கட்டுரைகள்

கொல்லைப்புறமாக நடைமுறைக்கு வரும் தேசிய குடியுரிமைப் பதிவேடு

வ.மணிமாறன்

குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று இருந்ததை, குடிமக்களே தங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மாற்றி இருப்பதுதான் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் காரணமாகும். இதுனுடன் குடியுரிமையையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

‘சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான வினாக்களும் விளக்கமும்’ வரிசையின் மூன்றாவது பகுதி வருமாறு:

16. குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறதா? வாக்குரிமையும் குடியுரிமையும் இணைந்துள்ளதா?

வாக்குரிமையையும் குடியுரிமையையும் இணைத்து ஒன்றிய அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் சிக்கலை உருவாக்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. உள்துறை அமைச்சகம்தான் இதனைச் செய்ய வேண்டும். கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றமும் இதனை வாய்மொழியாக உறுதிசெய்துள்ளது. 1993 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும், குடியுரிமையைத் தீர்மானிக்கும் பணி தேர்தல் ஆணையத்தினுடையது அல்ல என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் மேற்கொண்ட போது, குடியுரிமையைத் தீர்மானிக்கும் பணி தங்களுடையது அல்ல என்று தேர்தல் ஆணையமும் தெரிவித்தது.

ஆனால், தற்போது இதற்கு மாறான நிலையை தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும் எடுத்துள்ளது. அதாவது, குடியுரிமையை நிரூபிப்பது வாக்காளர்களின் கடமை என்றும், குடியுரிமைக்கான நிரூபணத்தைக் கேட்க தங்களுக்கு உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியது. தேர்தல் ஆணையத்தின் 2024 ஆம் ஆண்டு கையேடும், “ஒரு நபரிடம் இந்தியக் குடிமகன் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு வாக்காளர் பதிவு அலுவலர் கேட்கலாம்“ என்று கூறுகிறது. இப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக தேர்தல் ஆணையம் செயல்படுவது சர்வாதிகாரத்துக்கான முதல்படியாகும்.

17. குடியுரிமையில் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் சரியானதா?

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மூலம் குடிமக்கள் அனைவரும் தங்களின் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குடிமக்கள் அனைவரும் குடியுரிமை பெற்றவர்கள் என்ற “இயல்புநிலை குடியுரிமை” என்பதை “சான்று ஆவணங்களின் அடிப்படையிலான குடியுரிமை” என்பதாக தேர்தல் ஆணையமும் ஒன்றிய மோடி அரசும் மாற்றியுள்ளது. இது தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens – NRC) திட்டத்தை மோடி அரசு கொல்லைப்புறமாக செயல்படுத்துவதாகும். இந்துத்துவா பாசிசத்தை கட்டமைப்பதாகும்.

18. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நிகராக சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நாடெங்கும் நடத்துவது ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அடுத்து 2021 ஆம் ஆண்டு நடத்தியிருக்க வேண்டும். ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் பல்வேறு காரணங்களைச் சொல்லி தள்ளிவைத்துக் கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நிகராக சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நாடெங்கும் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாறாக தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC) கொண்டுவந்தார்கள். அதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, ஒன்றிய பாஜக அரசு அதனை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அதற்கான அடிப்படைகளை உருவாக்கும் வகையில், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடத்தப்பட்டு வருகிறது. எனவே இது தேர்தல் பிரச்சினை அல்ல. மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த பிரச்சினையாகும்.

19. வாக்காளர் பட்டியலில் இடம்பெறாவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்?

தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதனை செய்யத் தவறினால் வாக்குரிமையை மட்டுமல்ல; குடியுரிமையையும் இழக்கும் ஆபத்து உள்ளது. இது பற்றி தேர்தல் அதிகாரிகள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிப்பார்கள். அரசு சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் சிக்கலாகி நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக, ஏராளமானோர் வாக்குரிமையை தவறவிட்டால் ஜனநாயக அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகும்.

20. வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் சர்ச்சையாக மாறியது ஏன்? தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்கள் சட்டப்படியானதா?

குடிமக்கள் அனைவருமே வாக்களிக்கத் தகுதியானவர்கள். ஆனால் இதற்கு மாறாக குடிமக்களே தங்களின் தகுதியை நிரூபிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மாற்றியதுதான் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் காரணமாகும். தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி, 25 ஆண்டுகளுக்கு மேலாக வாக்களித்து வருபவர்கூட தமது தகுதியை நிரூபிக்க வேண்டும். அதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது அந்தந்த வாக்காளர்களின் பொறுப்பு என தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இதற்கான கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பி, குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதனைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்டால், வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறும்.

இதேபோன்று குடியுரிமையின் நடைமுறையும் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. குடியுரிமைக்கான ஆவணங்களை மக்கள் அனைவரும் காட்ட வேண்டும். தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்களை சாதாரண மக்கள் வைத்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் மக்கள் வைத்திருக்கும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, தேர்தல் ஆணையத்தின் புகைப்பட அடையாள அட்டை போன்றவற்றை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், மெட்ரிகுலேஷன் சான்றிதழ், பட்டப் படிப்புச் சான்றிதழ், அரசு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சொத்து ஆவணங்கள் போன்ற 11 ஆவணங்களை இணைக்குமாறு தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது. இதனால்தான் சர்ச்சையும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புப் போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

21. வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) இருக்கும் போது, வாக்குச்சாவடி நிலை முகவர் (BLA) நியமிக்கப்படுவது ஏன்? இது முறைகேடுகளுக்கு வழிவகுக்காதா?

சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நியமிக்கப்பட்டு, பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்கு உதவுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், வாக்குச்சாவடி நிலை முகவர்களை (BLA) நியமிக்கலாம் என்றும், அவர்கள் நாள்தோறும் 50 பேரின் கணக்கீட்டுப் படிவங்களைக் கொடுக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி அளிப்பது போல, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு அரசியல் கட்சிகள் பயிற்சி அளித்து பணிகளில் ஈடுபடுத்துகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு அரசியல் கட்சிகளும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள தேர்தல் ஆணையம், அதற்கான வழிமுறையாகத்தான் இவற்றை உருவாக்கியுள்ளது. இதனால் முறைகேடு எதுவும் நடப்பதில்லை.

22. வாக்குச்சாவடி நிலை முகவர் (BLA) நியமனத்தில் பீகார் மாநிலத்தின் அனுபவம் என்ன?

வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) உதவுவதற்காக, வாக்குச்சாவடி நிலை முகவர்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நியமித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:

பாஜக – 52,698
ஆர்ஜேடி – 47,506
ஐக்கிய ஜனதா தளம் – 35,799
காங்கிரஸ் – 16,676

இப்படி அரசியல் கட்சிகள் பயிற்சி அளித்து நியமித்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க உதவுகின்றனர். யாரும் விடுபடாமல் இருப்பதற்கான பணிகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக தங்கள் சார்பான வாக்காளர்கள் விடுபட்டுவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர். மேற்கண்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமனத்தையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் முக்கியத்துவம் தெளிவாகும்.

23. வாக்குச்சாவடி நிலை முகவர் (Booth Level Agent – BLA), வாக்குச்சாவடி நிலை முகவர் -2 (Booth Level Agent – BLA 2) இரண்டும் ஒன்றா? வெவ்வேறானதா?

இரண்டும் ஒன்றுதான். தேர்தல் ஆணையத்தில் பிஎல்ஏ – 2 படிவம் நிரப்பிக்கொடுத்த முகவர்களைத்தான் பிஎல்ஏ – 2 என்கின்றனர்.

24. வாக்குத் திருட்டுப் புகார் இந்தியாவில் மட்டும் கூறப்படுகிறதா? வேறு நாடுகளில் இதுபோன்ற புகார் எழுந்துள்ளதா?

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து, வாக்குத் திருட்டு நடப்பதாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல்காந்தியும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற முறைகேடுப் புகார்கள் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவிலேயே எழுந்துள்ளன. அதனை ஜெர்ரி மாண்டரிங் என்று கூறுகின்றனர். அதாவது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமான தேர்தல் முடிவு வரும் வகையில் தொகுதிகளைப் பிரிப்பது. குறிப்பிட்ட பிரிவு வாக்காளர்களைப் பலவீனப்படுத்துவது போன்ற திருத்தங்களை முறைகேடாகச் செய்து வெற்றி பெற வைப்பதாகும். இந்த முறைகேடு அம்பலமாகி அமெரிக்க அரசியலைக் கலக்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button