
இசட் தலைமுறை (Generation Z), மனித தலைமுறைகளைப் பிரித்து வகுப்பதில் இது ஒரு முறையாகும். 1995ஆம் ஆண்டிற்கும் 2009ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை ‘இசட்’ தலைமுறையினர் என வகைப்படுத்துகின்றனர். இத்தலைமுறைக்கு முன்னர் பிறந்தவர்களை சீ தலைமுறையினர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறோம்.
சமீப காலமாகப் பல்வேறு நாடுகளில் ஜென் இசட் எனப்படும் இளம் தலைமுறையினரது தன் எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் இளம் தலைமுறையினரால் முன்னெடுக்கப்படுவது நம்பிக்கையூட்டுவதாக அமைகிறது. பொதுவுடமைச் சமுதாயம் அமைய அரசியல் அறிவியலை நோக்கி இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது அவசியம். அத்தகைய அளவில் உளவியல் – சமூகவியல் – அரசியல் – பொருளாதாரக் கருத்தியல் விவாதங்களில் இளம் தலைமுறை ஆர்வம் காட்டுவதும் பொது வலைத்தளங்களில் பகிர்வதும், உரையாடல்களைத் தொடர்வதும் இன்றைய காலகட்டத்தில் மிக இயல்பாக நடைகிறது.
நிலப்பிரபுத்துவத்தை எவ்வாறு முதலாளித்துவம் மாற்றியமைத்ததோ அதே வழியில் முதலாளித்துவத்தை சோஷலிசம் மாற்றியமைக்கும் என்றார், மார்க்ஸ். சமூகத்தில் வேலை கொடுக்கும் நிலையில் இருக்கும் வசதி படைத்தோருக்கும் வேலை பெறவேண்டிய நிலையில் இருக்கும் வறிய மக்களுக்குமிடையே ஒரு தொடர் முரண்பாடு இருந்துகொண்டிருக்கிறது. கல்விநிலை மேம்பாடே, பணியமர்த்தப்பட்ட பெருந்திரளான மக்கள் தங்களின் வர்க்க உணர்வால் உந்தப்பட்டு அதுபோன்றே ஆளும் வர்க்க உணர்வோடு வாழும் சிறுபான்மை மக்களை எதிர்க்கும் நிலையை ஏற்படுத்தும்.வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி புதிய சமூக அமைப்பிற்கு அடித்தளமமைப்பார்கள் என்று கூறியவர் மாமேதை கார்ல் மார்க்ஸ்.
அப்படிப்பட்ட அநீதிக்கு எதிரான போராட்டங்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், ஊழல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டங்கள், வேலையின்மைக்கு எதிராகவும், போதைக் கலாச்சாரத்திற்கு எதிராகவும் வீதியிலிறங்கிப் போராட இளம் தலைமுறைகள் தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 5, 2024 வங்கதேசத்திற்குள் பல தசாப்தங்களாக தனது நாட்டை ஆதிக்கம் செலுத்தி வந்த 76 வயதான தலைவருக்கு எதிராக, பெரும்பாலும் இளம் மாணவர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் களமிறக்கிய ஒரு எதிர்ப்பு இயக்கம், சமீபத்திய ஆண்டுகளில் அதிகமான முறையில் சர்வாதிகாரமாக மாறியது.
பல வாரங்களாக நீடித்த கொடிய அரசாங்க எதிர்ப்பு அமைதியின்மையைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, வங்கதேச தலைநகர் டாக்காவின் தெருக்களில் மகிழ்ச்சிக் கூட்டம் அலைமோதியது.
இசட் தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களால் 2025ஆம் ஆண்டில் நேபாள அமைச்சரவைப் பதவியிலிருந்து விலகியது. மொரோக்கோ நாட்டின் அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்து 27 செப்டம்பர் 2025 அன்று இசட் தலைமுறையினர் அரசுக்கு எதிராகக் கலவரங்கள் நிகழ்த்திக் கொண்டு வருகின்றனர். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இந்தியா இளைஞர்களின் தேசமாகத் திகழ்கிறது. இளைஞர்களின் எல்லையில்லா பலம், படைப்பாற்றல், துணிவு கொண்ட மனித ஆற்றல், இந்தியாவைப் பலம் பொருந்திய நாடாக மாற்றியுள்ளது.
‘ஜென் இசட்’ இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அரசியல், சமூக ஊடகப் பயன்பாடு, பணியிட எதிர்பார்ப்புகள், நுகர்வோர் பழக்கங்கள் மற்றும் தொழில் முனைவு போன்ற பல்வேறு துறைகளில் வெளிப்படுகிறது. இந்தத் தலைமுறையினர் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர், அத்துடன் தொழில்நுட்பம், நெகிழ்வான பணி கலாச்சாரம் மற்றும் வேலைக்கான அங்கீகாரம் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த ஜென் Z தலைமுறைப் போராட்டங்கள் உலகெங்கிலும் உள்ள ஆட்சியாளர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்கியுள்ளன. சமூக ஊடகங்களுக்கான திடீர் தடைக்கு எதிரான கோபமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, விரைவில் நாடு தழுவிய இயக்கமாக மாறி, அங்கே ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டு உள்ளது.
காத்மாண்டு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ‘ஜென் Z’ இளைஞர்கள் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடினர். இந்தப் போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமூக ஊடகத் தடையை பிரதமர் கே.பி.சர்மா ஒலி ரத்து செய்த ஒரு நாள் கழித்து, இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. நேபாளத்தில் நடந்து வந்த இளைஞர்கள் போராட்டம், பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் இந்தியா பயணத்திற்கு முன்னதாகவும், அவர் சீனாவிலிருந்து திரும்பிய பின்னரும் ஏற்பட்டது. அதில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், பல்வேறு வெளிநாட்டுச் சக்திகளின் களமாக மாறியுள்ளது. நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, முன்னாள் துணைப் பிரதமர் ரபி லாமிச்சானே நக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வட அமெரிக்காவின் மெக்சிக்கோவில் போதைப் பொருள் ஒழிப்புப் போராளி கார்லோஸ் மான்சே அவர் கடந்த ஒன்றாம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது அதிபர் கிளாடியா ஷீன்பாம் அரசுக்கு எதிராக ஜென் இசட் அமைப்பினர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
மெக்ஸிகோ சிட்டியில் குற்றச் சம்பவங்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக ‘ஜென் இசட்’ அமைப்புகள் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றாலும், போராட்டக்காரர்களில் சிலருக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தாக்கியதில் 100 காவலர்கள் உள்பட 120 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பலின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிபர் பதவி விலகக் கோரியும் அந்நாட்டு ஜென் இசட் எனப்படும் தலைமுறையினர் போராட்டங்களில் ஈடுபடுவது என்பது அறிவார்ந்த, போதைப் பொருட்கலாச்சாரத்துக்கு எதிரான விழிப்புணர்வு கொண்ட இளம் தலைமுறைகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
நிகழாண்டு உலக அளவில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜென் இசட்’ தலைமுறையினர் போராட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நேபாள அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
உலகளவில் நிகழ்த்தப்படும் ஜென் புரட்சியாளர்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் உலகை நேர்மை, நீதி, ஒழுக்கம், ஊழலற்ற ஆட்சி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அமைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் இத்தகைய இளம் தலைமுறையினரை ஒரு அமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. தலைமையற்ற போராட்டங்கள் ஒழுங்கமைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது.
‘நமது போராட்டங்கள் குறுகிய நோக்கம் கொண்டவை அல்ல; சுயநலம் மிக்கவையும் அல்ல; மாறாக இலட்சக்கணக்கான உழைப்பாளிகளின் ஒட்டு மொத்த விடுதலையை நோக்கமாகக் கொண்டது.’
-மார்க்சின் இந்த வார்த்தைகளை இளம் தலைமுறையினர் உள்வாங்க வேண்டியது காலத்தின் அவசியம்.