விதை சட்ட முன் வரைவு 2025: இந்திய வேளாண் இறையாண்மை பலி! டிச. 10 சட்ட நகல் எரிப்பு போராட்டம்!
பி.எஸ்.மாசிலாமணி

ஒன்றிய அரசு, விதை சட்ட முன் வரைவு 2025 ஐ நவம்பர் 13 அன்று வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெறுகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் இது சட்டமாக்கப்பட உள்ளது.
வேளாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அது தான் சரியானது. நீண்ட விவாதங்களுக்கு பிறகு தான் இது இந்தியா அரசியல் சட்ட வழிமுறைகளில் ஏற்கப்பட்டது. ஆனால் அதை மெல்ல மெல்ல ஒன்றிய அரசு கைப்பற்றிவரும் நோக்கில் தான் இந்த விதைச் சட்டத்தையும் மாநில அரசுகளிடம் ஆலோசிக்காமல், விவசாயிகளின் கருத்தறியாமல், ஜனநாயக பூர்வமற்று சட்டமாக்கிட உள்ளார்கள். விதை என்பது விவசாயிகளின் அடிப்படை ஆதாரம். அதை உலகச் சந்தை எனும் கொடும் பாதாளத்திற்குள் தள்ளிவிட உள்ளனர்.
இந்திய உணவு இறையாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களை சமரசம் செய்யும் இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் பேச்சு வார்த்தைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
இதை நிறைவேற்றும் முன் சர்வதேச அளவில் விதைகளுக்கான ஒப்பந்தம் செய்து கொள்ள நவம்பர் 24-29 வரை பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. உணவு மற்றும் விவசாயிகளின் தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் (ITPGRFA – International treaty on plant genetic resources for Food and Agriculture) இந்தியாவின் விதை இறையாண்மையை விற்க துணிந்து விட்டது ஒன்றிய பாஜக அரசு. இதை சமரசத் திட்டம் என்று பெயர் சூட்டுகிறது.
ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் இந்திய விவசாயிகளின் விதை ஒழுங்கு முறை (PPV & FRA- production of plant variety and farmer’s rights act-2001) அமைப்பை பாராட்டி விட்டு,விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக உறுதி அளித்து, விவசாயிகளின் பாதுகாவலர் எனும் பாராட்டையும் பெற்று கொண்டு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகி வருகிறார் என்பது பின்னர் தான் தெரியவருகிறது. இந்தியாவின் அன்ன தாதாக்களுக்கு துரோகம் இழைக்கிற பன்னாட்டு கார்ப்பரேட் செயலை செய்திட ஒன்றிய அரசு துணிந்து விட்டது.
இந்தியாவின் விதை பாதுகாப்பு பேரழிவுக்குள்ளாகும் நிலையில், நமது முன்னோர்கள் வழிவந்த இலட்சக்கணக்கான விதைகளின் மூலங்களை உலக அளவில் பெரு நிறுவனங்களின் லாபவேட்டைக்காக தாரை வார்த்திட முனைந்து விட்டது. நமது பாரம்பரிய விவசாய சாகுபடி என்பது நமக்கே உரிய வளமான அனுபவத்தில் விளைந்ததாகும். விலை மதிப்பற்ற பல்லுயிர் பெருக்கத்தை தலைமுறை, தலைமுறையாக இதில் நாம் ஏற்படுத்தி உள்ளோம்.
இந்த ஒப்பந்தம் மூலம் நமது விதைகளை நம்மிடமிருந்தே எடுத்து அதன் மூலங்களை திரித்து, பின்னர் நம்மிடமே விற்பனை செய்திட உள்ளனர். இனி அவர்களை நம்பியே நமது வேளாண்மை நடக்கும் நிலை வரும். காப்புரிமை பெறாமலேயே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நமது விதைகளின் மரபணுவை திருட வாய்ப்புள்ளது. அதை தடுப்பதற்கான ஏற்பாடு ஒப்பந்தத்தில் இல்லை. நமக்கு தெரியாமலேயே இதன் மூலக்கூறுகளை பிரித்து எடுத்து, பின் இதன் வழியே தயாரித்த விதைகளை நம்மிடமே விற்க வாய்ப்புள்ளது. இதற்கான காப்புரிமை இல்லாததால் நமது நாட்டிற்கு டிவிடெண்ட் கொடுக்காமலேயே சர்வதேச அளவிலும் வியாபாரம் செய்யலாம்.
இந்த பேச்சுவார்த்தை குழுவில் உள்ள டாக்டர் சுனில் இந்திய விவசாயிகளின் நிலை அறியாதவர். எதை அவர்களிடம் பகிர்வது என்பது நமது உரிமை இதில் உள்ளது என இவர் கூறுவது உண்மை இல்லை. இவரது பேச்சு நமது பல்லுயிர் மதிப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். சர்வதேச அளவில் நமது வேளாண்மை யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் முன் இந்திய விவசாய அமைப்புகளின் கருத்தறிய வேண்டுமென்ற ஜனநாயக அடிப்படை உரிமையை கூட ஒன்றிய அரசு ஏற்படுத்திட வில்லை. நமது விதை வளங்களை டிஜிட்டல் உயிரியல் திருட்டிலிருந்து பாதுகாத்திட வேண்டும். டாக்டர் சுனிலை விடுவித்து விட்டு, இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள வேளாண் வல்லுநர்களை இக்குழுவில் நியமிக்க வேண்டும் என்ற வற்புறுத்தலும் ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில் தான் 2025 விதை மசோதா சட்டமாக நிறைவேற்றப்படுகிறது. விதைகள் என்பது நமது வாழ்வியல் பண்பாட்டு கூறு. இந்த சட்டம் வந்தபின் விவசாயிகள் எவரும் தன் சொந்த விதைகளை பயன்படுத்திட முடியாது.
விவசாயிகளின் உரிமை பாதுகாப்புச் சட்டம் 2001 விதை உரிமைகளை பாதுகாக்கிறது. திருட்டுத்தனமாக வணிக நிறுவனங்கள் இதை பயன்படுத்த முடியாது. பத்தாண்டுகளாக பேசிய பின்தான் இது சட்டமாக ஏற்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு உலக வர்த்தக ஒப்பந்தத்திலும் இது இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய சட்டத்தில் இந்த அம்சங்கள் நீக்கப்பட்டுவிட்டன.
நமது நாட்டு விதைகள், நடைமுறையில் உள்ள வீரிய விதைகள் முழுமையாக கைவிடப்பட்டு காணாமல் போகும். இந்த சட்டத்தின்படி விவசாயிகள் மற்றும் கிராமப்புற விதை விற்பனையாளர்கள் பயன்படுத்தும் அனைத்து விதைகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், எந்த கம்பெனி இந்த விதைகளை தயாரிக்கிறது என்ற விவரங்கள் விதை மூட்டைகளில் பொறிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சட்டம் கட்டாயப்படுத்துகிறது.
ஏனெனில், இவைகள் எதிர் வரும் காலங்களில் அரசாலோ, விவசாயிகளாலோ விற்பனை செய்ய முடியாது.
இதுவரை இது தனது உரிமை என்ற நிலையிலிருந்து விவசாயிகள் வெளியேற்றப்படுகிறார்கள். பதிவு செய்யப்படாத நிறுவனத்தின் விதைகளை வாங்கி விவசாயிகள் பயன்படுத்துவது தெரிந்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதற்கான ஏற்பாடும் இதில் உண்டு. இதன் மூலம் பாரம்பரிய நமது உரிமை தண்டனை ஆக்கப்படுகிறது.
வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள், இனி சிறுகுறு விவசாயிகள், குழுக்கள் நாற்றங்கால் அமைத்து விற்பனை செய்து வருமானத்தை பெற முடியாது. வீரிய விதைகளின் மூலம் உற்பத்தி வந்த பிறகு, பாரம்பரிய ரகங்களின் உற்பத்தியை விற்பனை செய்ய இயலாமல் விவசாயிகள் சிரமப்படுவது தற்போதைய நிலையாக உள்ளது. இதை அரசும் கொள்முதல் செய்வதில்லை.
வெளிநாடுகளின் விதை நிறுவனங்கள் மூலம் பல புதிய வீரிய, மரபணு மாற்று பயிர் விதைகள் ஏராளம் இறக்குமதி செய்யப்பட்டுவிடும். கட்டுப்பாடுகள் இருக்காது. உற்பத்தி பல மடங்கு, பூச்சி, நோய் தாக்குதல் குறைவு என வண்ண விளம்பரங்கள் விவசாயிகளின் எண்ண ஓட்டத்தை ஈர்த்திடும் நிலை வரும். மரபணு மாற்று அல்லது மரபணு திருத்தப்பட்ட விதைகளும் இறக்குமதியாகும். காலப்போக்கில் விதைகளை பன்னாட்டு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை வரும்.
நமது பாரம்பரிய விதைகளை நாமே புறம் தள்ளி, வீரிய விதைகளை பயன்படுத்தியது போன்ற நிலைதான் ஏற்படும்.
பார்த்துப் பார்த்து வளர்த்த பயிர் இனி பெரு நிறுவனங்களின் உரிமையாகிறது. உலக பெரு விதை நிறுவனங்களுக்கான சட்டம்தான் இது.
இயற்கை விவசாயத்திற்காக என் வாழ்வையே கொடுக்கிறேன், எனது அரசின் தொலைநோக்கு திட்டம் இயற்கை வேளாண்மை தான் என்று கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பேசிய ஒன்றிய பிரதமர், ஏன் பாரம்பரிய ரகங்களை புறந்தள்ளி, மரபணு திருத்தபட்ட ஜிஸிஸி தன்-100 மற்றும் புசா TST எனும் இருவகை அரிசி விதைகளை வெளியிட்டார். சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லையே!
பாரம்பரிய நாட்டு ரகங்களை ஒட்டு ரகங்கள் ஒழித்தன, ஒட்டு ரகங்களை வீரிய ரகங்கள் ஒழித்தன. இந்த நிலையில் தற்போதைய வீரிய ரகங்களை அந்நிய நாட்டு தொழில்நுட்ப த்தின் மரபணு மாற்று விதைகள் ஒழிக்க வருகிறது.
விதைகள் என்பது நமக்கான பேராயுதம் என நம்மாழ்வார் கூறினார். விதைகள் என்பது நமது வேளாண்மையின் இறையாண்மை.
நாம் விளைவித்த நெல்லை 25 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய இயலாது. ஆனால் வரும் இவ்விதைகளின் விலையோ பல மடங்கு எகிறும்.
தாவரங்கள் மற்றும் விவசாயிகளின் உரிமை பாதுகாப்பு சட்டம் 2001ல் ( production of plant varieties and formers rightas 2001) விதை பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்கிறது. திருட்டுத்தனமாக வணிக நிறுவனங்கள் விதைகளின் மூலங்களை பயன்படுத்த முடியாது. இந்த நிலையில் புதிய விதை சட்டம் ஏன்? எதற்கு?
விதை இறையாண்மை, வாழ்வாதாரங்கள், பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாவலர்கள் ஆன விவசாயிகளின் மீது ஒருங்கிணைந்த மும்மடங்கு தாக்குதல் தொடுக்கும் நிலையில் தான் இப்பொழுது, பன்னாட்டு நிறுவனங்களுக்கான இந்த புதிய சட்டம் 2025 கொண்டுவரப்படுகிறது.
இப்பொழுதே நமது உள்ளூர் விதைகளை மட்டும் முடக்கிடவில்லை. நமது உள்ளூர் விதை கம்பெனிகளையும் முடக்கி விட்டனர். இந்திய நாட்டுப்புற குளிர்பான நிறுவங்களை மூட வைத்தது போல்.அந்நிய பெரு விதை நிறுவனங்கள் விதை விற்பனையை முழுமையாக ஆக்கிரமிக்க இந்த புதிய சட்டம் தாராள அனுமதியை கொடுக்கிறது.
BASF, BAYER, DOW, Agro Sciences, Dupont, Monsanto, Syngenta போன்ற பகாசுர கம்பெனிகள் இந்தியாவில் 65 சதம் விதைகளின் விற்பனையாளர்களாக உள்ளனர். அவர்கள் மேலும் வலுவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் 60,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்திய விதைச்சந்தை மேற்கண்ட கார்பரேட் நிறுவனங்களின் கைகளில் பிடிபட உள்ளது. இக்கம்பெனிகளின் விதைகளை பயன்படுத்துவோருக்கு எந்த பாதுகாப்பும், பாதிப்பு கேட்பும், உரிமை கோரலும், இழப்பீடும் கிடைப்பதற்கு வாய்ப்பும், விதை வாங்கும் விவசாயிகளுக்கான பாதுகாப்பும் இதில் இல்லை. ஏனெனில், இந்த கம்பெனிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால் அந்த கம்பெனிகள் இயங்கும் நாட்டில்தான் வழக்கு போட முடியுமாம். இதை விட கொடுமை வேறு என்ன இருக்கிறது?
புதிய வகை தொழில் நுட்ப விதைகளும், அதி வீரிய மரபணு மாற்றப்பட்ட விதைகளும் இறக்குமதி செய்திட இந்த சட்டம் வாய்ப்பு தருகிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிரிட்ட விவசாயிகள் குறிப்பாக, மகாராஷ்டிராவில் பி.டி.பருத்தி விதைத்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்று இந்திய குற்றப்பதிவு ஆவணமே (NCRB)கூறுகிறது.
ஒன்றிய பா.ஜ.க.அரசு பன்னாட்டு கார்ப்பரேட் விவசாய நிறுவனங்களின் நலனுக்காக, இந்திய விவசாயிகளின் நலன்களையும், தேசிய நலன்களையும் தியாகம் செய்கிறது. நமது காப்புரிமை சட்டங்களை நீர்த்துப் போக செய்து, ஒழுங்குமுறை, பாதுகாப்பு விதிகளை சிதைத்து, விதைகளை பெருநிறுவன காப்புரிமைக்கு கொடுக்கிறது.
மரபணு மாற்று மூலம் மேலை நாடுகள் கொடுத்து வரும் கூடுதல் மானியங்கள் மூலம் விளையும் வேளாண் பொருட்களை நமது நாட்டு சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்து, நமதுஉள்நாட்டு வணிகச்சந்தையையும் சீரழிக்க உள்ளனர். இதனால் இந்திய வேளாண் வணிகர்களும் பாதிக்கப்படுவர்.
இந்திய அமெரிக்க வேளாண் வணிக ஒப்பந்தம் என்பது, அமெரிக்க அதிபர் கூறியது போல், இந்தியா மீது தொடுத்த வணிக யுத்தத்தில் மோடி ஏற்றுக்கொண்ட ஒப்பந்தமாகும். பருத்தி இறக்குமதி வரியை தள்ளுபடி செய்து அமெரிக்காவிற்கு அடிபணிந்தார். இதனால் கூடுதல் பருத்தி இறக்குமதியாகி இந்திய பருத்தி விவசாயிகள் உரிய விலை இன்றி, வாங்குவார் இன்றி பரிதவித்தனர். மேலும் பல வேளாண் பொருட்களுக்கான இறக்குமதியை தீவிர படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .
இந்த சூழலில் தான் …
- 2025 விதை சட்ட வரைவு மசோதாவை கைவிட வேண்டும்.
- பெருநாட்டின் பேச்சு வார்த்தையைரத்து செய்திட வேண்டும்.
- ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
- அமெரிக்க இந்திய வேளாண் வணிக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும்.
என வலியுறுத்தி வரும் டிசம்பர் 10 அன்று இந்தியா முழுவதும் இந்த சட்ட நகல் எரிக்கும் போராட்டத்தை நடத்திட அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறிவித்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இதற்கான போராட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், இந்தியா முழுதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியுடன் இணைந்து நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நமது வேளாண்மை விஷமானால் நுகர்வோர்களுக்கும் பாதிப்பு, சுற்றுச்சூழலும் பேராபத்து என்று வரும் நிலையை உணர்ந்து அனைவரும் ஓரணியாய் திரள்வோம்!
டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்! பங்கெடுப்போம்!