலமான செயல் எதுவென்று தெரியுமா? ஒரு தமிழன் இன்னொரு தமிழனோடு பேசும்போது வேற்று மொழியில் ஆங்கிலத்தில் பேசுவதுதான்” என்று பாரதியார் கன்னத்தில் அறைந்தார்போல பேசி விட்டார். அக்ரகாரத்து அதிசய மனிதன் வ.ரா பாரதியின் தமிழ்ப்பற்றை கண்டு தலைகுனிந்து நின்றுவிட்டார்.
1919 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சென்னை வந்தபொழுது பாரதி காந்தியை சந்தித்து ஒரு கூட்டத்திற்கு பேச அழைத்தார். காந்தி எனக்கு வேறு ஒரு கூட்டம் இருப்பதால் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார். காந்தி திருவல்லிக்கேணியில் கூட்டம் பேசி முடித்தவுடன் குஜராத் சென்று விட்டார். காந்தியின் திருவல்லிக்கேணி கூட்டம் பற்றி பாரதி ஒரு கடிதம் காந்திக்கு எழுதினார். திருவல்லிக்கேணி கடற்கரை கூட்டத்தில் நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் பேசினீர்கள்? உங்கள் தாய்மொழி குஜராத்திதானே, நீங்கள் குஜராத்தியில் பேசியிருந்தால் அதை யாராவது தமிழில் மொழி பெயர்த்து சொல்லப் போகிறார்கள். நீங்கள் உங்கள் தாய்மொழியில் பேசாமல் ஆங்கில மொழியில் பேசியது எனக்கு வருத்தம்தான் என்று கடிதம் ஒன்றை காந்திக்கு எழுதினார். அதற்கு மகாத்மா காந்தி இவ்வளவு தூரம் தாய்மொழிப் பற்றுள்ள நீங்கள் ஏன் இந்த கடிதத்தை எனக்கு ஆங்கிலத்தில் எழுதினீர்கள்? என்று மறுகடிதம் பாரதிக்கு எழுதினார். இதோடு இந்த விவகாரம் முடிந்துவிடும் என்று காந்தி எண்ணியிருந்தார். ஆனால் கடிதம் கிடைத்தவுடன் பாரதி பதில் எழுதினார் பாருங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் பேசியது என் மனதுக்கு ஒவ்வாத விஷயம். மனதுக்கு ஒவ்வாத விஷயங்களைப் பற்றி நான் எழுதுகிறபோது எனது தாய்மொழி தமிழில் எழுதமாட்டேன் என்று பதில் எழுதினார்.
“தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்” என்று பாரதிதாசன் பாட்டு எழுதுவதற்கு முன்னால் தமிழே உயிரென்று என்று வாழ்ந்த ஓர் உன்னத
தமிழ்க்குடிமகன் பாரதி.
தமிழ் வாழ்க! பாரதி வாழ்க!