கட்டுரைகள்

கொடூர சிலந்தி – 4

கிராமத்தான்

கொக்கைப் போன்று வாடிய முகத்தோடு காத்திருக்கிறது சிலந்தி. சிலந்தி வலையில் அடுத்து சிக்கப் போவது யார்? என்று வினா எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஈ குஞ்சு ஒன்று அங்கும் இங்கும் அலைகின்றது.

குட்டி ஈக்கு சரியாக இறக்கை முளைக்கவில்லை பறக்கும் பக்குவமும் வரவில்லை. ஆனாலும் புது ஈயாக இருக்கிறதே, எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே, அந்த நடிகையோடு இந்த நடிகையோடு எல்லாம் இந்த ஈ வந்ததே! அதனால் அந்தச் சின்னஞ்சிறு ஈயைப் பார்க்க மக்கள் வருவது இயல்புதானே!

இப்படி வருவதால் இவர்கள் எல்லாம் நம் கட்சிக்காரர்கள் நமக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நம்பியது சின்னஞ்சிறு ஈ. அனுபவம் இல்லாத காரணத்தால் அப்படி ஒரு கற்பனையை, கனவைக் கண்டால் நினைத்தால் அதனை நாம் ஏன் கலைக்க வேண்டும்.

முதலமைச்சர் நாற்காலி எனக்குத்தான் சொந்தம். அதனை நான் விலை கொடுத்து வாங்கி விட்டேன். ஆகவே இது எனக்குச் சொந்தமாகிவிட்ட காரணத்தால் இதில் யாரும் பங்கு கேட்கக் கூடாது. தருவதற்கு வேறு நாற்காலிகள் உள்ளன. அதில் ஒன்றோ, இரண்டோ தருகிறேன் வா வா என அழைப்பு விடுத்துள்ளது. சின்ன ஈ நாற்காலிக்கு அழைப்பு அதாவது கையில் பிஸ்கட்டை வைத்துக்கொண்டு தோ தோ என அழைப்பது போன்றான அழைப்பாகும்.

இது ஒருபுறம் மற்றொரு புறத்தில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளிலேயே நான் மட்டும்தான் யோக்கியன் மற்றெல்லோரும் அயோக்கியர்கள். ஆண்ட கட்சி ஆளுகின்ற கட்சியுடன் கூட்டணி இல்லை என்பது மட்டுமல்ல ஒன்றியத்தில் ஆட்சியை அதிகாரப் பீடத்தில் உள்ள கட்சியோடும் உறவு இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது அந்த சின்ன ஈ.

ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற விக்கிரவாண்டி மாநாடு முதல் நாமக்கல் வரை இப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்ட சின்னஞ்சிறு இறக்கை முளைக்காத ஈ கரூருக்குப் பின்னர் தலைமறைவாகிவிட்டது.

ஈயைத் தேடித் தேடி அலைகின்றார்கள் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுப்போர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஈ சின்னதுதான் அது என்ன ராகம் பாடும் எந்த பாட்டுப் பாடும் என்று கேட்டு ரசிக்க யாரும் வரவில்லை.

மாறாக சின்னஞ்சிறு ஈ எப்படி இருக்கிறது? எப்படிப் பறக்கிறது, அது முகம் எப்படி, கை கால் எவ்வாறு உள்ளது. அழகா இருக்குமா அருவருக்கத்தக்கதாக இருக்குமா என்பதனை எப்பாடு பட்டாவது ஒருமுறை ஒரே ஒரு முறை எட்டிப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலோடு பார்க்க வந்த கூட்டம்.

காலை வருவார், மதியம் 12 மணிக்கு வருவார். ஆகவே முன்கூட்டியே சென்று முன்பக்கத்தில் நின்று அருகில் நின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் காலை 10 மணி முதலே வந்த கூட்டம் சின்ன ஈ வரும் வரை காத்திருந்தனர்.

காலை முதலே குழந்தைகள் சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் எனத் திரண்டவர்களுக்குக் குடிப்பதற்கு ஒரு வாய் தண்ணீருக்கு வழியில்லை. ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லை. ஆனாலும் வழிமேல் விழி வைத்துக் கூட்டம் காத்திருக்க, சின்னஞ்சிறு ஈ சர்வ சாதாரணமாகக் காத்திருக்கும் கூட்டம் பற்றி கவலை கொள்ளாமல் தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு எத்தனை மணி நேரம் காத்திருந்தார்கள்? மணிக் கணக்கில் காத்திருந்தார்கள் என்று பந்தா காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மாலை 7:30 மணி அளவில் ஈ வர கூட்டம் அலைமோதி முண்டியடிக்க, பார்க்க வந்தவர்களில் 41 பேர் இறந்து விட்டனர். சின்னஞ்சிறு ஈ தனி விமானம் பிடித்து சென்னைக்கு ஓடி தன் வீட்டில் ஒளிந்து கொண்டது.

41 குடும்பம் நடுத்தெருவில் நிற்கின்றது. இதுதான் புதிய கட்சியின் சாதனை. சம்பவம் நடந்தவுடன் இரவோடு இரவாக முதலமைச்சர் கரூர் சென்றார். மக்களைச் சந்தித்தார், ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் உள்ளோர் நலம் பெற்று இல்லம் திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் பொறுப்புள்ள முதலமைச்சர் மேற்கொண்டதை உலகம் பாராட்டுகிறது.

கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் சென்றார்கள். ஆறுதல் தெரிவித்தார்கள். அவரவர் முடிந்த உதவிகளையும் செய்தார்கள். மனிதாபிமானம் மேலோங்கி நின்றதைக் காண முடிந்தது.

ஆனால் சிலந்தி வஞ்சகம் நிறைந்தது அல்லவா? தனது அகண்ட கண்களை விரித்து உருட்டிப் பார்த்தது.

தனது அடியாட்களையும் அனுப்பி அவதூறு பரப்பச் செய்தது. போதாக்குறைக்கு மாநில அரசு ஏற்பாடு செய்த ஒரு நபர் விசாரணை ஆணையம் ரத்து, உயர்நீதிமன்ற விசாரணை ரத்து என்பதோடு, சிபிஐ விசாரணைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி சின்னஞ்சிறு ஈ வசமாக மாட்டிக் கொண்டுள்ளது.

மாட்டிக்கொண்ட சின்னஞ்சிறு ஈயைத் தன்வயப்படுத்தித் தான் விரித்துவைத்துள்ள வஞ்சக வலையில் சிக்க வைத்து அதன் குரல்வளையை நெரித்து அதன் இரத்தம் முழுவதையும் இஞ்ச் இஞ்சாக உறிஞ்சிக் குடித்து தனது வயிற்றை நிரப்பிக் கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

ஈ என்ன என்ன செய்யப் போகின்றது? ஏற்கெனவே மாட்டி மீள முடியாது சிக்குண்டு தவித்து தடுமாறிக் கொண்டுள்ள ஈ இபிஎஸ் உடன் இணைந்து தன்னை அழித்துக் கொள்ளப் போகிறதா?

காலமே பதில் சொல்! திராவிட இயக்க ஆய்வாளர் திரு க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள திராவிட இயக்க வேர்கள் என்ற அற்புதமான போற்றத்தக்க நூலுக்கு 1991 திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக, கல்வி அமைச்சராகப் பணியாற்றிய பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் விரிவான அணிந்துரை வழங்கி உள்ளார்.

அவ்வுரையில் ஓரிடத்தில் ‘‘தமிழன் தலை தாழ்ந்தான், திராவிட இனம் தலை நிமிரும் வழியில் சிந்திக்கும் திறன் இழந்தது, வைதீகச் சிலந்தியின் வலை, மத வழிச் சடங்குகள், பழக்கங்கள் என்னும் பொன் முலாம் பூசப்பட்டிருந்ததால் அறிவார்ந்த தமிழர்களுக்குக் கூட அந்த வலையில் சிக்காமல் தப்ப வில்லையா? என்று மிகுந்த பொறுப்புணர்வோடு குறிப்பிட்டுள்ளதை அலட்சியப்படுத்த வேண்டாம்.

நிறைவாக மாபெரும் தலைவர் தோழர் வில் ஹெல்ம் பீப்னெஹட். அந்நூலில் (சிலந்தியும் ஈயும்) நிறைவுப் பகுதியில் ‘‘ஈக்களே நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால் யாராலும் உங்களை வெல்லமுடியாதபடி, அப்படி நீங்கள் பெரும்பலம் படைத்தோராகி விட முடியும். மெய்தான் இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன. ஆனால், எண்ணிக்கையில் அவை மிகச் சொற்பம்.

ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும் எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள். வாழ்வே நீங்கள்தான் உலகமே நீங்கள்தான்.

மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாமே நீங்கள்தான்! நீங்கள் ஒன்றுபட்டால் உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்து விடலாம், இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி அடக்கி வைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணற வைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்து விடலாம், வறுமையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக் கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்! ஆகவே விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்’’ என்று நிறைவு செய்துள்ளார்!

இளம் தோழர்களே! அஞ்சா நெஞ்சுடைய தோழர்களே! விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்.

கொடூரமான சிலந்தியின் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி நிறைந்த வலையில் தமிழகம் சிக்காமல் என்றென்றும் தலைநிமிர்ந்து நிற்கும் மாநிலமாக நாட்டிற்கே வழிகாட்டும் நன்மாநிலமாக, கம்பீரமாக நடைபோட, சிலந்தியின் வலையை அறுப்பது மட்டுமல்ல, வலை பின்னும் சிலந்தியைக் காணாமல் செய்ய வழிவகை காண்பீர்! இதுவே இன்று நம்முன் உள்ள தலையாய கடமை!

முற்றும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button