கட்டுரைகள்

அறிவு சார் நகரம், விவசாயிகளின் அழிவுசார் நகரமாகலாமா?

என்.எஸ்.பிரதாப் சந்திரன்

இந்தியாவில் தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையை ஒட்டி உள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் பெருகி, மக்கள் குடியேற்றங்கள் அதிகரித்து வேகமாக நகரமயமாகி வருகிறது. நகரமயமாக்கல் என்பது மக்களுக்கு சில நன்மைகளை கொடுக்கிறது என்றாலும், இந்த மக்கள் காலங்காலமாக நம்பி இருந்த விவசாயம் அடியோடு அழிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் வேதனை அளிக்கிறது.

இம்மாவட்டத்தில் கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, ஆரணி ஆறு ஆகிய மூன்று ஆறுகளும், பருவ காலங்களில் பொழிகிற மழை நீரை சேமித்து அதை விவசாயத்திற்கு பயன்படுத்தி, விவசாயம் செழுத்திருந்த மாவட்டம். தற்போது விளை நிலங்கள் எல்லாம், “விலை” நிலங்களாக மாறி வருகின்றன.

விவசாயத்தைத் தவிர வேறு எந்த தொழிலும் அறியாத, சிறு குறு விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் இன்றைக்கு அத்துக் கூலிகளாக, அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மட்டுமே நம்பி காலத்தை தள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர். அந்த வேலையும் நூறு நாட்கள் முழுமையாக தரப்படுவதில்லை, சட்டக் கூலியும் வழங்கப்படுவதில்லை

இதற்கான போராட்டங்களும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில்தான் இந்தப் பகுதி ஏழை விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகும் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தை ஒட்டி கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைபட்டு, செங்காத்தாகுளம், எர்ணாங்குப்பம், வெங்கல் உள்ளிட்ட ஆறு கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,703 ஏக்கர் பரப்பளவில், உலக தரத்திலான அறிவு சூழல் அமைப்பாக, தமிழ்நாடு “அறிவுசார் நகரை” உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த நகரத்தில் அமைந்திருக்கும் என்றும், பசுமையான வாழ்விட சூழலில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த நகரம் திகழும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரின அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு, வான்வழி மற்றும் பாதுகாப்பு, நிதி தொழில்நுட்பம், தொலைத்தொடர்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சியும், புத்தாக்கத்தையும், வளர்க்கும் பணிகளையும் தமிழ்நாடு அறிவுசார் நகரம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மேம்பாட்டு கழகம், இந்த நகரத்துக்கான விரிவான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்திய கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இது தமிழ்நாட்டு அறியு சூழலுக்கு உகந்த நல்ல முயற்சிதன்

ஆனால் இந்த பகுதி சிறு,குறு விவசாயிகளை பற்றியோ, விவசாய தொழிலளர்களை பற்றியோ, கால்நடைகளை பற்றியோ, ஏரி,குளம்,குட்டைகளை பற்றியோ என்ன ஆய்வுகளை இந்த அரசு செய்துள்ளது, இதனால் பாதிக்கப்படும் விவசாய தொழிலாளர்களுக்கு என்ன நிவாரனத்தை அளிக்கப் போகிறது. மரங்களுக்கான மதிப்பை தோட்டக்கலைத் துறைமூலம் கணக்கிடும் அரசுக்கு, எளிய மனிதர்கள் கண்ணில் படவில்லையா? அல்லது விவசாய தொழிலாளர்கள் கிள்ளுக் கீரைகளா?

தாங்கள் காலம் காலமாக நம்பி இருந்த விவசாய நிலத்தை இழந்து நிற்க்க போகும் விவசாயிகளுக்கு வெறும் பணம் மட்டும் இழப்பீடாக கொடுத்தால் மட்டும் போதுமா? மாற்று வாழ்வாதாரம் என்ன? இது அரசு சிந்திகிறதா?

விவசாய வேலைகளை மட்டுமே நம்பி இருந்த விவசாய தொழிலாளர்களின் நிலை என்ன? இவர்களுக்கு வேலைக்காண உத்தரவாதத்தை அரசு அளிக்குமா? இவை போன்ற பல கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு விடைகாண வேண்டும்? செய்யுமா அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button